Manage OLD TESTAMENT

  • Home
  • Manage OLD TESTAMENT
முன்னுரை:1

சாலமோனின் ஞானம்’ என்னும் இந்நூல் சாலமோனைப் பற்றிய சில மறைமுகக் குறிப்புகளைக் கொண்டிருந்தாலும் (காண் 8:9-15; 9:7-8,12), காலத்தாலும் கருத்தாலும் பிந்தியது என்பது உறுதி. பாலஸ்தீனத்துக்கு வெளியே, எகிப்து நாட்டு அலக்சாந்திரியாவில் வாழ்ந்துவந்த ஒரு யூதரால் கி.மு. முதல் நூற்றாண்டின் நடுவில் இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்; இதுவே பழைய ஏற்பாட்டு நூல்களுள் இறுதியாக எழுத்து வடிவம் பெற்றிருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.

பாலஸ்தீனத்துக்கு வெளியே வாழ்ந்துவந்த யூதர்களுள் சிலர், கிரேக்க மொழி, மெய்யியல், பண்பாடு, வழிபாட்டு முறை, வாழ்க்கை முறை முதலியவற்றின் மீது அளவற்ற நாட்டம் கொண்டதோடு, யூத மறையைவிடக் கிரேக்கர்களின் மறைவான சமயச் சடங்குகள் உயர்ந்தவை என்னும் தவறான எண்ணத்தால் தூண்டப்பெற்று யூத மறையைக் கைவிட்டனர். இவர்கள் யூத மறைக்கு மனம் மாறி வர அழைப்பு விடுப்பதே இந்நூலாசிரியரின் முதன்மை நோக்கம். அதே நேரத்தில், யூதக் கோட்பாடுகளில் பிடிப்போடு இருந்தவர்களை ஊக்கப்படுத்தி உறுதிப்படுத்துகிறார் ஆசிரியர்; விசுவாசத்தில் தளர்ந்து தடுமாற்ற நிலையில் இருந்தவர்களை எச்சரிக்கிறார்; கிரேக்கருடைய சிலைவழிபாட்டின் மூடத்தனத்தை அடையாளம் காட்டுவதோடு, ஆண்டவர்மீது அச்சம் கொள்வதே — அவரது திருச்சட்டத்தின்படி ஒழுகுவதே — உண்மையான, உயரிய ஞானம் என்று கோடிட்டுக் காட்டி, யூத மறையைத் தழுவுமாறு வேற்றினத்தாரைத் தூண்டுகிறார். கிரேக்கருக்கும் கிரேக்கச் சூழலில் வாழ்ந்துவந்த யூதருக்கும் யூதநெறிக் கோட்பாடுகளை விளக்க எழுந்த இந்நூலில் கிரேக்க மெய்யியல், நடை, சொல்லாட்சி முதலியன மிகுதியாகக் காணப்படுகின்றன.

முழு நூலும் இனிய கவிதை நடையில் அமைந்துள்ளது. நூலின் இறுதிப் பகுதி (அதி 10-19) யூதப் போதகர்கள் கையாண்டுவந்த விவிலிய விளக்க முறையான ‘மித்ராஷ்’ என்னும் இலக்கியவகைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.


நூலின் பிரிவுகள்


1. ஞானமும் மனிதரின் முடிவும் 1 - 5
2. ஞானத்தின் தோற்றம், இயல்பு, அதை அடையும் வழி 6 - 9
3. மீட்பு வரலாற்றில் ஞானம் 10 - 19



அதிகாரம் 1:1-16

1. ஞானமும் மனிதரின் முடிவும்


நீதியைத் தேடுதலே இறவாமைக்கு வழி

1மண்ணுலகை ஆள்பவர்களே,
நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்;
நன்மனத்துடன் ஆண்டவரைப் பற்றி
நினைந்திடுங்கள்;
நேர்மையான உள்ளத்துடன்
அவரைத் தேடுங்கள்.✠

2அவரைச் சோதியாதோர்
அவரைக் கண்டடைகின்றனர்;
அவரை நம்பினோர்க்கு
அவர் தம்மை வெளிப்படுத்துகின்றார்.

3நெறிகெட்ட எண்ணம் மனிதரைக்
கடவுளிடமிருந்து பிரித்துவிடும்.
அவரது ஆற்றல் சோதிக்கப்படும் பொழுது,
அது அறிவிலிகளை
அடையாளம் காட்டிவிடும்.

4வஞ்சனை நிறைந்த ஆன்மாவில்
ஞானம் நுழைவதில்லை;
பாவத்திற்கு அடிமையான உடலில்
ஞானம் குடிகொள்வதில்லை.✠

5நற்பயிற்சி பெற்ற உள்ளம்
வஞ்சனையினின்று விலகியோடும்;
அறிவற்ற எண்ணங்களை விட்டு அகலும்;
அநீதி அணுகுகையில்
அது நாணி ஒதுங்கும்.

6ஞானம் மனிதநேயமுள்ள ஆவி;
ஆயினும் இறைவனைப் பழிப்போரை
அது தண்டியாமல் விடாது.
கடவுள் அவர்களுடைய
உள்ளுணர்வுகளின் சாட்சி;
உள்ளத்தை உள்ளவாறு
உற்று நோக்குபவர்;
நாவின் சொற்களைக்
கேட்பவரும் அவரே.

7ஆண்டவரின் ஆவி
உலகை நிரப்பியுள்ளது;
அனைத்தையும் ஒருங்கிணைக்கும்
அந்த ஆவி
ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது.

8நேர்மையற்றதைப் பேசுவோர்
மறைந்திருக்க முடியாது;
தண்டனை வேளையில்
நீதியினின்று தப்பமுடியாது.

9இறைப்பற்றில்லாதோரின் சூழ்ச்சிகள்
நுணுகி ஆராயப்படும்;
அவர்களுடைய சொற்கள்
ஆண்டவரின் காதுக்கு எட்டும்;
அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள்
கண்டிக்கப்படும்.

10விழிப்புடைய காது
அனைத்தையும் கேட்கின்றது.
முறையீடுகளின் முணுமுணுப்பு
செவிக்கு எட்டாமல் போவதில்லை.

11பயனற்ற முணுமுணுப்புப்பற்றி
எச்சரிக்கையாக இருங்கள்;
பழிச்சொல் கூறாது
உங்கள் நாவை அடக்குங்கள்.
ஏனெனில் மறைவாய்ப் பேசிய எதுவும்
விளைவின்றிப் போகாது.
பொய் சொல்லும் வாய்
ஆன்மாவைக் கொல்லும்.

12நெறிதவறிய வாழ்வால்
சாவை வரவேற்றுக்கொள்ளாதீர்கள்;
உங்கள் செயல்களாலேயே
அழிவை வருவித்துக்கொள்ளாதீர்கள்.

13சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை;
வாழ்வோரின் அழிவில்
அவர் மகிழ்வதில்லை.✠

14இருக்கவேண்டும் என்பதற்காகவே
அவர் அனைத்தையும் படைத்தார்.
உலகின் உயிர்கள் யாவும்
நலம் பயப்பவை;
அழிவைத் தரும் நஞ்சு எதுவும்
அவற்றில் இல்லை;
கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை.

15நீதிக்கு இறப்பு என்பது இல்லை.

இறைப்பற்றில்லாதவர்கள் வாழ்வை நோக்கும் முறை


16இறைப்பற்றில்லாதவர்கள்
தங்கள் செயலாலும் சொல்லாலும்
இறப்பை வரவழைத்தார்கள்;
அதை நண்பனாகக் கருதி
அதற்காக ஏங்கினார்கள்;
அதனோடு
ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்;
அதனோடு தோழமை கொள்ள
அவர்கள் பொருத்தமானவர்களே.✠


1:1 சாஞா 6:1-11. 1:4 சீஞா 15:7. 1:13 எசே 18:32; 33:11; 1 பேது 3:9. 1:16 நீமொ 8:36; எசா 28:15.



அதிகாரம் 2:1-24

1இறைப்பற்றில்லாதவர்கள்
தவறாகக் கணித்து
உள்ளத்தில் பின்வருமாறு
சொல்லிக் கொண்டார்கள்;
“நம் வாழ்வு குறுகியது;
துன்பம் நிறைந்தது.
மனிதரின் முடிவுக்கு
மாற்று மருந்து எதுவுமில்லை.
கீழுலகிலிருந்து யாரும் மீண்டதாகக்
கேள்விப்பட்டதில்லை.

2தற்செயலாய் நாம் பிறந்தோம்;
இருந்திராதவர்போல்
இனி ஆகிவிடுவோம்.
நமது உயிர்மூச்சு வெறும் புகையே;
அறிவு நம் இதயத் துடிப்பின்
தீப்பொறியே.✠

3அது அணையும்பொழுது,
உடல் சாம்பலாகிவிடும்.
ஆவியோ காற்றோடு காற்றாய்க்
கலந்துவிடும்.

4காலப்போக்கில் நம் பெயர் மறக்கப்படும்.
நம் செயல்களை
நினைவுகூரமாட்டார்கள்.
நம் வாழ்வு முகில் போலக்
கலைந்து போகும்;
கதிரவனின் ஒளிக்கதிர்களால்
துரத்தப்பட்டு,
அதன் வெப்பத்தால் தாக்குண்ட
மூடு பனிபோலச் சிதறடிக்கப்படும்.✠

5நம் வாழ்நாள் நிழல்போலக்
கடந்து செல்கின்றது.
நமது முடிவுக்குப்பின்
நாம் மீண்டு வருவதில்லை;
ஏனெனில் முடிவு குறிக்கப்பட்டபின்
எவரும் அதிலிருந்து மீள்வதில்லை.”

6“எனவே, வாருங்கள்;
இப்போதுள்ள நல்லவற்றைத் துய்ப்போம்;
இளமை உணர்வோடு
படைப்புப்பொருள்களை
முழுவதும் பயன்படுத்துவோம்.✠

7விலையுயர்ந்த திராட்சை மதுவிலும்
நறுமண வகைகளிலும்
திளைத்திருப்போம்;
இளவேனிற்கால மலர்களில்
எதையும் விட்டுவைக்கமாட்டோம்.

8ரோசா மலர்களை
அவை வாடுமுன்
நமக்கு முடியாகச் சூடிக்கொள்வோம்.

9நம் களியாட்டங்களில்
ஒவ்வொருவரும் பங்குகொள்ளட்டும்;
இன்பத்தின் சுவடுகளை
எங்கும் விட்டுச்செல்வோம்.
இதுவே நம் பங்கு;
இதுவே நம் உடைமை.”✠

10“நீதிமான்களாகிய ஏழைகளை
ஒடுக்குவோம்;
கைம்பெண்களையும்
ஒடுக்காமல் விடமாட்டோம்;
நரைதிரை விழுந்த முதியோரையும்
மதிக்கமாட்டோம்;

11நமது வலிமையே நமக்கு நீதி —
நமக்குச் சட்டம்.
வலிமையற்றது எதுவும் பயனற்றதே.”

12‘நீதி மான்களைத் தாக்கப்
பதுங்கியிருப்போம்;
ஏனெனில், அவர்கள் நமக்குத்
தொல்லையாய் இருக்கிறார்கள்;
நம் செயல்களை எதிர்க்கிறார்கள்;
திருச்சட்டத்திற்கு எதிரான
பாவங்களுக்காக
நம்மைக் கண்டிக்கிறார்கள்.
நற்பயிற்சியை மீறிய குற்றங்களை
நம்மீது சுமத்துகிறார்கள்.✠

13கடவுளைப்பற்றிய அறிவு
தங்களுக்கு உண்டு என
அவர்கள் பறைசாற்றுகிறார்கள்;
ஆண்டவரின் பிள்ளைகள்⁕ எனத் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள்.

14அவர்களது நடத்தையே
நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது.
அவர்களைப் பார்ப்பதே
நமக்குத் துயரமாய் உள்ளது.

15அவர்களது வாழ்க்கை
மற்றவர் வாழ்க்கையினின்று
வேறுபட்டது;
அவர்களுடைய வழிமுறைகள்
மாறுபட்டவை.

16இழிந்தோர் என நம்மை
அவர்கள் எண்ணுகிறார்கள்;
தூய்மையற்ற பொருளினின்று
ஒதுங்கிச் செல்வதுபோல
நம்முடைய வழிகளினின்று
விலகிச் செல்கிறார்கள்;
நீதிமான்களின் முடிவு
மகிழ்ச்சிக்குரியது எனக்
கருதுகிறார்கள்;
கடவுள் தம் தந்தை எனப்
பெருமை பாராட்டுகிறார்கள்.

17அவர்களுடைய சொற்கள்
உண்மையா எனக் கண்டறிவோம்;
முடிவில் அவர்களுக்கு
என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம்.

18நீதிமான்கள்
கடவுளின் மக்கள் என்றால்,
அவர் அவர்களுக்கு உதவி செய்வார்;
பகைவரிடமிருந்து
அவர்களை விடுவிப்பார்.

19அவர்களது கனிவினைக்
கண்டுகொள்ளவும்,
பொறுமையை ஆய்ந்தறியவும்,
வசைமொழி கூறியும் துன்புறுத்தியும்
அவர்களைச் சோதித்தறிவோம்.

20இழிவான சாவுக்கு
அவர்களைத் தீர்ப்பிடுவோம்;
ஏனெனில், தங்கள் வாய்மொழிப் படி
அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.’

21இறைப்பற்றில்லாதவர்கள்
இவ்வாறு எண்ணி
நெறி தவறிச்சென்றார்கள்.
அவர்களின் தீயொழுக்கமே
அவர்களைப்
பார்வையற்றோர் ஆக்கிவிட்டது.

22அவர்கள் கடவுளின் மறைவான
திட்டங்களை அறியவில்லை;
தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு
என்று நம்பவில்லை;
மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும்
என்று உய்த்துணரவில்லை.

23கடவுள் மனிதர்களை
அழியாமைக்கென்று படைத்தார்;
தம் சொந்த இயல்பின் சாயலில்⁕
அவர்களை உருவாக்கினார்.✠

24ஆனால் அலகையின் பொறாமையால்
சாவு உலகில் நுழைந்தது.
அதைச் சார்ந்து நிற்போர்
இறப்புக்கு உள்ளாவர்.✠


2:2 சீஞா 44:9. 2:4 சஉ 2:16. 2:6 எசா 22:13; 1 கொரி 15:32. 2:9 சஉ 3:22. 2:12 நீமொ 1:11. 2:23 தொநூ 1:26-27. 2:24 தொநூ 3:13.


2:13 ‘ஊழியர்’ என்றும் மொழிபெயர்க்கலாம். 2:23 ‘நித்தியத்தின் சாயல்’ என சில பழைய சுவடிகளில் உள்ளது.



அதிகாரம் 3:1-19

நல்லார், பொல்லாரின் முடிவு


1நீதி மான்களின் ஆன்மாக்கள்
கடவுளின் கையில் உள்ளன.
கடுந்தொல்லை எதுவும்
அவர்களைத் தீண்டாது.

2அறிவிலிகளின் கண்களில்
இறந்தவர்களைப்போல்
அவர்கள் தோன்றினார்கள்.
நீதிமான்களின் பிரிவு
பெருந்துன்பமாகக் கருதப்பட்டது.

3அவர்கள் நம்மைவிட்டுப்
பிரிந்து சென்றது
பேரழிவாகக் கருதப்பட்டது.
அவர்களோ
அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.✠

4மனிதர் பார்வையில்
அவர்கள் தண்டிக்கப்பட்டாலும்,
இறவாமையில் அவர்கள்
உறுதியான நம்பிக்கை
கொண்டுள்ளார்கள்.

5சிறிதளவு அவர்கள்
க‌ண்டித்துத் திருத்தப்பட்டபின்,
பேரளவு கைம்மாறு பெறுவார்கள்.
கடவுள் அவர்களைச்
சோதித்தறிந்தபின்,
அவர்களைத் தமக்குத்
தகுதியுள்ளவர்கள் என்று கண்டார்.

6பொன்னை உலையிலிட்டுப்
புடமிடுவதுபோல்
அவர் அவர்களைப் புடமிட்டார்;
எரிபலிபோல் அவர்களை
ஏற்றுக்கொண்டார்.

7கடவுள் அவர்களைச்
சந்திக்கவரும்போது
அவர்கள் ஒளி வீசுவார்கள்;
அரிதாள் நடுவே தீப்பொறிபோலப்
பரந்து சுடர்விடுவார்கள்;

8நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்;
மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள்.
ஆண்டவரோ அவர்கள்மீது
என்றென்றும் அரசாள்வார்.✠

9அவரை நம்புவோர்
உண்மையை அறிந்துகொள்வர்;
அன்பில் நம்பிக்கை கொள்வோர்
அவரோடு நிலைத்திருப்பர்.*
அருளும் இரக்கமும் அவர்
தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும்.**✠✠

10ஆனால் இறைப்பற்றில்லாதவர்கள்
தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப
தண்டிக்கப்படுவார்கள்;
ஏனெனில் அவர்கள்
நீதிமான்களைப் புறக்கணித்து,
ஆண்டவரை எதிர்த்தார்கள்.

