Manage OLD TESTAMENT

  • Home
  • Manage OLD TESTAMENT
முன்னுரை:1

‛சபை உரையாளர்’ என்னும் இந்நூல் ஒரு ஞானியின் சிந்தனைகளைக் கொண்டது. அவர் மானிட வாழ்வு எவ்வளவு குறுகியது, முரண்பாடானது எனக் கண்டுணர்கிறார். மனித வாழ்க்கையில் காணப்படும் அநீதிகளும் அவநம்பிக்கைகளும் அவருக்குப் பெரும் புதிர்களாகத் தோன்றுகின்றன. எனவே, ‘வாழ்க்கையே வீண்’ என்ற முடிவுக்கு வருகிறார். மனித வாழ்வின் போக்கை ஆண்டு நடத்தும் இறைவனின் வழிகளை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆயினும் மக்கள் கடுமையாக உழைத்து இறைவன் அருளும் கொடைகளை வேண்டுமளவு துய்த்து மகிழுமாறு அறிவுரை கூறுகிறார்.


இந்நூலில் மனித வாழ்க்கையின் நிலையாமை, இயலாமை முதலியன விரித்துரைக்கப்படுகின்றன. ஆயினும் இந்நூல் விவிலியத்தில் இடம்பெற்றுள்ளமை மனிதர் தோல்வி மனப்பான்மையையும், மனத்தளர்வையும் இறைவனது துணையால் வெல்லலாம் என்பதையே காட்டுகின்றது. இந்நூல் தங்கள் சொந்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகப் பலர் கருதலாம். ஆயினும், இக்கருத்துகளை எதிரொலிக்கும் இதே விவிலியம், கடவுள்மீது வைக்கும் நம்பிக்கைதான் மானிட வாழ்வுக்கு நிறைபொருளை அளிக்கும் என்று வற்புறுத்திக் கூறுவதையும் அவர்கள் உணர வேண்டும்.



அதிகாரம் 1:1-18

வாழ்க்கை பயனற்றது


1தாவீதின் மகனும் எருசலேமின் அரசரு
மாகிய சபையுரையாளர் உரைத்தவை:
2வீண், முற்றிலும் வீண், என்கிறார்
சபையுரையாளர்;
வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்.
3மனிதர் தம் வாழ்நாள் முழுவதும்
பாடுபட்டு உழைக்கின்றனர்;
ஆனால், அவர்கள் உழைப்பினால்
பெறும் பயன் என்ன?
4ஒரு தலைமுறை மறைகின்றது;
மறு தலைமுறை தோன்றுகின்றது;
உலகமோ மாறாது
என்றும் நிலைத்திருக்கின்றது.
5ஞாயிறும் தோன்றுகின்றது;
ஞாயிறும் மறைகின்றது. பிறகு
தன் இடத்திற்கு விரைந்து சென்று
மீண்டும் தோன்றுகின்றது.
6தெற்கு நோக்கிக் காற்று வீசுகின்றது;
பிறகு வடக்கு நோக்கித் திரும்புகின்றது.
இப்படிச் சுழன்று சுழன்று வீசித்
தன் இடத்திற்குத் திரும்புகின்றது.
7எல்லா ஆறுகளும் ஓடிக்
கடலோடு கலக்கின்றன; எனினும், அவை
ஒருபோதும் கடலை நிரப்புவதில்லை;
மீண்டும் ஓடுவதற்காக உற்பத்தியான
இடத்திற்கே திரும்புகின்றன.
8அனைத்தும் சலிப்பையே தருகின்றன;
அதைச் சொற்களால்
எடுத்துரைக்க இயலாது.
எவ்வளவு பார்த்தாலும்
கண்ணின் ஆவல் தீர்வதில்லை;
எவ்வளவு கேட்டாலும்
காதின் வேட்கை தணிவதில்லை.
9முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்;
முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும்.
புதியது என்று உலகில் எதுவுமே இல்லை.
10ஏதேனும் ஒன்றைப்பற்றி,
‘இதோ, இது புதியது’ என்று
சொல்லக் கூடுமா? இல்லை.
அது ஏற்கனவே,
நமது காலத்திற்கு முன்பே,
பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே!
11முற்காலத்தவரைப் பற்றிய நினைவு
இப்போது யாருக்கும் இல்லை;
அவ்வாறே, வரும் காலத்தவருக்கும்
தமக்கு முந்திய காலத்தவரைப்பற்றிய
நினைவு இருக்கப்போவதில்லை.

சபையுரையாளரின் அனுபவம்


12சபையுரையாளனாகிய நான் எருசலேமில் இஸ்ரயேலுக்கு அரசனாய் இருந்தேன். 13இவ்வுலகில் நடக்கிற எல்லாவற்றையும் ஞானத்தின் துணை கொண்டு கூர்ந்து ஆராய்வதில் என் சிந்தையைச் செலுத்தினேன். மானிடர் பாடுபட்டுச் செய்வதற்கென்று அவர்களுக்குக் கடவுள் எவ்வளவு தொல்லைமிகு வேலையைக் கொடுத்திருக்கிறார்! 14இவ்வுலகில் செய்யப்படும் ஒவ்வொரு செயலையும் கவனித்தேன். அனைத்தும் வீணான செயல்களே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானவை.


15கோணலானதை நேராக்க இயலாது; இல்லாததை எண்ணிக்கையில் சேர்க்க முடியாது.


16எனக்குமுன் எருசலேமில் அரசராய் இருந்தவர்கள் எல்லாரையும் விட நான் ஞானத்தை மிகுதியாகத் தேடிப்பெற்றவன்; மிகுந்த ஞானத்தையும் அறிவையும் அனுபவத்தால் பெற்றவன் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.✠ 17ஞானத்தையும் அறிவையும்பற்றித் தெரிந்துகொள்வதில் என் சிந்தையைச்செலுத்தினேன்; மடமையையும் மதிகேட்டையும்பற்றி அறிய முயன்றேன். இதுவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானதே எனக் கண்டேன். 18ஞானம் பெருகக் கவலை பெருகும்; அறிவு பெருகத் துயரம் பெருகும்.


1:16 1 அர 4:29-31.



