Manage OLD TESTAMENT

  • Home
  • Manage OLD TESTAMENT
முன்னுரை:1

விவிலியத்தில் இடம்பெறும் இறைவாக்குகளுள், ஆமோஸ் உரைத்த தூதுரையே முதலில் எழுத்து வடிவம் பெற்றதாகும். ஆமோஸ் தென்னாடான யூதாவில் பிறந்தவராயினும் வடநாடான இஸ்ரயேலுக்குச் சென்று கி.மு. 8ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் இறைவாக்கு உரைத்தார். அந்நாளில், அந்நாடு சீரும் சிறப்புமாய் இருந்தது. ஆனால் வளமும் வாழ்வும் செல்வருக்கும் வலியோருக்கும் மட்டுமே; ஏழை எளியவர்கள் நசுக்கப்பட்டுத் தாழ்வுற்றுக் கிடந்தனர்.

வலியோரை வாழ்த்தி எளியோரை வாட்டும் அநீதியும் பொய்ம்மையும் நிறைந்த சமுதாயத்தைக் கண்டு சீறுகிறார் ஆமோஸ். இனம் இனத்தையும் மனிதர் மனிதரையும் கசக்கிப் பிழியும் கொடுமையைக் கடுமையாய்க் கண்டிக்கிறார். நீதியையும் நேர்மையையும் வளர்த்துக் கொண்டாலன்றி, எந்த இனமும் கடவுளின் கடும் தண்டனைக்கு உள்ளாகும் என்று எச்சரிக்கை விடுக்கின்றார்.

நூலின் பிரிவுகள்


1. வேற்றினத்தார்மீது இறைவனின் தீர்ப்பு 1:1 - 2:5
2. இஸ்ரயேல் மீது இறைவனின் தீர்ப்பு 2:6 - 6:14
3. ஐந்து காட்சிகள் 7:1 - 9:15



அதிகாரம் 1:1-15

1தெக்கோவாவில் கால்நடைச் செல்வம் மிகுதியாக உடையவர்களுள் ஒருவர் ஆமோஸ். யூதாவை உசியாவும் இஸ்ரயேலை யோவாசின் மகன் எரொபவாமும் ஆண்டுவந்த காலத்தில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன், இஸ்ரயேலைக் குறித்து ஆமோஸ் காட்சி கண்டு கூறியவை பின்வருமாறு:✠

2“சீயோனிலிருந்து ஆண்டவர்
கர்ச்சனை செய்கின்றார்;
எருசலேமிலிருந்து அவர்
முழங்குகின்றார்;
இடையர்களின் மேய்ச்சல் நிலங்கள்
தீய்ந்து போகின்றன;
கர்மேல் மலையின் உச்சியும்
காய்ந்து போகின்றது”.✠


வேற்றினத்தார்மீது ஆண்டவரின் தீர்ப்பு தமஸ்கு நகர்


3ஆண்டவர் கூறுவது இதுவே:
தமஸ்கு நகரினர்
எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக,
நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை
மாற்றவே மாட்டேன்.
ஏனெனில், அவர்கள் கிலயாதை
இரும்புக் கருவிகளைக் கொண்டு
போராடித்தார்கள்.

‍‍‍‍

4ஆதலால் அசாயேல் வீட்டின்மேல்
தீ மூளச் செய்வேன்.
அது பெனதாது கோட்டைகளை
விழுங்கிவிடும்.
5தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைப்பேன்.
பிக்காத்தாவேனில்
குடியிருப்பவர்களையும்
பெத்ஏதேனில் செங்கோல்
பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன்.
ஆராமின் மக்கள்
கீருக்கு நாடுகடத்தப்படுவார்கள்”
என்கிறார் ஆண்டவர்.✠

பெலிஸ்தியா நாடு


6ஆண்டவர் கூறுவது இதுவே:
“காசா நகரினர் எண்ணற்ற
குற்றங்கள் செய்ததற்காக
நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை
மாற்றவே மாட்டேன்.
அவர்கள் ஒரு முழு இனத்தையே
ஏதோமுக்கு அடிமைகளாகக்
கையளித்தார்கள்;
7ஆதலால் காசாவின்
கோட்டை மதில்கள்மேல்
நெருப்பைக் கொட்டுவேன்.
அது அச்சுவர்களை விழுங்கிவிடும்.
8அஸ்தோதில் குடியிருப்பவர்களையும்
அஸ்கலோனில் செங்கோல்
பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன்;
எக்ரோனுக்கு எதிராக
என் கையை ஓங்குவேன்;
பெலிஸ்தியருள் எஞ்சியிருப்போரும்
அழிந்திடுவர்” என்கிறார்
ஆண்டவராகிய என் தலைவர்.

தீர் நகர்


9ஆண்டவர் கூறுவுது இதுவே:
“தீர் நகரினர் எண்ணற்ற
குற்றங்கள் செய்ததற்காக
நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை
மாற்றவே மாட்டேன்;
ஏனெனில், அவர்கள்
ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு
அடிமைகளாகக் கையளித்தார்கள்;
சகோதர உடன்படிக்கையை
அவர்கள் நினைவில் கொள்ளவில்லை.
10ஆதலால் தீரின் கோட்டை
மதில்கள் மேல்
நெருப்பைக் கொட்டுவேன்;
அது அச்சுவர்களை விழுங்கிவிடும்.”


ஏதோம் நாடு


11ஆண்டவர் கூறுவது இதுவே:
“ஏதோம் எண்ணற்ற
குற்றங்கள் செய்ததற்காக
நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை
மாற்றவே மாட்டேன்;
ஏனெனில், அவன் உறவுமுறையின்
கடமைகளை மீறி வாளேந்தித்
தன் சகோதரனையே துரத்தினான்;
தன் ஆத்திரத்தை
அடக்கி வைக்காமல் என்றென்றும்
கோபத்தைக் காட்டி வந்தான்.
12ஆதலால் தேமான்மேல்
நெருப்பைக் கொட்டுவேன்;
அது பொட்சராவின் கோட்டைகளை
விழுங்கிவிடும்.


அம்மோனியர் நாடு


13ஆண்டவர் கூறுவது இதுவே:
“அம்மோன் மக்கள்
எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக
நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை
மாற்றவே மாட்டேன்;
ஏனெனில், அவர்கள்
தங்கள் நாட்டு எல்லைகளை
விரிவுபடுத்துவதற்காகக்
கிலயாதின் கர்ப்பவதிகள் வயிற்றைப்
பீறிக் கிழித்தார்கள்.
14ஆதலால், இராபாவின் கோட்டை
மதில்கள்மேல்
நெருப்பைக் கொட்டுவேன்.
அது அச்சுவர்களை விழுங்கி விடும்;
அப்பொழுது, போர்க்காலத்தின்
பேரிரைச்சலும், சூறாவளி நாளின்
கடும் புயலும் இருக்கும்.
15அவர்களுடைய அரசன்
அடிமையாய்க்
கொண்டு போகப்படுவான்.
அவனோடு அதிகாரிகளும்
கொண்டு போகப்படுவார்கள்”
என்கிறார் ஆண்டவர்.


