Manage OLD TESTAMENT

  • Home
  • Manage OLD TESTAMENT
முன்னுரை:1

செக்கரியா நூலை இருபெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம். முதற் பகுதி: 1-8 அதிகாரங்கள். இப்பகுதி கி.மு. 520 முதல் 518 வரையுள்ள காலத்தைச் சார்ந்தது. இதில் எட்டுக் காட்சிகள் அடங்கியுள்ளன. எருசலேமின் மீட்பு, கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்ற வாக்குறுதி, இறைமக்கள் தூய்மைப்படுத்தப்படுவர் என்ற அறிவிப்பு, மெசியாவின் வருங்கால ஆட்சி ஆகியன சிறப்பாக எடுத்துரைக்கப்படுகின்றன. இரண்டாம் பகுதி: 9-14 அதிகாரங்கள். இப்பகுதியில் அடங்கியுள்ள குறிப்புகள் அனைத்தும் பிற்காலத்தைச் சேர்ந்தவை. இப்பகுதி மெசியாவைப் பற்றியும் இறுதித் தீர்ப்பைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது (9:9).


நூலின் பிரிவுகள்


1. எச்சரிப்பும் நல்லன குறித்த அறிவிப்பும் 1:1 - 8:23
2,. வேற்றினத்தாருக்கு வரும் தண்டனைத் தீர்ப்பு 9:1 - 8
3. வருங்கால வாழ்வும் செழுமையும் 9:9 - 14:21



அதிகாரம் 1:1-21

மக்கள் தம்மிடம் திரும்பிவர ஆண்டவரின் அழைப்பு


1தாரிபு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் எட்டாம் மாதத்தில் இத்தோவின் பேரனும், பெரக்கியாவின் மகனுமான இறைவாக்கினர் செக்கரியாவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:✠ 2“ஆண்டவர் உங்கள் மூதாதையர்மேல் கடுஞ்சினம் கொண்டிருந்தார். 3ஆகவே நீ அவர்களை நோக்கி இவ்வாறு சொல்: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ‘என்னிடம் திரும்பி வாருங்கள்,’ என்கிறார் படைகளின் ஆண்டவர். 4உங்கள் மூதாதையரைப்போல் இருக்கவேண்டாம்; முந்தைய இறைவாக்கினர் அவர்களை நோக்கி, படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ‘உங்களுடைய தீய நெறிகளையும் தீச்செயல்களையும்விட்டுத் திரும்புங்கள்’ என்று முழக்கமிட்டனர். ஆனால் ‘அவர்கள் எனக்குச் செவி சாய்க்க வில்லை; என் சொல்லைப் பொருள்படுத்தவுமில்லை’ என்கிறார் ஆண்டவர். 5உங்கள் மூதாதையர் இப்போது இருக்கிறார்களா? இறைவாக்கினரும் என்றென்றும் உயிரோடிருப்பார்களா? 6உன் ஊழியராகிய இறைவாக்கினருக்கு நான் கட்டளை இட்ட என் வாக்குகளும் நியமங்களும் உங்கள் மூதாதையர் மட்டில் பலிக்கவில்லையா? ஆகையால் அவர்கள் மனம் வருந்தி, ‘படைகளின் ஆண்டவர் எங்கள் செயலுக்கும் நடத்தைக்கும் ஏற்ப எங்களுக்குச் செய்யத் திருவுளங்கொண்டு அவ்வாறு செய்தார்’ என்று சொல்லவில்லையா?”