அதிகாரம் 2:1-26

1“இன்பத்தில் மூழ்கி அதன் இனிமையைச் சுவைப்போம்; நெஞ்சே! நீ வா!” என்றேன். அதுவும் வீண் என நான் கண்டேன். 2சிரித்துக் களித்தல் மதிகெட்ட செயல் என்றேன்; 3இன்பம் நன்மை பயக்காது என்றேன். ஞானத்தின் மீதுள்ள ஆவலை விட்டுவிடாமலே, மதுவால் உடலுக்குக் களிப்பூட்டவும் மதிகெட்ட திட்டத்தில் ஈடுபடவும் தலைப்பட்டேன்; மக்கள் தங்கள் குறுகிய உலக வாழ்க்கையில் செய்யக்கூடிய நலமான செயல் எதுவென்று அறிவதற்காக இவ்வாறு செய்யலானேன்; 4பெரிய காரியங்களைச் செய்து முடித்தேன்; எனக்கென்று வீடுகளைக் கட்டினேன்; திராட்சைத் தோட்டங்களை அமைத்தேன். 5எனக்கென்று தோட்டம், பூங்கா பல அமைத்து அவற்றில் எல்லா வகையான பழமரங்களையும் நட்டேன்; 6தோப்பில் வளரும் மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காகக் குளங்களை வெட்டினேன்; 7ஆண் பெண் அடிமைகளை விலைக்கு வாங்கினேன்; என் வீட்டிலேயே பிறந்த அடிமைகளும் எனக்கு இருந்தார்கள்; ஏராளமான ஆடுமாடுகளும் எனக்கு இருந்தன. எனக்குமுன் எருசலேமில் இருந்த எவருக்கும் அத்தனை ஆடுமாடுகள் இருந்ததில்லை.✠ 8வெள்ளி, பொன், மன்னர்களின் செல்வம், மாநிலங்கள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டேன். இசைவல்ல ஆடவரும் பெண்டிரும் என்னைப் பாடி மகிழ்வித்தனர். மகிழ்வூட்டும் மங்கையரையும் வைத்திருந்தேன்.✠


9இவ்வாறு என் செல்வம் வளர்ந்தது. எருசலேமில் எனக்குமுன் இருந்த எல்லாரையும்விடப் பெரிய செல்வனானேன். எனினும், எனக்கிருந்த ஞானம் குறைபடவில்லை.✠ 10என் கண்கள் விரும்பின அனைத்தையும் அவற்றிற்கு அளித்தேன். எந்த மகிழ்ச்சியையும் என் மனத்திற்குக் கொடுக்க நான் தவறவில்லை. என் முயற்சி அனைத்தும் என் உள்ளத்திற்கு மகிழ்ச்சியூட்டியது. இதுவே என் முயற்சிகளுக்கெல்லாம் கிடைத்த பலனாகும். 11நான் செய்த செயல்கள் யாவற்றையும் அவற்றைச் செய்வதற்கு நான் எடுத்த முயற்சியையும் நினைத்துப் பார்த்தபோதோ, அவையாவும் வீண் என்பதைக் கண்டேன். அவை அனைத்தும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்; முற்றும் பயனற்ற செயல்களே.


12நான் ஞானம், மூடத்தனம், மதிகேடு ஆகியவற்றை ஆராயத்தலைப்பட்டேன். ஓர் அரசன் தனக்கு முன்னிருந்த அரசர் செய்ததைத் தவிர வேறென்ன செய்வான்? 13ஒளி இருளை விட மேலானதாய் இருப்பதுபோல, ஞானமும் மதிகேட்டைவிட மேலானதாய் இருக்கக் கண்டேன்.


14ஞானிகளின் கண்கள்
ஒளி படைத்தவை;
மூடரோ இருளில் நடப்பவர்.
ஆயினும், ஒருவருக்கு நேர்வதே மற்றெல்லாருக்கும் நேரிடும் என்று நான் கண்டேன்.


15மூடருக்கு நேரிடுவது போலவே எனக்கும் நேரிடும். அப்படியானால் நான் ஞானத்தில் வளர்ந்தது எதற்காக? அதனால் பயனென்ன என்று சிந்தித்து, அதுவும் வீணே என்ற முடிவுக்கு வந்தேன். 16ஞானிகளையோ, மூடரையோ யாரும் நினைவில் வைத்திருப்பதில்லை. வருங்காலத்தில் அனைவரும் மறக்கப்படுவர். மூடர் மடிவதுபோல ஏன் ஞானிகளும் மடியவேண்டும்? 17எனவே, நான் வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டேன். மேலும், உலகில் செய்யப்படுபவை யாவும் எனக்குத் தொல்லையையே கொடுத்தன. எல்லாம் வீண்; யாவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.


18நான் இவ்வுலகில் எவற்றையெல்லாம் செய்துமுடிக்க உழைத்தேனோ அவற்றின் மீதெல்லாம் வெறுப்புக் கொண்டேன். ஏனெனில், அவற்றை எனக்குப்பின் வருகிறவர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டுமென்பது எனக்குத் தெரியும். 19அவர்கள் ஞானமுள்ளவராய் இருக்கலாம் அல்லது மதிகேடராய் இருக்கலாம்; யாருக்குத் தெரியும்? எத்தகையவராய் இருப்பினும், நான் இவ்வுலகில் ஞானத்தோடு உழைத்து அடைந்த பயன்களுக்கெல்லாம் அவர்களே உரிமையாளர் ஆவர். 20என் உழைப்பும் வீணே. நான் உலகில் செய்த எல்லா முயற்சிக்காகவும் மனமுடைந்துபோனேன். 21ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே. 22இது பெரிய அநீதி. உலகில் அவர் செய்த எல்லா முயற்சிக்காகவும் வகுத்த செயல் திட்டங்களுக்காகவும் அவருக்குக் கிடைக்கும் பயனென்ன? 23வாழ்நாளெல்லாம் அவருக்குத் துன்பம்; வேலையில் தொந்தரவு; இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே.✠ 24உண்பதையும் குடிப்பதையும் தம் உழைப்பால் வரும் இன்பத்தைத் துய்ப்பதையும்விட, நலமானது மனிதருக்கு வேறொன்றுமில்லை. இந்த வாய்ப்பும் கடவுள் தந்ததே எனக் கண்டேன்.✠ 25அவரின்றி ஒருவருக்கு எப்படி உணவு கிடைக்கும்? அவரால் எப்படி இன்பம் துய்க்க இயலும்? 26கடவுள் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு ஞானத்தையும் அறிவாற்றலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறார். பாவம் செய்கிறவருக்கோ செல்வத்தைச் சேர்த்து வைக்கும் வேலையைக் கொடுக்கிறார்; ஆனால், அச்செல்வம் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு விட்டுச் செல்வதற்கே. இதுவும் வீணே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.✠


2:4-8 1 அர 10:23-27; 2 குறி 9:22-27. 2:7 1 அர 4:23. 2:8 1 அர 10:10, 14-22. 2:9 1 குறி 29:25. 2:23 யோபு 5:7; 14:1. 2:24 சஉ 3:13; 5:18; 9:7; லூக் 12:19; 1 கொரி 15:32. 2:26 யோபு 32:8; நீமொ 2:6.



அதிகாரம் 3:1-22

ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு


1ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு.
உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்
சிக்கும் ஒரு காலமுண்டு.
2பிறப்புக்கு ஒரு காலம்,
இறப்புக்கு ஒரு காலம்;
நடவுக்கு ஒரு காலம்,
அறுவடைக்கு ஒரு காலம்;
3கொல்லுதலுக்கு ஒரு காலம்,
குணப்படுத்தலுக்கு ஒரு காலம்;
4இடித்தலுக்கு ஒரு காலம்,
கட்டுதலுக்கு ஒரு காலம்;
அழுகைக்கு ஒரு காலம்,
சிரிப்புக்கு ஒரு காலம்;
துயரப்படுதலுக்கு ஒரு காலம்,
துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்;
5கற்களை எறிய ஒரு காலம்,
கற்களைச் சேர்க்க ஒரு காலம்;
அரவணைக்க ஒரு காலம்,
அரவணையாதிருக்க ஒரு காலம்;
6தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம்,
இழப்பதற்கு ஒரு காலம்;
காக்க ஒரு காலம்,
தூக்கியெறிய ஒரு காலம்;
7கிழிப்பதற்கு ஒரு காலம்,
தைப்பதற்கு ஒரு காலம்;
பேசுவதற்கு ஒரு காலம்,
பேசாதிருப்பதற்கு ஒரு காலம்;
8அன்புக்கு ஒரு காலம்,
வெறுப்புக்கு ஒரு காலம்;
போருக்கு ஒரு காலம்,
அமைதிக்கு ஒரு காலம்.


9வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன? 10மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலை சுமையைக் கண்டேன். 11கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது. 12எனவே, மனிதர் தாம் உயிரோடிருக்கும் போது, இன்பம் துய்த்து மகிழ்வதைவிடச் சிறந்தது அவருக்கு வேறொன்றும் இல்லை என அறிந்துகொண்டேன். 13உண்டு குடித்து உழைப்பால் வரும் பயனைத் துய்க்கும் இன்பம் எல்லா மனிதருக்கும் கடவுள் அளித்த நன்கொடை.

14கடவுள் செய்யும் ஒவ்வொன்றும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை நான் அறிவேன். அதனோடு கூட்டுவதற்கோ அதனின்று குறைப்பதற்கோ எதுவுமில்லை. தமக்கு மனிதர் அஞ்சி நடக்க வேண்டுமென்று கடவுள் எல்லாவற்றையும் செய்திருக்கிறார். 15இப்போது நடப்பது ஏற்கெனவே நடந்ததாகும். இனி நடக்கப்போவதும் ஏற்கெனவே நடந்ததாகும். நடந்ததையே கடவுள் மீண்டும் மீண்டும் நடைபெறச் செய்கிறார்.


உலகில் காணப்படும் அநீதி


16வேறொன்றையும் உலகில் கண்டேன். நேர்மையும் நீதியும் இருக்கவேண்டிய இடங்களில் அநீதியே காணப்படுகிறது. 17‘கடவுள் நல்லாருக்கும் பொல்லாருக்கும் தீர்ப்புவழங்கப் போகிறார். ஏனெனில், ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு செயலுக்கும் அவற்றிற்குரிய காலத்தை அவர் குறித்திருக்கிறார்’ என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். 18“மனிதர் விலங்கைப் போன்றவர் என்பதைக் காட்டுவதற்காகவே கடவுள் அவருக்குச் சோதனைகளை அனுப்புகிறார்” என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். 19மனிதருக்கு நேரிடுவதே விலங்குக்கும் நேரிடுகிறது; மனிதரும் மடிகிறார்; விலங்கும் மடிகிறது. எல்லா உயிர்களுக்கும் இருப்பது ஒரு வகையான மூச்சே. விலங்கைவிட மனிதர் மேலானவர் இல்லை; எல்லாம் வீணே. 20எல்லா உயிர்களும் இறுதியாகச் செல்லும் இடம் ஒன்றே. எல்லாம் மண்ணின்றே தோன்றின; எல்லாம் மண்ணுக்கே மீளும். 21மனிதரின் உயிர்மூச்சு மேலே போகிறது என்றும் விலங்குகளின் உயிர் மூச்சு கீழே தரைக்குள் இறங்குகிறது என்றும் யாரால் சொல்ல இயலும்? 22ஒருவர் தம் வேலையைச் செய்வதில் இன்பம் காண்பதே அவருக்கு நல்லது என்று கண்டேன். ஏனெனில், அவ்வேலை அவருக்கெனக் குறிக்கப்பட்டுள்ளது. அவர் இறந்தபின் நடப்பதைக் காண அவரைத் திரும்ப யாரும் கொண்டு வரப்போவதில்லை.



அதிகாரம் 4:1-16

1பிறகு நான் இவ்வுலகில் நடக்கும் கொடுமைகளையெல்லாம் பார்த்தேன். இதோ! மக்கள் ஒடுக்கப்பட்டுக் கண்ணீர் சிந்துகிறார்கள். அவர்களைத் தேற்றுவார் எவருமில்லை. அவர்களை ஒடுக்குவோர் கை ஓங்கி இருந்ததால், அவர்களைத் தேற்றுவார் எவருமில்லை. 2ஆகையால், இன்று உயிரோடு வாழ்கிறவர்களின் நிலைமையைவிட ஏற்கெனவே மாண்டு மறைந்துபோனவர்களின் நிலைமையே மேலானது என்றேன். 3இவ்விரு சாராரின் நிலைமையைவிட இன்னும் பிறவாதவர்களின் நிலைமையே சிறந்தது. ஏனெனில், அவர்கள் இவ்வுலகில் நடக்கும் கொடும் செயல்களைப் பார்க்கும் நிலையில் இல்லை.


4மனிதர் ஏன் இவ்வளவு பாடுபட்டு உழைக்கின்றனர் என்பதையும் கண்டறிந்தேன். இதற்குக் காரணம் மனிதரிடையே காணப்படும் போட்டி மனப்பான்மையாகும். இது வீண் செயல்; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும். 5தம் கைகளைக் கட்டிக்கொண்டு பட்டினிகிடந்து மடிகிறவர் மடையர் என்று சொல்லப்படுகிறது. 6காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்.


7உலக வாழ்க்கையில் வேறொரு காரியமும் வீணென்று கண்டேன். 8ஒருவர் தனி மனிதராக வாழ்கிறார். அவருக்குப் பிள்ளையுமில்லை, உடன் பிறந்தாருமில்லை; என்றாலும், அவர் ஓயாது உழைக்கிறார். ஆனால், தமக்கிருக்கும் செல்வத்தால் ஒருபோதும் மனநிறைவடைவதுமில்லை; தாம் இவ்வாறு உழைப்பதும் எவ்வகையான இன்பத்தையும் அனுபவியாமல் இருப்பதும் யாருக்காக என்று அவர் எண்ணிப் பார்ப்பதுமில்லை. இது வீணானதும் வருந்தத்தக்கதுமான வாழ்க்கை அன்றோ?


9தனி மனிதராய் இருப்பதை விட இருவராய் இருப்பது மேல். ஏனெனில், அவர்கள் சேர்ந்து உழைப்பதால், அவர்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும். 10ஒருவர் விழுந்தால், அடுத்தவர் அவரைத் தூக்கி விடுவார். தனி மனிதராய் இருப்பவர் விழுந்தால், அவரது நிலைமை வருந்தத்தக்கதாகும்; ஏனெனில், அவரைத் தூக்கி விட எவருமில்லை. 11குளிரை முன்னிட்டு இருவர் ஒன்றாய் படுத்துச் சூடு உண்டாக்கிக்கொள்ளலாம்; தனி மனிதனுக்கு எப்படிச் சூடு உண்டாகும்? 12தனி மனிதரை வீழ்த்தக்கூடிய எதிரியை இருவரால் எதிர்த்து நிற்க முடியும். முப்புரிக் கயிறு அறுவது கடினம்.