1:1 2 அர 15:1-7; 2 குறி 26:1-23; 2 அர 14:23-29. 1:2 யோவே 3:16. 1:3-5 எசா 17:1-3; எரே 49:23-27; செக் 9:1. 1:6-8 எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; செப் 2:4-7; செக் 9:5-7. 1:9-10 எசா 23:1-18; எசே 26:1-28:19; யோவே 3:4-8; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. 1:11-12 எசா 34:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஒப 1-14; மலா 1:2-5. 1:13-15 எரே 49:1-6; எசே 21:28-32; 25:1-7; செப் 2:8-11.


1:3 * ‘மூன்றும் நான்குமாகிய’ என்பது பொருள். 1:5 * எபிரேயத்தில், ‘சிற்றின்ப இல்லம்’ என்பது பொருள்.



அதிகாரம் 2:1-16

மோவாபு நாடு


1ஆண்டவர் கூறுவது இதுவே: “மோவாபு
எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக
நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை
மாற்றவே மாட்டேன்;
ஏனெனில், அவன்
ஏதோம் அரசனின் எலும்புகளைச்
சுட்டுச் சாம்பலாக்கினான்.
2ஆதலால், மோவாபின்மேல்
நெருப்பைக் கொட்டுவேன்.
அது கெரியோத்தின் கோட்டைகளை
விழுங்கிவிடும்;
இரைச்சல், கூச்சல், எக்காள முழக்கம்
ஆகியவை ஒருசேர எழும் வேளைகளில்
மோவாபு மடிந்திடுவான்.
3அந்நாட்டின் ஆட்சியாளனை
அவர்களிடையேயிருந்து
அகற்றிவிடுவேன்;
அவனோடு அதிகாரிகள்
அனைவரையும் அழித்து விடுவேன்”
என்கிறார் ஆண்டவர்.


யூதா நாடு


4ஆண்டவர் கூறுவது இதுவே:
“யூதா எண்ணற்ற குற்றங்கள்
செய்ததற்காக
நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை
மாற்றவேமாட்டேன்;
ஏனெனில், அவர்கள்
ஆண்டவரின் திருச்சட்டத்தை
புறக்கணித்தார்கள்;
அவருடைய நியமங்களை
கடைப்பிடிக்கவில்லை;
அவர்களுடைய தந்தையர்
பின்பற்றிய பொய்த் தெய்வங்கள்
அவர்களையும் வஞ்சித்துவிட்டன.
5ஆதலால் யூதாவின்மேல்
நெருப்பைக் கொட்டுவேன்;
அது எருசலேமின் கோட்டைகளை
விழுங்கிவிடும்.”


இஸ்ரயேல் நாட்டின்மீது தீர்ப்பு


6ஆண்டவர் கூறுவது இதுவே:
“இஸ்ரயேல் எண்ணற்ற குற்றங்கள்
செய்ததற்காக
நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை
மாற்றவே மாட்டேன்;
ஏனெனில், அவர்கள்
நேர்மையாளரை வெள்ளிக் காசுக்கும்
வறியவரை இரு காலணிக்கும்
விற்கின்றார்கள்.
7ஏழைகளின் தலைகளை மண்ணில்
புழுதிபட மிதிக்கின்றார்கள்;
ஒடுக்கப்பட்டோரின் நெறியைக்
கெடுக்கின்றார்கள்;
மகனும் தந்தையும்
ஒரே பெண்ணைக் கூடி,
என் திருப்பெயரைக்
களங்கப்படுத்துகின்றார்கள்.
8கடன்காரரிடமிருந்து
பறித்த ஆடைகளை
விரித்துப் போட்டு,
எல்லாப் பலிபீடங்களின் முன்பும்
கிடந்து கொண்டு
அபராதம் விதித்துக்
கிடைத்த மதுவினைத்
தங்கள் கடவுளின் இல்லத்தில்
குடிக்கின்றார்கள்.
9நானோ கேதுரு மரத்தின் உயரமும்
கருவாலி மரத்தின்
வலிமையும் கொண்ட எமோரியரை
அவர்கள் முன்பாக அழித்துவிட்டேன்;
மேலே அவர்களுடைய கனிகளையும்,
கீழே அவர்களுடைய வேர்களையும்
அழித்துவிட்டேன்;✠
10மேலும், எகிப்து நாட்டிலிருந்து
உங்களை அழைத்து வந்து,
நாற்பது ஆண்டுகள்
பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தி,
எமோரியர் நாட்டை நீங்கள்
உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச்
செய்தேன்.
11உங்கள் புதல்வர்களுள் சிலரை
இறைவாக்கினராய் உயர்த்தினேன்;
உங்கள் இளைஞர்களுள் சிலரை
நாசீர்களாய்த் தேர்ந்துகொண்டேன்;
இஸ்ரயேல் மக்களே,
இது உண்மையன்றோ?”
என்கிறார் ஆண்டவர்.✠
12ஆனால், நீங்கள் நாசீர்களை
மது அருந்தச் செய்தீர்கள்;
இறைவாக்கினருக்கு
“இறைவாக்கு உரைக்கக்கூடாது”
என்று கட்டளையிட்டீர்கள்.
13வைக்கோல் பொதி நிறைந்த வண்டி
அழுந்துவது போல, உங்களையும்
நீங்கள் இருக்கும் இடத்திலேயே
அழுத்துவேன்.
14விரைந்தோடுகிறவனும் தப்ப முடியாது;
வலிமையுள்ளவனும்
தன் வலிமையை இழந்து விடுவான்;
வீரனாலும் தன்னுயிரைக்
காத்துக் கொள்ள முடியாது.
15வில்லேந்தும் வீரன்
எதிர்த்து நிற்கமாட்டான்.
விரைந்தோடுபவனும்
தன்னைக் காப்பாற்றிக்
கொள்ளமாட்டான்,
குதிரை வீரனாலும் தன்னுயிரைக்
காத்துக்கொள்ள முடியாது.
16அந்நாளில் வலிமை மிக்கவர்களுள்
நெஞ்சுரம் கொண்டவன்கூடப்
படைக்கலன்களைத் தூக்கி எறிந்து விட்டு
ஓடுவான் என்கிறார் ஆண்டவர்.