11ஞானத்தையும் நற்பயிற்சியையும்
இகழ்பவர்கள்
இரங்கத்தக்கவர்கள்.
அவர்களது நம்பிக்கை வீணானது;
அவர்கள் உழைப்பு வெறுமையானது;
அவர்களின் செயல்கள் பயனற்றவை.

12அவர்களுடைய மனைவியர்
அறிவற்றவர்கள்;
அவர்களின் பிள்ளைகள் தீயவர்கள்;
அவர்களுடைய வழிமரபினர்
சபிக்கப்பட்டவர்கள்.

13தூய்மை இழக்காத,
தவறான உடலுறவு கொள்ளாத
மலடி பேறுபெற்றவர்;
மனிதரைக் கடவுள்
சந்திக்க வரும்போது
அப்பெண் கனி தருவார்.

14நெறிகெட்ட செயல்களைச் செய்யாத,
ஆண்டவருக்கு எதிராகத்
தீயவற்றைத் திட்டமிடாத
அண்ணகர்களும் பேறுபெற்றோர்.
அவர்களது பற்றுறுதிக்குச்
சிறப்புக் கைம்மாறு வழங்கப்படும்;
ஆண்டவரின் கோவிலில் அவர்களுக்கு
இனிமைமிக்க பங்கு அளிக்கப்படும்.

15நல்ல உழைப்பின் பயன்
புகழ்ச்சிக்குரியது.
அறிவுத்திறனின் ஆணிவேர்
அசைவுறாதது.

16விபசாரிகளின் மக்கள்
முதிர்ச்சி அடையமாட்டார்கள்;
தவறான உடலுறவால் பிறப்பவர்கள்
வேரோடு அழிவார்கள்.

17அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தாலும்
அவர்களை யாரும்
பொருட்படுத்த மாட்டார்கள்;
முதுமையின் இறுதிக் கட்டத்திலும்
அவர்கள் மதிப்புப் பெறமாட்டார்கள்.

18அவர்கள் இளமையில் இறந்தால்
அவர்களுக்கு நம்பிக்கை இராது;
தீர்ப்புநாளில் ஆறுதல் கிடைக்காது.

19நேர்மையற்ற தலைமுறையின் முடிவு
மிகக் கொடியது.


3:3 எசா 57:1-2. 3:5-6 2 கொரி 4:17; உரோ 8:18. 3:8 சீஞா 4:15. 3:9 ‘அவர் மீது நம்பிக்கைக் கொள்வோர் அவரோடு அன்பில் நிலைத்திருப்பர்’ என்றும் மொழிபெயர்க்கலாம். 3:9 ‘தம் தூயவர்களைச் சந்தித்து மீட்கிறார்’ என்னும் பாடம் சில சுவடிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. (காண் 4:15).



அதிகாரம் 4:1-20

1ஒருவருக்கு மகப்பேறு இல்லாவிடினும்,,
நற்பண்பு இருந்தால் அதுவே சிறந்தது;
நற்பண்பின் நினைவு
என்றும் அழியாதது;
அது கடவுளாலும் மனிதராலும்
கண்டுணரப்படும்.

2அந்நினைவு
பசுமையாய் இருக்கும்பொழுது
மாந்தர் அதனைப் பின்பற்றி நடப்பர்;
அது நீங்கியதும் அதற்காக ஏங்குவர்.
மாசற்ற பரிசுகளுக்காக
நற்பண்பு போராடி,
வெற்றி வாகை சூடி,
காலமெல்லாம் பீடுநடை போடுகிறது.

3இறைப்பற்றில்லாதவர்கள்
எண்ணற்ற பிள்ளைகளை
ஈன்றபோதிலும்
அவர்கள் தளிர்ப்பதில்லை;
மணவாழ்க்கைக்குப்
புறம்பே பிறந்த வழிமரபு
ஆழமாய் வேரூன்றுவதில்லை;
உறுதியாய் நிற்பதுமில்லை.✠

4சிறிது காலம் அவர்கள்
கிளைவிட்டுச் செழித்தாலும்,
உறுதியற்றவர்களாய்க்
காற்றினால்
அலைக்கழிக்கப்படுவார்கள்;
காற்றின் சீற்றத்தால்
வேரோடு களைந்தெறியப்படுவார்கள்.

5அவர்களுடைய கிளைகள்
வளர்ச்சி அடையுமுன்பே
முறிக்கப்படும்.
அவர்களுடைய கனிகள் பயனற்றவை;
உண்பதற்கு ஏற்ற அளவு
பழுக்காமையால்
அவை பாழாய்ப் போகும்.

6முறைகேடாகப் பிறந்த பிள்ளைகளே
தீர்ப்பு நாளில்
தங்கள் பெற்றோரின்
கூடா ஒழுக்கத்திற்குச்
சாட்சிகளாய் இருப்பார்கள்.

நீதிமான்களின் எதிர்பாராத முடிவு


7நீதிமான்கள்
உரிய காலத்துக்கு முன் இறந்தாலும்,
இளைப்பாற்றி அடைவார்கள்.

8முதுமையின் மதிப்பு
நீடிய வாழ்வினால் வருவதன்று;
ஆண்டுகளின் எண்ணிக்கை
அதற்கு அளவுகோலன்று.

9ஞானமே மனிதர்க்கு
உண்மையான நரைதிரை;
குற்றமற்ற வாழ்க்கையே
உண்மையான பழுத்த முதுமை.

10நீதிமான் ஒருவர்
இறைவனுக்கு ஏற்புடையவராகி,
அவருடைய அன்பைப் பெற்றார்;
பாவிகள் நடுவில்
வாழ்ந்து கொண்டிருந்தபொழுதே
அவரால் எடுத்துக் கொள்ளப்பெற்றார்.✠

11தீமை அவரது அறிவுக்கூர்மையைத்
திசைதிருப்பாமல் இருக்கவும்,
வஞ்சகம் அவரது உள்ளத்தை
மாசுபடுத்தாமல் இருக்கவுமே
அவர் எடுத்துக்கொள்ளப்பெற்றார்.

12தீமையின் கவர்ச்சி
நன்மையானவற்றை
மறைத்துவிடுகிறது;
அலைக்கழிக்கும் இச்சை
மாசற்ற மனத்தைக்
கெடுத்துவிடுகிறது.

13அந்த நீதிமான் குறுகிய காலத்தில்
நிறைவு எய்தினார்;
நீண்டவாழ்வின் பயனை அடைந்தார்.

14அவரது ஆன்மா ஆண்டவருக்கு
ஏற்புடையதாய் இருந்தது.
தீமை நடுவினின் று
ஆண்டவர் அவரை
விரைவில் எடுத்துக்கொண்டார்..

15மக்கள் இதைப் பார்த்தார்கள்;
ஆனால் புரிந்துகொள்ளவில்லை.
ஆண்டவர்
தாம் தேர்ந்துகொண்டோர்மீது
அருளும் இரக்கமும் காட்டுகின்றார்;
தம் தூயவர்களைச் சந்தித்து
மீட்கிறார் என்பதை
அவர்கள் மனத்தில் ஏற்கவுமில்லை.

16இறந்துபோன நீதிமான்கள்
உயிர் வாழ்கின்ற
இறைப்பற்றில்லாதவர்களைக்
கண்டனம் செய்வார்கள்;
விரைவில் பக்குவம் அடைந்த
இளைஞர்கள்
நீண்ட நாள் வாழும்
தீய முதியவர்களைக்
கண்டனம் செய்வார்கள்.

17இறைப்பற்றில்லாதவர்கள்
ஞானிகளின் முடிவைக் காண்பார்கள்;
ஆனால், ஆண்டவர் அவர்களுக்காக
எத்தகைய திட்டம்
வகுத்துள்ளார் என்றும்
எந்த நோக்கத்திற்காக
அவர்களுக்குப் பாதுகாப்பு
அளித்துள்ளார் என்றும்
அறிந்துகொள்ளமாட்டார்கள்.

18அவர்கள் ஞானிகளை கண்டு
ஏளனம் செய்வார்கள்.
ஆண்டவரோ அவர்களைப் பார்த்து
எள்ளி நகையாடுவார்.

19ஏனெனில் இனி அவர்கள்
இழிந்த பிணம் ஆவார்கள்;
இறந்தோர் நடுவில் என்றென்றும்
அருவருப்புக்குரியோர் ஆவார்கள்.
ஆண்டவர் அவர்களைப்
பேச்சற்றுக் கீழே விழச் செய்வார்;
அடியோடு கலங்கவைப்பார்.
அவர்கள் முழுவதும்
அழித்தொழிக்கப்படுவார்கள்;
ஆழ்துயரில் மூழ்கடிக்கப்படுவார்கள்.
அவர்களின் நினைவுகூட
மறைந்துவிடும்.


தீர்ப்புநாளில் நல்லாரும் பொல்லாரும்


20இறைப்பற்றில்லாதவர்களின்
பாவங்களைக் கணக்கிடும்போது,
அவர்கள் நடுங்கிக்கொண்டு
வருவார்கள்;
அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள்
அவர்களுக்கு எதிராக நின்று
குற்றம்சாட்டும்.


4:3 சீஞா 23:25. 4:10 தொநூ 5:21-24; சீஞா 44:16; 49:14; எபி 11:5.



அதிகாரம் 5:1-23

1அப்பொழுது நீதிமான்கள் தங்களைத்
துன்புறுத்தியோர் முன்பும்
தங்கள் உழைப்பைப்
பொருட்படுத்தாதோர் முன்பும்
துணிவோடு நிற்பார்கள்.

2இறைப்பற்றில்லாதவர்கள்
அவர்களைக் கண்டு
பேரச்சத்தால் நடுங்குவார்கள்;
எதிர்பாரா வகையில்
அவர்கள் அடைந்த மீட்பைப்பற்றித்
திடுக்கிடுவார்கள்.

3அவர்கள் உளம் வருந்தி,
ஒருவரோடு ஒருவர்
பேசிக்கொள்வார்கள்;
மிகுந்த மனத்துயருடன்
பெருமூச்சு விட்டுப்
பின்வருமாறு சொல்வார்கள்;

4“இவர்களைத் தானே நாம் முன்பு
எள்ளி நகையாடினோம்;
வசை மொழிக்கு ஆளாக்கினோம்.
நாம் மூடர்கள்,
அவர்களது வாழ்க்கை மடமையானது
என்று எண்ணினோம்;
அவர்களது முடிவு இழிவானது
என்று கருதினோம்.

5கடவுளின் மக்களாக அவர்கள்
எவ்வாறு எண்ணப்பட்டார்கள்?
தூயவர்கள் நடுவில் அவர்களுக்கு
எவ்வாறு பங்கு கிடைத்தது?

6எனவே, நாமே
உண்மையின் வழியிலிருந்து
தவறிவிட்டோம்.
நீதியின் ஒளி நம்மீது படரவில்லை;
கதிரவன் நம்மீது எழவில்லை.

7நெறிகேடும் அழிவும் நிறைந்த வழியில்
நாம் மனமுவந்து நடந்தோம்;
பாதை இல்லாப் பாலைநிலங்களில்
பயணம் செய்தோம்;
ஆண்டவரின் வழியையோ அறிந்திலோம்!

8இறுமாப்பால் நமக்குக் கிடைத்த
பயன் என்ன?
செல்வச் செருக்கால்
நமக்கு விளைந்த நன்மை என்ன?

9இவை அனைத்தும்
நிழல்போலக் கடந்துபோயின;
புரளி போல விரைந்து சென்றன.

10அலைமோதும் நீர்ப்பரப்பைக்
கிழித்துக்கொண்டு கப்பல் செல்கிறது.
அது சென்ற தடத்தை
யாரும் காணமுடியாது;
அதன் அடித்தட்டின் சுவடுகள்
அலைகளில் புலப்படுவதில்லை.

11பறவை, காற்றில் பறந்து செல்கிறது.
அது சென்ற வழியின்
அடையாளமே தெரிவதில்லை.
அது சிறகடித்துச் செல்லும்போது
மென்காற்றின்மீது மோதுகிறது;
அது பறந்தோடும் வேகத்தில்
காற்றைக் கிழித்துக்கொண்டு
செல்கிறது;
இறக்கைகளை அசைத்துக்
காற்றை ஊடுருவிச் செல்கிறது.
பின்னர் அதன் போக்கினது சுவடே தென்படுவதில்லை.

12இலக்கை நோக்கி எய்த அம்பு
காற்றைக் கிழித்துக்கொண்டு
செல்கிறது.
பிளவுண்ட காற்று
உடனே கூடிவிடுகிறது.
ஆனால் அம்பு சென்ற வழியை
ஒருவரும் அறிவதில்லை.

13இவற்றைப் போன்றதே நம் நிலையும்!
நாம் பிறந்தோம்;
உடனே இறந்துபட்டோம்.
பிறரிடம் காட்டுவதற்கு நம்மிடம்
நற்பண்பின் அடையாளம்
எதுவுமில்லை.
நம்முடைய தீமையால் நம்மையே
அழித்துக்கொண்டோம்.”

14இறைப்பற்றில்லாதவர்களின் நம்பிக்கை
காற்றில் அடித்துச் செல்லும்
பதர்போன்றது;
புயலால் சிதறடிக்கப்படும்
உறைபனிபோன்றது;
காற்றால் அங்கும் இங்கும்
கலைக்கப்படும் புகைபோன்றது.
ஒரே நாள் தங்கும் விருந்தினர்களின்
நினைவுபோல் அது மறக்கப்படும்.

15நீதிமான்களோ
என்றென்றும் வாழ்கிறார்கள்.
அவர்களுக்குரிய கைம்மாறு
ஆண்டவரிடம் உள்ளது.
அவர்களைப்பற்றிய கவலை
உன்னத இறைவனுக்கு உண்டு.

16அவர்கள் மாட்சிமிக்க
பொன்முடியைப் பெறுவார்கள்;
ஆண்டவருடைய கையிலிருந்து
மணிமுடியைப் பெறுவார்கள்.
அவர் தம் வலக்கையால்
அவர்களை அரவணைப்பார்;
தம் புயத்தால் அவர்களைப் பாதுகாப்பார்.

17ஆர்வம் என்னும் படைக்கலத்தால்
அவர் தம்மை முழுதும்
மூடிக்கொள்வார்;
தம் எதிரிகளைப் பழிவாங்கப்
படைப்பினைப் படைக்கலமாகக்
கொள்வார்.

18நீதியை அவர் மார்புக்கவசமாக
அணிந்து கொள்வார்;
நடுநிலை தவறாத தீர்ப்பைத்
தலைக்கவசமாகப் புனைந்து கொள்வார்.

19வெல்ல முடியாத கேடயமாகத்
தூய்மையை அவர் கொண்டிருப்பார்.

20அவர் கடுஞ்சினத்தைக்
கூரிய வாளாகக் கொள்வார்.
உலகம் அவரோடு சேர்ந்து
அறிவிலிகளை எதிர்த்துப் போராடும்.

21மின்னல் கீற்று
இலக்கை நோக்கி நேராகப் பாயும்;
நாணேற்றிய வில்லினின்று
புறப்படும் அம்புபோல்
அது முகில்களிலிருந்து
குறியை நோக்கித் தாவும்.

22எறியப்படும் கவண்கல்லைப் போலச்
சினம் செறிந்த கல்மழை விழும்.
கடல் நீர் அவர்கள்மீது சீறிப்பாயும்.
ஆறுகள் இரக்கமின்றி
அவர்களை மூழ்கடிக்கும்.✠

23புயல் அவர்களை எதிர்த்து வீசும்;
அது சூறாவளிபோல்
அவர்களைப் புடைத்தெடுக்கும்.
முறைகேடு
மண்ணுலகையே பாழாக்கும்.
தீவினை, வலியோரின்
அரியணைகளைக் கவிழ்க்கும்.


5:17-19 எசா 59:19; எபே 6:14-17. 5:22 யோசு 10:11.



அதிகாரம் 6:1-25

2. ஞானத்தின் தோற்றம், இயல்பு, அதை அடையும் வழி


ஞானத்தைத் தேடல்


1மன்னர்களே, நான் சொல்வதற்குச்
செவிசாய்த்துப் புரிந்துகொள்ளுங்கள்;
உலகின் கடையெல்லைவரை
நீதி வழங்குவோரே,
கற்றுக்கொள்ளுங்கள்.

2திரளான மக்களை ஆள்வோரே,
பல மக்களினங்களைப் பற்றிப்
பெருமை பாராட்டுவோரே,
எனக்குச் செவிசாயுங்கள்.

3ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு
அதிகாரம் வழங்கப்பட்டது;
உன்னத இறைவனிடமிருந்தே
உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது.
அவரே உங்கள் செயல்களைச்
சோதித்தறிபவர்;
உங்கள் திட்டங்களை
ஆராய்பவரும் அவரே.✠

4அவரது அரசின்
பணியாளர்களாய் இருந்தும்,
நீங்கள் நேர்மையுடன்
தீர்ப்பு வழங்கவில்லை;
திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை;
கடவுளின் திருவுளப்படி நடக்கவில்லை.