13வயதுசென்ற அறிவுரை கேளாத முட்டாள் அரசரைவிட, விவேகமுள்ள ஏழை இளைஞனே மேலானவன். 14சிறையில் கைதியாதிருந்தவர் அரியணை ஏறியதும் உண்டு; அரசுரிமையுடன் பிறந்தவர் வறியவராவதும் உண்டு. 15ஆனால், இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் அந்த அரச பதவியை ஏற்ற இளைஞனின் சார்பில் இருந்ததைப் பார்த்தேன். 16அவன் ஆண்ட மக்களின் எண்ணிக்கைக்கு வரையறையே இல்லை. அவன் காலத்திற்குப்பின் வந்த மக்களோ அவனில் மனநிறைவடையவில்லை. இதுவும் வீணே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.



அதிகாரம் 5:1-20

கடவுளுக்குக் கொடுக்கும் வாக்கைப் பற்றிய எச்சரிக்கை


1கடவுளின் கோவிலுக்குச் செல்லும்போது விழிப்புடனிரு. மதிகேடரைப்போல பலிசெலுத்துவதை விட, உள்ளே சென்று கேட்டறிவதே மேல். ஏனெனில், அவர்கள் தாங்கள் செய்த தீவினைகளை உணர்வதில்லை. 2கடவுள் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதையும் பேசாதே; எண்ணிப் பாராமல் வாக்குக் கொடுக்காதே. கடவுள் விண்ணுலகில் இருக்கிறார்; நீயோ மண்ணுலகில் இருக்கிறாய்; எனவே, மிகச்சில சொற்களே சொல். 3கவலை மிகுமானால் கனவுகள் வரும்; சொல் மிகுமானால் மூடத்தனம் வெளியாகும். 4கடவுளுக்கு நீ ஏதாவதொரு வாக்குக் கொடுத்திருந்தால், அதை நிறைவேற்றுவதில் காலந்தாழ்த்தாதே. ஏனெனில், பொறுப்பின்றி நடப்போரிடம் அவர் விருப்பங்கொள்வதில்லை. என்ன வாக்குக் கொடுத்தாயோ அதைத் தவறாமல் நிறைவேற்று.✠ 5கொடுத்த வாக்கை நிறைவேற்றாமற் போவதைவிட, வாக்குக் கொடாமல் இருப்பதே மேல். 6வாய் தவறிப் பேசிப் பழிக்கு ஆளாகாதபடி பார்த்துக்கொள்; தவறுதலாய்ச் செய்துவிட்டேன் என்று வான தூதரிடம் சொல்லும்படி நடந்துகொள்ளாதே. உன் பேச்சின் பொருட்டுக் கடவுள் உன்மீது சினங்கொண்டு, நீ செய்தவற்றை அழிக்கும்படி நடந்துகொள்வானேன்? 7கனவுகள் பல வரலாம்; செயல்களும் சொற்களும் எத்தனையோ இருக்கலாம். நீயோ கடவுளுக்கு அஞ்சி நட.


உலக வாழ்க்கை பயனற்றது


8ஒரு மாநிலத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுவதையும் அவர்களுக்கு நீதி நியாயம் வழங்கப்படாதிருப்பதையும் நீ காண்பாயானால் வியப்படையாதே. ஏனெனில், அலுவலர்களுக்குமேல் அதிகாரிகள் உள்ளனர் என்றும், அவர்களுக்கும் மேலதிகாரிகள் உள்ளனர் என்றும் சொல்வார்கள்.9‘பொதுநலம்’, ‘நாட்டுத் தொண்டு’ என்ற சொற்களும் உன் காதில் விழும்.


10பண ஆசை உள்ளவருக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் ஆவல் தீராது; செல்வத்தின்மேல் மிகுந்த ஆசை வைப்பவர் அதனால் பயனடையாமற்போகிறார். இதுவும் வீணே. 11சொத்து பெருகினால் அதைச் சுரண்டித் தின்போரின் எண்ணிக்கையும் பெருகும். செல்வர்களுக்குத் தங்கள் சொத்தைக் கண்ணால் பார்ப்பதைத் தவிர வேறு என்ன பயன் உண்டு? 12வேலை செய்கிறவரிடம் போதுமான சாப்பாடு இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம்; ஆனால், அவருக்கு நல்ல தூக்கமாவது இருக்கும். செல்வரது செல்வப் பெருக்கே அவரைத் தூங்கவிடாது.


13உலகில் ஒரு பெருந்தீங்கை நான் கண்டேன். ஒருவர் சேமிக்கும் செல்வம் அவருக்குத் துன்பத்தையே விளைவிக்கும். 14ஒருவர் ஒரு நட்டம்தரும் தொழிலில் ஈடுபட்டுத் தம் செல்வத்தை இழக்கிறார். அவருக்கு ஒரு பிள்ளை உள்ளது. ஆனால், அப்பிள்ளைக்குக் கொடுப்பதற்கோ ஒன்றுமில்லை. 15மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர்; வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகின்றனர். அவர் தம் உழைப்பினால் ஈட்டும் பயன் எதையும் தம்மோடு எடுத்துச் செல்வதில்லை.✠


16இது கொடிய தீங்காகும். அவர் எப்படி வந்தாரோ அப்படியே மீளுகிறார்; காற்றைப் பிடிக்கப் பாடுபடுகிறார். 17அவர் அடையும் பயன் என்ன? வாழ்நாள் முழுவதும் இருள், கவலை, பிணி, எரிச்சல், துன்பம். 18ஆகையால், நான் இந்த முடிவுக்கு வந்தேன்; தமக்குக் கடவுள் வரையறுத்திருக்கும் குறுகிய வாழ்நாளில் மனிதர் உண்டு குடித்து, உலகில் நம் உழைப்பின் பயனைத் துய்ப்பதே நலம்; அதுவே தகுந்ததுமாகும். 19கடவுள் ஒருவருக்குப் பெருஞ்செல்வமும் நல்வாழ்வும் கொடுத்து, அவற்றை அவர் துய்த்து மகிழும் வாய்ப்பையும் அளிப்பாரானால், அவர் நன்றியோடு தம் உழைப்பின் பயனை நுகர்ந்து இன்புறலாம். அது அவருக்குக் கடவுள் அருளும் நன்கொடை. 20தம் வாழ்நாள் குறுகியதாயிருப்பதைப்பற்றி அவர் கவலைப்படமாட்டார். ஏனெனில் கடவுள் அவர் உள்ளத்தை மகிழ்ச்சியோடிருக்கச் செய்கிறார்.


5:4 திபா 66:13-14. 5:15 யோபு 1:21; திபா 49:17; 1 திமொ 6:7.