2:1-3 எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-47; எசே 25:8-11; செப் 2:8-11. 2:9 இச 3:8-11. 2:11 எண் 6:1-8.



அதிகாரம் 3:1-15

1இஸ்ரயேல் மக்களே! கேளுங்கள்; உங்களுக்கு எதிராக — ஆம், எகிப்து நாட்டினின்று நான் அழைத்து வந்த முழுக் குடும்பமாகிய உங்களுக்கு எதிராக — ஆண்டவர் உரைக்கும் இந்த வாக்கைக் கேளுங்கள்;

2“உலகத்திலுள்ள எல்லா
மக்களினங்களுக்குள்ளும்
உங்களைத்தான் நான் சிறப்பாக
அறிந்துகோண்டேன்;
ஆதலால், உங்கள்
தீச்செயல் அனைத்திற்காகவும்
நான் உங்களைத் தண்டிப்பேன்.


இறைவாக்கினரின் அழைப்பு


3தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல்
இருவர் சேர்ந்து நடப்பார்களோ?
4இரை அகப்படாமல் இருக்கும்போது
காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ?
ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையிலேயே
குகையிலிருந்து இளஞ்சிங்கம்
முழக்கம் செய்யுமோ?
5வேடன் தரையில்
வலைவிரிக்காதிருக்கும்போதே
பறவை கண்ணியில்
சிக்கிக்கொள்வதுண்டோ?
ஒன்றுமே சிக்காதிருக்கும்போது
பொறி தரையைவிட்டுத்
துள்ளுவதுண்டோ?
6நகரில் எக்காளம் ஊதப்படுமானால்,
மக்கள் அஞ்சி நடுங்காமல்
இருப்பார்களோ?
ஆண்டவர் அனுப்பவில்லையெனில்,
நகருக்குத் தீமை தானாக வந்திடுமோ?
7தம் ஊழியர்களாகிய
இறைவாக்கினர்களுக்குத்
தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல்,
தலைவராகிய ஆண்டவர்
ஏதும் செய்வதில்லை.
8சிங்கம் கர்ச்சனை செய்கின்றது;
அஞ்சி நடுங்காதவர் எவர்?
தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க,
இறைவாக்கு உரைக்காதவர் எவர்?


சமாரியாவின் அழிவு


9“அசீரியாவின் கோட்டைகள் மேலும்
எகிப்து நாட்டின் கோட்டைகள் மேலும்
நின்றுகொண்டு
இவ்வாறு பறைசாற்று;
சமாரியாவின் மலைகள்மேல்
வந்து கூடுங்கள்;
அங்கு ஏற்படும் குழப்பங்களையும்
நடக்கும் கொடுமைகளையும்
பாருங்கள்.
10நலமானதைச் செய்ய
அவர்களுக்குத் தெரிவ தில்லை”
என்கிறார் ஆண்டவர்.
“அவர்கள் தங்கள் கோட்டைகளை
வன்முறைகளாலும்
கொள்ளைகளாலும் நிரப்புகிறார்கள்.”
11ஆகையால், தலைவராகிய ஆண்டவர்
கூறுவது இதுவே:
“பகைவன் ஒருவன் வந்து
நாட்டைச் சூழ்ந்து கொள்வான்;
அரண்களையெல்லாம்
தரைமட்டமாக்குவான்;
உங்கள் கோட்டைகள்
கொள்ளையிடப்படும்.
12ஆண்டவர் கூறுவது இதுவே:
“சிங்கத்தின் வாயிலிருந்து
இடையன் தன் ஆட்டின்
இரண்டு கால்களையோ
காதின் ஒருபகுதியையோ
பிடுங்கி எடுப்பது போல,
சமாரியாவில் குடியிருந்து,
பஞ்சணைகள்மீதும் மெத்தைகள்மீதும்
சாய்ந்து இன்புறும் இஸ்ரயேல் மக்கள்
விடுவிக்கப்படுவதும் இருக்கும்.”
13“கேளுங்கள்;
யாக்கோபின் வீட்டாருக்கு எதிராகச்
சான்று பகருங்கள்,”
என்கிறார் தலைவரும்
படைகளின் கடவுளுமாகிய ஆண்டவர்.
14“இஸ்ரயேலை
அதன் குற்றங்களுக்காகத்
தண்டிக்கும் நாளில்,
பெத்தேலில் உள்ள
பலிபீடங்களை அழிப்பேன்;
பலிபீடத்தின் கொம்புகள்
வெட்டப்பட்டுத் தரையில் விழும்.✠
15குளிர்கால வேனிற்கால மாளிகைகளை
இடித்துத் தள்ளுவேன்;
தந்தத்தாலான வீடுகள்
அழிந்து போகும்;
மாபெரும் இல்லங்களும்
பாழாய்ப் போகும்,”
என்கிறார் ஆண்டவர்.


3:14 2 அர 23:15.



அதிகாரம் 4:1-13

1“சமாரியா மலைமேல் வாழும் பாசான்
பசுக்களே! இந்த வாக்கைக் கேளுங்கள்;
ஏழைகளை ஒடுக்கி,
வறியோரை நசுக்குகின்ற நீங்கள்
உங்கள் கணவர்களைப் பார்த்து,
“கொண்டுவாருங்கள், குடிப்போம்” என்று சொல்கிறீர்கள்.
2இறைவனாகிய ஆண்டவர்
தம் புனிதத்தின்மேல்
ஆணையிட்டுக் கூறுவது இதுவே:
“உங்களுக்கு அந்த நாள்கள்
வருகின்றன;
அப்பொழுது அவர்கள் உங்களைக்
கொக்கிகளாலும்,
உங்களுள் எஞ்சியிருப்போரைத்
தூண்டில்களாலும்
இழுத்துக் கொண்டு போவார்கள்.
3நீங்கள் ஒருவர் பின் ஒருவராய்
அருகிலுள்ள கோட்டையின்
பிளவு வழியாய் வெளியேற்றப்பட்டு
அர்மோனை நோக்கித்
தள்ளப்படுவீர்கள்”
என்கிறார் ஆண்டவர்.