5கொடுமையாகவும் விரைவாகவும்
அவர் உங்கள்மேல் வருவார்;
உயர் நிலையில் உள்ளவர்களுக்குக்
கடும் தீர்ப்பு வழங்குவார்.

6எளியோர்க்கு இரக்கங்காட்டி
அவர்களைப் பொறுத்தருள்வார்;
வலியோரை வன்மையாகத் தண்டிப்பார்.⁕

7அனைத்திற்கும் ஆண்டவர்
யாருக்கும் அஞ்சி நடுங்க மாட்டார்;
உயர்ந்தோர்க்கென்று
தனி மதிப்பு அளிக்கமாட்டார்.
ஏனெனில்,
பெரியோரையும் சிறியோரையும்
படைத்தவர் அவரே;
எல்லாரும் ஒன்றென எண்ணிக்
காப்பவரும் அவரே.✠

8அவர் வலியோரிடம்
கண்டிப்பான கணக்குக் கேட்பார்.

9எனவே, மன்னர்களே,
நீங்கள் ஞானத்தைக்
கற்றுக் கொள்ளவும்,
நெறிபிறழாது நடக்கவும்,
உங்களுக்கு நான் கூறுகிறேன்;

10தூய்மையானவற்றைத்
தூய்மையாய்க் கடைப்பிடிப்போர்
தூயோர் ஆவர்;
தூய்மையானவற்றைக்
கற்றுக்கொண்டார்
தங்கள் செயல்களை முறைப்படுத்த
வழி காண்பர்.

11எனவே, என் சொற்கள்மீது
நாட்டங் கொள்ளுங்கள்;
ஏக்கங் கொள்ளுங்கள்.
நீங்கள் அவற்றால்
நற்பயிற்சி பெறுவீர்கள்..

12ஞானம் ஒளிமிக்கது; மங்காதது.
அதன்பால் அன்புகூர்வோர்
அதை எளிதில் கண்டுகொள்வர்;
அதைத் தேடுவோர் கண்டடைவர்.✠

13தன்னை நாடுவோர்க்கு
அது தன்னையே
விரைந்து வெளிப்படுத்தும்.

14வைகறையில் அதைத் தேடுவோர்
தளர்ச்சி அடையமாட்டார்கள்;
ஏனெனில், தம் கதவு அருகில்
அது அமர்ந்திருப்பதை
அவர்கள் காண்பார்கள்.

15அதன்மீது மனத்தைச் செலுத்துவதே
ஞானத்தின் நிறைவு.
அதன்பொருட்டு விழிப்பாய் இருப்போர்,
கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர்..

16தனக்குத் தகுதியுள்ளவர்களை
ஞானம் தேடிச் செல்கிறது;
அவர்களுடைய வழியில்
கனிவுடன் தன்னையே காட்டுகிறது;
அவர்களின் ஒவ்வொரு நினைவிலும்
அது அவர்களை எதிர்கொள்கிறது.

17நற்பயிற்சி பெறுவதில் கொள்ளும்
உண்மையான நாட்டமே
ஞானத்தின் தொடக்கம்;
நற்பயிற்சி மீது செலுத்தும் கவலையே
ஞானத்தின் பால் கொள்ளும் அன்பு.

18ஞானத்தின்மீது அன்பு
செலுத்துவது அதன் சட்டங்களைக்
கடைப்பிடிப்பதாகும்;
சட்டங்களைக் கடைப்பிடிப்பது
அழியாமைக்கு உறுதி தரும்.

19அழியாமை ஒருவரைக்
கடவுளுக்கு அருகில்
அழைத்துச் செல்கிறது.

20ஞானத்தின்மீதுள்ள ஆர்வம்
ஒருவரை அரசுரிமைக்கு
வழி நடத்துகிறது.✠

21நாடுகளை ஆளும் மன்னர்களே,
உங்களுடைய
அரியணையிலும் செங்கோலிலும்
நீங்கள் மகிழ்ச்சி அடைய விரும்பினால்,
எப்பொழுதும் ஞானத்தை மதியுங்கள்;
அப்பொழுது என்றென்றும்
ஆட்சிபுரிவீர்கள்.


ஞானத்தைப் பற்றிய விளக்கம்


22ஞானம் என்றால் என்ன,
அது எவ்வாறு உண்டானது என
உங்களுக்கு விரித்துரைப்பேன்;
மறைபொருள்களை உங்களிடமிருந்து
மறைக்க மாட்டேன்;
அதன் படைப்புக்காலம் தொட்டு
அதனை ஆராய்ந்து பார்ப்பேன்;
அதைப்பற்றிய அறிவை
வெளிப்படுத்துவேன்;
உண்மையை நழுவவிடமாட்டேன்.

23நோயாம் பொறாமையோடு
தோழமை கொள்ளமாட்டேன்.
ஏனெனில் பொறாமை ஞானத்துடன்
உறவு கொள்வதில்லை.

24ஞானிகளின்
எண்ணிக்கையைப் பொறுத்தே
உலகின் மீட்பு அமையும்.
அறிவுள்ள மன்னர் தம் குடிமக்களின்
நிலைக்களனாய் இருக்கின்றார்.

25எனவே என் சொற்களால்
நற்பயிற்சி பெறுங்கள்.
அதனால் உங்களுக்கு
நற்பயன் விளையும்.


6:3 நீமொ 8:15; தானி 2:21; உரோ 13:1. 6:7 யோபு 34:19; சீஞா 35:12. 6:12 சாஞா 8:17. 6:20 சாஞா 3:7-8.


6:6 ‘பரிசோதிப்பார்.’ என்றும் மொழிபெயர்க்கலாம்.



அதிகாரம் 7:1-30

ஞானத்தை மதித்தல்


1எல்லா மனிதர்களையும்போல
நானும் இறப்புக்குரியவன்;
நிலத்தினின்று உண்டாக்கப்பட்ட முதல் மனிதரின் வழித்தோன்றல்.
என் தாய் வயிற்றில்
என் உடல் உருவாயிற்று.✠

2ஆணின் உயிர்த்துளியினாலும்
திருமண இன்பத்தினாலும்
பத்து மாத காலமாகக்
குருதியோடு உறைந்து
என் உடல் உருவெடுத்தது.

3நான் பிறந்தபொழுது
எல்லாரையும்போல நானும்
வெறும் காற்றையே சுவாசித்தேன்;
என் உடலியல்புக்கு ஒத்த
மண்ணில் கிடத்தப்பட்டேன்;
முதன்முதலில் அழுகுரல் எழுப்பினேன்.

4துணிகளில் பொதியப்பட்டேன்;
பேணி வளர்க்கப்பட்டேன்.

5எந்த மன்னரும்
இதற்கு மாறுபட்ட வகையில்
வாழ்க்கையைத் தொடங்கியதில்லை.

6எல்லோரும் ஒரே வகையில்
பிறக்கின்றனர்;
ஒரே வகையில் இறக்கின்றனர்.✠

7எனவே நான் மன்றாடினேன்;
ஞானம் எனக்குக் கொடுக்கப் பட்டது.
நான் இறைவனை வேண்டினேன்;
ஞானத்தின் ஆவி
என்மீது பொழியப்பட்டது.✠

8செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக
அதை விரும்பித் தேர்ந்தேன்;
அதனோடு ஒப்பிடும்போது,
செல்வம் ஒன்றுமே இல்லை
என்று உணர்ந்தேன்.

9விலையுயர்ந்த மாணிக்கக்கல்லும்
அதற்கு ஈடில்லை;
அதனோடு ஒப்பிடும்போது,
பொன்னெல்லாம் சிறிதளவு
மணலுக்கே நிகர்; அதற்குமுன் வெள்ளியும்
களிமண்ணாகவே கருதப்படும்.

10உடல் நலத்திற்கும்
அழகிற்கும் மேலாக
அதன்மீது அன்புகொண்டேன்;
ஒளிக்கு மாற்றாக
அதைத் தேர்ந்தெடுத்தேன்.
ஏனெனில் அதன் சுடரொளி
என்றும் மங்காது.

11ஞானத்தோடு எல்லா நலன்களும்
என்னிடம் வந்து சேர்ந்தன.
அளவற்ற செல்வத்தை
அது ஏந்தி வந்தது.✠

12அவற்றிலெல்லாம் நான் மகிழ்ந்தேன்;
ஏனெனில் ஞானமே
அவற்றை வழி நடத்துகிறது;
அதுவே அவற்றையெல்லாம்
ஈன்றெடுத்தது என்பதை அறியாதிருந்தேன்.

13நான் கள்ளங்கபடின்றிக் கற்றேன்.
கற்றதை முறையீடின்றிப்
பிறரோடு பகிர்ந்து கொண்டேன்.
அதன் செல்வத்தை நான் மறைப்பதில்லை.

14மனிதர்களுக்கு அது என்றும்
குறையாத கருவூலம்.
அதை அடைவோர் கடவுளோடு
நட்புக்கொள்வர்;
நற்பயற்சி அளிக்கும்
கொடைகளால் நற்சான்று பெற்றவராவர்.

15கடவுளது திருவுளத்திற்கு
ஏற்பப் பேசவும்,
நான் பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு
ஏற்பச் சிந்திக்கவும்,
கடவுள் எனக்கு அருள்புரிவாராக!
ஏனெனில் ஞானத்துக்கு
அவரே வழிகாட்டி,
ஞானிகளைத் திருத்துகிறவரும் அவரே.

16நாமும் நம் சொற்களும் அவருடைய
கைகளில் இருக்கின்றோம்.
அதுபோல் எல்லா அறிவுத்திறனும் கைத்திறனும்
அவருடைய கைகளில் உள்ளன.

17இருப்பவை பற்றிய உண்மையான அறிவை
எனக்கு அளித்தவர் அவரே;
உலகின் அமைப்பையும்
மூலப்பொருள்களின் செயல்பாட்டையும்,
நான் அறியச் செய்தவரும் அவரே.

18காலங்களின் தொடக்கம், முடிவு, மையம்,
கதிரவனின் சுழற்சியால்
ஏற்படும் மாற்றங்கள்,
பருவ கால மாறுபாடுகள்,

19ஆண்டுகளின் சுழற்சிகள்,
விண்மீன்களின் நிலைக்களங்கள்,

20உயிரினங்களின் இயல்பு,
காட்டு விலங்குகளின் சீற்றம்,
காற்று வகைகளின் வலிமை,⁕
மனிதர்களின் எண்ணங்கள்,
பல்வேறு செடிவகைகள்,
வேர்களின் ஆற்றல்,

21இவைபோன்ற மறைவானவைபற்றியும்,
வெளிப்படையானவைபற்றியும்
கற்றறிந்தேன்.
எல்லாவற்றையும் உருவாக்கிய
ஞானமே எனக்கு இவற்றைக்
கற்றுக்கொடுத்தது.

ஞானத்தின் இயல்பும் மேன்மையும்


22ஞானம் — ஆற்றல் கொண்டது.
அவ்வாற்றல் அறிவுடையது;
தூய்மையானது; தனித்தன்மை வாய்ந்தது;
பலவகைப்பட்டது; நுண்மையானது;
உயிரோட்டம் உள்ளது; தெளிவுமிக்கது;
மாசுபடாதது; வெளிப்படையானது
; கேடுறாதது; நன்மையை விரும்புவது; கூர்மையானது.

23ஞானம் — எதிர்க்கமுடியாதது;
நன்மை செய்வது;
மனிதநேயம் கொண்டது;
நிலைபெயராதது; உறுதியானது;
வீண்கவலை கொள்ளாதது;
எல்லாம் வல்லது;
எல்லாவற்றையும் பார்வையிடுவது;
அறிவும் தூய்மையும் நுண்மையும்>
கொண்ட எல்லா உள்ளங்களையும்
ஊடுருவிச் செல்வது.

24ஞானம் — அசைவுகள் எல்லாவற்றையும்விட
மிக விரைவானது;
அதன் தூய்மையினால்>
எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது;
எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது.

25ஞானம் — கடவுளின் ஆற்றலிலிருந்து
புறப்படும் ஆவி; எல்லாம் வல்லவரின்
மாட்சியிலிருந்து எழும் தூய வெளிப்பாடு.
எனவே மாசுபட்டது எதுவும்
அதனுள் நுழையமுடியாது.

26ஞானம் — என்றுமுள
ஒளியின் சுடர்;
கடவுளது செயல்திறனின்
கறைபடியாக் கண்ணாடி;
அவருடைய நன்மையின் சாயல்.

27ஞானம் — ஒன்றே என்றாலும்,
எல்லாம் செய்ய வல்லது;
தான் மாறாது,
அனைத்தையும் புதுப்பிக்கிறது;
தலைமுறைதோறும்
தூய ஆன்மாக்களில் நுழைகிறது;
அவர்களைக் கடவுளின்
நண்பர்கள் எனவும் இறைவாக்கினர்கள்
எனவும் ஆக்குகிறது.

28ஞானத்தோடு வாழ்கின்றவர்கள்மீது
அன்பு செலுத்துவது போல
வேறு எதன்மீதும் கடவுள்
அன்பு செலுத்துவதில்லை.

29ஞானம் — கதிரவனைவிட அழகானது;
விண்மீன் கூட்டத்திலும் சிறந்தது;
ஒளியைக் காட்டிலும் மேலானது.

30இரவுக்குப் பகல் இடம் கொடுக்கிறது.
ஆனால், ஞானத்தைத்
தீமை மேற்கொள்ளாது.


7:1 சீஞா 33:10. 7:6 யோபு 1:21. 7:7 சாஞா 9:1-8; 1 அர 3:6-14. 7:11 1 அர 3:13; நீமொ 3:16. 7:22-8:1 நீமொ 8:22-31; சீஞா 24:1-22. 7:20 ‘ஆவிகளின் வலிமை’ என்றும் மொழிபெயர்க்கலாம்.



அதிகாரம் 8:1-21

1ஞானம் — ஒரு கோடி முதல்
மறு கோடிவரை
ஆற்றலோடு செல்கிறது;
எல்லாவற்றையும் முறையாக
ஒழுங்குபடுத்துகிறது.


ஞானத்தின்மீது நாட்டம்


2ஞானத்தின் மேல் நான் அன்பு கூர்ந்தேன்;
என் இளமைமுதல் அதைத் தேடினேன்;
என் வாழ்க்கைத் துணையாக
ஏற்றுக் கொள்ள விரும்பினேன்;
அதன் அழகில் மயங்கினேன்.✠

3கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால்
ஞானம் தன் உயர்குடிப்பிறப்பில்
மேன்மை பாராட்டுகிறது.
அதனால் அனைத்துலகின் ஆண்டவர்
அதன்மேல் அன்புகூர்ந்தார்.

4ஞானமே கடவுளைப் பற்றிய மெய்யறிவுக்குப்
புகுமுகம் செய்து வைக்கிறது;
அவருடைய செயல்களைத்
தேர்வுசெய்வதும் அதுவே.

5வாழ்வில் விரும்பத்தக்க
உடைமையாகச்
செல்வம் விளங்குமாயின்,
அனைத்தையும் ஆக்கும்
ஞானத்தைவிடச்
சிறந்த செல்வம் ஏது?

6அறிவுத்திறன் ஆற்றல் மிக்கது
என்றால், ஞானத்தைவிட,
இருப்பவற்றை உருவாக்கும்
கலைஞன் வேறு யார்?

7ஒருவர் நீதியின்மேல்
அன்புகூர்கின்றாரோ?
ஞானத்தின் உழைப்பு அவரிடம்
நற்பண்புகளால் மிளிரும்.
ஏனெனில் தன்னடக்கம், விவேகம்,
நீதி, துணிவு ஆகியவற்றை
ஞானம் கற்பிக்கின்றது.
இவற்றைத் தவிர வாழ்வில்
மனிதருக்குப் பயனுள்ளவை
வேறு ஒன்றுமில்லை.

8ஒருவர் பரந்த பட்டறிவு
பெற ஏங்குகின்றாரோ?
ஞானம் இறந்த காலத்தை அறியும்;
எதிர்காலத்தை உய்த்துணரும்;
உரைகளின் நுட்பங்களையும்
புதிர்களின் விடைகளையும் அறியும்.
அடையாளங்களையும்
வியத்தகு செயல்களையும்
பருவங்கள், காலங்களின்
பயன்களையும் முன்னறியும்.

9ஆகையால் என்னோடு
கூடிவாழும் பொருட்டு
ஞானத்தைத் தேர்ந்தெடுக்க
முடிவு செய்தேன்;
ஏனெனில் நன்மை செய்ய
அது என்னை
ஆற்றுப்படுத்தும் என்றும்,
கவலைகளிலும் துயரத்திலும்
எனக்கு ஆறுதல் தரும்
என்றும் நான் அறிவேன்.

10அதை முன்னிட்டு
மக்கள் கூட்டத்தில்
நான் பெருமை பெறுவேன்;
இளைஞனாய் இருந்தாலும்
மூப்பர்களிடையே
நன்மதிப்பு அடைவேன்.✠

11நீதிவழங்கும்போது
அறிவுக்கூர்மையோடு
காணப்படுவேன்.
ஆள்வோர் என்னைக் கண்டு
வியப்புறுவர்.