அதிகாரம் 6:1-12

1உலகில் மனிதரைக் கவலையில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் ஒரு தீங்கைக் கண்டேன். 2கடவுள் ஒருவருக்குச் செல்வத்தையும் நல்வாழ்வையும் மேன்மையையும் கொடுக்கிறார். ஆம், அவர் விரும்புவதெல்லாம் அவருக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைத் துய்க்கவோ கடவுள் அவருக்கு வாய்ப்பளிப்பதில்லை. அடுத்தவர் ஒருவர் அவற்றைத் துய்த்து மகிழ்கிறார். இங்கே பயனின்மையும் கடுந்துயரமும் காணப்படுகின்றன. 3ஒருவருக்கு நூறு பிள்ளைகள் இருக்கலாம். அவர் நீண்ட ஆயுளுடனும் வாழலாம். அவர் நெடுங்காலம் உயிரோடிருந்தும், தமக்குள்ள செல்வத்தால் இன்பம் அடையாமலும், இறந்தபின் அடக்கம் செய்யப்படாமலும் மறைவாரானால், அவரைவிடக் கருச்சிதைந்த பிண்டமே மேல் என்கிறேன். 4அப்பிண்டம் தோன்றுவதால் பயனில்லை. அது இருளில் மறைகிறது; அதன் பெயரை இருள் மூடிவிடும். 5அது கதிரவனைக் கண்டதுமில்லை; எதையும் அறிந்ததுமில்லை. ஆனால் அதன் நிலை அவருடையதை விட மேலானது. 6வாழ்கையில் இன்பம் துய்க்காமல் இரண்டாயிரம் ஆண்டுகள் உயிர் வாழும் மனிதர் கூட அதைவிட மேலானவர் இல்லை. ஏனெனில், இருவரும் ஒரே இடத்திற்கு செல்கின்றனர் அல்லவா? 7வயிற்றுக்காகவே ஒருவர் வேலை செய்கிறார்; ஆனால், அவருக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை. 8இப்படியிருக்க, மதிகேடரைவிட ஞானமுள்ளவர் எவ்வகையில் மேலானவர்? அல்லது ஏழை ஒருவருக்கு மனிதர்முன் திறமையுடன் நடந்துகொள்ளத் தெரிந்திருந்தும், அதனால் அவருக்குப் பயனென்ன? 9இல்லாத ஒன்றை அடைய விரும்பி அலைந்து திரிவதை விட உள்ளதே போதும் என்ற மனநிறைவோடியிருப்பதே மேல். ஆனால், இதுவும் வீணே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.


10இப்பொழுது நடக்கும் ஒவ்வொன்றும் நெடுங்காலத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டதாகும். மனிதர் யாரென்று நமக்குத் தெரியும். தம்மைவிட வலிமை வாய்ந்தவருடன் வாதாட அவரால் இயலாது. 11பேச்சு நீள நீள, அதன் பயன் குறைந்து கொண்டே போகும். அதனால் மனிதர் அடையும் நன்மை என்ன? 12மனிதருடைய வாழ்நாள் குறுகியது; பயனற்றது; நிழலைப்போல மறைவது. அதில் தமக்கு நலமானது எது என்பதை யாரால் அறியக் கூடும்? தம் மறைவிற்குப் பிறகு உலகில் என்ன நடக்கும் என்பதை யாரால் தெரிந்து கொள்ள இயலும்?



அதிகாரம் 7:1-29

வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்கள்


1விலையுயர்ந்த நறுமணத் தைலத்தை
விட நற்புகழே மேல்.
பிறந்த நாளைவிட
இறக்கும் நாளே சிறந்தது.✠
2விருந்து நடக்கும் வீட்டிற்குச்
செல்வதைவிடத்
துக்க வீட்டிற்குச் செல்வதே நல்லது.
ஏனெனில், அனைவருக்கும்
இதுவே முடிவு என்பதை உயிருடன்
இருப்போர் அங்கே உணர்ந்துகொள்வர்.
3சிரிப்பைவிடத் துயரமே நல்லது.
துயரத்தால் முகத்தில்
வருத்தம் தோன்றலாம்; ஆனால்,
அது உள்ளத்தைப் பண்படுத்தும்.
4ஞானமுள்ளவரின் உள்ளத்தில்
துக்க வீட்டின் நினைவே இருக்கும்;
மூடரின் உள்ளத்திலோ
சிற்றின்ப வீட்டின் நினைவே இருக்கும்.
5மூடர் புகழ்ந்துரைப்பதைக் கேட்பதினும்
ஞானி இடித்துரைப்பதைக்
கேட்பதே நன்று.
6மூடரின் சிரிப்பு, பானையின்கீழ்
எரியும் முட்செடி படபடவென்று
வெடிப்பதைப் போன்றது;
அதனால் பயன் ஒன்றுமில்லை.
7இடுக்கண் ஞானியையும்
பைத்தியக்காரனாக்கும்.
கைக்கூலி உள்ளத்தைக் கறைப்படுத்தும்.
8ஒன்றின் தொடக்கமல்ல,
அதன் முடிவே கவனிக்கத் தக்கது;
உள்ளத்தில் பெருமைகொள்வதைவிடப்
பொறுமையோடு இருப்பதே மேல்.
9உள்ளத்தில் வன்மத்திற்கு
இடங் கொடாதே;
மூடரின் நெஞ்சமே
வன்மத்திற்கு உறைவிடம்.✠
10“இக்காலத்தைவிட முற்காலம்
நற்காலமாயிருந்ததேன்?”
என்று கேட்காதே; இது
அறிவுடையோர் கேட்கும் கேள்வியல்ல.
11மரபுரிமைச் சொத்தோடு
ஞானம் சேர்ந்திருத்தல் வேண்டும்;
இதுவே உலகில் வாழும்
மக்களுக்கு நல்லது.
12பணம் நிழல் தருவதுபோல
ஞானமும் நிழல் தரும்;
ஞானம் உள்ளவருக்கு
அதனால் வாழ்வு கிடைக்கும்;
அறிவினால் கிடைக்கும் பயன் இதுவே.
13கடவுளின் செயலைச் சிந்தித்துப்பார்.
அவர் கோணலாக்கினதை
நேராக்க யாரால் இயலும்?


14வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு; துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது: ‘அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்’.


15என் பயனற்ற வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். நேர்மையானவர் நேர்மையுள்ளவராய் இருந்தும் மாண்டழிகிறார். தீயவரோ தீமை செய்கிறவராய் இருந்தும் நெடுங்காலம் வாழ்கிறார். 16நேர்மையாய் நடப்பதிலும் ஞானத்தைப் பெறுவதிலும் வெறி கொண்டவராய் இராதீர். அந்த வெறியால் உம்மையே அழித்துக் கொள்வானேன்? 17தீமை செய்வதிலும் மூடராயிருப்பதிலும் வெறி கொண்டவராய் இராதீர். காலம் வருமுன் நீவிர் ஏன் சாகவேண்டும்? 18ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும்போது, அதற்கு மாறானதைக் கைவிட்டுவிடாதீர். நீவிர் கடவுளுக்கு அஞ்சி நடப்பீரானால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்.


19ஒரு நகருக்குப் பத்து ஆட்சியாளர் தரும் வலிமையைவிட, ஞானமுள்ளவருக்கு ஞானம் மிகுதியான வலிமை தரும்.


20குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை.


21பிறர் கூறுவதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்காதீர். அவ்வாறு செய்தால் உம் வேலைக்காரர் உம்மை இகழ்ந்ததையும் நீவிர் கேட்க நேரிடும்.


22நீவிர் எத்தனைமுறை பிறரை இகழ்ந்தீர் என்பது உமக்கே நன்றாய்த் தெரியும்.


23இவற்றையெல்லாம் என் ஞானத்தால் சீர்தூக்கிப் பார்த்தேன். நான் ஞானியாகிவிடுவேன் என்று நினைத்தேன்.


