Manage OLD TESTAMENT

  • Home
  • Manage OLD TESTAMENT
முன்னுரை:1

‘இனிமைமிகு பாடல்’ என்னும் இந்நூல் உண்மையில் ஒரு தொகைநூல்; காதற் கவிதைகளின் ஒரு தொகுப்பு. யூதப் பரம்பரையின்படி, இந்நூலில் அடங்கியுள்ள பாடல்களின் ஆசிரியர் மாமன்னர் சாலமோன்; ஆனால் சாலமோனின் காலத்திற்குப் பிற்பட்ட பாடல்களும் இந்தத் தொகைநூலில் இடம்பெற்றுள்ளன என்பதை மறுத்தல் இயலாது.


‘ இந்நூலின் பாடல்களுக்குப் பல்வேறு பொருள்பொருத்தம் தருகின்றனர் விரிவுரையாளர்கள். கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களினத்திற்கும் இடையே நிலவும் அன்புறவை (காதலுறவை) வருணிப்பவை இவை என்பர் சிலர்; பாலஸ்தீன நாட்டு மக்கள் நடுவில் திருமணத்தின்போது பாடப்பட்டவை என்பர் மற்றும் சிலர். ஆனால் ஆண்-பெண் இருவருக்கும் நடுவில் முகிழ்க்கும் இயல்பான காதலுணர்வை இருவரும் ஒருவர்க்கொருவர் வெளிப்படுத்தும் கவிதைகள் அல்லது கூற்றுகள் இவை என்பதே ஏற்புடையது.


‘ இந்தத் தொகைநூலில் காணும் பாடல்களின் எண்ணிக்கைப்பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மொத்தம் இருபத்தெட்டுப் பாடல்களாகக் காண்பதே இங்குப் பின்பற்றியுள்ள கொள்கை.


‘ காதலுணர்வு புனிதமானது; இயற்கையின் அன்பளிப்பு; கடவுளின் கொடை; இதனை விவிலியம் ஏற்கிறது. இந்நூலில் கடவுளின் பெயர் ஒருமுறைகூட வரவில்லை. எனினும், இறை ஏவுதல் பெற்ற திருமறை நூல்களில் இந்நூலும் இடம்பெறுதல் வியப்பன்று. ஆண்-பெண் காதலுணர்வும் காதலுறவும் கடவுளின் அன்புக்கு ஓர் உயர்ந்த அடையாளம் என்னும் அளவில் இப்பாடல்கள் கடவுள் - இஸ்ரயேல், கிறிஸ்து - திருச்சபை, கடவுள் - ஆன்மா ஆகியோர்க்கிடையில் நிலவும் அன்புணர்வையும் அன்புறவையும் குறிக்கப் பயன்படுதல் மிகவும் பொருத்தமே என்க.



அதிகாரம் 1:1-17

1சாலமோனின் தலைசிறந்த பாடல்✠


சாலமோனின் தலைசிறந்த பாடல்


பாடல் 1: தலைவி கூற்று

2தம் வாயின் முத்தங்களால்
அவர் என்னை முத்தமிடுக!
ஆம், உமது காதல் திராட்சை ரசத்தினும் இனிது!
3உமது பரிமளத்தின் நறுமணம்
இனிமையானது;
உமது பெயரோ பரிமள மணத்தினும்
மிகுதியாய்ப் பரவியுள்ளது;
எனவே, இளம் பெண்கள் உம்மேல்
அன்பு கொள்கின்றனர்.
4உம்மோடு என்னைக்
கூட்டிச் செல்லும், ஓடிடுவோம்;
அரசர் என்னைத் தம் அறைக்குள்
அழைத்துச் செல்லட்டும்!
களிகூர்வோம், உம்மில் அக்களிப்போம்;
திராட்சை இரசத்தினும் மேலாய்
உம் காதலைக் கருதிடுவோம்;
திராட்சை இரசத்தினும்
உமது அன்பைப் போற்றிடுவோம்!


பாடல் 2: தலைவி கூற்று


5எருசலேம் மங்கையரே,
கறுப்பாய் இருப்பினும்,
நான் எழில்மிக்கவளே!
கேதாரின் கூடாரங்களைப் போலுள்ளேன்;
சாலமோனின் எழில்திரைகளுக்கு
இணையாவேன்.
6கறுப்பாய் இருக்கின்றேன் நான் என
என்னையே உற்றுப் பார்க்க வேண்டா!
கதிரவன் காய்ந்தான்;
நான் கறுப்பானேன்;
என் தமையர் என்மேல்
சினம் கொண்டனர்;
திராட்சைத் தோட்டத்திற்கு
என்னைக் காவல் வைத்தனர்;
என் தோட்டத்தையோ
நான் காத்தேன் அல்லேன்!