இஸ்ரயேலின் பிடிவாதம்


4“வாருங்கள், பெத்தேலுக்கு வந்து
குற்றம் செய்யுங்கள்;
கில்காலுக்கு வந்து
குற்றங்களைப் பெருக்குங்கள்;
நாள்தோறும் காலையில்
உங்கள் பலிகளைக்
கொண்டு வாருங்கள்;
மூன்று நாளைக்கு ஒருமுறை
பத்திலொரு பங்கையும் செலுத்துங்கள்.
5புளித்த மாவின் அப்பத்தைக்
கொண்டுவந்து
நன்றிப் பலியாகப் படையுங்கள்;
நேர்ச்சைகளைச் செலுத்தி
அவற்றை விளம்பரப்படுத்துங்கள்.
இஸ்ரயேல் மக்களே,
இப்படிச் செய்வதுதானே
உங்கள் விருப்பம்”,
என்கிறார் ஆண்டவர்.
6“உங்கள் நகர்களில் எல்லாம்
உங்கள் பற்களுக்கு
வேலை இல்லாமல் செய்தேன்;
நீங்கள் குடியிருக்கும்
இடங்களிலெல்லாம்
உணவுப் பற்றாக்குறையை
உண்டாக்கினேன்;
ஆயினும் நீங்கள்
என் பக்கம் திரும்பவில்லை”
என்கிறார் ஆண்டவர்.
7“நீங்கள் அறுவடை செய்ய
மூன்று மாதம் இருந்த போதே
உங்களுக்கு மழையை நிறுத்திவிட்டேன்;
ஓர் ஊரில் மழைபெய்யச் செய்து
அடுத்த ஊரில்
வறட்சியை உண்டாக்கினேன்.
ஒரு வயலில் மழை பெய்யச் செய்தேன்.
வேறொரு வயல்
மழையின்றிக் காய்ந்து போயிற்று.
8ஆகையால், இரண்டு மூன்று
நகர்களின் மக்கள்
தண்ணீர் தேடித் தள்ளாடித் திரிந்து
வேறொரு நகருக்குப் போயும்
அவர்கள் தாகம் தீரவில்லை;
இப்படியெல்லாம் செய்தும்
நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை”
என்கிறார் ஆண்டவர்.
9‘வெப்பக் காற்றாலும்
பயிரழிக்கும் நோயாலும்
உங்களை வதைத்தேன்.
உங்கள் தோப்புகளையும்
திராட்சைத் தோட்டங்களையும்
அழித்தேன்;
அத்திமரங்களையும் ஒலிவமரங்களையும்
வெட்டுக்கிளி தின்றது;
ஆயினும் நீங்கள்
என்பக்கம் திரும்பவில்லை,”
என்கிறார் ஆண்டவர்.
10“எகிப்தின்மீது அனுப்பிய
கொள்ளை நோய் போன்ற
கொடிய நோயை
உங்கள்மீதும் அனுப்பினேன்;
உங்கள் இளைஞர்களை
வாளால் வெட்டி வீழ்த்தினேன்;
உங்கள் குதிரைகளும்
கொள்ளை போயின;
உங்கள் பாளையங்களில்
செத்தவர்களின் பிணநாற்றம்
உங்கள் மூக்கில் ஏறும்படி செய்தேன்;
ஆயினும் நீங்கள்
என் பக்கம் திரும்பவில்லை,”
என்கிறார் ஆண்டவர்.
11“சோதோம், கொமோராவின் மக்களைக்
கடவுள் அழித்ததுபோல
உங்களுள் சிலரை அழித்தேன்.
நீங்களோ,
நெருப்பிலிருந்து இழுக்கப்பட்ட
கொள்ளிக் கட்டைபோல் ஆனீர்கள்;
ஆயினும் நீங்கள்
என்பக்கம் திரும்பவில்லை”
என்கிறார் ஆண்டவர்.
12“ஆகையால், இஸ்ரயேலே!
உனக்கும் இவ்வாறே செய்வேன்,
இஸ்ரயேலே!
இப்படி நான் செய்யப் போவதால்
உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு!”
13ஏனெனில், மலைகளை உருவாக்கியர் அவரே;
காற்றைத் தோற்றுவிப்பவர் அவரே;
தம் எண்ணத்தை மனிதனுக்கு
வெளிப்படுத்துபவரும் அவரே;
காலைப்பொழுதைக்
காரிருள் ஆகச்செய்பவரும் அவரே;
நிலத்தின் உயர்ந்த இடங்களில்
நடமாடுபவரும் அவரே;
படைகளின் கடவுளாகிய
ஆண்டவர் என்பதே அவரது பெயராகும்.



