Bible Intoduction

Introduction

Bible Introcuction

Images

திருவிவிலியம் அறிமுகம்

திரு விவிலியம் அல்லது இறை வார்த்தை நூல் தூய ஆவியாரால் தூண்டப்பெற்று, மனித ஆசிரியர்களால் எழுதப்பட்டது. இறைவனுக்கும் மானிடருக்கும் இடையே உள்ள உறவை மிகத் தெளிவாக எடுத்துரைக்கும் நூல் திரு விவிலியம். இந்த உறவு சில வேளைகளில் சிறப்புடன் திகழ்ந்திருக்கிறது; சில வேளைகளில் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது; மானிடர் இறைவனைச் சார்ந்திராமல் வாழ முடியாது என்பதை விவிலியம் பல விதங்களில் நமக்கு விளக்குகிறது. விவிலியம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உருவாகிய இலக்கியங்களின் தொகுப்பு. பிற இலக்கியங்களில் உள்ளதுபோல பல்வேறு இலக்கிய நடைகள் விவிலியத்தில் அடங்கியுள்ள நூல்களில் காணப்படுகின்றன. உரை நடை, கவிதை, நாடகம், நீண்ட பேருரை, உவமை மற்றும் பல இலக்கிய நடைகளை விவிலியத்தில் நாம் காணலாம். எபிரேயம், கிரேக்கம் (சில பகுதிகள் அரமேய மொழியில்!) போன்ற மொழிகளில் எழுதப்பட்டுள்ள விவிலியத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பண்பாடு மற்றும் கலாச்சாரத் தாக்கம் இருப்பதை நாம் அறிகிறோம். விவிலியம் ஓர் இலக்கியத் தொகுப்பாக இருப்பினும் அது அடிப்படையில் இறைவார்த்தை. மீட்பின் வரலாறு மிகச் சிறப்பாக இதில் விவரித்துக் காட்டப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில், ஒரு குறிப்பிட்டச் சூழ்நிலையில், குறிப்பிட்ட மக்களுக்காக இது எழுதப்பட்டிருப்பினும், இது எல்லாக் காலத்திற்கும், உலகில் வாழும் அனைத்து மக்களினங்களுக்கும் தேவையான இறைச் செய்தியை ஏந்தி நிற்பதை யாராலும் மறுக்க முடியாது.

‘பைபிள்’ என்கிற ஆங்கிலச் சொல் ‘பிப்லோஸ்’ (Biblos) என்கிற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்துள்ளது. பிப்லோஸ் என்னும் சொல் மருவிய நிலையில் ‘பிப்ளியோன்’ (Biblion) என்றாகிறது. இச்சொல் ‘நூல்’ என்று பொருள்கொள்ளப்படுகிறது. நூல்களிலெல்லாம் தலைசிறந்த நூலாக திரு விவிலியம் இருப்பதனால் இது ‘நூல்’ என்று அழைக்கப்படுகிறது.

விவிலியம் முழுவதையும் எழுதுவதற்கு ஏறக்குறைய 1400 ஆண்டுகள் ஆயின என்று கூறப்படுகிறது. அதாவது, கி.மு. 1300ஆம் ஆண்டு முதல் கி.பி. 100ஆம் ஆண்டு வரை (சில கி.பி. 100ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுதப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது!) உள்ள காலக் கட்டத்தில் விவிலியத்தில் அடங்கியுள்ள 73 நூல்களும் எழுதப்பட்டன. ஓரு சிலர் கி.மு. 1000ஆவது ஆண்டு முதல் கி.பி. 100ஆம் ஆண்டுவரையுள்ள காலத்தில், அதாவது, சுமார் 1,100 ஆண்டுகளில் திரு விவிலியத்திலுள்ள நூல்கள் எழுதப்பட்டிருக்கக்கூடும் என்கின்றனர். பழைய ஏற்பாட்டில் நாம் காணும் ‘தெபோராவின் பாடல்’ (நீத 5) மிகவும் பழமையானது என்று நம்பப்படுகிறது. கி.மு. 1,200ஆம் ஆண்டளவில் இது எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் சிலர் இது கி.மு. 700ஆம் ஆண்டிற்கு முன் எழுதப்பட்டிருந்திருக்க முடியாது என்று குறிப்பிடுகின்றனர்.