பாடல் 3: தலைவன்-தலைவி உரையாடல்


7என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரே!
எங்கே நீர் ஆடு மேய்ப்பீர்?
எங்கே நண்பகலில்
மந்தையை இளைப்பாற விடுவீர்?
எனக்குச் சொல்வீர்!
இல்லையேல்,
உம் தோழர்களின் மந்தைகட்கருகில்
வழி தவறியவள் போல்
நான் திரிய நேரிடும்!
8பெண்களுக்குள் பேரழகியே,
உனக்குத் தெரியாதெனில்,
மந்தையின் கால்சுவடுகளில்
நீ தொடர்ந்து போ;
இடையர்களின் கூடாரங்களுக்கு
அருகினிலே உன்னுடைய
ஆட்டுக்குட்டிகளை மேய்த்திடு!


பாடல் 4: தலைவன்-தலைவி உரையாடல்


9என் அன்பே, பார்வோன்
தேர்ப்படை நடுவே உலவும்
பெண்புரவிக்கு உன்னை ஒப்பிடுவேன்.
10உன் கன்னங்கள் குழையணிகளாலும்
உன் கழுத்து மணிச்சரங்களாலும்
எழில் பெறுகின்றன.
11பொன்வளையல்கள்
உனக்குச் செய்திடுவோம்;
வெள்ளி வளையங்கள்
அவற்றில் கோத்திடுவோம்.
12என் அரசர் தம் மஞ்சத்தில்
இருக்கையிலே, என் நரந்தம்
நறுமணம் பரப்புகின்றது.
13என் காதலர்
வெள்ளைப்போள முடிப்பென
என் மார்பகத்தில் தங்கிடுவார்.
14என் காதலர் எனக்கு
மருதோன்றி மலர்க்கொத்து!
எங்கேதித் தோட்டங்களில் உள்ள
மருதோன்றி!


பாடல் 5: தலைவன்-தலைவி உரையாடல்


15என்னே உன் அழகு! என் அன்பே,
என்னே உன் அழகு!
உன் கண்கள் வெண்புறாக்கள்!
16என்னே உம் அழகு என் காதலரே!
எத்துணைக் கவர்ச்சி!
ஆம், நமது படுக்கை பைந்தளிர்!
17நம் வீட்டின் விட்டங்கள்
கேதுரு மரங்கள்;
நம்முடைய மச்சுகள்
தேவதாரு கிளைகள்.


1:1 1 அர 4:32.



அதிகாரம் 2:1-17

பாடல் 6: தலைவன்-தலைவி உரையாடல்


1சாரோன் சமவெளியில் உள்ள காட்டு
மலர் நான்; பள்ளத்தாக்குகளில் காணும்
லீலிமலர்.
2முட்புதர் நடுவில் இருக்கும்
லீலிமலர்போல், மங்கையருள்
இருக்கிறாள் என் அன்புடையாள்.
3காட்டு மரங்களிடை நிற்கும்
கிச்சிலி போல்,
காளையருள் இலங்குகின்றார்
என் காதலர்தாம்.
அவரது நிழலிலே அமர்வதில்
இன்புறுவேன்;
அவர் கனி என் நாவுக்கு இனிமை தரும்.


பாடல் 7: தலைவி கூற்று


4திராட்சை இரசம் வைக்கும்
அறைக்குள்ளே
என்னை அவர் அழைத்துச் சென்றார்;
அவர் என் மேல் செலுத்திய
நோக்கில் காதல் இருந்தது!
5திராட்சை அடைகள் கொடுத்து
என்னை வலிமைப்படுத்துங்கள்;
கிச்சிலிப்பழங்களால்
எனக்கு ஊக்கமூட்டுங்கள்.
காதல் நோயால்
தான் மிகவும் நலிந்து போனேன்.
6இடக்கையால் அவர் என் தலையைத்
தாங்கிக் கொள்வார்;
வலக்கையால் அவர் என்னைத்
தழுவிக் கொள்வார்.
7எருசலேம் மங்கையரே!
கலைமான்கள்மேல் ஆணை!
வயல்வெளி மரைகள்மேல் ஆணை!
உங்களுக்கு நான் கூறுகிறேன்;
காதலைத் தட்டி எழுப்பாதீர்;
தானே விரும்பும்வரை
அதைத் தட்டி எழுப்பாதீர்.