அதிகாரம் 5:1-27

மனம் மாறிட அழைப்பு


1இஸ்ரயேல் வீட்டாரே, உங்களைப் பற்றி நான் புலம்பிக் கூறும் இந்த வாக்கைக் கேளுங்கள்;
2“இஸ்ரயேல் என்னும் கன்னிப் பெண்
விழுந்துகிடக்கிறாள்,
இனி எழவேமாட்டாள்;
தரையில் தன்னந்தனியளாய்க்
கிடக்கின்றாள்;
அவளைத் தூக்கிவிடுவார் யாருமில்லை.”
3ஏனெனில், தலைவராகிய ஆண்டவர்
கூறுவது இதுவே:
“ஆயிரம் பேரை அனுப்பிய நகரில்
நூறு பேரே எஞ்சியிருப்பர்;
நூறு பேரை அனுப்பிய நகரில்
பத்துப் பேரே எஞ்சியிருப்பர்;
இஸ்ரயேல் வீட்டாரின் கதி இதுவே.”
4இஸ்ரயேல் வீட்டாருக்கு
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
என்னைத் தேடுங்கள்,
நீங்கள் வாழ்வீர்கள்;
5ஆனால் பெத்தேலைத் தேடாதீர்கள்,
கில்காலில்
காலெடுத்து வைக்காதீர்கள்;
பெயேர்செபாவுக்குக்
கடந்து போகவேண்டாம்;
ஏனெனில் கில்கால்
உண்மையாகவே நாடுகடத்தப்படும்;
பெத்தேல் பாழாக்கப்படும்.
6ஆண்டவரைத் தேடுங்கள்;
நீங்கள் வாழ்வீர்கள்;
இல்லையேல்
அவர் யோசேப்பின் வீட்டின்மேல்
தீ மூளச் செய்வார்.
அந்நெருப்பு அதை விழுங்கிவிடும்,
பெத்தேலில் அந்நெருப்பை
அணைக்கக்கூடியவர் எவருமிரார்.
7அவர்கள் நீதியை
எட்டிக்காயாய் மாற்றுகின்றார்கள்;
நேர்மையை மண்ணில் எறிகின்றார்கள்.
8ஆனால், அவரே
கார்த்திகை, மிருகசீரிடம்
ஆகிய விண்மீன்களை உண்டாக்கியவர்;
காரிருளைக் காலைப்பொழுது
ஆகச் செய்பவர்;
பகற்பொழுதை
இரவு வேளையாய் மாற்றுபவர்;
கடல் நீரை அழைத்து
நிலத்தின்மேல் பொழியச் செய்பவர்;
அவரது பெயர் “ஆண்டவர்”.✠
9வலிமை மிக்க தளங்கள்மேல்
அவர் அழிவை அனுப்புவதால்
அவை அழிவைக் காண்கின்றன.
10அவர்கள் நகர் வாயிலில் நின்றுகொண்டு
தங்களைக் கண்டிப்பவனைப்
பகைக்கிறார்கள்;
உண்மை பேசுபவனை
வெறுத்து ஒதுக்குகின்றார்கள்.
11நீங்கள் ஏழைகளை நசுக்கி,
அவர்களிடம் தானிய வரியாக
வாங்கியதைக் கொண்டு
நன்கு செதுக்கிய கற்களால்
வீடு கட்டினீர்கள்;
அந்த வீடுகளில் நீங்கள்
வாழப் போவதில்லை;
அருமையான திராட்சைத் தோட்டங்களை
அமைத்தீர்கள்;
அவை தரும் திராட்சை இரசத்தை
நீங்கள் குடிக்கப் போவதில்லை.
12உங்கள் குற்றங்கள்
எவ்வளவு மிகுதியானவை என்றும்
உங்கள் பாவங்கள்
எத்துணைக் கொடியவை என்றும்
நான் அறிவேன்;
நல்லாரைத் துன்புறுத்துகிறீர்கள்,
கையூட்டு வாங்குகிறீர்கள்,
நகர் வாயிலில் வறியோருக்கு
நீதி வழங்க மறுக்கிறீர்கள்.
13அது கெட்ட காலம் என்பதால்,
அப்போது விவேகமுள்ளவன் வாய் திறக்கமாட்டான்.
14நன்மையை நாடுங்கள்,
தீமையைத் தேடாதீர்கள்;
அப்பொழுது நீங்கள் சொல்வதுபோல
படைகளின் கடவுளாகிய ஆண்டவர்
உங்களோடு இருப்பார்.
15தீமையை வெறுத்து
நன்மையை நாடுங்கள்;
நகர் வாயிலில்
நீதியை நிலைநாட்டுங்கள்;
அப்பொழுது ஒருவேளை
படைகளின் கடவுளாகிய ஆண்டவர்
யோசேப்பின் வீட்டாரில்
எஞ்சியிருப்போர்க்கு
இரக்கம் காட்டுவார்.
16ஆகையால், படைகளின் கடவுளும்
தலைவருமாகிய ஆண்டவர்
இவ்வாறு கூறுகிறார்;
“பொதுவிடங்கள் எங்கும்
அழுகுரல் கேட்கும்,
எல்லா வீதிகளிலும்,
“ஐயோ! ஐயோ!” என்ற
புலம்பல் எழும்பும்;
வயலில் வேலை செய்வாரை
அழுவதற்குக் கூப்பிடுவர்;
ஒப்பாரி பாடத் தெரிந்தவர்களை
ஓலமிட்டுப் புலம்ப அழைப்பர்.
17திராட்சைத் தோட்டம் எங்கணும்
ஒரே அழுகையாய் இருக்கும்;
ஏனெனில், உங்கள் நடுவே
நான் கடந்து செல்வென்”,
என்கிறார் ஆண்டவர்.
18ஆண்டவரின் நாளைப்
பார்க்க விரும்புவோரே,
உங்களுக்கு ஐயோ கேடு!
ஆண்டவரின் நாளுக்காக
நீங்கள் ஏங்குவது ஏன்?
அது ஒளிமிக்க நாளன்று;
இருள் சூழ்ந்த
நாளாகத் தான் இருக்கும்.
19அந்த நாள், சிங்கத்திடமிருந்து
தப்பி ஓடிய ஒருவனைக்
கரடி ஒன்று எதிர்கொண்டாற்போலும்,
அவன் தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து,
சுவரில் கைவைத்துச் சாய்ந்த போது,
பாம்பு ஒன்று கடித்தாற்போலும்
இருக்கும்!
20ஆண்டவரின் நாள்
ஒளியின் நாள் அன்று;
அது இருள் கவிந்தது அல்லவா?
வெளிச்சமில்லாத காரிருள் அல்லவா?
21“உங்கள் திருவிழாக்களை
நான் வெறுத்து அருவருக்கின்றேன்;
உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில்
எனக்கு விருப்பமே இல்லை.
22எரிபலிகளையும்
தானியப் படையல்களையும்
எனக்கு நீங்கள் செலுத்தினாலும்
நான் ஏற்க மாட்டேன்;
கொழுத்த விலங்குகளை
நல்லுறவுப் பலிகளாகச்
செலுத்தும்போது
நான் ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன்.
23என் முன்னிலையில்
நீங்கள் இரைச்சலிட்டுப் பாடும்
பாடல்களை நிறுத்துங்கள்,
உங்கள் வீணைகளின் ஓசையை
நான் கேட்க மாட்டேன்.
24மாறாக, நீதி
வெள்ளமெனப் பொங்கி வருக!
நேர்மை
வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!

25“இஸ்ரயேல் வீட்டாரே, பாலை நிலத்தில் இருந்த அந்த நாற்பது ஆண்டுகளில் பலிகளும் காணிக்கைகளும் எனக்குக் கொடுத்தீர்களோ? 26நீங்கள் சிக்கூத்தை மன்னனாகவும் கிய்யோனை விண்மீன் தெய்வமாகவும் ஏற்றுக் கொண்டீர்கள்; அவற்றின் வடிவில் உங்களுக்கெனச் சிலைகளும் செய்து கொண்டீர்கள்; அந்தச் சிலைகளை நீங்கள் தூக்கிக்கொண்டு போகும் நாள் வரும். 27உங்களை நாள் தமஸ்குவுக்கும் அப்பால் நாடுகடத்தப்போகிறேன்”, என்கிறார் ஆண்டவர்; அவரது பெயர் “படைகளின் கடவுள்.”


5:8 யோபு 9:1; 38:31. 5:21-22 எசா 1:11-14.