விவிலியம் எழுதப்பட்ட போது, ஆசிரியர்கள் தங்கள் நூல்களை அதிகாரங்களாகவோ, வசனங்களாகவோ பிரித்துக்காட்டவில்லை. கி.பி. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாசியன் (Tatian) போன்றோர் விவிலிய நூல்களை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துப் படித்தனர். ஹியூகோ தெ சாங்க்தோ காரோ (Cardinal Hugo de Sancto Caro) என்கிற கர்தினால் கி.பி. 1240ஆம் ஆண்டளவில் விவிலியத்தின் இலத்தீன் உல்காத்தா மொழி பெயர்ப்பினை அதிகாரங்களாகப் பிரித்தார். புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நூல்கள் கேன்றர்பெரியின் பேராயர் ஸ்டீபன் லாங்டன் என்பவரால் கி.பி. 1205/1216/1227ஆம் ஆண்டளவில் அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டன; அந்த நூல்களை வசனங்களாகப் பிரித்தவர் ராபர்ட் ஸ்டீபன் என்பவர். கி.பி. 1550/1555ஆம் ஆண்டளவில் அவர் இப்பணியைச் செய்தார். ரபி நாத்தான் என்பவர் கி.பி. 1448ஆம் ஆண்டில் பழைய ஏற்பாட்டின் அனைத்து நூல்களையும் அதிகாரங்கள், வசனங்களாகப் பிரித்தார். விவிலியம் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்கிற இருபெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. விடுதலை வீரர் மோசேயை நடுநிலையாளராகக் கொண்டு நீண்ட கால எகிப்திய அடிமை நிலையிலிருந்து (430 ஆண்டுகள் – விப 12:40; கலா 3:17; 400 ஆண்டுகள் – தொநூ 15:13; திப 7:6; நான்கு தலைமுறைகள் – தொநூ 15:16 [ஒரு தலைமுறை = 40 ஆண்டுகள் – காண்க. தொநூ 50:22-23]) விடுதலையடைந்து வந்த இஸ்ரயேல் மக்களுடன் சீனாய் மலை அடிவாரத்தில் கடவுள் ஏற்படுத்திய உடன்படிக்கையை (விப 24), அதாவது, அன்புறவை அடிப்படையாகக் கொண்டு இஸ்ரயேல் மக்கள் ஓரினமாக, கடவுளின் மக்களாக வாழ்ந்தனர். சீனாய் உடன்படிக்கை என்கிற ஓர் ஏற்பாட்டின் அடிப்படையில் மக்கள் வழிநடத்தப்பட்டனர். சீனாய் உடன்படிக்கையால் இஸ்ரயேல் மக்கள் வழிநடத்தப்பட்டதை பழைய ஏற்பாட்டுக்காலம் என்றழைக்கிறோம். புதிய ஏற்பாடு என்பது இயேசு கிறிஸ்துவை இணைப்பாளராகக் கொண்டு (எபி 9:15) உருவான புதிய உடன்படிக்கையைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் காலத்திற்கு முன் பழைய ஏற்பாடு; அவரது காலத்திற்குப்பின் புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாடு சீனாய் உடன்படிக்கையை அடித்தளமாகக் கொண்டும், புதிய ஏற்பாடு இயேசுவின் புதிய உடன்படிக்கையை அடித்தளமாகக் கொண்டும் இருப்பதை முதலில் சுட்டிக்காட்டியவர் திருத்தூதர் பவுல் (காண்க. 2கொரி 3:14). நாம் எதை பழைய ஏற்பாடு என்று அழைக்கிறோமோ அதை யூதர்கள் பழைய ஏற்பாடு என்று அழைக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களிடம் இருந்த ஒரே திருநூல் அது. பழைய, புதிய என்கிற வேறுபாடுகளை அவர்கள் ஏற்கவில்லை. பழைய ஏற்பாட்டில் 46 நூல்களும், புதிய ஏற்பாட்டில் 27 நூல்களும் உள்ளன. பிரிவினைச் சகோதரர்கள் புதிய ஏற்பாட்டிலுள்ள 27 நூல்களையும் ஏற்றுக்கொண்டாலும், பழைய ஏற்பாட்டில் அவர்கள் 39 நூல்களை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றார்கள். அவர்கள் ஏற்றுக்கொள்ளாத பழைய ஏற்பாட்டு நூல்கள்: தோபித்து, யூதித்து, சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம், பாரூக்கு, மக்கபேயர் முதல் நூலும் இரண்டாம் நூலும். இவை தவிர, எஸ்தர் நூலில் சில பகுதிகள் (கிரேக்க மொழியில் கிடைக்கப்பெற்ற பகுதிகள்), தானியேல் நூலிலுள்ள இளைஞர் மூவரின் பாடலின் பெரும் பகுதி (3:24-90), சூசன்னா கதை (தானி 13) மற்றும் பேல் தெய்வமும், அரக்கப் பாம்பும் (தானி 14). திருச்சபையின் தொடக்கக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்குமிடையே பிணக்குகள் இருந்தன. உரோமையர்களுக்கெதிரான யூதர்களின் விடுதலைப் போரில் (கி.