பாடல் 8: தலைவி கூற்று


8என் காதலர் குரல் கேட்கின்றது;
இதோ, அவர் வந்துவிட்டார்;
மலைகள்மேல் தாவி வருகின்றார்;
குன்றுகளைத் தாண்டி வருகின்றார்.
9என் காதலர் கலைமானுக்கு அல்லது
மரைமான் குட்டிக்கு ஒப்பானவர்.
இதோ, எம் மதிற்சுவர்க்குப்
பின்னால் நிற்கின்றார்;
பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்;
பின்னல் தட்டி வழியாய்
நோக்குகின்றார்.
10என் காதலர் என்னிடம் கூறுகின்றார்:
“விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.
11இதோ, கார்காலம் கடந்துவிட்டது;
மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.
12நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன;
பாடி மகிழும் பருவம் வந்துற்றது;
காட்டுப் புறா கூவும் குரலதுவோ
நாட்டினில் நமக்குக் கேட்கின்றது;
13அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன;
திராட்சை மலர்கள் மணம் தருகின்றன;
விரைந்தெழு, என் அன்பே!
என் அழகே! விரைந்து வா.”


பாடல் 9: தலைவன் கூற்று


14பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும்
என் வெண்புறாவே!
காட்டிடு எனக்கு உன் முகத்தை;
எழுப்பிடு நான் கேட்க உன் குரலை.
உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!


பாடல் 10: தலைவி கூற்று


15பிடியுங்கள் எமக்காக நரிகளை;
குள்ளநரிகளைப் பிடியுங்கள்;
அவை திராட்சைத் தோட்டங்களை
அழிக்கின்றன;
எம் திராட்சைத் தோட்டங்களோ
பூத்துள்ளன.


பாடல் 11: தலைவி கூற்று


16என் காதலர் எனக்குரியர்;
நானும் அவருக்குரியள்;
லீலிகள் நடுவில் அவர் மேய்கின்றார்.
17பொழுது புலர்வதற்குள்,
நிழல்கள் மறைவதற்குள், திரும்பிடுக,
என் காதலரே! மலைமுகட்டுக்
கலைமான்போன்று அல்லது
மரைமான் குட்டிபோன்று திரும்பிடுக!



அதிகாரம் 3:1-11

பாடல் 12: தலைவி கூற்று


1இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்;
என் உயிர்க்குயிரான அன்பரைத்
தேடினேன்; தேடியும்
அவரை நான் கண்டேன் அல்லேன்!
2“எழுந்திடுவேன்; நகரத்தில்
சுற்றிவருவேன்;
தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி
என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்”
தேடினேன்; தேடியும் அவரைக்
கண்டேன் அல்லேன்!
3ஆனால் என்னைக் கண்டனர்
சாமக்காவலர்;
நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள்.
“என் உயிர்க்குயிரான அன்பரை
நீங்களேனும் கண்டீர்களோ?” என்றேன்.
4அவர்களைவிட்டுச்
சற்று அப்பால் சென்றதுமே
கண்டேன் என் உயிர்க்குயிரான
அன்பர்தமை.
அவரைச் சிக்கெனப் பிடித்தேன்;
விடவே இல்லை;
என் தாய்வீட்டுக்கு
அவரைக் கூட்டி வந்தேன்;
என்னைக் கருத்தாங்கியவளின்
அறைக்குள் அழைத்து வந்தேன்.
5எருசலேம் மங்கையரே,
கலைமான்கள் மேல் ஆணை!
வயல்வெளி மரைகள்மேல் ஆணை!
உங்களுக்கு நான் கூறுகிறேன்;
காதலைத் தட்டி எழுப்பாதீர்;
தானே விரும்பும்வரை
அதைத் தட்டி எழுப்பாதீர்.