குதிரைகள் பற்றிய காட்சி


7அரசன் தாரியு ஆட்சி செய்த இரண்டாம் ஆண்டின் பதினோராம் மாதமாகிய செபாத்தின் இருபத்தி நான்காம் நாளன்று, இத்தோவின் பேரனும் பெரக்கியாவின் மகனுமான இறைவாக்கினர் செக்கரியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர் கூறியது: 8இதோ, சிவப்புக் குதிரைமேல் ஏறிவந்த மனிதர் ஒருவரை நேற்றிரவு கண்டேன்; அவர் ஒரு பள்ளத்தாக்கின் நடுவே நறுமணம் வீசும் பசும் செடிகள் இடையே நின்று கொண்டிருந்தார்; அவருக்குப் பின்னால் சிவப்புக் குதிரைகளும் இளம் சிவப்புக் குதிரைகளும் நின்றன.✠ 9அப்பொழுது நான், “என் தலைவரே, இவை எதைக் குறிக்கின்றன?” என்று கேட்க, என்னோடு பேசிய தூதர், “இவை எதைக் குறிக்கின்றன என்று உனக்குக் காட்டுவேன்” என்றார். 10பசும் செடிகள் இடையே நின்று கொண்டிருந்த அவர் மறுமொழியாக, “இவை உலகெங்கும் சுற்றி வரும்படி ஆண்டவரால் அனுப்பப்பட்டவர்களைக் குறிக்கின்றன” என்றார். 11பசும் செடிகள் இடையே நின்று கொண்டிருந்த ஆண்டவருடைய தூதரிடம் அவர்கள், ‘நிலவுலகம் முழுவதும் நாங்கள் சுற்றிவந்தோம்; மண்ணுலகம் முழுவதும் அமைதியில் ஆழந்துள்ளது’ என்று கூறினார்கள். 12ஆண்டவரின் தூதர், ‘படைகளின் ஆண்டவரே, இன்னும் எத்துணைக் காலத்திற்கு எருசலேமின் மேலும் யூதாவின் நகர்கள் மேலும், கருணை காட்டாதிருப்பீர்? இந்த எழுபது ஆண்டுகளாய் உமது சினத்தைக் காட்டினீரே’ என்று பதில் அளித்தார். 13அதற்கு ஆண்டவர் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரிடம் இன்சொற்களையும் ஆறுதல் மொழிகளையும் கூறினார். 14ஆகவே, என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதர் என்னை நோக்கி, “நீ உரக்கக் கூவி அறிவிக்க வேண்டியது: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நான் எருசலேம்மீதும் சீயோன்மீதும் பெரிதும் அக்கறை கொண்டுள்ளேன். 15ஆனால் அமைதியுடன் இனிது வாழ்கின்ற வேற்றினத்தார்மேல் கடும் சினம் கொண்டுள்ளேன். நான் சிறிதே சினமுற்றிருந்தபோது அவர்கள் பெரிதும் தீவினை செய்தார்கள். 16ஆதலால் இரக்கத்துடன் எருசலேமுக்குத் திரும்பி வருகிறேன்,” என்கிறார் ஆண்டவர். ‘அங்கே என் இல்லம் கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவு நூல் பிடிக்கப்படும்,’ என்கிறார் படைகளின் ஆண்டவர். 17மீண்டும் உரத்த குரலில் இவ்வாறு அறிவிப்பாயாக: படைகளின் ஆண்டவர் அறிவிப்பது இதுவே: என் நகர்கள் சீரும் சிறப்புமாய் இருக்கும். ஆண்டவர் சீயோனை மீண்டும் தேற்றுவார்; எருசலேமைத் திரும்பவும் தேர்ந்துகொள்வார்.

கொம்புகளைப்பற்றிய காட்சி


18நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது இதோ, நான்கு கொம்புகளைக் கண்டேன். 19என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரை நோக்கி, ‘இவை எதைக் குறிக்கின்றன?’ என்று நான் வினவினேன். அதற்கு அவர், ‘இவைதாம் யூதாவையும் இஸ்ரயேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள்’ எனப் பதிலளித்தார். 20அப்போது ஆண்டவர் கொல்லர்கள் நால்வரை எனக்குக் காண்பித்தார். 21இவர்கள் எதற்காக வருகிறார்கள்?’ என்று நான் கேட்டேன். அதற்கு அத்தூதர், ‘எவரும் தலையெடுக்காதபடி யூதாவைச் சிதறடித்த கொம்புகள் இவையே; யூதா நாட்டைச் சிதறடிக்கும்படி தங்கள் கொம்புகளை உயர்த்திய வேற்றினத்தாரின் கொம்புகளை உடைத்தெறியவும் அவர்களைத் திகில் அடையச் செய்யவுமே இவை வந்திருக்கின்றன’ என்று பதிலுரைத்தார்.


1:1 எஸ்ரா 4:24-5:1; 6:14. 1:8 திவெ 6:2-8.



அதிகாரம் 2:1-13

அளவுநூலைக் குறித்த காட்சி


1நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இதோ, அளவு நுலைக் கையில் பிடித்திருந்த ஒருவரைக் கண்டேன். 2‘எங்கே போகிறீர்?’ என்று நான் அவரை வினவினேன். அதற்கு அவர், ‘எருசலேமை அளந்து, அதன் அகலமும் நீளமும் எவ்வளவு என்பதைக் காணப்போகிறேன்’ என்றார். 3என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதர் திரும்பிச் செல்கையில் மற்றொரு தூதர் அவருக்கு எதிரே வந்தார். 4வந்தவர் முன்னவரிடம் இவ்வாறு சொன்னார்: ஒடிச்சென்று அந்த இளைஞனிடம் நீ சொல்ல வேண்டியது: ‘எருசலேமில் எண்ணிறந்த மனிதர்களும் திரளான கால்நடைகளும் இருப்பதால் அந்நகரம் மதில் இல்லாத ஊர்களைப்போல் இருக்கும்! 5ஏனெனில் அதைச் சுற்றிலும் நானே நெருப்புச் சுவராய் அமைவேன்; அதனுள் உறையும் மாட்சியாய் விளங்குவேன்,’ என்கிறார் ஆண்டவர்.