12நான் பேசாமல் இருக்கும்பொழுது
நான் பேசும்படி
அவர்கள் காத்திருப்பார்கள்;
நான் பேசும்பொழுது
எனக்குச் செவிசாய்ப்பார்கள்;
நான் நீண்ட உரையாற்றும் பொழுது
வாயடைத்து நிற்பார்கள்.

13ஞானத்தினால் நான்
இறவாமை எய்துவேன்;
எனக்குப்பின் வருபவர்களுக்கு
என்றும் நீங்கா நினைவை
விட்டுச்செல்வேன்.

14நான் மக்கள்மீது
ஆட்சி செலுத்துவேன்;
நாடுகள் எனக்கு அடிபணியும்.✠

15அச்சுறுத்தும் மன்னர்கள்கூட
என்னைப்பற்றிக்
கேள்வியுற்று அஞ்சுவார்கள்.
மக்கள் நடுவில் நல்லவனாகவும்
போரில் வல்லவனாகவும் இருப்பேன்.

16நான் வீட்டிற்கு வந்தபின்
ஞானத்தோடு இளைப்பாறுவேன்.
ஏனெனில் அதன் தோழமையில்
கசப்பே இல்லை;
அதனோடு வாழ்வதில்
துன்பமே இல்லை.
அது தருவதெல்லாம்
இன்பமும் மகிழ்ச்சியுமே!

17-18இவற்றைப்பற்றியயெல்லாம்
எனக்குள் எண்ணிப் பார்த்தபொழுது —
ஞானத்துடன் கொள்ளும் உறவால்
இறவாமை கிட்டும்;
அதனுடைய நட்புறவில்
தூய மகிழ்ச்சி பிறக்கும்;
அதனுடைய உழைப்பால்
குறைபடாத செல்வம் கொழிக்கும்;
அதன் தோழமையில்
பயிற்சி பெறுவதால்
அறிவுத்திறன் உண்டாகும்;
அதனோடு கலந்துரையாடுவதால்
பெரும்புகழ் கிடைக்கும்
என்றெல்லாம் என் உள்ளத்தில்
எண்ணிப் பார்த்த பொழுது —
அதை எனக்கென அடைவது
எப்படி என்று தேடி அலைந்தேன்.

19நான் குழந்தையாய்
இருந்த பொழுது
நல்லியல்புடன் இருந்தேன்.
நல்ல உள்ளம்
என் பங்காய் அமைந்தது.

20நல்லவனாய் இருந்ததால்
மாசற்ற உடலினுள் புகுந்தேன்.

21ஆனால், கடவுள் எனக்கு
ஞானத்தை ஈந்தாலொழிய
அதை அடைய முடியாது என்று
நான் உணர்ந்துகொண்டேன்.
அது யாருடைய கொடை என
அறிவது அறிவுத்திறனின்
அடையாளம். எனவே நான்
ஆண்டவரை வேண்டினேன்;
கெஞ்சி மன்றாடினேன்.
என் முழு உள்ளத்தோடு சொன்னேன்;✠


7:22-8:1 நீமொ 8:22-31; சீஞா 24:1-22. 8:2 சீஞா 15:2. 8:10 1 அர 5:14; சீஞா 47:14-18. 8:14 1 அர 5:1. 8:21 நீமொ 2:6; சீஞா 1:1.



அதிகாரம் 9:1-18

ஞானம் அருளும்படி மன்றாட்டு


1“மூதாதையரின் கடவுளே,,
இரக்கத்தின் ஆண்டவரே,
நீர் எல்லாவற்றையும்
உமது சொல்லால் உண்டாக்கினீர்.

2நீர் உண்டாக்கிய
படைப்புகளின் மேல்
ஆட்சி செலுத்தவும்,
தூய்மையோடும் நீதியோடும்
உலகை ஆளவும்,

3நேர்மையான உள்ளத்தோடு
தீர்ப்பு வழங்கவும்,
உமது ஞானத்தால்
மானிடரை உருவாக்கினீர்.

4உமது அரியணை அருகில்
வீற்றிருக்கும் ஞானத்தை
எனக்கு அருளும்;
உம் பிள்ளைகளிடமிருந்து
என்னைத் தள்ளிவிடாதீர்.

5நான் உம் அடியான்;
உம்முடைய அடியவளின் மகன்;
வலுவற்ற மனிதன்; குறுகிய வாழ்வினன்;
நீதித்தீர்ப்பும், திருச்சட்டமும்
பற்றிச் சிற்றறிவு படைத்தவன்.

6மன்பதையில் ஒருவர் எத்துணை
நிறைவு உள்ளவராய் இருந்தாலும்,
உம்மிடமிருந்து வரும் ஞானம்
அவருக்கு இல்லையேல்,
அவர் ஒன்றும் இல்லாதவராய்க்
கருதப்படுவார்.

7“உம் மக்களுக்கு மன்னராகவும்,
உம் புதல்வர் புதல்வியருக்கு
நடுவராகவும் இருக்க
நீர் என்னைத் தெரிந்தெடுத்தீர்.✠

8தொடக்கத்திலிருந்தே நீர்
ஏற்பாடு செய்திருந்த தூய கூடாரத்ததை
மாதிரியாகக் கொண்டு
உம் தூய மலைமேல்
கோவில் கட்டவும்,
உமது உறைவிடமான நகரில்
பலிபீடம் எழுப்பவும்
நீர் எனக்கு ஆணையிட்டீர்.

9ஞானம் உம்மோடு இருக்கின்றது;
உம் செயல்களை அது அறியும்;
நீர் உலகத்தை உண்டாக்கியபோது
அது உடனிருந்தது;
உம் பார்வைக்கு உகந்ததை
அது அறியும்;
உம் கட்டளைகளின்படி
முறையானது எது எனவும்
அதற்குத் தெரியும்.

10உமது தூய விண்ணகத்திலிருந்து அதை அனுப்பியருளும்;
உமது மாட்சிமிக்க அரியணையிலிருந்து
அதை வழங்கியருளும்.
அது என்னோடு இருந்து
உழைக்கட்டும்.
அதனால் உமக்கு உகந்ததை
நான் அறிந்துகொள்வேன்.

11அது எல்லாவற்றையும்
அறிந்து உய்த்துணரும்;
என் செயல்களில் விவேகத்துடன்
என்னை வழி நடத்தும்;
தன் மாட்சியில் அது
என்னைப் பாதுகாக்கும்.

12அப்பொழுது என் செயல்கள்
உமக்கு ஏற்புடையனவாகும்.
உம்முடைய மக்களுக்கு நேர்மையுடன்
நீதி வழங்குவேன்;
என் தந்தையின்
அரியணையில் வீற்றிருக்கத்
தகுதி பெறுவேன்.

13“கடவுளின் திட்டத்தை
அறிபவர் யார்?
ஆண்டவரின் திருவுளத்தைக்
கண்டுபிடிப்பவர் யார்?

14நிலையற்ற மனிதரின்
எண்ணங்கள் பயனற்றவை;
நம்முடைய திட்டங்கள்
தவறக்கூடியவை.

15அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக்
கீழ்நோக்கி அழுத்துகிறது.
இந்த மண் கூடாரம்
கவலை தோய்ந்த மனதுக்குச்
சுமையாய் அமைகிறது.

16மண்ணுலகில் உள்ளவற்றையே
நாம் உணர்வது அரிது!
அருகில் இருப்பவற்றையே
கடும் உழைப்பால்தான்
கண்டுபிடிக்கிறோம்.
இவ்வாறிருக்க, விண்ணுலகில்
இருப்பவற்றைத் தேடிக்
கண்டுபிடிப்பவர் யார்?

17நீர் ஞானத்தை அருளாமலும்,
உயர் வானிலிருந்து
உம் தூய ஆவியை
அனுப்பாமலும் இருந்தால்,
உம் திட்டத்தை யாரால்
அறிந்து கொள்ள இயலும்?

18இவ்வாறு மண்ணுலகில்
வாழ்வோருடைய வழிகள்
செம்மைப்படுத்தப்பட்டன.
உமக்கு உகந்தவற்றை
மனிதர் கற்றுக்கொண்டனர்;
ஞானத்தால் மீட்பு அடைந்தனர்.”


9:1-18 1 அர 3:6-9; சாஞா 7:7. 9:7 1 குறி 28:5.



அதிகாரம் 10:1-21

3. மீட்பு வரலாற்றில் ஞானம்


ஆதாமிலிருந்து மோசேவரை

1உலகின் முதல் தந்தை தனிமையாகப்
படைக்கப்பட்டபொழுது ஞானம்
அவரைப் பேணிக் காத்தது;
அவருடைய குற்றங்களிலிருந்து
அவரை விடுவித்தது.

, 2அனைத்தையும் ஆளும்
ஆற்றலை அவருக்கு அளித்தது.

விடுதலைப் பயணம்

15ஒடுக்கிய மக்களினத்தாரிடமிருந்து
தூய மக்களையும்
மாசற்ற வழி மரபினரையும்
ஞானம் விடுவித்தது.

16அது ஆண்டவருடைய ஊழியர்
ஒருவரின் ஆன்மாவில் நுழைந்தது.
கொடிய மன்னர்களை
வியத்தகு செயல்களாலும்
அடையாளங்களாலும் எதிர்த்து நின்றது.

17தூயவர்களின் உழைப்புக்கு
அது கைம்மாறு கொடுத்தது;
வியப்புக்குரிய வழியில்
அவர்களை நடத்திச் சென்றது;
பகலில் அவர்களுக்கு நிழலாகவும்
இரவில் விண்மீன் சுடராகவும்
இருந்தது.

18செங்கடல்மீது அது அவர்களை
அழைத்துச்சென்றது;
ஆழ்கடல் வழியாக
அவர்களை நடத்திச் சென்றது.

19அவர்களின் பகைவர்களை
அது நீரினுள் அமிழ்த்தியது;
பின், ஆழ்கடலிலிருந்து
அவர்களை வெளியே உமிழ்ந்தது.

20ஆகையால் நீதிமான்கள்
இறைப்பற்றில்லாதவர்களைக்
கொள்ளையடித்தார்கள்;
ஆண்டவரே,
உமது திருப்பெயரைப்
பாடிப் புகழ்ந்தார்கள்;
வெற்றி அளிக்கும் உமது
கைவன்மையை
ஒருமிக்கப் போற்றினார்கள்.

21ஏனெனில்
பேச முடியாதவர்களின்
வாயை ஞானம் திறந்தது;
குழந்தைகளின் நாவுக்குத்
தெளிவான பேச்சைத் தந்தது.


10:1-2 தொநூ 1:26-28. 10:3 தொநூ 4:1-14. 10:4 தொநூ 6:9-8:19. 10:5 தொநூ 11:1-9; 12:1-3; 22:1-19. 10:6-9 தொநூ 19:1-29. 10:10-12 தொநூ 27:42-46; 28:10-22; 30:43; 32:24-30. 10:13-14 தொநூ 37:12-36; 39:1-23; 41:37-44. 10:15-21 விப 1:1-15:21.


10:10 ‘தூயவை’ (காண். தொநூ 28:10-15) என்றும் ‘திருவிடம்’ (காண். தொநூ 31:13) என்றும் பொருள் கொள்ளலாம்.



அதிகாரம் 11:1-26

1தூய இறைவாக்கினர்,
ஒருவரின் வாயிலாக
இஸ்ரயேலர்களுடைய செயல்களை
ஞானம் சிறப்புறச் செய்தது.

2குடியிருப்பாரற்ற பாழ்வெளி வழியாக
அவர்கள் பயணம் செய்தார்கள்;
மனித நடமாட்டமற்ற இடங்களில்
தங்கள் கூடாரங்களை
அமைத்தார்கள்.

3தங்கள் பகைவர்களை
எதிர்த்து நின்றார்கள்;
போரிட்டு எதிரிகளைத்
துரத்தினார்கள்.


தண்ணீரால் அழிவும் விடுதலையும்


4இஸ்ரயேலர்களுக்குத்
தாகம் எடுத்தபோது
உம்மை மன்றாடினார்கள்.
உடனே செங்குத்தான
பாறைகளிலிருந்து
தண்ணீர் வழிந்தோடியது.
கடினமான பாறையிலிருந்து
அவர்கள் தாகத்தைத்
தணித்துக் கொண்டார்கள்.

5எவற்றால் பகைவர்கள்
தண்டிக்கப்பட்டார்களோ
அவற்றாலேயே சிக்கலான
நேரங்களில் இஸ்ரயேலர்
நன்மை அடைந்தார்கள்.

6-7குழந்தைகளைக் கொல்லவேண்டும்
என்று எதிரிகள் பிறப்பித்திருந்த
ஆணையைக் கண்டிக்க,
வற்றாத ஊற்றிலிருந்து ஓடும்
ஆற்று நீருக்கு மாறாக,
குருதியால் கலங்கி மாசுபட்ட நீரை
அவர்களுக்குக் கொடுத்தீர்;
இஸ்ரயேலருக்கோ
எதிர்பாரா வகையில்
மிகுதியான தண்ணீர் வழங்கினீர்.✠

8அவர்களுடைய பகைவரை
எவ்வாறு தண்டித்தீர் என்பதை
அவ்வேளையில் அவர்களை
வாட்டிய தாகத்தால் காட்டினீர்.

9இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட பொழுது
இரக்கத்தால்
பயிற்றுவிக்கப்பட்டனர் என்றும்,
கடவுள் சினம்கொண்டு
தீர்ப்பளிக்கும்பொழுது
இறைப்பற்றில்லாதவர்கள்
எவ்வாறு வதைக்கப்படுவார்கள்
என்றும் இதன் வாயிலாக
அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

10ஏனெனில்
ஒரு தந்தை எச்சரிப்பதுபோல,
நீர் இஸ்ரயேலரைச் சோதித்தீர்.
ஆனால் இரக்கமற்ற மன்னர்
தீர்ப்பு அளிப்பதுபோல,
நீர் எதிரிகளைக் கூர்ந்து
சோதித்துப் பார்த்தீர்.

11இஸ்ரயேலர்களுக்கு
அருகில் இருந்தபோதும்,
தொலைவில் இருந்தபோதும்,
எகிப்தியர்கள் பெருந்துயருற்றார்கள்.

12இருமடங்கு துயரம்
அவர்களை ஆட்கொண்டது.
கடந்த கால நிகழ்ச்சிகளை நினைத்து,
ஏங்கிப் பெருமூச்சு விட்டார்கள்.

13தங்களுக்கு வந்துற்ற
தண்டனைகளால் நீதிமான்கள்
நன்மை அடைந்தார்கள் என்று
எகிப்தியர்கள் கேள்வியுற்றபோது,
அது ஆண்டவரின் செயல் என்று
உணர்ந்து கொண்டார்கள்.

14எவரை முன்னொரு காலத்தில்
குழந்தையாக இருந்தபோது
அவர்கள் வெளியே எறிந்தார்களோ,
எவரை நகைத்துப் புறக்கணித்தார்களோ,
அவரைக் குறித்தே நிகழ்ச்சிகளின்
முடிவில் வியப்புற்றார்கள்.
ஏனெனில், நீதிமான்கள்
கண்டிராத தாகத்தை எதிரிகள்
கொண்டிருந்தார்கள்.


கடவுளின் அருளிரக்கம்


15எகிப்தியர்கள்
பகுத்தறிவற்ற பாம்புகளையும்
பயனற்ற விலங்குகளையும்
வணங்கினார்கள்.
இவ்வாறு நெறி தவறத் தூண்டிய
அவர்களுடைய அறிவற்ற தீய
எண்ணங்களுக்காக அவர்களைப்
பழிவாங்கும் பொருட்டு,
பகுத்தறிவில்லா
உயிரினங்களின் கூட்டத்தை
அவர்கள்மீது நீர் ஏவி விட்டீர்.✠


16ஒருவர் எதனால்
பாவம் செய்கிறாரோ
அதனாலேயே அழிந்து போவார்
என்பதை இதனால்
அவர்களுக்கு அறிவுறுத்தினீர்.


17ஏனெனில் உருவமற்ற
பருப்பொருளைக் கொண்டு
உலகைப் படைத்த எல்லாம் வல்ல
உமது கைவன்மைக்கு
கரடிகளின் கூட்டத்தையோ
துணிவுள்ள சிங்கங்களையோ
அவர்கள்மிது அனுப்பி வைப்பது
முடியாததன்று.


18புதிதாகப் படைக்கப்பட்ட
முன்பின் பார்த்திராத,
சீற்றம் நிறைந்த
காட்டு விலங்குகளையோ,
வெப்ப மூச்சுவிடும் விலங்குகளையோ,
ஏப்பமாக அடர்ந்த புகைப்படலத்தை
வெளியிடும் விலங்குகளையோ,
கண்களில் தீப்பொறி பறக்கும்
விலங்குகளையோ,
அவர்கள்மீது அனுப்பி வைப்பது
உம் கைவன்மைக்கு இயலாததன்று.


19அவை மனிதர்களைத் தாக்கி
முற்றிலும் அழித்துவிடக் கூடியவை
மட்டுமல்ல,
தங்கள் தோற்றத்தாலேயே
அவர்களை அச்சுறுத்திக்
கொன்றுவிடக்கூடியவை.