பாடல் 13: கண்டோர் கூற்று


6என்ன அது?
பாலைவெளியிலிருந்து
புகைத்தூண்போல்
, எழுந்துவருகிறதே!
வெள்ளைப்போளம் மணக்க,
சாம்பிராணி புகைய,
வணிகர் கொணர்
பல்வகைப் பொடிகள் யாவும்
மணங்கமழ வருகிறதே!
என்ன அது?
7அதுதான் சாலமோனின் பஞ்சணை!
இஸ்ரயேலின் வளமையுள்ள
வீரர்களுள் அறுபதுபேர்
அதனைச் சூழ்ந்துள்ளனர்.
8அனைவரும் வாளேந்திய வீரர்!
அவர்கள் போர்புரிவதில் வல்லவர்கள்!
இராக்காலத் தாக்குதல்களைத்
தடுக்கத் தம் இடைகளில்
வாள் கொண்டுள்ளவர்கள்!
9மன்னர் தமக்கொரு பல்லக்கு செய்தார்;
சாலமோன் லெபனோனின்
மரத்தால் செய்தார்.
10அதன் தூண்களை
வெள்ளியால் இழைத்தார்;
மேற்கவிகை பொன்;
இருக்கை செம்பட்டு;
உட்புறம் மெல்லிய தோல்மெத்தை;
எருசலேம் மங்கையரே, வாருங்கள்!
11சீயோன் மங்கையரே, பாருங்கள்!
மன்னர் சாலமோனையும்
அவர் அன்னை அவருக்கு அணிவித்த
மணிமுடியையும் காணுங்கள்!
அவரது திருமண நாளினிலே,
அவருள்ளம் மகிழ்ந்த நாளினிலே,
அவருக்கு அணிவித்த முடியதுவே!



அதிகாரம் 4:1-16

பாடல் 14: தலைவன் கூற்று


1என்னே உன் அழகு! “என் அன்பே,
என்னே உன் அழகு!
முகத்திரைக்குப் பின்னுள்ள
உன் கண்கள் வெண்புறாக்கள்!
கிலயாதின் மலைச்சரிவில் இறங்கி வரும்
வெள்ளாட்டு மந்தை போன்றது
உன் கூந்தல்.
2உன் பற்களோ மயிர் கத்தரிப்பதற்கெனக்
குளித்துக் கரையேறும்
பெண் ஆடுகளின் மந்தை போல்வன;
அவையாவும் இரட்டைக் குட்டி போட்டவை;
அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.
3செம்பட்டு இழைபோன்றன
உன்னிதழ்கள்;
உன் வாய் எழில் மிக்கது;
முகத்திரையின் பின்னிருக்கும்
உன் கன்னங்கள்
பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.
4தாவீதின் கொத்தளம்போல்
அமைந்துள்ளது உன் கழுத்து;
வரிவரியாய் ஆயிரம் கேடயங்கள்
ஆங்கே தொங்குகின்றன;
அவையெலாம்
வீரர்தம் படைக்கலன்களே.
5உன் முலைகள் இரண்டும்
லீலிகள் நடுவில் மேயும்
இருமான் குட்டிகளை ஒக்கும்;
கலைமானின் இரட்டைக்
குட்டிகளைக் ஒக்கும்.
6பொழுது புலர்வதற்குள்
, நிழல்கள் மறைவதற்குள்,
வெள்ளைப்போள மலையினுக்கு
விரைந்திடுவேன்;
சாம்பிராணிக் குன்றுக்குச்
சென்றிடுவேன்;
7என் அன்பே
, நீ முழுவதும் அழகே!
மறுவோ உன்னில் சிறிதும் இலதே!


பாடல் 15: தலைவன் கூற்று


8லெபனோனிலிருந்து வந்திடு மணமகளே;
லெபலோனிலிருந்து வந்திடு புறப்படு;
அமானா மலையுச்சியினின்று —
செனீர் மற்றும் எர்மோன்
மலையுச்சியினின்று —
சிங்கங்களின் குகைளினின்று —
புலிகளின் குன்றுகளினின்று
இறங்கிவா!
9என் உள்ளத்தைக்
கொள்ளை கொண்டாய்;
என் தங்காய், மணமகளே,
உன் விழிவீச்சு ஒன்றினாலே,
உன் ஆரத்தின் முத்து ஒன்றினாலே,
என் உள்ளத்தைக்
கொள்ளை கொண்டாய்.
10உன் காதல் எத்துணை நேர்த்தியானது;
என் தங்காய், மணமகளே,
உன் காதல்
திராட்சை இரசத்தினும் இனிது!
உனது பரிமளத்தின் நறுமணமோ
எவ்வகைத் தைலத்தின்
நறுமணத்தினும் சிறந்தது.
11மணமகளே, உன் இதழ்கள்
அமிழ்தம் பொழிகின்றன;
உன் நாவின்கீழ்த்
தேனும் பாலும் சுரக்கின்றன;
உன் ஆடைகளின் நறுமணம்
லெபனோனின் நறுமணத்திற்கு
இணையானது.