நாடு கடத்தப்பட்டோர் திரும்பிவர அழைப்பு


6“எழுந்திருங்கள், வடநாட்டிலிருந்து ஓடிவாருங்கள், என்கிறார் ஆண்டவர்; உலகின் நான்கு திசைகளுக்கும் உங்களைச் சிதறடித்தவர் நானே, என்கிறார் ஆண்டவர். 7பாபிலோனில் குடியிருக்கும் சீயோனே! தப்பிப் பிழைத்துக்கொள். 8என்னைத் தமது மாட்சிக்கென்று அனுப்பிய ஆண்டவர் உங்களைக் கொள்ளையடித்த வேற்றினத்தாரைக் குறித்து, ‘உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்’ என்கிறார்.” 9‘இதோ, அவர்களுக்கு எதிராக என் கையை ஓங்கப் போகிறேன்; தங்களுக்குப் பணிவிடை செய்தவர்களுக்கே கொள்ளைப்பொருள் ஆவார்கள்; அப்பொழுது நீங்கள், என்னை அனுப்பியது படைகளின் ஆண்டவர் என்று அறிந்து கொள்வீர்கள். 10மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்” என்கிறார் ஆண்டவர். 11அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்; நீங்களும், படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை அறிந்து கொள்வீர்கள். 12ஆண்டவர் யூதாவைப் புனித நாட்டில் தமக்குரிய பங்காக உரிமைச் சொத்தாக்கிக் கொள்வார். எருசலேமை மீண்டும் தேர்ந்துகொள்வார்.” 13மானிடரே, நீங்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் அமைதியாயிருங்கள்; ஏனெனில் அவர்தம் புனித இடத்திலிருந்து எழுந்தருளினார்.



அதிகாரம் 3:1-10

தலைமைக் குருக்களைக் குறித்துக் கண்ட காட்சி


1பின்பு அவர் தலைமைக் குருவாகிய யோசுவாவை எனக்குக் காட்டினார். அவர் ஆண்டவரின் தூதர் முன்னிலையில் நின்றுகொண்டிருந்தார். அவர்மேல் குற்றம் சாட்டுவதற்கு அவரது வலப்பக்கத்தில் சாத்தானும் நின்று கொண்டிருந்தான்.✠ 2அப்பொழுது ஆண்டவரின் தூதர் சாத்தானை நோக்கி, “சாத்தானே, ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக! எருசலேமைத் தெரிந்தெடுத்த ஆண்டவர் உன்னை அதட்டுவாராக! அடுப்பிலிருந்து எடுத்த கொள்ளியல்லவா இவர்?” என்றார்.✠

3யோசுவாவோ அழுக்கு உடைகளை உடுத்தியவராய் தூதர்முன் நின்று கொண்டிருந்தார். தூதர் தம்முன் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி, 4“அழுக்கு உடைகளை இவரிடமிருந்து களைந்துவிடுங்கள்” என்றார். பின்பு அவரிடம், “உன்னிடமிருந்து உன் தீச்செயல்களை அகற்றி விட்டேன்; நீ உடுத்திக் கொள்வதற்குப் பட்டாடைகளை அளிப்பேன்” என்றார். 5மேலும், “தூய்மையான தலைப்பாகை ஒன்றை அவருக்கு அணிவியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் தூய்மையான தலைப்பாகையை அணிவித்துப் பட்டாடைகளை உடுத்தினர். ஆண்டவரின் தூதர் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.

6ஆண்டவரின் தூதர் யோசுவாவுக்கு விடுத்த உறுதிமொழி இதுவே: 7“நீ என் வழிகளில் நடந்து, என் திருமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகினால், நீ என் இல்லத்தை ஆள்வாய்; என் திருமுற்றங்களுக்கும் பொறுப்பாளி ஆவாய்; இங்கே நிற்கும் தூதர்கள் இடையே சென்று வரும் உரிமையை உனக்குத் தருவேன்” என்று படைகளின் ஆண்டவர் கூறுகிறார்.

8தலைமைக் குரு யோசுவாவே! நீயும் உன் முன்னே அமர்ந்திருக்கும் உன் தோழரும் கேளுங்கள். அவர்கள் நல்லடையாளமான மனிதர்கள்; இதோ நான் தளிர் எனப்படும் என் ஊழியன் தோன்றுமாறு செய்வேன்;✠ 9யோசுவாவின் முன்னிலையில் நான் வைத்த கல்லைப்பார்; இந்த ஒரே கல்லில் ஏழு பட்டைகள்; அதில் நான் எழுத்துகளைப் பொறித்திடுவேன், என்கிறார் படைகளின் ஆண்டவர். 10ஒரே நாளில் இந்த நாட்டின் தீச்செயலை அகற்றுவேன். படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: அந்நாளில் ஒவ்வொருவரும் தம் அடுத்திருப்பவரைத் தம் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் தங்கி இளைப்பாற அழைப்பார்.✠


3:1 எஸ்ரா 5:2; திவெ 12:10. 3:2 யூதா 9. 3:8 எரே 23:5; 33:25; செக் 6:12. 3:10 மீக் 4:4.