24ஆனால், என்னால் இயலாமற் போயிற்று. ஞானம் நெடுந் தொலையில் உள்ளது; மிக மிக ஆழமானது. அதை யாரால் கண்டுபிடிக்க முடியும்? 25நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். ஞானத்தையும் காரண காரியத்தையும் பற்றிய விவரத்தை ஆராய்ந்து காண்பதில் சிந்தனையைச் செலுத்தினேன். கொடியவராயிருத்தல் மூடத்தனம் என்பதையும் மதிகேடரைப்போலச் செயல்புரிதல் அறிவுகெட்ட நடத்தை என்பதையும் தெரிந்துகொண்டேன். 26சாவைவிடக் கசப்பானதொன்றைக் கண்டேன். அதுதான் பெண். அவள் உனக்குக் காட்டும் அன்பு ஒரு கண்ணியைப் போல அல்லது ஒரு வலையைப் போல உன்னைச் சிக்க வைக்கும்; உன்னைச் சுற்றிப் பிடிக்கும். அவளின் கைகள் சங்கிலியைப்போல உன்னை இறுக்கும். கடவுளுக்கு உகந்தவனே அவளிடமிருந்து தப்புவான். பாவியோ அவளின் கையில் அகப்படுவான். 27“ஆம், நான் ஒன்றன்பின் ஒன்றாய் ஆராய்ந்து இதைக் கண்டுபிடித்தேன்” என்கிறார் சபை உரையாளர். வேறு ஆராய்ச்சிகளும் செய்தேன்; அவற்றால் மிகுந்த பயன் அடையவில்லை. 28ஆனால் ஒன்று தெரிந்தது. மனிதன் எனத் தக்கவன் ஆயிரத்தில் ஒருவனே என்று கண்டேன். பெண் எனத் தக்கவள் யாரையுமே நான் கண்டதில்லை. 29நான் தெரிந்துகொண்டதெல்லாம் இதுவே. கடவுள் மனிதரை நேர்மையுள்ளவராகவே படைத்தார். ஆனால் வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும் மனிதர் தேடிக்கொண்டவையே.


7:1 நீமொ 22:1. 7:9 யாக் 1:19.



அதிகாரம் 8:1-17

1ஞானமுள்ளவருக்கு யார் நிகர்?
உலகில் காண்பவற்றின்
உட்பொருளை வேறு யாரால்
அறிய இயலும்?
ஞானம் ஒருவன் முகத்தை
ஒளிமயமாக்கும்;
அதிலுள்ள கடுகடுப்பை நீக்கும்.


அரசனுக்கு அடங்கி நட


2கடவுளின் பெயரால் நீ ஆணையிட்டுக் கூறியபடி அரசனுக்கு அடங்கி நட. அரசன் தான் விரும்புகிறபடியெல்லாம் செய்பவன். 3எனவே, அவன் முன்னிலையிலிருந்து பதற்றப்பட்டுப் போய்விடாதே. அவனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யாதே. 4மன்னன் சொல்லுக்கு மறுசொல் இல்லை. எனவே, “ஏன் இப்படிச் செய்கிறீர்?” என்று அவனை யார் கேட்க முடியும்? 5அவனது கட்டளைக்குக் கீழ்ப்படியும்வரை உனக்குத் தீங்கு வராது. அவன் சொல்வதைச் செய்வதற்குரிய காலத்தையும் வழியையும் ஞானமுள்ளவன் அறிவான். 6ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலமுண்டு; செய்யவேண்டிய முறையும் உண்டு. ஆனால் அவல நிலையிலுள்ள மனிதனால் என்ன செய்யமுடியும்? 7ஏனெனில், வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது. அது எப்படி நடக்கும் என்று அவனுக்குச் சொல்வாருமில்லை. காற்றை அடக்க எவனாலும் இயலாது. 8அதுபோல, தன் சாவு நாளைத் தள்ளிப்போடவும் எவனாலும் இயலாது. சாவெனும் போரினின்று நம்மால் விலகமுடியாது; பணம் கொடுத்தும் தப்ப முடியாது.


நல்லாரும் பொல்லாரும்


9உலகில் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும்பற்றிச் சிந்தனை செய்தபோது, இவற்றையெல்லாம் கண்டேன். ஒருவன்மேல் ஒருவன் அதிகாரம் செலுத்துவதால் துன்பம் விளைகிறது 10பொல்லார் மாண்டபின் அடக்கம் செய்யப்படுகின்றனர். அடக்கம் செய்தவர்கள் கல்லறைத் தோட்டத்திலிருந்து வீடு திரும்பி அந்தப் பொல்லார் தீச்செயல் புரிந்த ஊரிலேயே அவர்களைப் பாராட்டிப் பேசுகிறார்கள். எல்லாம் வீணான செயலே. 11மக்கள் தீமை செய்யத் துணிவதேன்? தீமை செய்வோருக்கு விரைவிலேயே தண்டனை அளிக்காததுதான் இதற்குக் காரணம். 12பாவி நூறு முறை தீமைசெய்து நெடுங் காலம் வாழ்ந்தாலும், கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களே நலமுடன் வாழ்வார்கள் என்பதை நான் அறிவேன். ஏனெனில், அவர்கள் அவருக்கு அஞ்சி நடக்கிறார்கள். ஆனால், 13தீயவர்கள் நலமுடன் வாழமாட்டார்கள்; நிழல் நீள்வதுபோல அவர்களது வாழ்நாள் நீளாது. ஏனெனில், அவர்கள் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை.


14வேறொரு பொருத்தமற்ற காரியமும் உலகத்தில் காணப்படுகிறது. சில வேளைகளில் பொல்லாருக்குரிய தண்டனை நல்லாருக்குக் கிடைக்கிறது. நல்லாருக்குரிய பயன் பொல்லாருக்குக் கிடைக்கிறது. இது பொருத்தமற்றது என்கிறேன். 15எனவே, மனிதர் களிப்புடனிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். உண்பதும் குடிப்பதும் களிப்பதுமேயன்றி, மனிதருக்கு உலகில் நலமானது வேறெதுவுமில்லை. உலகில் கடவுள் அவருக்கு அருளும் வாழ்நாளில் அவரது உழைப்புக்குக் கிடைக்கும் நிலையான பயன் இதுவே.


16-17நான் ஞானத்தை அடையவும் உலகில் நடப்பதை அறியவும் முயன்றபோது இதைக் கண்டதில்லை; ஒருவர் அல்லும் பகலும் கண் விழித்திருந்து பார்த்தாலும், கடவுளின் செயலை அவரால் புரிந்துகொள்ள இயலாது.