அதிகாரம் 6:1-14

இஸ்ரயேலின் அழிவு


1“சீயோன் குன்றின்மீது இன்பத்தில்
திளைத்திருப்போரே!
சமாரியா மலைமேல்
கவலையற்றிருப்போரே!
மக்களினங்களுள் சிறந்த இனத்தின்
உயர்குடி மக்களே!
இஸ்ரயேலின் மக்கள்
தேடி வருமளவுக்குப்
பெருமை வாய்ந்தவர்களே!
உங்களுக்கு ஐயோ கேடு!
2கல்னேக்குப் போய்ப் பாருங்கள்;
அங்கிருந்து சிறந்த நகரமாகிய
ஆமாத்துக்குப் போங்கள்;
பிறகு பெலிஸ்தியரின் நகரான
காத்துக்குச் செல்லுங்கள்;
அந்த அரசுகள்
உங்கள் அரசுகளை விடச்
சிறந்தவையோ?
உங்கள் நாடுகள்
அவர்களுடைய நாடுகளைவிடப்
பரப்பளவில் பெரியவையோ?
3தீய நாளை
இன்னும் தள்ளிவைப்பதாக
நீங்கள் நினைக்கின்றீர்கள்;
ஆனால் வன்முறையின் ஆட்சியை
அருகில் கொண்டு வருகின்றீர்கள்.
4தந்தத்தாலான கட்டிலில்
பஞ்சணைமீது சாய்ந்து கிடப்போருக்கும்
கிடையிலிருந்து வரும்
ஆட்டுக் குட்டிகளையும்
மந்தையிலிருந்து வரும்
கொழுத்த கன்றுகளையும்
உண்போருக்கும் ஐயோ கேடு!
5அவர்கள் வீணையொலி எழுப்பி
அலறித் தீர்க்கின்றார்கள்,
தாவீதைப்போல
புதிய இசைக்கருவிகளைக்
கண்டுபிடிக்கின்றார்கள்.
6கோப்பைகளில்
திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்;
உயர்ந்த நறுமண எண்ணெயைத்
தடவிக்கொள்கின்றார்கள்.
7ஆகையால் அவர்கள்தான்
முதலில் நாடு கடத்தப்படுவார்கள்;
அவர்களது இன்பக் களிப்பும்
இல்லாதொழியும்.
8தலைவராகிய ஆண்டவர்
தம்மீது ஆணையிட்டுக் கூறுகிறார்;
படைகளின் கடவுளாகிய ஆண்டவர்
இவ்வாறு சொல்கிறார்:
யாக்கோபின் செருக்கை
நான் வெறுக்கிறேன்;
அவனுடைய கோட்டைகளை
அருவருக்கிறேன்.
நகரையும் அதிலுள்ள யாவரையும்
நான் கைவிட்டு விடுவேன்.

9ஒரு வீட்டில் பத்துப்பேரே இருந்தாலும் அவர்களும் மாண்டு போவார்கள். 10வீட்டிலிருந்து எலும்புகளை எடுத்துச் செல்ல மிகச் சிலரே தப்பிப் பிழைப்பார்கள்; ஒருவன், வீட்டில் மூலையிலிருக்கும் இன்னொருவனிடம், “உன்னுடன் வேறு யாரேனும் உளரோ?” என்று கேட்க, அவன், “இல்லை” என்று பதில் சொல்லி “பேசாதே, ஆண்டவரின் பெயரைச் சொல்லக் கூடாது” என்பான்.

11ஆண்டவர்தாமே ஆணையிடுகின்றார்;
பெரிய மாளிகைகளைத்
தரைமட்டமாக்குவார்;
சிறிய வீடுகளைத்
தவிடுபொடியாக்குவார்.
12பாறைகள்மேல் குதிரைகள் ஓடுமோ?
எருதுகளைக் கட்டிக்
கடலை உழுவதுண்டோ?
நீங்கள் நீதியை நஞ்சாக மாற்றினீர்கள்,
நேர்மையின் கனியை
எட்டிக்காயாய் ஆக்கினீர்கள்.
13லோதபார் ஊரைப் பிடித்தது குறித்துப்
பூரிப்பு அடைகிறீர்கள்;
‘நம் சொந்த வலிமையால்
கர்னாயிமைப் பிடித்து
நமதாக்கிக் கொள்ளவில்லையா?’ என்கிறீர்கள்.
14‘இஸ்ரயேல் வீட்டாரே!
உங்களுக்கு எதிராக
வேற்றினம் ஒன்றைத் தூண்டிவிடுவேன்.
அவர்கள் ஆமாத்து வாயிலில் இருந்து
அராபா நீரோடை வரையில்
உங்களை ஒடுக்கித் துன்புறுத்துவார்கள்,’
என்கிறார் படைகளின் கடவுளாகிய
ஆண்டவர்.



அதிகாரம் 7:1-17

வெட்டுக்கிளிகளின் காட்சி


1தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: “அரசனுக்கென முதல் புல்லறுப்புச் செய்தானபின், இரண்டாம் பருவத்தில் புற்கள் துளிர்க்கத் தொடங்கும் வேளையில், அவர் வெட்டுக்கிளிக் கூட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். 2நாட்டிலிருந்த புல்லையெல்லாம் அவை தின்று தீர்த்துக் கொண்டிருந்த வேளையில் நான்

“இறைவனாகிய ஆண்டவரே,
மன்னித்தருளும்;
உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்;
யாக்கோபு எப்படி
நிலைநிற்கப் போகிறான்?
அவன் மிகச் சிறியவன் அல்லவா!”
என்றேன்.
3ஆண்டவரும் இதைக் குறித்து
மனம் மாறினார்;
‘இது நிகழாது,’ என்றார்
தலைவராகிய ஆண்டவர்.”


நெருப்பின் காட்சி


4தலைவராகிய ஆண்டவர்
எனக்குக் காட்டிய காட்சி இதுவே:
“தலைவராகிய ஆண்டவர்
தண்டனைத் தீர்ப்பாக
நெருப்பு மழையை வருவித்தார்;
அந்த நெருப்பு
ஆழ்கடலை வற்றச் செய்து
நிலத்தையும் விழுங்கிக்
கொண்டிருந்தது.
5நான்,‘தலைவராகிய ஆண்டவரே,
இதை நிறுத்தியருளும்;
உம்மைக் கெஞ்சி மன்றாடுகின்றேன்;
யாக்கோபு எப்படி
நிலைநிற்கப் போகின்றான்?
அவன் மிகச் சிறியவன் அல்லவா!’
என்றேன்.
6ஆண்டவரும் இதைக் குறித்து
மனம் மாறினார்;
‘இதுவும் நிகழாது,’ என்றார்
தலைவராகிய ஆண்டவர்.”


தூக்குநூல் குண்டின் காட்சி


7ஆண்டவர் எனக்குக் காட்டிய
காட்சி இதுவே:
“தூக்கு நூல் குண்டின் துணைகொண்டு
கட்டப்பட்ட ஒரு மதில் அருகில்
அவர் நின்று கொண்டிருந்தார்.
அவர் கையில் ஒரு
தூக்கு நூல் குண்டு இருந்தது.
8‘ஆமோஸ்!
நீ காண்பதென்ன?’ என்று
ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.
நான், ‘அது தூக்கு
நூல் குண்டு’ என்றேன்.
தலைவர் தொடர்ந்து சொன்னார்:
‘தூக்கு நூல் குண்டை
என் மக்களாகிய இஸ்ரயேலின் நடுவில்
தொங்கவிடப் போகிறேன்;
இனி நான் அவர்கள் நடுவே
ஒருபோதும் கடந்து
செல்லப்போவதில்லை’.
9ஈசாக்கின் உயர்ந்த இடங்கள்
பாழாக்கப்படும்;
இஸ்ரயேலின் புனித இடங்கள்
பாலைவெளி ஆக்கப்படும்;
எரொபவாம் வீட்டாருக்கு எதிராக
நான் வாளெடுத்து வருவேன்.”