அதிகாரம் 4:1-14

விளக்குத்தண்டைக் குறித்த காட்சி


1என்னோடு பேசிய தூதர் மீண்டும் வந்து, உறக்கத்தில் ஆழ்ந்திருப்பவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி, 2“நீ என்ன காண்கிறாய்?” என்று என்னைக் கேட்க, நான், “இதோ முழுவதும் பொன்னாலான விளக்குத் தண்டு ஒன்றைக் காண்கிறேன்; அதன் உச்சியில் கிண்ணம் ஒன்று உள்ளது; அக்கிண்ணத்தின்மேல் ஏழு அகல்கள் இருக்கின்றன; மேலே உள்ள ஒவ்வோர் அகலுக்கும் ஏழு மூக்குகள் உள்ளன; 3விளக்குத் தண்டின் அருகில் வலப்புறம் ஒன்றும் இடப்புறம் ஒன்றுமாக இரு ஒலிவ மரங்கள் இருக்கின்றன” என்றேன்.✠ 4அப்போது என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரை நோக்கி, நான், “என் தலைவரே! இவை எதைக் குறிக்கின்றன?” என்று வினவினேன். என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதர், 5“இவை எதைக் குறிக்கின்றன என்பது உனக்குத் தெரியாதா?” எனக் கேட்டார். நான் “என் தலைவரே! எனக்குத் தெரியாது” என்றேன்.


செருபாபேலுக்கு ஆண்டவரின் வாக்குறுதி


6மீண்டும் அவர் என்னிடம், “செருபாபேலுக்கு ஆண்டவர் அருளியவாக்கு இதுவே: உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல; ஆனால் எனது ஆவியாலே ஆகும்,” என்கிறார் படைகளின் ஆண்டவர்.✠ 7மாபெரும் மலையே! செருபாபேலுக்குமுன் உன் நிலை என்ன? ஒரு சமவெளிக்கு ஒப்பாவாய்; அவரே தலையாய கல்லைக் கொண்டு வருவார்; அப்போது அதன்மேல் ‘அருள்பொழிக! அருள்பொழிக!’ என்ற ஆரவாரம் ஒலிக்கும்” என்றார்.

8ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது. 9“செருபாபேலின் கைகளே இக்கோவிலுக்கு அடித்தளம் இட்டன. அவர் கைகளே இவ்வேலையை முடித்துவைக்கும். என்னை உங்களிடம் அனுப்பியவர் படைகளின் ஆண்டவரே என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள்.” 10வேலை தொடங்கிய நாளை அவமதித்தவர்கள் யாரோ அவர்கள் செருபாபேலின் கையில் இரு தூக்கு நூற்குண்டு இருப்பதைக் கண்டு அகமகிழ்வார்கள்.✠

11“அந்த அகல்கள் ஏழும் நிலவுலகெங்கும் சுற்றிப் பார்க்கும் ஆண்டவரின் கண்கள்” என்றார். அப்போது நான், “விளக்குத் தண்டின் அருகில் வலப்புறமும் இடப்புறமும் உள்ள இந்த இரு ஒலிவ மரங்களும் எதைக் குறிக்கின்றன?” என வினவினேன்.✠ 12மீண்டும் நானே அவரிடம், “எண்ணெய் ஊற்றுவதற்கென வைத்திருக்கும் இரண்டு பொற்குழாய்களின் அருகில் ஒலிவ மரக்கிளைகள் இரண்டு இருப்பதன் பொருள் என்ன?” எனக் கேட்டேன். 13அதற்கு அவர், “இவை எதைக் குறிக்கின்றன என்பது உனக்குத் தெரியாதா?” என்றார். நான், “தெரியாது என் தலைவரே” என்றேன். 14அதற்கு அவர், “இவை அனைத்துலகின் ஆண்டவர் திருமுன் நிற்கின்ற திருநிலைப்படுத்தப்பட்ட இருவரைக் குறிக்கின்றன” என மறுமொழி பகர்ந்தார்.


4:3 திவெ 11:4. 4:6 எஸ்ரா 5:2. 4:10 திவெ 5:6. 4:11 திவெ 11:4.



அதிகாரம் 5:1-11

பறக்கும் சுருள் பற்றிய காட்சி


1மீண்டும் நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது இதோ, 2பறக்கும் ஏட்டுச்சுருள் ஒன்றைக் கண்டேன். “நீ காண்பது என்ன?” என்று அத்தூதர் என்னைக் கேட்க, நான், “பறக்கும் ஏட்டுச்சுருள் ஒன்றைக் காண்கிறேன்; அதன் நீளம் இருபது முழம், அகலம் பத்து முழம்” என்று பதிலளித்தேன். 3அப்போது அவர் என்னிடம், “அனைத்துலகின்மீதும் விழுகின்ற சாபமே இது; ஒருபுறம் எழுதியுள்ளபடி, திருடன் எவனும் இங்கிருந்து ஒழிக்கப்படுவான்; மறுபுறம் எழுதியுள்ளபடி, பொய்யாணை இடுகிறவன் எவனும் தண்டனைக்குத் தப்பவே மாட்டான். 4நான் அந்தச் சாபத்தை அனுப்புவேன்” என்கிறார் படைகளின் ஆண்டவர். “அது திருடரின் வீட்டிற்குள்ளும் என் பெயரால் பொய்யாணை இடுவோரின் இல்லத்திற்குள்ளும் நுழைந்து, அவரவர் வீட்டில் தங்கி, மரங்கள் கற்கள் உட்பட அவ்வீட்டையே அழித்து விடும்.”