பி. 66-70) யூதர்கள் தோல்வியடைந்தார்கள். கி.பி. 70ஆம் ஆண்டளவில் யூதர்களின் கெளரவச் சின்னமாகிய எருசலேம் பெருங்கோவிலை உரோமையர்கள் தரைமட்டமாக்கினார்கள். பல யூதர்கள் கொல்லப்பட்டார்கள். பலர் வெவ்வேறு திசைகளில் சிதறிச் சென்றார்கள். உரோமையர்களுக்கெதிராக போர்க்கொடி தூக்கிய தீவிரவாதிகள் (Zealots) முற்றிலும் அழிக்கப் பட்டார்கள். சாக்கடலுக்கு அருகே கி.மு. 150ஆம் ஆண்டளவில் ‘நீதியின் ஆசிரியர் (The Teacher of Righteousness) என்று தன்னை அழைத்துக்கொண்ட ஒருவரால் அமைக்கப்பட்ட துறவு மடத்தில் ‘எஸ்ஸேனியர்கள்’ என்றழைக்கப்பட்ட துறவு வாழ்க்கை மேற்கொண்ட யூதப் பிரிவினர் (திரு விவிலியத்தில் இவர்களைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை; ஆனால் கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த (கி.பி. 79இல் இறந்தார் என்கிற குறிப்பு மட்டும் உள்ளது!) பிளினி மூப்பர் (Pliny the Elder) என்கிற உரோமை எழுத்தாளர் தனது ‘இயற்கையான வரலாறு’ (Natural History) என்கிற நூலில் ஒரு சில வரிகளில் எஸ்ஸேனியர்களைப் பற்றிய குறிப்பை இணைத்துள்ளார். எஸ்ஸேனியர்கள் செல்வத்தின் மீது பற்றுக் கொள்ளாமலும், அவர்களின் குருக்கள் திருமணம் புரியாமலும் பல சந்ததிகளாக வாழ்ந்தார்கள் என்று குறிப்பிடுகிறார். அவர்கள் சாக்கடலுக்கு அருகிலுள்ள ‘அயின்கெடி’ (Ein Gedi) பகுதியில் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கிரேக்கப் பண்பாட்டில் ஊறிப் போயிருந்த அலெக்சாந்திரியாவின் பீலோ என்கிற யூத மெய்யியல் வித்தகர் (கி.மு. 20 – கி.பி. 50) எஸ்ஸேனியர்கள் இஸ்ரயேல் முழுவதிலும் வாழ்ந்ததாக எழுதியுள்ளார். கிபி. 38ஆம் ஆண்டு முதல் 100ஆம் ஆண்டு வரை வாழ்ந்த யூத வரலாற்று ஆசிரியர் ஃபிலாவியு யோசேப்பு (Flavius Josephus) என்பவர் தனது ‘யூதப் போர்கள் (Jewish Wars), ‘யூதர்களின் பழம்பெருமை’ (Antiquities of the Jews), ‘ஃபிலாவியு யோசேப்பின் வாழ்க்கை வரலாறு’ (The Life of Flavius Josephus) ஆகிய நூல்களில் இவர்களைப் பற்றி பல உண்மைகளை எழுதியுள்ளார். இவர்களுக்கும், பரிசேயர் பிரிவினருக்கும் முன்னோடிகள் என்று பொதுவாக அறியப்படும் ‘சமயப் பணியார்வமுடையோர் அல்லது ‘பக்தர்கள்’ என்கிற பொருள் கொண்ட ‘கசிதேயர்’ பிரிவினர் பற்றிய குறிப்புகள் மக்கபேயர் நூல்களில் மூன்று முறை வருகின்றன - 1மக் 2:42;7:13; 2மக் 14:6!]) ஒட்டுமொத்தமாகக் கொல்லப்பட்டனர். யூதர்களிடையே இருந்த மற்றொரு பிரிவினராகிய சதுசேயர்கள் கிரேக்க-உரோமைப் பண்பாட்டுக் கலாச்சாரத்தில் ஆர்வம் கொண்டவர்களாய் தங்களின் யூத சமயக் காரியங்களில் ஈடுபாடின்றி முற்றிலும் ஒதுங்கிக்கொண்டார்கள். யூதர்களில் கடைசியாக எஞ்சியவர்கள் பரிசேயர்ப் பிரிவினர் மட்டுமே. அவர்கள் யூத சமயக் காரியங்களில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்கள். எருசலேம் கோவில் இல்லாத நிலையிலும், யூத சமயத்தில் பெரும்பான்மையான மக்கள் அழிக்கப்பட்டோ அல்லது ஆர்வம் குன்றி ஒதுங்கியோ நின்ற வேளையிலும் யூத சமயத்தையும், அதன் மரபுகள் மற்றும் கோட்பாடுகளையும் பாதுகாத்திடும் நோக்கில் பரிசேயர் பிரிவினர் முனைப்புடன் செயல்பட்டனர். அவர்களில் யூதத் திருச்சட்டம், சமய இலக்கியங்கள் மற்றும் கோட்பாடுகளில் புலமை பெற்ற சில அறிஞர்கள் கி.