பாடல் 16: தலைவன்-தலைவி உரையாடல்


12பூட்டியுள்ள தோட்டம் நீ;
என் தங்காய், மணமகளே
பூட்டியுள்ள தோட்டம் நீ;
முத்திரையிட்ட கிணறு நீ!
13மாதுளைச் சோலையாய்த்
தளிர்த்துள்ளாய்;
ஆங்கே தித்திக்கும் கனிகள் உண்டு;
மருதோன்றியும் நரந்தமும் உண்டு.
14நரந்தம், மஞ்சள், வசம்பு, இலவங்கம்
எல்லாவகை நறுமண மரங்களும்,
வெள்ளைப்போளமும் அகிலும்,
லைசிறந்த நறுமணப் பொருள்கள் யாவுமுண்டு.
15நீ தோட்டங்களின் நீரூற்று;
வற்றாது நீர்சுரக்கும் கிணறு;
லெபலோனினின்று வரும் நீரோடை!
16வாடையே, எழு! தென்றலே, வா!
என் தோட்டத்தின் மேல் வீசு!
அதன் நறுமணம் பரவட்டும்!
உன் காதலர்
தம் தோட்டத்திற்கு வரட்டும்!
அதன் தித்திக்கும் கனிகளை
உண்ணட்டும்!



அதிகாரம் 5:1-16

1என் தோட்டத்திற்கு நான்
வந்துள்ளேன்;
என் தங்காய், மணமகளே,
என் வெள்ளைப்போளத்தையும்
நறுமணப் பொருளையும்
சேகரிக்கின்றேன்;
என் தேனையும் தேனடைகளையும்
உண்கின்றேன்;
என் திராட்சை இரசத்தையும்
பாலையும் பருகுகின்றேன்;
தோழர்களே, உண்ணுங்கள்;
அன்பர்களே, போதையேறப் பருகுங்கள்.


பாடல் 17: தலைவி கூற்று


2நான் உறங்கினேன்;
என் நெஞ்சமோ விழித்திருந்தது;
இதோ, என் காதலர்
கதவைத் தட்டுகின்றார்;
“கதவைத் திற, என் தங்காய்,
என் அன்பே, என் வெண்புறாவே,
நிறை அழகே,
என் தலை பனியால் நனைந்துள்ளது;
என் தலைமயிர்ச் சுருள்
இரவுத் தூறலால் ஈரமானது.
3“என் ஆடையைக் களைந்து விட்டேன்;
மீண்டும் அதனை நான்
உடுத்த வேண்டுமோ?
என் கால்களைக் கழுவியுள்ளேன்;
மீண்டும் அவற்றை அழுக்குப்படுத்தவோ?”
4என் காதலர் கதவுத் துளை வழியாகக்
கையைவிட்டார்;
என் நெஞ்சம் அவருக்காகத் துள்ளிற்று.
5எழுந்தேன் நான்,
காதலர்க்குக் கதவு திறக்க;
என் கையில்
வெள்ளைப்போளம் வடிந்தது;
என் விரல்களில்
வெள்ளைப்போளம் சிந்திற்று;
தாழ்ப்பாள் பிடிகளில் சிதறிற்று.
6கதவைத் திறந்தேன் நான்
என் காதலர்க்கு;
அந்தோ! என் காதலர் காணவில்லை,
போய்விட்டார்; என் நெஞ்சம்
அவர் குரலைத் தொடர்ந்து போனது;
அவரைத் தேடினேன்;
அவரைக் கண்டேன் அல்லேன்;
அவரை அழைத்தேன்; பதிலே இல்லை!
7ஆனால் என்னைக் கண்டனர்
சாமக் காவலர்;
அவர்கள் என்னை அடித்தனர்;
காயப்படுதினர்;
என் மேலாடையைப்
பறித்துக் கொண்டனர்;
கோட்டைச் சுவரின்
காவலர்கள் அவர்கள்!
8எருசலேம் மங்கையரே,
ஆணையிட்டுச் சொல்கிறேன்;
என் காதலரைக் காண்பீர்களாயின்
அவரிடம் என்ன சொல்வீர்கள்?
“காதல் நோயுற்றேன் நான்”
எனச் சொல்லுங்கள்.
9“பெண்களுக்குள் பேரழகியே,
மற்றக் காதலரினும் உன் காதலர்
எவ்வகையில் சிறந்தவர்?
இவ்வாறு எங்களிடம்
ஆணையிட்டுக் கூறுகின்றாயே;
மற்றக் காதலரினும் உன்காதலர்
எவ்வகையில் சிறந்தவர்?”
10“என் காதலர் ஒளிமிகு சிவந்த மேனியர்;
பல்லாயிரம் பேர்களிலும்
தனித்துத் தோன்றுவார்!
11அவரது தலை பசும்பொன்;
தலை முடி சுருள் சுருளாய் உள்ளது;
காகம்போல் கருமை மிக்கது.
12அவர் கண்கள்
வெண்புறாக்கள் போன்றவை;
பாலில் குளித்து,
நீரோடைகளின் அருகில்
கரையோரங்களில் தங்கும்
வெண்புறாக்கள் அவை.
13அவர் கன்னங்கள் நறுமண
நாற்றங்கால்கள் போல்வன;
நறுமணம் ஆங்கே கமழ்கின்றது;
அவருடைய இதழ்கள் லீலிமலர்கள்;
அவற்றினின்று வெள்ளைப்போளம்
சொட்டுச்சொட்டாய் வடிகின்றது.
14அவருடைய கைகள்
உருண்ட பொன் தண்டுகள்; அவற்றில்
மாணிக்கக் கற்கள் பதிந்துள்ளன;
அவரது வயிறு
யானைத் தந்தத்தின் வேலைப்பாடு;
அதில் நீலமணிகள்
பொதியப் பெற்றுள்ளன.
15அவருடைய கால்கள்
பளிங்குத் தூண்கள்;
தங்கத் தளத்திலே
அவை பொருந்தியுள்ளன;
அவரது தோற்றம்
லெபனோனுக்கு இணையானது;
கேதுரு மரங்கள்போல் தலைசிறந்தது.
16அவரது வாய் இணையற்ற இனிமை;
அவர் முழுமையும் பேருவகையே;
எருசலேம் மங்கைய
இவரே என் நண்பர்.”