மரக்காலுக்குள் பெண்


5பின்பு என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதர் வெளியே வந்து என்னிடம், “உன் கண்களை உயர்த்தி, அங்கிருந்து வருவது யாது எனப்பார்” என்றார். 6“அது என்ன?” என்று நான் திருப்பிக் கேட்க, “வெளிவரும் ஒரு மரக்கால்!” என்றார். தொடர்ந்து அவர், “இதுதான் நில உலகெங்கும் பரவியிருக்கும் அவர்களின் தீச்செயல்” என மொழிந்தார். 7அதன் ஈய மூடி தூக்கி உயர்த்தப்பட்டது இதோ, மரக்காலின் உள்ளே ஒரு பெண் அமர்ந்திருந்தாள். 8அப்போது அத்தூதர், “இவளே அக்கொடுமை” எனக் கூறி, அவளை அந்த மரக்காலுக்குள் திணித்துப் பளுவான ஈய மூடியால் அதை அடைத்தார். 9மீண்டும் நான் என் கண்களை உயர்த்திப் பார்த்த போது இதோ, வெளிவருகின்ற இரண்டு பெண்களைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் இறக்கைகள் போல் இறக்கைகள் இருந்தன. அவர்களுடைய இறக்கைகளில் காற்று நிரம்பியிருந்தது; அவர்கள் மரக்காலை மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் தூக்கிக் கொண்டு போனார்கள். என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதரிடம், 10“இவர்கள் மரக்காலை எங்கே கொண்டு போகிறார்கள்?” என்று நான் கேட்டேன். 11அதற்கு அவர், “சீனார் நாட்டிலே அதற்கொரு கோவில் கட்டுவதற்கு அதைக் கொண்டு போகிறார்கள். அங்கே கோவில் எழுப்பி மரக்காலை அதற்குரிய மேடையில் நிலைநிறுத்துவார்கள்” என்றார்



அதிகாரம் 6:1-15

நான்கு தேர்கள் பற்றிய காட்சி


1மீண்டும் நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இரு மலைகளுக்கு இடையிலிருந்து நான்கு தேர்கள் புறப்பட்டு வருவதைக் கண்டேன்; அம்மலைகள் வெண்கல மலைகள். 2முதல் தேரில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாவது தேரில் கறுப்புக் குதிரைகளும்,✠ 3மூன்றாவதில் வெள்ளைக் குதிரைகளும், நான்காவதில் புள்ளிகளை உடைய கறுப்புநிற வலிமையான குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன.✠ 4என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரிடம் நான் “என் தலைவரே! இவை என்ன?” என்று கேட்டேன். 5அத்தூதர், “இவை அனைத்துலக ஆண்டவரின் திருமுன்னிருந்து புறப்பட்டுச் செல்கின்ற வாகனத்தின் நாற்றிசைக் காற்றுகள்.✠

6கறுப்புக் குதிரைகள் பூட்டிய தேர் வடநாட்டை நோக்கிச் செல்கிறது; வெண்ணிறக் குதிரைகள் அவற்றைப் பின்தொடர்ந்து போகின்றன; புள்ளியுள்ள கறுப்புநிறக் குதிரைகளோ தென்னாட்டை நோக்கிச் செல்கின்றன” என்று கூறினார். 7வலிமையான குதிரைகள் புறப்பட்டுச் சென்று உலகெங்கும் சுற்றிவருவதற்குத் துடித்தன. அப்போது அவர், “போய் உலகைச் சுற்றி வாருங்கள்” என்றார். அவ்வாறே அவை உலகெங்கும் சுற்றித் திரிந்தன. 8பின்பு அவர் என்னை நோக்கிக் கூக்குரலிட்டு, “இதோ பார்! வடநாட்டை நோக்கிச் சென்றவை அந்நாட்டில் எனது உள்ளம் அமைதி கொள்ளும்படி செய்திருக்கின்றன” என்றார்.