ஆமோசும் அமட்சியாவும்


10பிறகு, பெத்தேலின் குருவாகிய அமட்சியா என்பவன் இஸ்ரயேலின் அரசன் எரொபவாமுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினான்: “இஸ்ரயேல் வீட்டாரிடையே ஆமோஸ் உமக்கு எதிராகச் சதி செய்கிறான். 11அவன் சொல்வதை எல்லாம் இந்த நாட்டால் தாங்கமுடியவில்லை. ஏனெனில், ‘எரொபவாம் வாளால் மடிவான்; அவனது நாட்டைவிட்டு இஸ்ரயேல் அடிமையாய்க் கொண்டு போகப்படும்’ என்று ஆமோஸ் சொல்லுகிறான்.” 12பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, “காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். 13பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்” என்று சொன்னான்.

14ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: “நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். 15ஆடுகள் ஓட்டிக் கொண்டபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, ‘என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு’ என்று அனுப்பினார்.

16எனவே, இப்பொழுது
ஆண்டவரின் வாக்கைக் கேள்:
‘இஸ்ரயேலுக்கு எதிராக
இறைவாக்கு உரைக்காதே;
ஈசாக்கின் வீட்டாருக்கு எதிராகப்
பேசாதே’ என்று நீ சொல்கிறாய்!
17ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
“உன் மனைவி நகரில்
விலைமகளாய் இருப்பாள்;
உன் புதல்வர் புதல்வியர்
வாளால் மடிவர்;
உன் நிலபுலம்
பங்கு போட்டுக் கொள்ளப்படும்,
நீயோ புனிதமற்ற நாட்டிலே
மாண்டு போவாய்;
இஸ்ரயேல் தன் நாட்டுக்கு வெளியே
அடிமையாகக் கொண்டு போகப்படும்.”



அதிகாரம் 8:1-14

பழக்கூடையின் காட்சி


1தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: “கனிந்த பழங்களுள்ள கூடை ஒன்று கண்டேன். 2அவர், ‘ஆமோஸ்! என்ன காண்கிறாய்?’ என்று கேட்டார்; நான், ‘கனிந்த பழங்கள் உள்ள கூடை’ என்றேன்.

ஆண்டவர் என்னிடம்
தொடர்ந்து பேசினார்;
“என் மக்களாகிய இஸ்ரயேலின்
முடிவு வந்துவிட்டது;
இனி அவர்கள் நடுவே
ஒருபோதும் கடந்து செல்ல மாட்டேன்.
3அந்நாளில் கோவில் பாடல்கள்
புலம்பலாய் மாறும்;
கணக்கற்ற பிணங்கள்
உரிய மரியாதையின்றித்
தூக்கி யெறியப்படும்,
எங்கும் ஒரே அமைதி!’
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.


இஸ்ரயேலின் வீழ்ச்சி


4“வறியோரை நசுக்கி,
நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை
அழிக்கின்றவர்களே,
இதைக் கேளுங்கள்;
5‘நாம் தானியங்களை விற்பதற்கு
அமாவாசை எப்பொழுது முடியும்?
கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு
ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்?
மரக்காலைச்⁕ சிறியதாக்கி,
எடைக்கல்லைக் கனமாக்கி,
கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்;✠
6வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும்
இரு காலணிக்கு
வறியோரையும் வாங்கலாம்;
கோதுமைப் பதர்களையும்
விற்கலாம்’ என்று
நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?’
7ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது
ஆணையிட்டுக் கூறுகின்றார்:
“அவர்களுடைய இந்தச் செயல்களுள்
ஒன்றையேனும்
நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
8இதனை முன்னிட்டு
நாடு நடுநடுங்காதா?
அதில் வாழ்வோர் அனைவரும்
புலம்பமாட்டாரா?
நாடு முழுவதும்
நைல்நதியின் வெள்ளமெனச்
சுழற்றியெறியப்படாதா?
எகிப்து நாட்டின் நைல்நதிபோல்
அலைக்கழிக்கப்பட்டு அடங்காதா?
9தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்:
“அந்நாளில் நண்பகலில்
கதிரவனை மறையச்செய்து
பட்டப்பகலில் உலகை
இருள் சூழச் செய்வேன்.
10உங்கள் திருவிழாக்களை
அழுகையாகவும்,
பாடல்களை எல்லாம்
புலம்பலாகவும் மாற்றுவேன்;
எல்லாரும் இடுப்பில்
சாக்கு உடை உடுத்தவும்,
அனைவரின் தலையும்
மழிக்கப்படவும் செய்வேன்,
ஒரே பிள்ளையைப்
பறிகொடுத்தோர் புலம்புவதுபோல
நீங்களும் புலம்புமாறு செய்வேன்;
அதன் முடிவு
கசப்புமிக்க நாளாய் இருக்கும்.”
11தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்:
“இதோ! நாள்கள் வரப்போகின்றன!
அப்போது நாட்டினுள்
பஞ்சத்தை அனுப்புவேன்;
அது உணவு கிடைக்காத பஞ்சமோ,
நீரில்லாத வறட்சியோ அன்று;
ஆண்டவரின் வாக்கு கிடைக்காத
பஞ்சமே அது.
12ஒரு கடல் முதல் மறு கடல்வரை,
வடதிசை முதல் கீழ்த்திசைவரை
தேடிச் சென்று
அங்குமிங்கும் தள்ளாடி அலைந்து
ஆண்டவரின் வாக்கைத் தேடுவார்கள்.
ஆனால், அதைக் கண்டடையமாட்டார்கள்.
13அந்நாளில் அழகிய கன்னிப் பெண்களும்
இளைஞர்களும்
நீர் வேட்கையால்
சோர்ந்து வீழ்வார்கள்.
14சமாரியா நாட்டு
அஸ்மா தெய்வத்தின் பெயரால்
ஆணையிட்டு,
“தாண் நாடே!
வாழும் உன் கடவுள்மேல்
ஆணை!” எனவும்
“பெயேர்செபாவில் வாழும்
காவலர்மேல் ஆணை!” எனவும்
சொல்லுகின்றவர்கள் வீழ்வார்கள்;
மீண்டும் எழவே மாட்டார்கள்.