20இவை இன்றியே மனிதர்கள்
ஒரே மூச்சினால்
வீழ்த்தப்பட்டிருப்பார்கள்.
நீதியால் துரத்தப்பட்டு,
உமது ஆற்றலின் மூச்சினால்
சிதறடிக்கப்பட்டிருப்பார்கள்.
ஆயினும் நீர் அனைத்தையும்
அளவோடும் கணக்கோடும்
நிறையோடும் ஏற்பாடு செய்தீர்.


21உமது மாபெரும் ஆற்றலை
எப்போது நீர் காட்ட இயலும்.
உமது கைவன்மையை
எதிர்த்து நிற்க எவரால் இயலும்?✠


22தராசில் மிக நுண்ணிய
எடை வேறுபாடு காட்டும்
தூசிபோலவும் நிலத்தின் மீது விழும்
காலைப்பனியின்
ஒரு சிறு துளி போலவும்
உலகம் முழுவதும்
உம் கண்முன் உள்ளது.


23நீர் எல்லாம் வல்லவராய்
இருப்பதால்
எல்லார்மீதும் இரங்குகின்றீர்;
மனிதர்கள் தங்களுடைய
பாவங்களைவிட்டு மனந்திரும்பும்
பொருட்டே நீர் அவற்றைப்
பார்த்ததும் பாராமல் இருக்கின்றீர்.✠


24படைப்புகள் அனைத்தின்மீதும்
நீர் அன்புகூர்கிறீர்.
நீர் படைத்த எதையும்
வெறுப்பதில்லை.
ஏனெனில் நீர் எதையாவது
வெறுத்திருந்தால்
அதைப் படைத்திருக்கவே மாட்டீர்!


25உமது திருவுளமின்றி
எதுதான் நீடித்திருக்க முடியும்?
அல்லது, உம்மால்
உண்டாக்கப்படாதிருந்தால்
எதுதான் காப்பாற்றப்படக்கூடும்?


26ஆண்டவரே, உயிர்கள்மீது
அன்புகூர்கின்றவரே,
நீர் எல்லாவற்றையும்
வாழவிடுகின்றீர்;
ஏனெனில் அவை யாவும்
உம்முடையன.


11:1-5 விப 15:22-27:16. 11:6-7 விப 1:9-19; 7:19-20. 11:8-14 எண் 20:7-13. 11:15 விப 8:1-24; 10:12-15. 11:21 2 குறி 20:6. 11:23 சீஞா 18:13; 1 பேது 3:9.



அதிகாரம் 12:1-27

1உம்முடைய அழியா ஆவி
எல்லாவற்றிலும் உள்ளது.

2ஆகையால், தவறு செய்பவர்களைச்
சிறிது சிறிதாய்ச் திருத்துகின்றீர்;
அவர்கள் எவற்றால் பாவம்
செய்கிறார்களோ
அவற்றை நினைவுபடுத்தி
அவர்களை எச்சரிக்கின்றீர்;
ஆண்டவரே,
அவர்கள் தீமையிலிருந்து விடுபடவும்
உம்மேல் நம்பிக்கை கொள்ளவுமே
இவ்வாறு செய்கின்றீர்.

3உமது திருநாட்டில்
பண்டுதொட்டே வாழ்ந்து
வந்தோரின்

4அருவருப்புக்குரிய நடத்தை,
மந்திரவாதச் செயல்கள்,
நெறிகெட்ட வழிபாட்டுமுறைகள்
ஆகியவற்றுக்காக அவர்களை
வெறுத்தீர்.

5இரக்கமின்றிக்
குழந்தைகளைக் கொலைசெய்தோர்,
மனித சதையையும் குருதியையும்
பலிவிருந்தாக உண்டோர்.
வேற்றின வழிபாட்டுச் சடங்குகளில்
புகுமுகம் செய்யப்பட்டோர்.

6தற்காப்பற்ற தங்கள் பிள்ளைகளைக்
கொலைசெய்த பெற்றோர் ஆகியோரை
எங்கள் மூதாதையரின் கைகளால்
அழிக்கத் திருவுளங்கொண்டீர்.

7நாடுகளிலெல்லாம்
நீர் மிகுதியாக மதிக்கின்ற நாடு
கடவுளின் மக்கள் குடியேறுவதற்குத்
தகுதியாகும்படி இவ்வாறு செய்தீர்.

8இருப்பினும்,
அவர்களும் மனிதர்களே என்பதால்
அவர்களை விட்டு வைத்தீர்;
உம் படைகளின் முன்னோடிகளாக
மலைக்குளவிகளை அனுப்பி வைத்தீர்;
இவ்வாறு அவர்களைச்
சிறிது சிறிதாக அழித்தீர்.✠

9ஏனெனில்
இறைப்பற்றில்லாதவர்களைப்
போர்க்களத்தில் நீதிமான்களின்
கையில் ஒப்படைப்பதும்,
கொடிய காட்டு விலங்குகளாலோ,
ஒரு கடுஞ்சொல்லாலோ
ஒரே நொடியில் அழிப்பதும்
உம்மால் இயலாத செயலன்று.

10அவர்கள்
தீய தலைமுறையினர் என்பதும்,
தீமை அவர்களது இயல்போடு
இணைந்துவிட்டது என்பதும்,
அவர்களது சிந்தனை முறை
ஒருபோதும் மாறாது என்பதும்
உமக்குத் தெரியாதனவல்ல.
இருப்பினும் நீர் அவர்களைச்
சிறிதுசிறிதாய்த் தண்டித்து,
மனந்திரும்ப அவர்களுக்கு
வாய்ப்புக் கொடுத்தீர்.

11அவர்கள் ஆதிமுதலே சாபத்துக்கு
உட்பட்ட வழிமரபினர்.
அவர்களுடைய பாவங்களை நீர்
தண்டியாமல் விட்டீர்.
எவருக்கும் அஞ்சி நீர்
அவ்வாறு செயல்படவில்லை.

12“நீர் என்ன செய்தீர்?”
என்று கேட்பவர் யார்?
உமது நீதித்தீர்ப்பை எதிர்ப்பவர் யார்?
நீர் உண்டாக்கிய மக்களினத்தாரின்
அழிவுபற்றி உம்மீது குற்றம்
சுமத்துபவர் யார்?
நீதியற்றோரை நீர் பழிவாங்கும்போது,
அவர்கள் சார்பாக உம் திருமுன்
பரிந்துரைப்பவர் யார்?

13ஏனெனில் உம்மைத் தவிர
வேறு கடவுள் இல்லை.
எல்லாவற்றின்மீதும்
நீர் கருத்தாய் இருக்கிறீர்.
முறைகேடாக நீர்
தீர்ப்பு வழங்குவதில்லை
என்பதை யாரிடம் காட்டவேண்டும்?

14நீர் தண்டித்தவர்கள் சார்பாக
உம்மை எதிர்த்து நிற்க
எந்த மன்னராலும் தலைவராலும்
முடியாது.

15நீர் நேர்மையுள்ளவர்;
அனைத்தையும் நீதியோடு
ஆண்டுவருகின்றீர்.
தண்டிக்கத்தகாதவர்களைத்
தண்டிப்பது
உமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது
என நீர் அறிவீர்.

16உமது ஆற்றலே நீதியின் ஊற்று.
அனைத்தின்மீதும்
உமக்குள்ள ஆட்சியுரிமை
அனைத்தையும் வாழும்படி
விட்டு வைக்கிறது.

17மனிதர்கள் உமது
வலிமையின் நிறைவை
ஐயுறும்போது
நீர் உம்முடைய ஆற்றலைக்
காட்டுகிறீர்;
அதை அறிந்திருந்தும்
செருக்குற்றிருப்போரை அடக்குகிறீர்.

18நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால்
கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்;
மிகுந்த பொறுமையோடு
எங்களை ஆள்கிறீர்.
ஏனெனில் நீர் விரும்பும்போதெல்லாம்
செயல்புரிய உமக்கு வலிமை உண்டு.

19நீதிமான்கள்
மனிதநேயம் கொண்டவர்களாக
இருக்கவேண்டும் என்பதை
இச்செயல்கள் வாயிலாக
உம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்;
உம் மக்களை
நன்னம்பிக்கையால் நிரப்பினீர்;
ஏனெனில் பாவங்களிலிருந்து
மனமாற்றம் அருள்கிறீர்.

20உம் ஊழியர்களின் பகைவர்கள்
சாவுக்குரியவர்களாய் இருந்தும்,
மிகுந்த கனிவோடும் இரக்கத்தோடும்
அவர்களைத் தண்டித்தீர்;
அவர்கள் தங்கள் தீச்செயல்களை
விட்டுவிடும் பொருட்டு,
காலமும் வாய்ப்பும்
அவர்களுக்குக் கொடுத்தீர்.

21உம் மக்களுக்கு
நீர் எவ்வளவோ கண்டிப்போடு
தீர்ப்பு வழங்கினீர்!
அவர்களுடைய மூதாதையர்களுக்கு
நல்ல வாக்குறுதிகள் நிறைந்த
ஆணைகளையும் உடன்படிக்கைகளையும்
அளித்தீரன்றோ!


கனிவுக்குப்பின் கண்டிப்பு


22நீர் எங்களை
நல்வழிப்படுத்தக் கண்டிக்கிறீர்;
எங்கள் பகைவர்களையோ
பத்தாயிரம் மடங்கு மிகுதியாகத்
தண்டிக்கிறீர்.
நாங்கள் தீர்ப்பு வழங்கும்போது
உமது நன்மையை நினைவுகூரவும்,
நாங்களே தீர்ப்புக் உள்ளாகும்போது
உமது இரக்கத்தை எதிர் பார்க்கவும்
இவ்வாறு செய்கிறீர்.

23அறிவின்மையிலும் நீதியின்மையிலும்
வாழ்க்கை நடத்தியவர்களை
அவர்களுடைய அருவருக்கத்தக்க
செயல்களாலேயே தண்டீத்தீர்.

24அவர்கள் தவறான வழியல்
நெடுந்தொலை சென்றுவிட்டார்கள்;
விலங்குகளுக்குள்ளேயே
மிகவும் அருவருக்கத்தக்கவற்றைத்
தெய்வங்களாகக் கொண்டார்கள்;
அறிவில்லாக் குழந்தைகள்போல்
ஏமாந்து போனார்கள்.

25எனவே அறிவுத்தெளிவு பெறாத
குழந்தைகளை ஏளனம் செய்வதுபோல்
அவர்களை ஏளனம் செய்ய
உமது தீர்ப்பை அனுப்பினீர்.

26இத்தகைய சிறு கண்டிப்புகளினின்று
வரும் எச்சரிக்கைகளுக்குச்
செவிசாய்க்காதவர்கள்
கடவுளின் தக்க தண்டனைத்
தீர்ப்புக்கு உள்ளாக நேரிடும்.

27அவர்கள் எந்தப் படைப்புகளைத்
தெய்வங்களாகக் கருதினார்களோ
அவற்றாலேயே தண்டிக்கப்பட்டார்கள்;
ஆகையால் துன்புற்று எரிச்சலுற்றார்கள்;
தாங்கள் ஒரு காலத்தில்
ஏற்றுக்கொள்ள மறுத்தவரையே
இப்பொழுது உண்மையான கடவுள்
என்று அறிந்து ஏற்றுக்கொண்டார்கள்.
எனவே மிகக் கடுந்தண்டனை
அவர்கள்மேல் வந்து விழுந்தது.


12:3-7 இச 12:31; 18:9-13. 12:8 விப 23:28.



அதிகாரம் 13:1-19

இயற்கை வழிபாடு


1கடவுளை அறியாத மனிதர்
அனைவரும் இயல்பிலேயே
அறிவிலிகள் ஆனார்கள்.
கண்ணுக்குப் புலப்படும்
நல்லவற்றினின்று
இருப்பவரைக் கண்டறிய
முடியாதோர் ஆனார்கள்.
கைவினைகளைக்
கருத்தாய் நோக்கியிருந்தும்
கைவினைஞரை அவர்கள்
கண்டு கொள்ளவில்லை.

2மாறாக, தீயோ, காற்றோ,
சூறாவளியோ,
விண்மீன்களின் சுழற்சியோ,
அலைமோதும் வெள்ளமோ,
வானத்தின் சுடர்களோதாம்
உலகை ஆளுகின்ற தெய்வங்கள்
என்று அவர்கள் கருதினார்கள்.

3அவற்றின் அழகில் மயங்கி
அவற்றை அவர்கள்
தெய்வங்களாகக்
கொண்டார்கள் என்றால்,
அவற்றிற்கெல்லாம் ஆண்டவர்
அவற்றினும் எத்துணை மேலானவர்
என அறிந்துகொள்ளட்டும்;
ஏனெனில் அழகின்
தலையூற்றாகிய கடவுளே
அவற்றை உண்டாக்கினார்.

4அவற்றின் ஆற்றலையும்
செயல்பாட்டையும் கண்டு
அவர்கள் வியந்தார்கள் என்றால்,
அவற்றையெல்லாம் உருவாக்கியவர்
அவற்றைவிட எத்துணை
வலிமையுள்ளவர் என்பதை
அவற்றிலிருந்து அறிந்து கொள்ளட்டும்.

5ஏனெனில் படைப்புகளின்
பெருமையினின்றும் அழகினின்றும்
அவற்றைப் படைத்தவரை
ஒப்புநோக்கிக் கண்டுணரலாம்.

6இருப்பினும், இம்மனிதர்கள்
சிறிதளவே குற்றச்சாட்டுக்கு
உரியவர்கள். ஏனெனில்
கடவுளைத் தேடும்போதும்
அவரைக் கண்டடைய
விரும்பும்போதும்
ஒருவேளை அவர்கள் தவறக்கூடும்.

7அவருடைய
வேலைப்பாடுகளின் நடுவே
வாழும்பொழுது
கடவுளை அவர்கள்
தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.
தாங்கள் காண்பதையே
நம்பிவிடுகின்றார்கள்;
ஏனெனில் அவை அழகாக உள்ளன.

8இருப்பினும், அவர்களுக்கும்
மன்னிப்பே கிடையாது;

9உலகை ஆராய்ந்தறியும் அளவுக்கு
ஆற்றல் அவர்களுக்கு இருந்த
போதிலும், இவற்றுக்கெல்லாம்
ஆண்டவரை
இன்னும் மிக விரைவில்
அறியத் தவறியது ஏன்?

சிலைவழிபாடு


10ஆனால் பொன், வெள்ளியால்
திறமையாக உருவாக்கப்பட்டவையும்,
விலங்குகளின் சாயலாய்ச்
செய்யப்பட்டவையுமான
மனிதக் கைவேலைப்பாடுகளையோ
பண்டைக் காலக் கைவேலைப்பாடாகிய
பயனற்றக் கல்லையோ
தெய்வங்கள் என்று அழைத்தவர்கள்
இரங்கத் தக்கவர்கள்;
செத்துப் போனவற்றின்மீது
அவர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள்.

11திறமையுள்ள தச்சர் ஒருவர்
எளிதில் கையாளக்கூடிய
மரம் ஒன்றை வெட்டுகிறார்;
அதன் மேற்பட்டைகளையெல்லாம்
நன்றாக உரிக்கிறார்;
பிறகு அதைக் கொண்டு
வாழ்வின் தேவைகளுக்குப்
பயன்படும் ஒரு பொருளைச்
சிறந்த வேலைப்பாடுகளுடன் செய்கிறார்.

12வேலைக்குப் பயன்படாத
மரக்கழிவுகளை எரித்து,
உணவு தயாரித்து,
வயிறார உண்கிறார்.

13ஆயினும் அவற்றுள் எஞ்சியதும்,
ஒன்றுக்கும் உதவாததும்,
கோணலும் மூட்டுமுடிச்சுகளும்
நிறைந்ததுமான ஒரு மரத்துண்டை
அவர் எடுத்து, ஓய்வு நேரத்தில்
அதைக் கருத்தாய்ச் செதுக்கி,
கலைத்திறனோடு அதை இழைத்து,
மனிதரின் சாயலில்
அதை உருவாக்குகிறார்.

14அல்லது ஒரு பயனற்ற
விலங்கின் உருவத்ததைச் செய்து,
செந்நிறக் கலவையால் அதைப் பூசி,
அதன் மேற்பரப்பில் உள்ள
சிறு பள்ளங்களை
அவர் சிவப்பு வண்ணம் பூசி
மறைக்கிறார்.

15அதற்குத் தகுந்ததொரு
மாடம் செய்து,
அதைச் சுவரில் ஆணியால்
பொருத்தி,
அதில் சிலையை வைக்கிறார்;

16தனக்குத்தானே
உதவி செய்ய முடியாது
என்பதை அறிந்து,
அது விழாதபடி பார்த்துக்
கொள்கிறார்; ஏனெனில்
அது வெறும் சிலைதான்;
அதற்கு உதவி தேவை.