யோசுவாவை முடிசூட்டுவிக்க ஆண்டவரது கட்டளை


9மீண்டும் ஆண்டவரது வாக்கு எனக்கு அருளப்பட்டது: 10நாடுகடத்தப்பட்டுப் பாபிலோனிலிருந்து திரும்பி வந்திருக்கின்ற என் தாய், தோபியா, எதாயா என்பவர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்றுக்கொள்; அன்றைக்கே செப்பனியாவின் மகனான யோசியாவின் இல்லத்திற்குப் போ. 11அங்கே அவர்களிடம் பெற்றுக்கொண்ட பொன் வெள்ளியைக் கொண்டு முடி செய்து, தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமான யோசுவாவின் தலையில் அதைச் சூட்டு; 12சூட்டியபின் இவ்வாறு சொல்: “படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ, ‘தளிர்’ என்னும் பெயர் கொண்ட மனிதர் தம் இடத்திலிருந்து துளிர்ப்பார்; ஆண்டவரின் கோவிலைக் கட்டியெழுப்புவார்;✠ 13ஆண்டவரின் கோவிலைக் கட்டியெழுப்புவதுமன்றி, அரச மாண்பைக் கொண்டவராய், அரியணையில் வீற்றிருந்து அவர் ஆட்சி செலுத்துவார்; ஓர் குருவும் தமது அரியணையில் அமர்ந்திருப்பார்; 14அவர்கள் இருவர்க்கிடையேயும் நல்லிணக்கம் நிலைபெறும். அந்த மணிமுடி ஆண்டவரின் கோவிலில் எல்தாய், தொபியா, எதாயா என்பவர்களுக்கும் செப்பனியாவின் மகன் யோசியாவிற்கும் நினைவுச் சின்னமாய் இருக்கும்.

15தொலையில் இருப்போரும் வந்து ஆண்டவரின் கோவிலைக் கட்டியெழுப்பத் துணைபுரிவர்; அப்போது படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு ஆர்வத்துடன் செவிசாய்த்து நடந்தீர்களானால் இவையெல்லாம் நிறைவேறும்.”


6:2 திவெ 6:45. 6:3 திவெ 6:2. 6:5 திவெ 7:1. 6:12 எரே 23:5; 33:15; செக் 3:8.



அதிகாரம் 7:1-14

போலி நோன்புக்கு எதிரான கண்டனக் குரல்


1அரசன் தாரியுவின் நான்காம் ஆட்சியாண்டில் கிஸ்லேவு என்னும் ஒன்பதாம் மாதத்தின் நான்காம் நாளன்று ஆண்டவரின் வாக்கு செக்கரியாவுக்கு அருளப்பட்டது. 2பெத்தேலில் வாழ்வோர் சரேட்சரையும் இரகேம்மெலக்கையும் மற்றும் அவனுடைய ஆள்களையும் ஆண்டவரின் அருளைப் பெற மன்றாடுமாறு அனுப்பினார்கள். மேலும் 3படைகளின் ஆண்டவரது கோவிலில் இருக்கும் குருக்களையும் இறைவாக்கினர்களையும் கண்டு, “நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் செய்துவந்தது போல் ஐந்தாம் மாதத்தில் நோன்பிருந்து புலம்ப வேண்டுமா?” என்று கேட்டு வரவும் இவர்களை அனுப்பினார்கள்.

4அப்போது படைகளின் ஆண்டவரது வாக்கு எனக்கு அருளப்பட்டது: 5நாட்டின் எல்லா மக்களுக்கும் குருக்களுக்கும் நீ கூறவேண்டியது: “இந்த எழுபது ஆண்டுகளாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் நோன்பிருந்து ஓலமிட்டு அழுதீர்களே, எனக்காகவா நோன்பிருந்தீர்கள்? 6நீங்கள் உணவருந்தியபோதும் குடித்தபோதும் உங்களுக்காகத்தானே உணவருந்தினீர்கள்? உங்களுக்காகத்தானே குடித்தீர்கள்? 7எருசலேமில் மக்கள் குடியேறிய போதும், அந்நகர் சீரும் சிறப்புமாய் இருந்தபோதும், அதைச் சூழ்ந்திருந்த நகர்கள் தென் நாடு, சமவெளி நிலம் ஆகியவற்றில் மக்கள் குடியேறிய போதும், முன்னாளைய இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் முழங்கிய சொற்கள் இவை அல்லவா?”