அதிகாரம் 6:1-13

1“பெண்களுக்குள் பேரழகியே,
உன் காதலர் எங்கே போனார்?
உன் காதலர் எப்பக்கம் திரும்பினார்?
உன்னோடு நாங்களும்
அவரைத் தேடுவோம்.”
2“என் காதலர் தம் தோட்டத்திற்கும்
நறுமண நாற்றங்கால்களுக்கும்
போனார்;
தோட்டங்களில் மேய்க்கவும்
லீலி மலர்களைக் கொய்யவும்
சென்றுள்ளார்”.


3நான் என் காதலர்க்குரியள்;
என் காதலர் எனக்குரியர்;
லீலிகள் நடுவில் அவர் மேய்க்கின்றார்.


பாடல் 18: தலைவன் கூற்று


4என் அன்பே.நீ திரட்சாவைப்போல்
அழகுள்ளவள்;
எருசலேமைப்போல் எழில் நிறைந்தவள்;
போரணிபோல் வியப்பார்வம்
ஊட்டுகின்றாய்!
5என்னிடமிருந்து உன் கண்களைத்
திருப்பிக்கொள்;
அவை என்னை மயக்குகின்றன;
கிலயாதிலிருந்து இறங்கிவரும்
வெள்ளாட்டு மந்தை போன்றது
உன் கூந்தல்.
6உன் பற்களோ, குளித்துக்கரையேறும்
பெண் ஆடுகளின் மந்தைபோல்வன;
அவையாவும் இரட்டைக்குட்டி போட்டவை;
அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.
7முகத்திரையின் பின்னிருக்கும்
உன் கன்னங்கள்
பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.


பாடல் 19: தலைவன் கூற்று


8அரசியர் அறுபது பேர்; வைப்பாட்டியர் எண்பது பேர்;
இளம்பெண்கள் எண்ணிறந்தவர்.
9என் வெண்புறா,
அழகின் வடிவம் அவள் ஒருத்தியே!
அவள் தாய்க்கும் அவள் ஒருத்தியே;
அவளைப் பெற்றவளுக்கு
அவள் அருமையானவள்;
மங்கையர் அவளைக் கண்டனர்;
வாழ்த்தினர்;
அரசியரும் வைப்பாட்டியரும்
அவளைப் புகழ்ந்தனர்;
10“யாரிவள்!
வைகறைபோல் தோற்றம்;
திங்களைப் போல் அழகு;
ஞாயிறுபோல் ஒளி;
போரணிபோல் வியப்பார்வம்;
யாரிவள்!”