17அவர் தம்முடைய உடைமைகளுக்காகவும்
திருமணத்துக்காகவும்
குழந்தைகளுக்காகவும்
வேண்டும்போது
உயிரற்ற ஒரு சிலையுடன்
பேச வெட்கப்படுவதில்லை;
வலிமையற்ற ஒன்றிடம்
உடல்நலத்திற்காக வேண்டுகிறார்.

18செத்துப்போன ஒன்றிடம்
வாழ்வுக்காக மன்றாடுகிறார்;
பட்டறிவு இல்லாத ஒன்றிடம்
உதவி கேட்கிறார்; ஓர் அடிகூட
எடுத்து வைக்கமுடியாத ஒன்றிடம்
நல்ல பயணத்திற்காக இறைஞ்சுகிறார்.

19பொருள் ஈட்டலிலும் அலுவலிலும்
செயல்பாட்டிலும் வெற்றி தரும்படி
வலுவற்ற ஒன்றிடம் அவர் வேண்டுகிறார்.


13:1-9 உரோ 1:20-32. 13:10-14:31 எசா 44:9-20; எரே 10:1-16; பாரூ 6:3-72.



அதிகாரம் 14:1-31

1மேலும், கடற்பயணம் செய்யும்
நோக்குடன்
கொந்தளிக்கும் அலை கடலைக்
கடக்கவிருக்கும் ஒருவர்
தம்மைத் தாங்கிச் செல்லும்
மரக்கலத்தைவிட
எளிதில் உடைபடும்
மரக்கட்டையிடம் மன்றாடுகிறார்.

2செல்வம் சேர்க்கும் ஆவல்
அந்த மரக்கலத்தைக் கட்டத்
திட்டமிட்டது.
ஞானம் கைவினைஞராகச்
செயல்பட்டு
அதைக் கட்டி முடித்தது.

3ஆனால், தந்தையே
உமது பாதுகாப்பு
அதை இயக்கி வருகிறது;
ஏனெனில் கடலில்
அதற்கு ஒரு வழி அமைத்தீர்;
அலைகள் நடுவே
பாதுகாப்பான பாதை வகுத்தீர்.

4இவ்வாறு எல்லா இடர்களிலிருந்தும்
நீர் காப்பாற்ற முடியும்
எனக் காட்டினீர்.
இதனால், திறமையற்றோர் கூடக்
கடலில் பயணம் செய்யமுடியும்.

5உமது ஞானத்தின் செயல்கள்
பயனற்றவை ஆகக்கூடா என்பது
உமது திருவுளம்.
எனவே மனிதர்கள்
மிகச் சிறிய மரக்கட்டையிடம்
தங்கள் உயிரையே ஒப்படைத்து,
கொந்தளிக்கும் கடலில்
அதைத் தெப்பமாகச் செலுத்தி,
பாதுகாப்புடன் கரை சேர்கின்றார்கள்.

6ஏனெனில் தொடக்க காலத்தில் கூட,
செருக்குற்ற அரக்கர்கள்
அழிந்தபோது,
உலகின் நம்பிக்கை
ஒரு தெப்பத்தில் புகலிடம் கண்டது.
உமது கை வழிகாட்ட,
அந்நம்பிக்கை
புதிய தலைமுறைக்கு வித்திட்டது.

7நீதியை உருவாக்கும் மரம்
வாழ்த்துக்குரியது

8ஆனால் கைவேலைப்பாடாகிய
சிலை சபிக்கப்பட்டது.
அதைச் செய்தவரும்
அவ்வாறே சபிக்கப்பட்டவர்.
ஏனெனில் அவரே அதைச் செய்தார்.
அது அழியக்கூடியதாயிருந்தும்,
தெய்வம் என்று அழைக்கப்பட்டது.

9இறைப்பற்றில்லாதோரையும்
அவர்களது இறைப்பற்றின்மையையும்
கடவுள் ஒருங்கே வெறுக்கின்றார்.

10ஏனெனில் செய்தவரோடு
அவர் செய்த வேலையும்
ஒருமிக்கத் தண்டிக்கப்படும்.

11எனவே வேற்றினத்தாரின்
சிலைகளும்
தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகும்;
ஏனெனில்,
கடவுளின் படைப்புகளேயாயினும்,
அவை மிக அருவருப்பானவையாக
மாறிவிட்டன;
அவை மனிதரின்
ஆன்மாக்களுக்கு இடறல்கள்;
அறிவிலிகளின்
கால்களுக்குக் கண்ணிகள்.


சிலைவழிபாட்டின் தொடக்கம்


12சிலைகள் செய்யத் திட்டமிட்டதே
விபசாரத்தின்⁕ தொடக்கம்.
அவற்றைக் கண்டுபிடித்ததே
வாழ்வின் அழிவு.

13அவை தொடக்கமுதல்
இருந்ததில்லை;
என்றென்றும் இருக்கப்
போவதுமில்லை.

14மனிதரின் வீண்பெருமையினால்
அவை உலகில் நுழைந்தன;
எனவே அவை விரைவில் முடியும்
எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

15இளமையில் தம் மகன் இறந்ததால்,
ஆறாத்துயரில் மூழ்கியிருந்த
தந்தை ஒருவர் விரைவில்
தம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட
அவனது சிலையைச் செய்தார்.
முன்பு இறந்து விட்ட மனிதப் பிறவியைப்
பின்பு தெய்வப் பிறவியாகக்
கொண்டாடினார்.
மறைவான சமயச் சடங்குகளையும்
வழிபாடுகளையும் வழிவழியாகச்
செய்யுமாறு தம் பணியாளரைப்
பணித்தார்.

16இந்தத் தீய பழக்கம்
காலப் போக்கில் வேரூன்றி
சட்டம்போலப்
பின்பற்றப்படலாயிற்று.

17மன்னர்களின் ஆணைப்படி
மக்கள் சிலைகளை
வணங்கலானார்கள்.
தாங்கள்
தொலையில் வாழ்ந்துவந்த
காரணத்தால்,
தங்கள் மன்னரை
நேரில் பெருமைப்படுத்த
முடியாத மக்கள்
தொலையிலிருந்தே
அவருடைய உருவத்தைக்
கற்பனை செய்தார்கள்;
அதைக் காணக்கூடிய
சிலையாக வடித்து அதற்கு
வணக்கம் செலுத்தினார்கள்;
இவ்வாறு, தொலைவில் இருந்தவரை
எதிரில் இருந்தவர் போலக் கருதி,
தங்கள் ஆர்வத்தில் அவரை
மிகைப்படப் புகழ்ந்தார்கள்.

18மன்னரை அறியாதவர்கள்
நடுவிலும்
‘மன்னர் வழிபாட்டைப்’ பரப்ப,
சிற்பியின் புகழார்வம்
அவர்களைத் தூண்டிற்று.

19ஏனெனில் சிற்பி தம்மை ஆள்பவரை
மகிழ்ச்சிப்படுத்தும் நோக்குடன்
தம் திறமையெல்லாம் கூட்டி,
அச்சிலையை மிக அழகாகச்
செய்திருக்கலாம்.

20அவருடைய வேலைப்பாட்டின்
அழகில் மயங்கிய மக்கள்திரள்
சற்றுமுன்பு வெறும் மனிதராகப்
போற்றிய ஒருவரைப்
பின்னர் வழிபாட்டுக்குரியவராகக்
கருதியிருக்கலாம்.

21இது மன்பதையே வீழ்த்தும்
ஒரு சூழ்ச்சி ஆயிற்று.
ஏனெனில் மனிதர் பேரிடருக்கோ
கொடுங்கோன்மைக்கோ ஆளாகி,
கடவுளுக்கே உரிய பெயரைக்
கற்களுக்கும் மரங்களுக்கும்
கொடுத்தனர்.

சிலைவழிபாட்டின் விளைவுகள்


22கடவுளைப்பற்றிய அறிவில்
மனிதர்கள் தவறியது மட்டுமன்றி,
அறியாமையால் பெரும்
போராட்டத்தில் வாழ்கிறார்கள்;
இத்தகைய தீமைகளை
‘அமைதி’ என்று அழைக்கிறார்கள்.

23புகுமுகச் சடங்குகளில்
அவர்கள் குழந்தைகளைப்
பலியிட்டாலும்,
மறைவான சமயச் சடங்குகளைக்
கொண்டாடினாலும்,
வேற்றினப் பழக்கவழக்கங்கள்
கொண்ட வெறியூட்டும்
களியாட்டங்களை நடத்தினாலும்,

24தங்கள் வாழ்வையும்
திருமணத்தையும்
மாசுபடாமல் காப்பதில்லை.
அவர்கள் நயவஞ்சமாக
ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள்;
அல்லது விபசாரத்தால்
ஒருவர் மற்றவருக்குத்
துயர் விளைவிக்கிறார்கள்.

25இதன் விளைவாக எங்கும்
ஒரே குழப்பம்,
குருதி, கொலை, களவு, வஞ்சகம்,
ஊழல், பற்றுறுதியின்மை, கிளர்ச்சி, பொய்யாணை.

26நல்லவைப் பற்றிய குழப்பம்,
செய்நன்றி மறத்தல்,
ஆன்மாக்களைக் கறைப்படுத்துதல்,
இயல்புக்கு மாறான
காமவேட்கை,
மணவாழ்வில் முறைகேடு,
விபசாரம், வரம்புமீறிய
ஒழுக்கக்கேடு!

27பெயரைக்கூடச் சொல்லத் தகாத
சிலைகளின் வழிபாடே
எல்லாத் தீமைகளுக்கும் முதலும்
காரணமும் முடிவும் ஆகும்.

28அவற்றை வணங்குவோர்
மகிழ்ச்சியால் வெறிபிடித்தவர்
ஆகின்றனர்;
அல்லது பொய்யை
இறை வாக்காக உரைக்கின்றனர்.
அல்லது நேர்மையாக வாழ்வதில்லை;
அல்லது எளிதாகப்
பொய்யாணையிடுகின்றனர்.

29உயிரற்ற சிலைகள் மீது
நம்பிக்கை வைப்பதால்,
அவர்களை பொய்யாணையிட்டாலும்
தங்களுக்குத் தீங்கு நேரிடும் என
எதிர்பார்ப்பதில்லை.

30இரு காரணங்களுக்காக அவர்கள்
நீதியுடன் தண்டிக்கப்படுவார்கள்;
சிலைகளுக்குத் தங்களை
அர்ப்பணித்ததன்மூலம்
கடவுளைப்பற்றிய தவறான எண்ணம்
கொண்டிருந்தார்கள்;
தூய்மையை இகழ்ந்து,
வஞ்சகத்தோடு நீதிக்கு
முரணாக ஆணையிட்டார்கள்.

31ஏனெனில் எவற்றைக் கொண்டு
மனிதர்கள் ஆணையிடுகிறார்களோ
அவற்றின் ஆற்றல்
அவர்களைத் தண்டிப்பதில்லை.
மாறாக, பாவிகளுக்குரிய
நீதித் தீர்ப்பே
நெறிகெட்டோரின் குற்றங்களை
எப்பொழுதும் தண்டிக்கிறது.


13:10-14:31 எசா 44:9-20; எரே 10:1-16; பாரூ 6:3-72.


14:12 உடன்படிக்கை வழியாக இறைவனுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையே மணமகன் - மணமகள் உறவு மலர்ந்தது. இதனால் இஸ்ரயேல் தன் இறைவனைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை நாடிச் சென்றது விபசாரமாகக் கருதப்பட்டது.



அதிகாரம் 15:1-19

இஸ்ரயேல் சிலைவழிபாட்டில் ஈடுபடவில்லை


1எங்கள் கடவுளே,
நீர் பரிவும் உண்மையும்
பொறுமையும் உள்ளவர்;
அனைத்தையும் இரக்கத்துடன்
ஆண்டுவருகின்றீர்.

2நாங்கள் பாவம் செய்தாலும்
உம்முடையவர்களே;
ஏனெனில் உமது ஆற்றலை
அறிவோம்.
நாங்கள் இனிப் பாவம் செய்யமாட்டோம்;
ஏனெனில் உம்முடையவர்களாக
நீர் எங்களை எண்ணுவதை
நாங்கள் அறிவோம்.

3உம்மை அறிதலே நிறைவான நீதி;
உமது ஆற்றலை அறிதலே
இறவாமைக்கு ஆணிவேர்.

4தீய நோக்குடைய மனிதரின்
திறமைகள் எங்களைத்
திசைதிருப்பிவிடவில்லை;
ஓவியரின் பயனற்ற உழைப்பாகிய
பல வண்ணம் தீட்டிய உருவமும்
எங்களை ஏமாற்றிவிடவில்லை.

5அறிவிலிகள் அவற்றின்மீது
பேராவல் கொள்ளுமாறு
அவற்றின் தோற்றமே
தூண்டி விடுகிறது.
அதனால் செத்துப்போன
சாயலின் உயிரற்ற உருவத்தை
அவர்கள் விரும்புகிறார்கள்.

6அவற்றைச் செய்பவர்களும்
அவற்றின்மீது ஆவல்
கொள்பவர்களும்
அவற்றை வணங்குபவர்களும்
தீமையை விரும்புகிறார்கள்;
இத்தகைய சிலைகளில் அவர்கள்
நம்பிக்கைகொள்ளத் தகுந்தவர்களே.


சிலைகளைச் செய்வோர் மூடர்


7குயவர்கள் வருந்தி உழைத்து,
மென்மையான களிமண்ணைப்
பிசைந்து, நம்முடைய தேவைக்காக
ஒவ்வொரு மண்கலத்தையும்
வனைகிறார்கள்;
ஒரே மண்ணைக் கொண்டுதான்
நல்ல வகையிலும்
மாறான வகையிலும்
பயன்படுகிற கலங்களைச்
செய்கிறார்கள்;
இவற்றில் ஒவ்வொன்றும் எவ்வகையில்
பயன்பட வேண்டும்
என்பதைக் குயவர்களே
முடிவு செய்கிறார்கள்.✠

8வீணில் உழைத்து
அதே களிமண்ணால்
பயனற்ற தெய்வம் ஒன்றை
உருவாக்குகிறார்கள்.
ஆனால், அவர்களே
சிறிது காலத்திற்குமுன்
அதே மண்ணிலிருந்து
உருவாக்கப்பட்டவர்கள்;
சிறிது காலத்திற்குப்பின்,
தங்களுக்குக் கடனாகக்
கொடுக்கப்பட்ட ஆன்மாக்களைத்
திருப்பிக் கொடுக்க
வேண்டிய பொழுது,
அவர்கள் எந்த மண்ணிலிருந்து
எடுக்கப்பட்டிருந்தார்களோ
அந்த மண்ணுக்கே
திரும்பிப் போகிறார்கள்.

9ஆனால், தாம் சாகவேண்டும்
என்பதைப் பற்றியோ
தம் வாழ்நாள் குறுகியது
என்பதைப்பற்றியோ
அவர்கள் கவலைப்படுவதில்லை.
மாறாக, பொன், வெள்ளியில்
வேலை செய்பவர்களுடன்
போட்டியிடுகிறார்கள்.
வெண்கலத்தில்
வேலை செய்கிறவர்களைப்போலச்
செய்ய முயல்கிறார்கள்;
போலித் தெய்வங்களின் சிலைகளைச்
செய்வதில் பெருமை கொள்கிறார்கள்.

10அவர்களுடைய இதயம்
வெறும் சாம்பல்.
அவர்களது நம்பிக்கை
புழுதியிலும் கீழானது.
அவர்களது வாழ்க்கை
களிமண்ணினும் இழிவானது.

11ஏனெனில் தங்களை
உருவாக்கியவரும்
தங்களுக்குள் ஆற்றல்மிக்க
ஆன்மாவைப் புகுத்தியவரும்
உயிர்மூச்சை ஊதியவரும் யார்
என்று அவர்கள் அறியவில்லை.

12அவர்களோ நம் வாழ்க்கையை
ஒருவகை விளையாட்டாகவும்,
நம்முடைய வாழ்நாளைப்
பணம் சேர்க்கக்கூடிய
ஒரு திருவிழாச் சந்தையாகவும்
கருதுகிறார்கள்; ஏனெனில்
ஒருவர் எவ்வழியாலும் ஏன்,
தீய வழியாலுங்கூட,
பணம் சேர்க்கவேண்டும்
எனச் சொல்லிக் கொள்கிறார்கள்.✠

13உடையக்கூடிய மண்கலங்களையும்
வார்ப்புச் சிலைகளையும்
அவர்கள் செய்யும்போது
தாங்கள் பாவம் செய்வதை
மற்றெல்லாரையும்விட
நன்றாக அறிந்திருக்கிறார்கள்.


எகிப்தியரின் மடமை


14உம் மக்களை ஒடுக்கிய
பகைவர்கள் அனைவரும்
மற்ற யாவரினும் அறிவிலிகள்;
சிறு குழந்தைகளைவிட
இரங்குதற்குரியவர்கள்.

15ஏனெனில் வேற்றினத்தாரின்
சிலைகள் கண்களால் காணவோ,
மூக்கினால் மூச்சு விடவோ,
காதுகளால் கேட்கவோ,
விரல்களால் தொட்டுணரவோ,
கால்களால் நடக்கவோ
முடியாத போதிலும்
அவற்றையெல்லாம் தெய்வங்கள்
என்று இவர்கள் எண்ணினார்கள்.