கீழ்ப்படியாமையே நாடுகடத்தப் பட்டதற்குக் காரணம்


8மீண்டும் ஆண்டவரின் வாக்கு செக்கரியாவுக்கு அருளப்பட்டது. 9“படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நேர்மையுடன் நீதி வழங்குங்கள்; ஒருவர்க்கொருவர் அன்பும் கருணையும் காட்டுங்கள்; 10கைம்பெண்ணையோ, அனாதையையோ, அன்னியரையோ, ஏழைகளையோ ஒடுக்க வேண்டாம்; உங்களுக்குள் எவரும் தம் சகோதரனுக்கு எதிராகத் தீமை செய்ய மனத்தாலும் நினைக்கவேண்டாம்.” 11ஆனால் அவர்களோ அதற்குச் செவிகொடுக்க மறுத்தார்கள்; இறுகிய மனத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். தங்கள் காதுகளைப் பொத்திக்கொண்டார்கள். 12படைகளின் ஆண்டவர் தம் ஆவியால் முன்னாளைய இறைவாக்கினர்கள் வாயிலாக அனுப்பித்தந்த திருச்சட்டத்தையையும் வாக்குகளையும் கேட்டுவிடாதபடி பாறையைப்போல் தங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக் கொண்டார்கள்; ஆதலால் படைகளின் ஆண்டவர் கடுஞ்சினமுற்றார். 13“நான் கூப்பிட்டபோது அவர்கள் கேளாதிருந்தது போல, அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேட்கவில்லை,” என்கிறார் படைகளின் ஆண்டவர். 14“ஆகவே முன்பின் அறியாத வேற்றினத்தார் நடுவிலும் அவர்களைச் சிதறடித்தேன்; இவ்வாறு அவர்கள் விட்டுச்சென்ற நாடு பாழடைந்து போயிற்று; போவார் வருவார் எவருமே அங்கில்லை; இனிய நாட்டைப் பாழாக்கிவிட்டார்கள்



அதிகாரம் 8:1-23

எருசலேமைக் கட்டுவதற்கு ஆண்டவரின் வாக்குறுதி


1படைகளின் ஆண்டவரது வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: 2“சீயோன்மீதுள்ள அன்பு வெறியால் நான் கனன்று கொண்டிருக்கின்றேன்; அதன் மீதுள்ள அன்புவெறியால் நான் சினமுற்றிருக்கின்றேன். 3“ஆண்டவர் கூறுவது இதுவே: சீயோனுக்கு நான் திரும்பி வரப்போகிறேன்; எருசலேம் நடுவில் குடியிருக்கப் போகிறேன்; எருசலேம் ‘உண்மையுள்ள நகர்’ என்றும், படைகளின் ஆண்டவரது மலை ‘திருமலை’ என்றும் பெயர்பெற்று விளங்கும். 4படைகளிள் ஆண்டவர் கூறுவது இதுவே: எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் மீண்டும் அமர்ந்திருப்பார்கள்; வயது முதிர்ந்தவர்களானதால் ஒவ்வொருவரும் தம் கையில் கோல் வைத்திருப்பார்கள்; 5நகரின் தெருக்களில் சிறுவரும் சிறுமியரும் நிறைந்திருப்பார்கள்; அவர்கள் அதன் தெருக்களில் விளையாடிக்கொண்டிருப்பார்கள். 6படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “இம்மக்களில் எஞ்சியிருப்போரின் கண்களுக்கு இவையெல்லாம் அந்நாள்களில் விந்தையாய்த் தோன்றினாலும், என் கண்களுக்கு விந்தையாய்த் தோன்றுமோ?” என்கிறார் படைகளின் ஆண்டவர். 7படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்; 8அவர்களை அழைத்துக் கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்; அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்; உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்.” 9படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “படைகளின் ஆண்டவரது கோவிலைக் கட்டியெழுப்பும்படி அதற்கு அடித்தளம் இட்ட நாளிலிருந்து பேசிய இறைவாக்கினரின் வாய்மொழிகளுக்குச் செவிசாய்ப்போரே, உங்கள் கைகள் வலிமை பெறட்டும். 10ஏனெனில், இந்நாள்கள் வரை மனிதருக்கோ கால்நடைகளுக்கோ கூலிகிடைக்கவில்லை; போவார் வருவாருக்கோ பகைவரிடமிருந்து பாதுகாப்பு இல்லை. நான் எல்லா மனிதரையும் ஒருவருக்கு எதிராக ஒருவர் எழும்படி செய்துவிட்டேன். 11இப்பொழுதோ, இம்மக்களில் எஞ்சியிருப்போருக்கு முன்னாளில் நான் இருந்தது போல இருக்கமாட்டேன்,” என்கிறார் படைகளின் ஆண்டவர்.✠ 12ஏனெனில், அவர்கள் அமைதியில் பயிர் செய்வார்கள். திராட்சைச் செடி தன் கனியைக் கொடுக்கும்; வயல் நிலம் தன் விளைவைத் தரும்; வானம் பனியைப் பொழியும்; நானோ இம்மக்களில் எஞ்சியிருப்போர் இவற்றையெல்லாம் உரிமையாக்கிக் கொள்ளச் செய்வேன். 13யூதா குடும்பத்தாரே! இஸ்ரயேல் குடும்பத்தாரே! வேற்றினத்தாரிடையே நீங்கள் ஒரு சாபச் சொல்லாய் இருந்தீர்கள்; இப்பொழுதே நான் உங்களை மீட்டருள்வேன்; நீங்களும் ஓர் ஆசி மொழி ஆவீர்கள்; அஞ்சாதீர்கள்; உங்கள் கைகள் வலிமை பெறட்டும்.”