பி. 80ஆம் ஆண்டு முதல் 95ஆம் ஆண்டு வரை இஸ்ரயேலிலுள்ள ஜாம்னியா (Jamnia) என்கிற இடத்தில் அடிக்கடி கூடி, தங்களின் சமயம் தொடர்பான நூல்களை, அதாவது, பழைய ஏற்பாட்டு நூல்களை சேகரித்தார்கள். அப்படி அவர்களால் சேகரிக்கப்பட்ட நூல்களில் எவையெல்லாம் எபிரேய மொழியில் எழுதப்பட்டிருந்தனவோ அவற்றை மட்டும் ஏற்று, அவற்றிற்கு அங்கீகாரம் வழங்கி, அவற்றைத் தொகுத்து, அந்தத் தொகுப்பை தங்கள் சமயத்தின் புனித நூலாக அறிவித்தனர். அப்படி அறிவிக்கப்பட்ட புனித நூல்களின் தொகுப்பில் மொத்தம் 39 நூல்கள் மட்டும் இருந்தன. அந்த 39 நூல்களைத்தான் நம் பிரிவினைச் சகோதரர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். யூதர்களால் நிர்ணையிக்கப்பட்டதை பாலஸ்தீனிய திருத்தொகை என்கிறோம். கும்ரான் பகுதியில் வாழ்ந்த எஸ்ஸேனியர்கள் (கி.மு. 152 – கி.பி.68) பயன்படுத்திய நூல்களில் எஸ்தர் நூல் இடம்பெறவில்லை. ஆனால் யூதர்கள் ஏற்காத ஏழு நூல்களில் சிலவற்றை இந்தப் பிரிவினர் படித்ததாக அறிகிறோம். அதிகாரப்பூர்வமாக அவர்கள் ஏற்றுக்கொண்ட பழைய ஏற்பாட்டுப் பகுதி கும்ரான் திருத்தொகை என்றழைக்கப்படுகிறது. சமாரியர்களும், யூதர்களும் ஒருவரையொருவர் எதிரிகளாக எண்ணிக்கொண்டு வாழ்ந்தனர். சமாரியர்கள் பிற இனத்தவர் அல்ல. அடிப்படையில் அவர்களும் யூதர்களே. ஆனால் அவர்கள் கலப்பினத்தவர்கள். சமாரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு எப்ராயிம் என்றும், இஸ்ரயேல் என்றும் அழைக்கப்பட்ட வடநாடு கி.மு. 722இல் அசீரியர்களால் வீழ்த்தப் பட்டு, அங்கிருந்தவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள். வடநாட்டவர் அசீரியர்களுடன் கலப்புத் திருமணம் புரிந்துகொண்டார்கள். ஆகவே இவர்களை சமாரியர்கள் என்று யூதர்கள் வெறுத்து ஒதுக்கினார்கள். சமாரியர்கள் எருசலேம் கோவிலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கெரிசிம் மலைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். சமயக் காரியங்களில் யூதர்களிடமிருந்து இவர்கள் வேறுபட்டு நின்றார்கள். இவர்கள் ஐந்நூலை (திருச்சட்டம்/தோரா) மற்றும் ஏற்றுக் கொண்டார்கள். இவர்கள் பயன்படுத்திய திரு நூல் சமாரியர் திருத்தொகை என்றழைக்கப் படுகிறது. யூதர்களின் சதுசேயப் பிரிவினர் சமாரியர் திருத்தொகையை மட்டும் ஏற்றுக் கொண்டனர். யூத சமயத்தின் முயற்சியில் கி.மு. 250 முதல் கி.மு. 100 வரையுள்ள காலக்கட்டத்தில் எகிப்திலுள்ள அலெக்சாந்திரியாவில் உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிற ‘எழுபதின்மர் நூல்’ (The Septuagint) என்கிற பழைய ஏற்பாட்டின் முதல் கிரேக்க மொழிபெயர்ப்பில் யூதர்கள் ஏற்றுக்கொள்ளாத ஏழு நூல்கள் உட்பட 46 நூல்கள் இருக்கின்றன. எழுபதின்மர் நூலில் காணப்படும் பழைய ஏற்பாட்டின் 46 நூல்களையும் தொடக்கக்காலத் திருச்சபை ஏற்றுக் கொண்டது. இது அலெக்சாந்திரிய திருத்தொகை எனப்படுகிறது. இதையே கத்தோலிக்கத் திருச்சபை இன்று வரை ஏற்று வந்துள்ளது.