பாடல் 20: தலைவன் கூற்று


11வாதுமைச் சோலைக்குள் சென்றேன்;
பள்ளத்தாக்கில் துளிர்த்தவற்றைப்
பார்க்கப் போனேன்;
திராட்சை பூத்துவிட்டதா என்றும்
மாதுளைகள் மலர்ந்தனவா என்றும்
காணச் சென்றேன்.


12என்னவென்றே
எனக்குத் தெரியவில்லை!
மகிழ்ச்சியில் மயங்கினேன்;
இளவரசனுடன் தேரில் செல்வது போல்
நான் உணர்ந்தேன்.


பாடல் 21: கண்டோர் கூற்று: உரையாடல்


13திரும்பி வா! திரும்பி வா!
சூலாமியளே!
திரும்பி வா! திரும்பி வா!
நாங்கள் உன்னைப் பார்க்க வேண்டும்!
இரண்டு பாசறைகள் நடுவில்
ஆடுபவளைப்போல் சூலாமியளை
நீங்கள் ஏன் நோக்க வேண்டும்?



அதிகாரம் 7:1-13

1அரசிள மகளே!
காலணி அணிந்த உன் மெல்லடிகள்
எத்துணை அழகு!
உன் தொடைகளின் வளைவுகள்
அணிகலனுக்கு இணை!
கைதேர்ந்த கலைஞனின் வேலைப்பாடு!
2உன் கொப்பூழ்
வட்டவடிவக் கலம்;
அதில் மதுக் கலவைக்குக்
குறைவே இல்லை;
உன் வயிறு
கோதுமை மணியின் குவியல்;
லீலிகள் அதை வேலியிட்டுள்ளன.


3உன் முலைகள் இரண்டும்
இரு மான் குட்டிகள் போன்றவை;
கலைமானின்
இரட்டைக் குட்டிகள் போன்றவை.


4உன் கழுத்து தந்தத்தாலான
கொத்தளம் போன்றது;
உன் கண்கள்
எஸ்போனின் குளங்கள் போன்றவை;
பத்ரபீம் வாயிலருகே உள்ள
குளங்கள் போன்றவை;
உம் மூக்கு
லெபனோனின் கோபுரத்திற்கு இணை;
தமஸ்கு நகர் நோக்கியுள்ள
கோபுரத்திற்கு இணை.


5உன் தலை கர்மேல் மலைபோல்
நிமிர்ந்துள்ளது;
உன் கூந்தல் செம்பட்டுப் போன்றது;
அதன் சுருள்களுள்
அரசனும் சிறைப்படுவான்.


பாடல் 22: தலைவன் கூற்று


6அன்பே! இன்பத்தின் மகளே!
நீ எத்துணை அழகு!
எத்துணைக் கவர்ச்சி!


7இந்த உன் வளர்த்தி
பேரீச்சைக்கு நிகராகும்;
உன் முலைகள் இரண்டும்
அதன் குலைகளாகும்.


8ஆம், பேரீச்சையின்மேல்
நான் ஏறுவேன்;
அதன் பழக்குலைகளைப்
பற்றிடுவேன்” என்றேன்;
உன் முலைகள்
திராட்சைக் குலைகள்போல் ஆகுக!
உன் மூச்சு
கிச்சிலிபோல் மணம் கமழ்க!


9இதழ்களுக்கும் பற்களுக்கும் மேலே
மென்மையுடன் இறங்கும்
இனிமைமிகு
திராட்சை இரசம் போன்றவை
உன் முத்தங்கள்!


பாடல் 23: தலைவி கூற்று


10நான் என் காதலர்க்குரியள்; அவர் நாட்டம் என்மேலே!
11என் காதலரே, வாரும்;
வயல்வெளிக்குப் போவோம்;
மருதோன்றிகள் நடுவில்
இரவைக் கழிப்போம்.
12வைகறையில் திராட்சைத்
தோட்டத்திற்குப் போவோம்;
திராட்சைக் கொடிகள் துளிர்த்தனவா,
அதிலிருக்கும் மொட்டுகள் விரிந்தனவா,
மாதுளை மரங்கள் மலர்ந்தனவா
என்று பார்ப்போம்.
அங்கே உம்மேல்
என் காதலைப் பொழிவேன்.


13காதற்கனிகளின் மணம் கமழுகின்றது;
இனியது அனைத்தும்
நம் கதவருகில் உளது;
புதிதாய்ப் பறித்தனவும்
பலநாள் காத்தனவுமான பழங்களை
என் காதலரே,
உமக்கென்றே நான் சேர்த்து வைத்தேன்.