16அவற்றைச் செய்தவர்கள்
வெறும் மனிதர்களே;
அவற்றை உருவாக்கியவர்கள்
தங்களது உயிரைக்
கடனாகப் பெற்றவர்கள்.
ஆனால் தங்களுக்கு இணையான
ஒரு தெய்வத்தை எந்த மனிதரும்
உருவாக்க முடியாது.

17அவர்களோ சாகக்கூடியவர்கள்.
நெறிகெட்ட தங்கள் கைகளால்
அவர்கள் செய்வது உயிரற்றதே!
தாங்கள் வணங்குகிற சிலைகளை விட
அவர்கள் மேலானவர்கள்;
ஏனெனில் அவர்களுக்கு உயிர் உண்டு;
அவற்றுக்கோ ஒருபோதும் உயிரில்லை.

18மேலும், உம் மக்களின் பகைவர்கள்
மிகவும் அருவருப்பான
விலங்குகளைக் கூட வணங்குகிறார்கள்;
அறிவின்மையை வைத்து
ஒப்பிடும்போது,
இவை மற்றவற்றைவிடத் தாழ்ந்தவை.

19விலங்குகள் என்னும் அளவில்கூட,
மனிதர்கள் விரும்பும் அழகு
அவற்றின் தோற்றத்தில் இல்லை.
இறைவன் தம் படைப்பைப் பாராட்டி
ஆசி வழங்கியபொழுது,
அவை ஒதுங்கிப் போய்விட்டன.


15:7 சீஞா 38:29-30; எரே 18:3-4; எசா 45:9. 15:12 யாக் 4:13.



அதிகாரம் 16:1-29

கொடிய விலங்குகளும் காடைகளும்


1எனவே அவர்கள் அவற்றைப்
போன்ற உயிரினங்களால்
தக்கவாறு தண்டிக்கப்பட்டார்கள்;
விலங்குக் கூட்டத்தால்
வதைக்கப்பட்டார்கள்.✠

2இத்தகைய தண்டனைக்கு மாறாக
நீர் உம் மக்களுக்குப் பரிவு காட்டினீர்;
சுவை மிகுந்த அரிய உணவாகிய
காடைகளை அவர்களுக்கு
உண்ணக் கொடுத்தீர்;
இவ்வாறு,
அவர்களது ஆவலைத் தணித்தீர்.✠

3எகிப்தியர்கள் உணவு அருந்த
விரும்பியபோதிலும்,
அவர்கள்மீது ஏவப்பட்ட
அருவருக்கத்தக்க
விலங்குகளால் உணவின்மேல்
அவர்களுக்கு இருந்த நாட்டமே
அற்றுப் போயிற்று.
உம் மக்களோ சிறிது காலம்
வறுமையில் வாடியபின்
அருஞ்சுவை உணவை உண்டார்கள்.

4ஏனெனில் கொடுமை செய்தவர்கள்
கடுமையான பற்றாக்குறைக்கு
ஆளாகவேண்டியிருந்தது.
உம் மக்களுக்கோ அவர்களுடைய
பகைவர்கள் எவ்வாறு அல்லல்
படுகிறார்கள் என்று மட்டும்
காட்டவேண்டியிருந்தது.


வெட்டுக்கிளிகளும் வெண்கலப் பாம்புகளும்


5உம் மக்கள்மேல் காட்டு விலங்குகள்
கடுஞ்சீற்றத்துடன் பாய்ந்தபோது,
நெளிந்து வந்த
நச்சுப் பாம்புகளின் கடியால்
அவர்கள் அழிந்துகொண்டிருந்தபோது,
உமது சினம் இறுதிவரை நீடிக்கவில்லை.✠

6எச்சரிக்கப்பட வேண்டிச்
சிறிது காலம் அவர்கள்
துன்பத்திற்கு உள்ளானார்கள்.
உமது திருச்சட்டத்தின்
கட்டளையை நினைவூட்ட
மீட்பின் அடையாளம்
ஒன்று அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

7அப்போது
அதை நோக்கித் திரும்பியோர்
தாங்கள் பார்த்த பொருளால் அன்று,
அனைவருக்கும் மீட்பரான
உம்மாலேயே மீட்புப் பெற்றார்கள்.

8இதனால் எல்லாத் தீமைகளிலிருந்தும்
விடுவிப்பவர் நீரே என்று
எங்கள் பகைவர்களை நம்பச் செய்தீர்.

9ஏனெனில் அவர்கள்
வெட்டுக்கிளிகளாலும் ஈக்களாலும்
கடியுண்டு மாண்டார்கள்.
அவர்கள் உயிரைக் காப்பதற்கு
மருந்து எதுவும் காணப்படவில்லை.
அவர்கள் இத்தகையவற்றால்
தண்டிக்கப்படத் தக்கவர்கள்.

10ஆனால் நச்சுப் பாம்புகளின்
பற்களால்கூட உம் மக்களை
வீழ்த்த முடியவில்லை.
உமது இரக்கம் அவர்களுக்குத்
துணைநின்று நலம் அளித்தது.

11உம் சொற்களை
அவர்கள் நினைவுகூரும் பொருட்டு
அவர்கள் கடிபட்டார்கள்;
ஆனால் உடனே
நலம் அடைந்தார்கள்.
அவர்கள் ஆழ்ந்த மறதிக்கு
உள்ளாகி, உம் பரிவை
உதறித்தள்ளாதபடி இவ்வாறு நடந்தது.

12பச்சிலையோ களிம்போ
அவர்களுக்கு நலம் அளிக்கவில்லை;
ஆனால், ஆண்டவரே,
உமது சொல்லே எல்லா மனிதர்க்கும்
நலம் அளிக்கிறது.

13வாழ்வின்மேலும் சாவின்மேலும்
உமக்கு அதிகாரம் உண்டு.
மனிதர்களைப் பாதாளத்தின்
வாயில்வரை கொண்டு செல்கிறீர்;
மீண்டும் அங்கிருந்து
கொண்டு வருகிறீர்.

14மனிதர் தம் தீய பண்பினால்
ஒருவரைக் கொன்று விடுகின்றனர்.
ஆனால் பிரிந்த உயிரை
அவர்களால்
திருப்பிக் கொணர முடியாது.
சிறைப்பட்ட ஆன்மாக்களை
அவர்களால் விடுவிக்கவும் முடியாது.


கல்மழையும் மன்னாவும்


15ஒருவரும் உமது கையினின்று
தப்பமுடியாது.

16உம்மை அறிய மறுத்துவிட்ட
இறைப்பற்றில்லாதவர்கள்
உமது கைவன்மையால்
வதைக்கப்பட்டார்கள்;
பேய் மழையாலும் கல் மழையாலும்
கடும் புயலாலும் துன்புறுத்தப்பட்டு,
தீயால் அறவே அழிக்கப்பட்டார்கள்.✠

17எல்லாவற்றையும்விட
நம்பமுடியாதது எது என்றால்,
அனைத்தையும் அவிக்கக்கூடிய
தண்ணீரில் அந்த நெருப்பு
இன்னும் மிகுதியாய்க் கொழுந்துவிட்டு
எரிந்ததுதான்!
ஏனெனில் அனைத்துலகும்
நீதிமான்களுக்காகப் போராடுகிறது.

18கடவுளின் தண்டனைத் தீர்ப்பு
தங்களைப் பின்தொடர்கிறது என்பதை
இறைப்பற்றில்லாதவர்கள்
கண்டுணருமாறும்,
அவர்களுக்கு எதிராய்
அனுப்பப்பட்ட உயிரினங்கள்
எரிந்து விடாதவாறும்,
நெருப்பின் அனல் சில வேளைகளில்
மட்டுப்படுத்தப்பட்டது.

19மற்றும் சில வேளைகளில்
நீதியற்ற நாட்டின் விளைச்சலை
அழிக்கவே
தண்ணீர் நடுவிலும் அந்நெருப்பு
முன்னைவிட மிகக் கடுமையாக
எரிந்தது.

20இவற்றுக்கு மாறாக
உம் மக்களை வானதூதரின்
உணவால் ஊட்டி வளர்த்தீர்;
எல்லா இனிமையும்
பல்சுவையும் கொண்ட உணவை,
அவர்களது உழைப்பு இல்லாமலே
படைக்கப்பட்ட உணவை
வானத்திலிருந்து
அவர்களுக்கு அளித்தீர்.✠

21நீர் அளித்த உணவூட்டம்
உம் பிள்ளைகள்பால்
நீர் கொண்டிருந்த
இனிய உறவைக் காட்டியது;
ஏனெனில் அந்த உணவு>
உண்போரின் சுவையுணர்விற்கு
ஏற்றவாறு மாறி,
அவரவர் விரும்பிய சுவை தந்தது.

22கல்மழையில் கனன்றெரிந்து,
கடும் மழையில் சுடர்விட்ட நெருப்பே
பகைவர்களுடைய விளைச்சலை
அழித்தது என்று
அவர்கள் அறிந்துகொள்ளுமாறு,
பனியும் பனிக்கட்டியும்
உருகிடாமல்
நெருப்பின் அனலைத் தாங்கின.

23ஆனால் அதே நெருப்பு,
நீதிமான்கள் ஊட்டம் பெறும்படி
தனது இயல்பான ஆற்றலை
மீண்டும் மறந்துவிட்டது.

24படைத்தவரான உமக்கு
ஊழியம் புரிகின்ற படைப்பு
நெறிகெட்டோரைத் தண்டிக்க
முனைந்து நிற்கிறது;
உம்மை நம்பினோரின்
நலனை முன்னிட்டு அது
பரிவோடு தணிந்து போகிறது.

25எனவே அந்நேரத்திலேயே
படைப்பு எல்லா வகையிலும்
தன்னை மாற்றியமைத்துக்
கொண்டது;
தேவைப்பட்டவர்களின்
விருப்பத்திற்கு ஏற்ப,
எல்லாரையும் பேணிக் காக்கும்
உமது வள்ளன்மைக்குப் பணிந்தது.

26ஆண்டவரே,
மனிதரைப் பேணிக்காப்பது
நிலத்தின் விளைச்சல் அல்ல,
மாறாக, உமது சொல்லே
உம்மை நம்பினோரைக்
காப்பாற்றுகிறது என
நீர் அன்புகூரும் உம் மக்கள்
இதனால் அறிந்து கொள்வார்கள்.✠

27நெருப்பினால் எரிபடாதது
காலைக் கதிரவனின்
ஒளிக் கீற்றாலேயே வெப்பம்
அடைந்து எளிதில் உருகிற்று.

28கதிரவன் எழுமுன்பே
மக்கள் எழுந்து
உமக்கு நன்றி கூறவும்
வைகறை வேளையில்
உம்மை நோக்கி மன்றாடவும்
வேண்டும் என்று
இதனால் உணர்த்தப்பட்டது.

29ஏனெனில்
நன்றி கொன்றோரின் நம்பிக்கை
குளிர்காலத்து உறைபனிபோல்
உருகிவிடும்;
பயனற்ற தண்ணீர்போல் ஓடிவிடும்.


16:1 1 விப 8:1-15:3. 16:2 விப 16:11-13; எண் 11:31-32. 16:5 விப 8:16-24; 10:1-20. 16:6-7 எண் 21:6-9; யோவா 3:14-15. 16:16 விப 9:22-26. 16:20 விப 16:13-36. 16:26 இச 8:3; மத் 4:4; லூக் 4:4.



அதிகாரம் 17:1-21

இருளும் ஒளியும்


1உம் தீர்ப்புகள் மேன்மையானவை,
விளக்கமுடியாதவை.
எனவே அவற்றைக் கற்றுத் தெளியாத
மனிதர்கள் நெறிதவறினார்கள்.

2நெறிகெட்டவர்கள்
உமது தூய மக்களினத்தை
அடிமைப்படுத்த எண்ணியபோது
அவர்களே காரிருளின் அடிமைகளாகவும்
நீண்ட இரவின் கைதிகளாகவும்
தங்கள் வீடுகளுக்குள்ளேயே
அடைபட்டு, உமது முடிவில்லாப்
பாதுகாப்பினின்று கடத்தப்பட்டார்கள்.✠

3மேலும் மறதி என்னும்
இருள் அடர்ந்த திரைக்குப் பின்னால்
தங்கள் மறைவான பாவங்களில்
மறைந்து கொண்டதாக
எண்ணிக் கொண்டிருந்த அவர்கள்
அச்சத்தால் நடுங்கியவர்களாய்
கொடிய காட்சிகளால்
அதிர்ச்சியுற்றுச் சிதறுண்டார்கள்.

4அவர்கள் பதுங்கியிருந்த
உள்ளறைகள்கூட அவர்களை
அச்சத்திலிருந்து விடுவிக்கவில்லை
. அச்சுறுத்தும் பேரொலிகள்
எங்கும் எதிரொலித்தன.
வாடிய முகங்கள் கொண்ட
துயர ஆவிகள் தோன்றின.

5எந்த நெருப்பின் ஆற்றலாலும்
ஒளி கொடுக்க இயலவில்லை;
விண்மீன்களின்
ஒளி மிகுந்த கூடர்களாலும்
இருள் சூழ்ந்த அவ்விரவை
ஒளிர்விக்க முடியவில்லை.

6தானே பற்றியெரிந்து அச்சுறுத்தும்
தீயைத் தவிர வேறு எதுவும்
அவர்கள் முன்னால் தோன்றவில்லை.
அவர்களோ நடுக்கமுற்று,
தாங்கள் காணாதவற்றைவிடக்
கண்டவையே தங்களை
அச்சுறுத்துவன என்று உணர்ந்தார்கள்.

7மந்திரவாதக் கலையின்
மாயங்கள் தாழ்வுற்றன.
அவர்கள்
வீண்பெருமை பாராட்டிய ஞானம்
வெறுப்புடன் கண்டிக்கப்பட்டது.

8நோயுற்ற உள்ளத்திலிருந்து
அச்சத்தையும் குழப்பத்தையும்
விரட்டியடிப்பதாக உறுதிகூறியவர்களே
நகைப்புக்கிடமான அச்சத்தினால்
நோயுற்றார்கள்.

9தொல்லை தரக்கூடிய எதுவும்
அவர்களை அச்சுறுத்தவில்லை
எனினும்,
கடந்து செல்லும் விலங்குகளாலும்
சீறும் பாம்புகளாலும்
அவர்கள் நடுக்கமுற்றார்கள்.
எவ்வகையிலும்
தவிர்க்கமுடியாத காற்றைக்கூட

10ஏறிட்டுப் பார்க்க மறுத்து,
அச்ச நடுக்கத்தால் மாண்டார்கள்.

11கயமை தன்னிலே
கோழைத்தனமானது.
தானே தனக்கு
எதிராகச் சான்று பகர்கிறது;
மனச்சான்றின் உறுத்தலுக்கு
உள்ளாகி இடர்களை
எப்பொழுதும் மிகைப்படுத்துகிறது.

12அச்சம் என்பது பகுத்தறிவின்
துணையைக் கைவிடுவதே.

13உதவி கிடைக்கும் என்னும்
எதிர்பார்ப்புக் குன்றும்போது,
துன்பத்தின் காரணம் அறியாத
நிலையை உள்ளம் ஏற்றுக் கொள்கிறது.

14உண்மையிலேயே
வலிமை சிறிதும் இல்லாததும்,
ஆற்றலற்ற கீழுலகின்
ஆழத்திலிருந்து வந்து கவிந்ததுமான
இரவு முழுவதும் அவர்கள்
யாவரும் அமைதியற்ற
உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.

15சில வேளைகளில்
மாபெரும் பேயுருவங்கள்
அடிக்கடி தோன்றி
அவர்களை அச்சுறுத்தின;
மற்றும் சில வேளைகளில்
அவர்களது உள்ளம்
ஊக்கம் குன்றிச்
செயலற்றுப் போயிற்று.
ஏனெனில் எதிர்பாராத
திடீர் அச்சம் அவர்களைக்
கலங்கடித்தது.

16அங்கு இருந்த ஒவ்வொருவரும்
கீழே விழுந்தனர்;
கம்பிகள் இல்லாச் சிறையில்
அடைபட்டனர்.

17ஏனெனில் உழவர், இடையர்,
பாலை நிலத்தில் பாடுபடும்
தொழிலாளர் ஆகிய அனைவரும்
அதில் அகப்பட்டுத்
தவிர்க்கமுடியாத முடிவை
எதிர்கொண்டனர்;
ஏனெனில் அவர்கள் அனைவரும்
இருள் என்னும் ஒரே சங்கிலியால்
கட்டுண்டனர்.

18காற்றின் ஒலி,
படர்ந்த கிளைகளிலிருந்து வரும்
பறவைகளின் இனிய குரல்,
பெருக்கெடுத்துப் பாய்ந்துவரும்
வெள்ளத்தின் சீரான ஓசை,
பெயர்த்துக் கீழே தள்ளப்படும்
பாறைகளின் பேரொலி,

19கண்ணுக்குப் பலப்படாதவாறு
தாவி ஓடும்
விலங்குகளின் பாய்ச்சல்,
கொடிய காட்டு விலங்குகளின்
முழக்கம்,
மலைக் குடைவுகளிலிருந்து
கேட்கும் எதிரொலி
ஆகிய அனைத்தும் அவர்களை
அச்சத்தால் முடக்கிவிட்டன.