8:5 "ஏப்பா" என்பது எபிரேய பாடம். 8:5 "செக்கேல்" என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 9:1-15

ஆண்டவரின் தீர்ப்புகள்


1பலிபீடத்தருகில் ஆண்டவர் நிற்பதைக் கண்டேன்.
அவர் சொன்னார்:
தூணின் முகட்டை இடித்துப் போடு;
மேல்தளம் ஆட்டம் கொடுக்கட்டும்;
மக்கள் அனைவருடைய தலையிலும்
அதை உடைத்துத் தள்ளு;
அவர்களுள் எஞ்சியிருப்போரை
நான் வாளால் கொன்றுபோடுவேன்;
அவர்களில் எவரும்
ஓடிப்போக மாட்டார்;
ஒருவர் கூடத்
தப்பிப் பிழைக்கவும் மாட்டார்.
2பாதாளம் வரையில்
அவர்கள் இறங்கினாலும்
அங்கிருந்தும் என் கை
அவர்களை இழுத்து வரும்;
வான் மட்டும் அவர்கள் ஏறிப்போனாலும்,
அங்கிருந்தும் நான்
அவர்களைப் பிடித்து வருவேன்;
3கர்மேல் மலையுச்சியில் .
ஓடி ஒளிந்துகொண்டாலும்,
அவர்களைத் தேடிப் பிடித்து
அங்கிருந்து கொண்டு வருவேன்;
என் கண்களுக்குத் தப்பி
ஆழ்கடலில் மறைந்தாலும்,
அங்கு அவர்களைக் கடிக்கும்படி
பாம்புக்குக் கட்டளையிடுவேன்.
4தங்கள் பகைவர்முன் அடிமைகளாய்க்
கொண்டு போகப்பட்டாலும்,
அங்கே அவர்களைக் கொல்லும்படி
வாளுக்கு ஆணையிடுவேன்;
அவர்களுக்கு நன்மை செய்யாது
தீங்கு செய்வதிலேயே
நான் கண்ணாயிருப்பேன்.
5படைகளின் கடவுளாகிய
ஆண்டவர் தொட
மண்ணுலகம் பாகாய் உருகுகின்றது;
அதில் வாழ்வோர் அனைவரும்
புலம்புகின்றனர்:
நாடு முழுவதும்
நைல்நதியின் வெள்ளமென
சுழற்றியெறியப்படுகின்றது;
எகிப்து நாட்டின் நைல்நதிபோல்
அலைக்கழிக்கப்பட்டு அடங்குகின்றது.
6அவர் வானத்தில்
தம் மேலறைகளைக் கட்டுகின்றார்;
வானின் வளைவை
நிலத்தில் அடித்தளமிட்டு
நாட்டுகின்றார்;
கடல்களின் நீரை முகந்தெடுத்து
நிலத்தின்மேல் பொழிகின்றார்;
“ஆண்டவர்” என்பது அவரது பெயராம்.


இஸ்ரயேலுக்குத் தனிச் சலுகை இல்லை


7“இஸ்ரயேல் மக்களே,
நீங்கள் எனக்கு
எத்தியோப்பியரைப்
போன்றவர்கள்தானே?
இஸ்ரயேல் மக்களை
எகிப்து நாட்டினின்றும்,
பெலிஸ்தியரைக் கப்தோரிலிருந்தும்,
சிரியரைக் கீரிலிருந்தும்
நான் அழைத்து வரவில்லையா?”
என்கிறார் ஆண்டவர்.
8தலைவராகிய ஆண்டவரின் கண்கள்
பாவம் செய்யும் அரசை
உற்றுப் பார்க்கின்றன;
“மண்ணுலகில் இராதபடி
அதை நான் அழித்து விடுவேன்.
ஆயினும், யாக்கோபின் வீட்டாரை
நான் முற்றிலும் அழிக்கமாட்டேன்”
என்கிறார் ஆண்டவர்.
9நான் ஆணை பிறப்பிப்பேன்;
எல்லா மக்களினங்கள் நடுவிலும்
இஸ்ரயேல் வீட்டாரைச்
சல்லடையில்
தானியத்தைச் சலிப்பதுபோலச்
சலிக்கப் போகின்றேன்;
ஆயினும், கோதுமை மணி ஒன்றும்
தரையில் விழாது.
10“தீமை எங்களை அணுகாது,
எங்கள்மேல் வராது” என்று
என் மக்களுள்
எந்தப் பாவிகள் கூறுகின்றார்களோ,
அவர்கள் அனைவரும்
வாளால் மடிவார்கள்.


இஸ்ரயேலின் மறுவாழ்வு


11“அந்நாள்களில்
விழுந்துகிடக்கும்
தாவீதின் கூடாரத்தை
மீண்டும் உயர்த்துவேன்.
அதிலுள்ள கிழிசல்களைப்
பழுதுபார்த்துச்
சிதைந்தவற்றைச் சீர்படுத்திப்
பண்டை நாளில் இருந்ததுபோல்
மீண்டும் கட்டியெழுப்புவேன்.
12அப்பொழுது,
ஏதோமில் எஞ்சியிருப்போரையும்
எனது பெயரைத் தாங்கியிருக்கும்
பிற இனத்தார் அனைவரையும்
அவர்கள் தங்கள்
உடைமை ஆக்கிக் கொள்வார்கள்,”
என்கிறார்
இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.
13“இதோ! நாள்கள் வரப்போகின்றன;
அப்போது,
அறுவடை செய்வோரை உழுவோரும்,
கனி பிழிவோரை விதைப்போரும்
தொடர்ந்து முன்னேறுவர்;
மலைகள் இனிய இரசத்தைப் பொழியும்;
குன்றுகள்தோறும்
அது வழிந்தோடும்,”
என்கிறார் ஆண்டவர்.
14“என் மக்களாகிய இஸ்ரயேலை
முன்னைய நன்னிலைக்குக்
கொண்டுவருவேன்;
அவர்கள் பாழடைந்த நகர்களைத்
திரும்பக் கட்டி
அவற்றில் குடியேறுவார்கள்;
திராட்சைத் தோட்டங்களை அமைத்து
அவற்றின் கனிரசத்தை
அருந்துவார்கள்.
பழத்தோட்டங்கள் அமைத்து
அவற்றின் கனிகளை உண்பார்கள்.
15அவர்களைத் தங்கள் நாட்டில்
மீண்டும் நான் வேரூன்றச் செய்வேன்;
நான் அவர்களுக்கு அளித்திருக்கும்
நாட்டிலிருந்து
இனி ஒருபோதும் அவர்கள்
பிடுங்கப்படமாட்டார்கள்,” என்கிறார்
உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.


9:11-12 திப 15:16-18.