அதிகாரம் 8:1-14

பாடல் 24: தலைவி கூற்று


1நீர் என் உடன்பிறப்பாக
இருக்கக் கூடாதா!
என் அன்னையிடம் பால் குடித்தவராய்
இருக்கலாகாதா!
தெருவில் கண்டாலும்
நான் உம்மை முத்தமிடுவேனே!
அப்போது எவருமே
என்னை இகழமாட்டார்.


2உம்மை என் தாய் வீட்டுக்குக்
கூட்டி வருவேன்;
எனக்குக் கற்றுத் தந்தவளின்
மனைக்குள் கொணர்ந்திடுவேன்;
மணமூட்டிய திராட்சை இரசத்தை
உமக்குக் குடிக்கக் கொடுப்பேன்;
என் மாதுளம் பழச்சாற்றைப்
பருகத் தருவேன்.


3இடக்கையால் அவர்
என் தலையைத் தாங்கிக் கொள்வார்;
வலக்கையால் அவர்
என்னைத் தழுவிக் கொள்வார்.


4எருசலேம் மங்கையரே,
ஆணையிட்டுக் கேட்கின்றேன்;
காதலை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?
தானே விரும்பும்வரை
அதை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?


5“யார் இவள்!
பாலைவெளியினின்று
எழுந்து வருபவள்;
தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு
வருபவள் யார் இவள்?”


பாடல் 25: தலைவி கூற்று


5கிச்சிலி மரத்தடியில்
நான் உம்மை எழுப்பினேன்;
அங்கேதான் உம்தாய்
பேறுகால வேதனையுற்றாள்.
அங்கேதான் உம்மைப் பெற்றவள்
பேறுகால வேதனையுற்றாள்.


6உம் நெஞ்சத்தில் இலச்சினைபோல்
என்னைப் பொறித்திடுக;
இலச்சினைப்போல்
உம் கையில் பதித்திடுக;
ஆம், அன்பு சாவைப்போல்
வலிமைமிக்கது;
அன்பு வெறி
பாதாளம்போல் பொறாதது;
அதன் பொறி,
எரிக்கும் நெருப்புப் பொறி;
அதன் கொழுந்து
பொசுக்கும் தீக்கொழுந்து.


7பெருங்கடலும்
அன்பை அணைக்க முடியாது;
வெள்ளப்பெருக்கும்
அதை மூழ்கடிக்க இயலாது;
அன்புக்காக ஒருவன்
தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம்
வாரியிறைக்கலாம்;
ஆயினும், அவன்
ஏளனம் செய்யப்படுவது உறுதி.


பாடல் 26: தமையர்-தலைவி உரையாடல்


8நம்முடைய தங்கை சிறியவள்;
அவளுக்கு முலைகள்
முகிழ்க்கவில்லை;
அவளைப் பெண்பேச வரும்நாளில்
நம் தங்கைக்காக என் செய்வோம்?


9அவள் ஒரு மதிலானால்
அதன்மேல்
வெள்ளியரண்
கட்டிடுவோம்;
அவள் ஒரு கதவானால்
அதனை கேதுருப் பலகையால்
மூடிடுவோம்.


10நான் மதில்தான்;
என் முலைகள்
அதன் கோபுரங்கள் போல்வன;
அவர்தம் பார்வையில்
நான் நல்வாழ்வு தருபவள் ஆவேன்.


பாடல் 27: தலைவன் கூற்று


11பாகால்-ஆமோன் என்னுமிடத்தில்
சாலமோனுக்கு இருந்தது
ஒரு திராட்சைத் தோட்டம்,
திராட்சைத் தோட்டத்தை
அவர் காவலரிடம் ஒப்படைத்தார்;
அதன் கனிகளுக்காக எவரும்
ஆயிரம் வெள்ளிக் காசுகூடத் தருவார்.


12எனக்குரிய திராட்சைத் தோட்டம்
என்முன்னே உளது;
சாலமோனே,
அந்த ஆயிரம் வெள்ளிக்காசு
உம்மிடமே இருக்கட்டும்;
இருநூறு காசும்
பழங்களைக் காப்போர்க்கே சேரட்டும்.


பாடல் 28: தலைவன்-தலைவி உரையாடல்


13“ தோழர் கூர்ந்து கேட்கின்றனர்;
உன் குரலை
யான் கேட்கலாகாதோ!”


14“என் காதலரே!
விரைந்து ஓடிடுக;
கலைமான் அல்லது
மரைமான் குட்டிபோல
நறுமணம் நிறைந்த மலைகளுக்கு
விரைந்திடுக!”