அதிகாரம் 9:1-18

1இவையனைத்தையும் ஆழ்ந்து எண்ணிப்பார்த்தேன். நல்லாரும் ஞானமுள்ளவர்களும் செய்வதெல்லாம், அவர்கள் அன்புகொள்வதும் பகைப்பதும்கூட, கடவுளின் கையிலேதான் இருக்கிறது. இனி வரப்போவது என்ன என்பது யாருக்கும் தெரியாது. 2விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் எல்லாம் நேரிடும். நேர்மையானவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும், நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும், மாசற்றவர்களுக்கும் மாசுள்ளவர்களுக்கும், பலி செலுத்துகிறவர்களுக்கும் பலி செலுத்தாதவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நேரிடும் பொல்லார்க்கு நேரிடும் விதிப்படியே நல்லார்க்கும் நேரிடும். நேர்ந்து கொள்ளத் தயங்குகிறவருக்கு நேரிடும் விதிப்படியே நேர்ந்து கொள்ளுகிறவருக்கும் நேரிடும். 3விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் நேரிடும். இதுவே உலகில் நடக்கிற அனைத்திலும் காணப்படுகிற தீமை. மேலும், மக்கள் உள்ளங்களில் தீமை நிறைந்திருக்கிறது. அவர்கள் உயிரோடிருக்கும் வரையில் அவர்கள் மனத்தில் மூடத்தனம் இருக்கிறது. திடீரென்று அவர்கள் இறந்து போகிறார்கள். 4ஆயினும், ஒருவன் உயிரோடிருக்கும் வரையில் நம்பிக்கைக்கு இடமுண்டு. செத்துப்போன சிங்கத்தைவிட உயிருள்ள நாயே மேல். 5ஆம், உயிருள்ளோர் தாம் இறப்பது திண்ணம் என்பதையாவது அறிவர்; ஆனால், இறந்தோரோ எதையும் அறியார். அவர்களுக்கு இனிமேல் பயன் எதுவும் கிடையாது; அவர்கள் அறவே மறக்கப்படுவார்கள். 6அவர்களுக்கு அன்பு, பகைமை, பொறாமை எதுவும் இல்லை. இப்பரந்த உலகில் நடக்கும் எதிலும் அவர்கள் பங்கெடுக்கப்போவதில்லை.


7ஆகவே, நீ நன்றாய்ச் சாப்பிடு; களிப்புடனிரு; திராட்சை இரசம் அருந்தி மகிழ்ச்சியுடனிரு; தயங்காதே. இவை கடவுளுக்கு உடன்பாடு. 8எப்போதும் நல்லாடை உடுத்து. தலையில் நறுமணத் தைலம் தடவிக்கொள். 9இவ்வுலக வாழ்க்கை வீணெனினும், உனக்குக் கிடைத்துள்ள வாழ்நாள் முழுதும் நீ உன் அன்பு மனைவியோடு இன்புற்றிரு. ஏனெனில், உன் வாழ்நாளில் உலகில் நீ படும்பாட்டிற்கு ஈடாகக் கிடைப்பது இதுவே. 10நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்; அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய். ஏனெனில், நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல் புரிவதுமில்லை; சிந்தனை செய்வதுமில்லை; அறிவு பெறுவதுமில்லை; அங்கே ஞானமுமில்லை.


11உலகில் வேறொன்றையும் கண்டேன்; ஓட்டப் பந்தயத்தில் விரைவாக ஓடுபவரே வெற்றி பெறுவார் என்பதில்லை. வலிமை வாய்ந்தவரே போரில் வெற்றி அடைவார் என்பதில்லை. ஞானமுள்ளவருக்கு வேலை கிடைக்கும் என்பதில்லை. அறிவுள்ளவரே செல்வம் சேர்ப்பார் என்பதில்லை. திறமையுடையவரே பதவியில் உயர்வார் என்பதில்லை. எவருக்கும் வேளையும் வாய்ப்பும் செம்மையாய் அமையவேண்டும். 12தமக்குத் துன்பவேளை எப்போது வருமென்று ஒருவருக்குத் தெரியாது. வலையில் அகப்படும் மீன்களைப்போலவும் கண்ணியில் சிக்கும் பறவைகளைப் போலவும் அவர் சிக்கிக்கொள்வார். எதிர்பாராத வகையில் அவருக்குக் கேடு காலம் வரும்.


ஞானத்தைப் பற்றிய சிந்தனைகள்


13நான் கண்ட வேறொன்றும் உண்டு; இவ்வுலகில் ஞானம் எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பதை அது நன்கு எடுத்துக்காட்டுகிறது. 14சிறிய நகர் ஒன்று இருந்தது. அதில் இருந்த மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. வலிமை வாய்ந்த மன்னன் ஒருவன் அதன்மேல் படையெடுத்து வந்தான்; அதை முற்றுகையிட்டுத் தாக்கினான். 15அந்நகரில் ஞானமுள்ளவன் ஒருவன் இருந்தான். ஆனால் அவன் ஓர் ஏழை. அவன் தன் ஞானத்தால் நகரைக் காப்பாற்றியிருக்கக்கூடும். ஆயினும், அவனைப் பற்றி எவரும் நினைக்கவில்லை. 16வலிமையைவிட ஞானமே சிறந்தது என்பதே என் கருத்து. அந்த ஏழையின் ஞானம் புறக்கணிக்கப்பட்டது; அவன் சொல்லை எவரும் கவனிக்கவில்லை.


17மூடர்கள் கூட்டத்தில் அதன் தலைவன்
முழக்கம் செய்வதைக் கேட்பதைவிட,
ஞானமுள்ளவர் அடக்கமுடன்
கூறுவதைக் கேட்பதே நன்று.
18போர்க் கருவிகளைவிட
ஞானமே சிறந்தது.
ஆனால் ஒரே ஒரு தவறு
நன்மைகள் பலவற்றைக் கெடுத்துவிடும்



அதிகாரம் 10:1-20

மதிகேட்டைப் பற்றிய சில குறிப்புகள்


1கலத்திலிருக்கும் நறுமணத் தைலம்
முழுவதையும் செத்த ஈக்கள் முடை
நாற்றம் வீசும்படி செய்துவிடும்.
அதுபோல சிறிய மதிகேடும்
மேன்மையான ஞானத்தைக்
கெடுத்து விடும்.
2தக்கன செய்வதையே
ஞானியரின் உள்ளம் நாடும்;
தகாதன செய்வதையே
மூடரின் உள்ளம் நாடும்.
3மூடர் தெருவில் நடந்தாலே போதும்;
அவரது மடமை வெளியாகிவிடும்.
தாம் மூடர் என்பதை அவரே
அனைவருக்கும் காட்டிடுவார்.
4மேலதிகாரி உன்னைச் சினந்து
கொண்டால், வேலையை விட்டு விடாதே.
நீ அடக்கமாயிருந்தால்,
பெருங்குற்றமும் மன்னிக்கப்படலாம்.


5உலகில் நான் கண்ட தீமை ஒன்று உண்டு. அது உயர் அலுவலரின் தவற்றால் விளைவது. 6மூடர்களுக்கு உயர்ந்த பதவி அளிக்கப்படுகிறது; செல்வர்கள் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள். 7அடிமைகள் குதிரைமீதேறிச் செல்வதையும், உயர்குடிப் பிறந்தோர் அடிமைகளைப்போலத் தரையில் நடந்து செல்வதையும் நான் கண்டிருக்கிறேன்.