20உலகெல்லாம்
ஒளி வெள்ளத்தில் திளைத்து,
தன் வேலையில்
தடையின்றி ஈடுபட்டிருந்தது.

21இவ்வாறிருக்க,
எகிப்தியர்கள்மேல் மட்டும்
அடர்ந்த காரிருள்
கவிந்து படர்ந்தது.
அவர்களை விழுங்கக்
குறிக்கப்பட்ட இருளின்
சாயல் அது.
எனினும் அவர்களே இருளைவிடத்
தங்களுக்குத் தாங்கமுடியாத
சுமையாய் இருந்தார்கள்.


17:2 விப 10:21-23.



அதிகாரம் 18:1-25

1உம் தூயவர்களுக்கோ
பேரொளி இருந்தது.
அவர்களுடைய குரலை
எதிரிகள் கேட்டார்கள்.
ஆனால் அவர்களின்
உருவங்களைக் காணவில்லை.
தங்களைப் போலத் துன்புறாததால்
தூயவர்களைப் பேறுபெற்றோர்
என்று கருதினார்கள்.

2அப்பொழுது உம் தூயவர்கள்
அவர்களுக்குத் தீமை எதுவும்
செய்யாததால், எகிப்தியர்கள்
நன்றியுணர்வு கொண்டிருந்தார்கள்;
தங்களது பழைய பகைமைக்கு
மன்னிப்புக் கேட்டார்கள்.⁕

3இருளுக்கு மாறான
ஒளிப்பிழம்பாம் நெருப்புத் தூணை
உம் மக்களுக்குக் கொடுத்தீர்.
முன்பின் அறியாத பாதையில்
அது அவர்களுக்கு
வழி காட்டியாய் விளங்கியது;
மாட்சி பொருந்திய அப்பயணத்தில்
அது வெம்மை தணிந்த
கதிரவனாய் இருந்தது.

4திருச்சட்டத்தின் அழியாத ஒளியை
உலகிற்கு வழங்க வேண்டிய
உம் மக்களை எகிப்தியர்கள்
சிறைப்பிடித்தார்கள்.
இவ்வாறு, அடைத்துவைத்தவர்களே
இருளில் அடைக்கப்பட
வேண்டியது பொருத்தமே.


தலைப்பேறுகளின் இறப்பும் இஸ்ரயேலரின் மீட்பும்


5எகிப்தியர்கள் உம் தூயவர்களின்
குழந்தைகளைக் கொல்லத்
திட்டமிட்டிருந்தார்கள்.
அப்பொழுது ஒரு குழந்தை மட்டும்
சாவிலிருந்து காப்பாற்றப்பட்டது.
எகிப்தியர்களைத் தண்டிப்பதற்காக
அவர்களின் பெருந்தொகையான
குழந்தைகளின் மாய்ந்துவிட்டீர்;
அவர்கள் அனைவரையும்
பெரும் வெள்ளத்தில்
ஒருசேர மூழ்கடித்தீர்.✠

6தாங்கள் நம்பியிருந்த
வாக்குறுதிகளைத் தெளிவாக

அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி
அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு
முன்னறிவிக்கப்பட்டது.

7நீதிமான்களின் மீட்பையும்
அவர்களுடைய பகைவர்களின்
அழிவையும் உம் மக்கள்
எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

8எங்கள் பகைவர்களை
நீர் தண்டித்த அந்த ஒரே செயலால்
உம்மிடம் எங்களை
அழைத்துப் பெருமைப்படுத்தினீர்.

9நல்லவர்களின் தூய மக்கள்
மறைவாகப் பலி செலுத்தினார்கள்;
நன்மைகளையும் இடர்களையும்
ஒன்றுபோலப்
பகிர்ந்து கொள்வார்கள்
என்னும் இறைச் சட்டத்திற்கு அவர்கள்
ஒருமித்து உடன்பட்டார்கள்;
மூதாதையர்களின் புகழ்ப்பாக்களை
அதே வேளையில்
பாடிக் கொண்டிருந்தார்கள்.

10ஆனால் பகைவர்கள் கதறியழுத
குரல்கள் எதிரொலித்தன;
தங்கள் குழந்தைகளுக்காக
எழுப்பிய புலம்பல்கள் எங்கும் பரவின.

11அடிமையும் தலைவரும்
ஒரே வகையில்
தண்டிக்கப்பட்டார்கள்;
குடிமகனும் மன்னரும்
ஒரே பாங்காய்த் துன்புற்றார்கள்;

12எண்ணிலடங்காதோர்
ஒரே வகைச் சாவுக்கு உள்ளாகி,
எல்லாரும் ஒருமிக்க
மடிந்து கிடந்தனர்.
உயிரோடிருந்தவர்களால்
அவர்களைப் புதைக்கவும்
இயலவில்லை.
அவர்களின் பெருமதிப்பிற்குரிய
வழித் தோன்றல்கள்
ஒரே நொடியில் மாண்டு போனார்கள்.

13மந்திரவாதிகளுக்குச் செவிசாய்த்து
அவர்கள் எதையுமே
நம்ப மறுத்துவிட்டாலும்,
தங்கள் தலைப்பேறுகள்
கொல்லப்பட்டபோது,
இம்மக்கள் ‘இறைமக்கள்’
என்பதை ஏற்றுக்கொண்டார்கள்.

14எல்லாம் அமைதியில்
ஆழ்ந்திருந்தபோது,
நள்ளிரவு கடந்துவிட்ட
வேளையில்,

15எல்லாம் வல்ல உம் சொல்
விண்ணகத்திலுள்ள
அரியணையைவிட்டு எழுந்து,
அஞ்சா நெஞ்சம் கொண்ட
போர்வீரனைப்போல்
அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட
நாட்டின்மீது வந்து பாய்ந்தது.

16உமது தெளிவான
கட்டளையாகிய கூரிய வாளை
ஏந்தியவண்ணம்
அது நின்றுகொண்டு,
எல்லாவற்றையும் சாவினால்
நிரப்பியது;
மண்ணகத்தில் கால் ஊன்றியிருந்த
போதிலும்,
விண்ணகத்தை தொட்டுக்
கொண்டிருந்தது.

17உடனே அச்சுறுத்தும் கனவுக்
காட்சிகள்
அவர்களைக் கலங்கடித்தன;
எதிர்பாராத பேரச்சம்
அவர்களைத் தாக்கியது.

18அங்கு ஒருவரும்
இங்கு ஒருவருமாக
அவர்கள் குற்றுயிராய்
விழுந்தபோது,
தாங்கள் மடிவதன்
காரணத்தை வெளிப்படுத்தினார்கள்.

19ஏனெனில் தாங்கள் பட்ட
துன்பத்தின் காரணத்தை
அவர்கள் தெரிந்து கொள்ளாமல்
சாகாதபடி
அவர்களைத் தொல்லைப்படுத்திய
கனவுகள் அதை
முன்னறிவித்திருந்தன.

20நீதிமான்களும் இறப்பை
நுகர நேர்ந்தது.
பாலைநிலத்தில் இருந்த
மக்கள் கூட்டம்
கொள்ளை நோயால் தாக்குண்டது.
ஆயினும் உமது சினம்
நீண்ட காலம் நீடிக்கவில்லை.

21குற்றமற்றவர் ஒருவர்
அவர்களுக்காகப் பரிந்துபேச
விரைந்தார்;
திருப்பணி என்னும்
தம் படைக்கலம் தாங்கியவராய்,
மன்றாட்டையும் பரிகாரத்திற்கான
நறுமணப்புகையையும்
ஏந்தியவராய்,
உமது சினத்தை எதிர்த்து நின்று
அழிவை முடிவுறச் செய்தார்;
இவ்வாறு, தாம் உம்
அடியார் என்று காட்டினார்.

22உடலின் வலிமையாலோ
படைக்கலங்களின் ஆற்றலாலோ
அவர் உமது சினத்தை
மேற்கொள்ளவில்லை;
ஆனால் எங்கள் மூதாதையர்க்கு
அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும்
உடன்படிக்கையையும் நினைவூட்டி
‘வதைப்போனை’த் தம் சொல்லால்
தோல்வியுறச் செய்தார்.

23செத்தவர்களின் பிணங்கள்
ஒன்றன்மீது ஒன்று விழுந்து
பெரும் குவியலாய்க் கிடந்தன.
அப்போது அவர் குறுக்கிட்டு
உமது சினத்தைத் தடுத்து நிறுத்தி,
எஞ்சியிருந்தோரை
அது தாக்காமல் செய்துவிட்டார்.

24அவர் அணிந்திருந்த நீண்ட
ஆடையில் உலகு அனைத்தும்
பொறிக்கப்பட்டிருந்தது.
அதில் இருந்த
நான்கு கல் வரிசையிலும்
மூதாதையரின் மாட்சிமிகு
பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
அவர் தலையில் இருந்த
மணிமுடியில்
உமது மாட்சி வரையப்பட்டிருந்தது.✠

25“அழிப்போன்” இவற்றைக் கண்டு
பின்வாங்கினான்.
அச்சம் அவனை ஆட்கொண்டது.
உமது சினத்தை ஓரளவு சுவைத்ததே
அவனுக்குப் போதுமானது.
18:1-4 விப 13:17-22. 18:5 விப 11:1-6. 18:20-25 எண் 16:41-50. 18:24 விப 28:1-43; சீஞா 45:6-13; 50:11.


18:2 ‘தங்களை விட்டு விலகும்படி கேட்டுக் கொண்டார்கள்.’ என்றும் மொழிபெயர்க்கலாம்.



அதிகாரம் 19:1-22

செங்கடலால் அழிவும் மீட்பும்


1இறைப்பற்றில்லாதவர்களைக்
கடவுளின் சீற்றம் இரக்கமின்றி
இறுதிவரை தாக்கியது.
ஏனெனில் அவர்கள்
செய்யவிருந்ததைக் கடவுள்
முன்னரே அறிந்திருந்தார்.

2இஸ்ரயேலர் புறப்பட்டுச் செல்ல
விடைகொடுத்து,
விரைவில் அவர்களை வெளியே
அனுப்பி வைத்த
அதே எகிப்தியர்கள்
பிறகு தங்கள் மனத்தை
மாற்றிக்கொண்டு
அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.

3எகிப்தியர்கள் தங்களுள்
இறந்தவர்களின் கல்லறைகளில் புலம்பி,
அவர்களுக்காக இன்னும் துயரம்
கொண்டாடுகையில்,
இன்னோர் அறிவற்ற சூழ்ச்சியில்
இறங்கினார்கள்;
முன்பு யாரை வெளியேறும்படி
வேண்டிக் கொண்டார்களோ,
அவர்களையே தப்பியோடுவோரைப்
போலத் துரத்திச் சென்றார்கள்.

4தங்கள் நடத்தைக்கு ஏற்ற முடிவுக்கே
அவர்கள் தள்ளப்பட்டார்கள்;>
அதனால் இதற்குமுன்
நடந்தவற்றையெல்லாம்
அவர்கள் மறந்து விட்டார்கள்;
இவ்வாறு தங்கள் துன்பத்தில்
குறையாயிருந்த தண்டனையே
நிறைவு செய்தார்கள்.

5இவ்வாறு
உம் மக்கள் வியத்தகு
பயணத்தைத் தொடர்ந்து சென்றார்கள்.
அவர்களுடைய பகைவர்களோ
விந்தையான சாவை
எதிர்கொண்டார்கள்.

6உம் பிள்ளைகள்
தீங்கின்றிக் காக்கப்படும்படி,
படைப்பு முழுவதும்
உம் கட்டளைகளுக்குப் பணிந்து,
மீண்டும் தன் இயல்பில்
புத்துயிர்ப்பெற்றது.

7அவர்களது பாசறைக்கு
முகில் நிழல் கொடுத்தது.
முன்பு தண்ணீர் இருந்த இடத்தில்
பின்பு உலர்ந்த தரை தோன்றிற்று.
செங்கடலினூடே தங்குதடை இல்லாத
வழியும், சீறிப்பாயும் அலைகளினூடே
புல்திடலும் உண்டாயின.

8உமது கைவன்மையால்
காப்பாற்றப் பட்ட மக்கள் அனைவரும்
அவ்வழியே கடந்து சென்றனர்.
உம்முடைய வியத்தகு செயல்களை
உற்று நோக்கிய வண்ணம் சென்றனர்.

9குதிரைகளைப் போலக்
குதித்துக்கொண்டும்,
ஆட்டுக்குட்டிகளைப் போலத்
துள்ளிக் கொண்டும்,
தங்களை விடுவித்த
ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்து
கொண்டே சென்றனர்.


இயற்கையில் ஏற்பட்ட மாற்றம்


10அவர்கள் வேற்று நாட்டில்
தங்கியிருந்தபோது
நிகழ்ந்தவற்றை இன்னும் நினைவு
கூர்ந்தார்கள்;
விலங்குகளுக்கு மாறாக நிலம்
கொசுக்களைத் தோற்றுவித்ததையும்
, மீன்களுக்கு மாறாகத் தவளைக்
கூட்டங்களை ஆறு உமிழ்ந்ததையும்
அவர்கள் இன்னும் நினைவில்
வைத்திருந்தார்கள்.

11பின்பு சுவையான இறைச்சியை
அவர்கள் விரும்பி வேண்டியபோது,
புதுவகைப் பறவைகளைக் கண்டார்கள்.

12ஏனெனில் அவர்களுடைய
விருப்பத்தை நிறைவு செய்யக்
கடலிலிருந்து காடைகள்
புறப்பட்டுவந்தன.


எகிப்தியர்களின் குற்றமும் தண்டனையும்


13பேரிடியால் எச்சரிக்கப்பட்ட
பின்னரே பாவிகள்
தண்டிக்கப்பட்டார்கள்;
தாங்கள் செய்த தீச்செயல்களுக்காக
நீதியின்படி துன்புற்றார்கள்;
ஏனெனில், அன்னியர்மட்டில்
பகைமையுடன் நடந்து கொண்டார்கள்.

14சோதோம் நகரைச் சேர்ந்தோர்
தங்களை நாடிவந்த
வேற்றினத்தார்க்கு
இடம் கொடுக்க மறுத்தார்கள்.
எகிப்தியர்களோ தங்களுக்கு
நன்மை செய்தவர்களையே
அடிமைப்படுத்தினார்கள்.✠

15இது மட்டுமன்று;
சோதோம் நகரைச் சேர்ந்தோர்
உறுதியாகத் தண்டனைத் தீர்ப்புக்கு
உள்ளாவார்கள்; ஏனெனில்
அவர்கள் அயல்நாட்டினரைப்
பகைவர்களென நடத்தினார்கள்.

16எகிப்தியர்களோ அயல்நாட்டினரை
விழாக்கோலத்துடன் வரவேற்று,
அவர்களுக்கு எல்லா உரிமையும்
அளித்தபின்னரும்
கொடுந்தொல்லைகள் தந்து
அவர்களைத் துன்புறுத்தினார்கள்.

17நீதிமானின் கதவு அருகில்
சோதோம் நகரைச் சேர்ந்தோர்
கவ்விய காரிருளால் சூழப்பட்டு,
தம்தம் கதவைத் தடவிப்பார்த்து
வழி தேடியதுபோல்,
எகிப்தியர்களும் பார்வையற்றுப்
போயினர்.


இயற்கையில் விளங்கிய இறைவனின் ஆற்றல்


18யாழின் சுருதிகள்
மாறாமலே இருந்துகொண்டு,
பண்ணின் இயல்லை மாற்றி
அமைப்பதுபோல்
இயற்கையின் ஆற்றல்களும்
செயல்படுகின்றன.
நிகழ்ந்தவற்றைக் கண்டு
இந்த உண்மையைத்
தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

19நிலத்தில் வாழும் விலங்குகள்
நீரில் வாழும் விலங்குகளாக மாறின;
நீந்தித் திரியும் உயிரினங்கள்
நிலத்திற்கு ஏறிவந்தன.

20நீரின் நடுவிலும் நெருப்பு
தன் இயல்பான ஆற்றலைக்
கொண்டிருந்தது;
நீரும் தன் அவிக்கும் இயல்வை
மறந்துவிட்டது.

21மாறாக,
அழியக்கூடிய உயிரினங்கள்
நெருப்புக்குள் நடந்தபோதும்,
அவற்றின் சதையை
அது சுட்டெரிக்கவில்லை;
பனிக்கட்டிபோல் எளிதில்
உருகும் தன்மை கொண்ட
அந்த விண்ணக
உணவையும் உருக்கவில்லை.

22ஆண்டவரே,
நீர் எல்லாவற்றிலும் உம் மக்களை
உயர்த்தி மேன்மைப்படுத்தினீர்;
எல்லா நேரத்திலும்
எல்லா இடத்திலும்
நீர் அவர்களுக்குத்
துணைபுரியத் தவறவில்லை.


19:1-9 விப 14:1-4. 19:14 தொநூ 19:1-11.