8குழியை வெட்டுவார் அதில்
தாமே வீழ்வார்.
கன்னமிடுவோரைக்
கட்டு விரியன் கடிக்கும்.✠
9கற்களை வெட்டி எடுப்பவர்
கற்களால் காயமடைவார்.
மரத்தை வெட்டுபவர்
காயத்திற்கு ஆளாவார்.
10மழுங்கிய கோடரியைத் தீட்டாமல்
பயன்படுத்தினால் வேலைசெய்வது
மிகக் கடினமாயிருக்கும்.
ஞானமே வெற்றிக்கு வழிகோலும்.
11பாம்பை மயக்குமுன் அது கடித்து விட்டால்
அதை மயக்கும் வித்தை
தெரிந்திருந்தும் பயனில்லை.
12ஞானியரின் வாய்மொழி அவருக்குப்
பெருமை தேடித்தரும்.
மூடரோ தம் வாயால் கெடுவார்.
13அவரது பேச்சு மடமையில் தொடங்கும்;
முழு பைத்தியத்தில் போய் முடியும்.
14மூடர் வளவளவென்று பேச்சை வளர்ப்பார்;
என்ன பேசப்போகின்றார் என்பது
எவருக்கும் தெரியாது.
அதற்குப்பின் என்ன நடக்கும் என்பதை
எவராலும் சொல்ல இயலாது.
15மூடர் அளவுமீறி உழைத்துத்
தளர்ந்து போவார்.
ஊருக்குத் திரும்பிப்போகவும்
வகை அறியார்.
16சிறு பிள்ளையை அரசனாகவும்
விடிய விடிய விருந்துண்டு களிப்பவர்களைத்
தலைவர்களாகவும் கொண்ட நாடே!
நீ கெட்டழிவாய்.
17உயர்குடிப் பிறந்தவனை அரசனாகவும்
உரிய நேரத்தில் உண்பவர்களை,
குடித்துவெறிக்காது தன்னடக்கத்தோடு
இருப்பவர்களைத் தலைவர்களாகவும்
கொண்ட நாடே! நீ நீடு வாழ்வாய்.
18சோம்பேறியின் வீட்டுக்கூரை ஒழுகும்;
பழுதுபார்க்காதவரின் வீடு
இடிந்து விழும்.
19விருந்து மனிதருக்கு மகிழ்ச்சிதரும்;
திராட்சை மது வாழ்க்கையில்
களிப்புத்தரும்;
பணம் இருந்தால் தான்
எல்லாம் கிடைக்கும்.
20தனிமைமயிலுங்கூட அரசனை இகழாதே;
படுக்கையறையிலுங்கூடச்
செல்வர்களை இகழ்ந்து பேசாதே.
வானத்துப் பறவைகள் நீ கூறியதை
எடுத்துச்செல்லும்;
பறந்து சென்று நீ சொன்னதைத்
திரும்பச் சொல்லும்.


10:8 திபா 7:15; நீமொ 26:7.



அதிகாரம் 11:1-10

ஞானமுள்ளவரின் செயல்கள்


1உன் பணத்தை வைத்துத் துணிந்து
கடல் வாணிபம் செய்;
ஒருநாள் அது வட்டியோடு திரும்பிவரும்.
2உன் பணத்தைப் பிரித்து ஏழெட்டு
இடங்களில் முதலாக வை.
ஏனெனில், எங்கு, எவ்வகையான
இடர் நேருமென்பதை
நீ அறிய இயலாது.
3வானத்தில் கார்முகில் திரண்டு வருமாயின்,
ஞாலத்தில் மழை பெய்யும்.
மரம் வடக்கு நோக்கி விழுந்தாலும்
தெற்கு நோக்கி விழுந்தாலும்
விழுந்த இடத்திலேதான் கிடக்கும்.
4காற்று தக்கவாறு இல்லையென்று
காத்துக்கொண்டே இருப்போர்,
விதை விதைப்பதில்லை;
வானிலை தக்கபடி இல்லை என்று
சொல்லிக்கொண்டே இருப்போர்
அறுவடை செய்வதில்லை.


5காற்றின் போக்கையோ, கருவுற்ற பெண்ணின் வயிற்றில் உயிர் வளரும் வகையையோ நீ அறிய இயலாது; அவ்வாறே, அனைத்தையும் செய்கிற கடவுளின் செயல்களையும் உன்னால் அறியமுடியாது. 6காலையில் விதையைத் தெளி; மாலையிலும் அப்படியே செய். அதுவோ இதுவோ எது பயன்தரும் என்று உன்னால் கூறமுடியாது. ஒருவேளை இரண்டுமே நல்விளைச்சலைத் தரலாம்.


7ஒளி மகிழ்ச்சியூட்டும்; கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும். 8மனிதன் எத்தணை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும். இருள் சூழ்ந்த நாள்கள் பல இருக்கும் என்பதையும் அவன் மறக்கலாகாது. அதற்குப்பின் வருவதெல்லாம் வீணே.


இளையோருக்கு அறிவுரை


9இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடனிருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள்.


10மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்; குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே.



அதிகாரம் 12:1-14

1ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. “வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே” என்று நீ சொல்லக்கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை. 2அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும், 3வீட்டுக்காவலர்⒜ நடுக்கங்கொள்ள, வலியோர்⒝ தளர்வுறுமுன்னும், அரைப்போர்⒞ மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர்⒟ ஒளி இழந்துபோகுமுன்னும், 4தெருச்சந்தடி கேளாவண்ணம் கதவுகள்⒠ அடைத்துக்கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர்⒡ அனைவரும் ஓய்ந்துபோகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. 5மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும்⒢, வெட்டுக்கிளியைப்போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை; 6வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும், 7மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்புமுன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. 8வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபை உரையாளர்; எல்லாமே வீண்.


தொகுப்புரை


9சபை உரையாளர் ஞானமுள்ளவராயிருந்ததோடு தாம் அறிந்தவற்றைத் தொகுத்துத் தந்தார். 10சபை உரையாளர் இனிய நடையில் எழுத முயன்றுள்ளார். உண்மையை ஒளிவு மறைவில்லாமல் எழுதிவைத்திருக்கிறார். 11ஞானமுற்றவர்களின் சொற்கள் ஆயரின் கோல்போல் வழிநடத்தும். தொகுத்து வைத்த முதுமொழிகள் பசுமரத்தாணிபோல உள்ளத்தில் பதியும். அவை ஒரே ஆயரால் அளிக்கப்பட்டவை.


12பிள்ளாய்! மேலும் ஓர் எச்சரிக்கை; நூல்கள் பல எழுதுவதால் பயன் ஒன்றுமில்லை. மிகுதியான படிப்பு உடலுக்கு இளைப்பு.{ப்ப்}13இவையனைத்திற்கும் முடிவுரையாக ஒன்று கூறுகிறேன்; கடவுளுக்கு அஞ்சி நட; அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. இதற்காகவே மனிதர் படைக்கப்பட்டனர். 14நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், மறைவான செயலுக்குங்கூட, அது நல்லதோ தீயதோ எதுவாயினும், அனைத்திற்கும் கடவுளே தீர்ப்பு வழங்குவார்.


12:3-7 இப்பகுதி மனிதர் முதுமைப் பருவம் எய்தி, அவரது உடல் தளர்வுறுவதைக் குறிப்பதாக்க் கொள்ளப்படுகிறது: ⒜கைகள், ⒝கால்கள், ⒞பற்கள், ⒟கண்கள், ⒠காதுகள், ⒡குரல்வளை நரம்புகள், ⒢தலைமுடி.