14ஆகவே படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “உங்கள் மூதாதையர் என்னைச் சினமடையச் செய்தபோது நான் கருணை காட்டாது உங்களுக்குத் தீங்கு செய்யத் திட்டமிட்டேன்,” என்கிறார் படைகளின் ஆண்டவர். 15அவ்வாறே இந்நாள்களில் மீண்டும் எருசலேமுக்கும் யூதாவின் குடும்பத்தாருக்கும் நன்மை செய்யத் திட்டமிட்டுள்ளேன்; ஆகையால் அஞ்சாதீர்கள். 16நீங்கள் கடைப்பிடித்து ஒழுகவேண்டியவை இவையே: ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள்; உங்கள் நகர வாயில்களில் நீங்கள் அளிக்கும் தீர்ப்பு நீதியாகவும் நல்லுறவுக்கு வழிகோலுவதாயும் இருக்கட்டும்; 17ஒருவருக்கு எதிராக மற்றொருவர் தீமை செய்ய மனத்தாலும் நினைக்க வேண்டாம்; பொய்யாணை இடுவதை விரும்பாதீர்கள்; ஏனெனில், இவற்றையெல்லாம் நான் வெறுக்கிறேன்,” என்கிறார் ஆண்டவர்.

18படைகளின் ஆண்டவரது வாக்கு எனக்கு மீண்டும் அருளப்பட்டது: 19படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நான்காம் மாதத்தின் நோன்பும், ஐந்தாம் மாதத்தின் நோன்பும், ஏழாம் மாதத்தின் நோன்பும், பத்தாம் மாதத்தின் நோன்பும் யூதா குடும்பத்தார்க்கு மகிழ்ச்சியும் களிப்பும் நிறைந்த மாபெரும் திருவிழா நாள்களாக மாறிவிடும். ஆதலால் வாய்மையையும் நல்லுறவையும் நாடுங்கள்.

20படைகளின் ஆண்டவர் கூறுகிறார்; மக்களினங்களும் பல நகர்களில் குடியிருப்போரும்கூட வருவார்கள். 21ஒருநகரில் குடியிருப்போர் மற்றொரு நகரினரிடம் சென்று, “நாம் ஆண்டவரது அருளை மன்றாடவும் படைகளின் ஆண்டவரை வழிபடவும், தேடவும், நாடவும் விரைந்து செல்வோம், வாருங்கள்; நாங்களும் வருகிறோம்” என்று சொல்வார்கள். 22மக்களினங்கள் பலவும் வலிமை வாய்ந்த வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள். 23படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “அந்நாள்களில் ஒவ்வொரு மொழி பேசும் வேற்றினத்தாரிலும் பத்துப்பேர் மேலாடையைப் பற்றிக் கொண்டு, ‘கடவுள் உங்களோடு இருக்கின்றார்’ என்று நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு வருகிறோம் என்பார்கள்.”


8:11 எபே 4:25.



அதிகாரம் 9:1-17

அண்டை நாட்டினருக்கு வரும் தண்டனை


1ஓர் இறைவாக்கு: ஆண்டவரின் வாக்கு அதிராக்கு நாட்டிற்கு எதிராக எழும்புகிறது; அது தமஸ்கு நகர்மீது இறங்கித் தங்கும்; ஏனெனில் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களைப் போலவே சிரியா நாட்டின் நகர்களும் ஆண்டவருக்கே உரியன.✠ 2அதன் எல்லைக்கு அடுத்துள்ள ஆமாத்தும் ஞானத்தில் சிறந்த தீரும் சீதோனும் அவருக்கே சொந்தம். 3தீர் தன்னைச் சுற்றிலும் அரண் ஒன்றைக் கட்டியெழுப்பியது; தூசியைப் போல் வெள்ளியையும் தெருச் சேற்றைப்போல் பொன்னையும் சேமித்தது. 4இதோ என் தலைவர் அவற்றைப் பறிமுதல் செய்வார்; அதன் அரணைக் கடலுக்குள் தூக்கி எறிவார்; அந்நகரும் நெருப்புக்கு இரையாகும். 5அஸ்கலோன் இதைக் கண்டு அஞ்சி நடுங்கும்; காசா நகர் வேதனையால் துடிதுடிக்கும்; அவ்வாறே எக்ரோனும் நம்பிக்கை இழந்துவிடும். காசா நகரிலிருந்து அரசன் அழித்தொழிவான்; அஸ்கலோன் குடியற்றுப்போகும். 6அஸ்தோதில் கலப்பினத்தார் குடியிருப்பார்கள்; பெலிஸ்தியரின் ஆணவத்தை நான் ஒழித்திடுவேன்.

7இரத்தம் வடியும் இறைச்சியை
அவர்கள் வாயினின்று அகற்றுவேன்;
அருவருப்பான உணவை அதன்
பற்களிடையிருந்து நீக்குவேன்;
அவ்வினம் நம் கடவுளுக்கு
எஞ்சியதாகும்;
அது யூதாவின் குலங்களில்
தலையாயது ஆகும்.
எக்ரோன் நகரத்தார்
எபூசியரைப் போல் இருப்பார்கள்;

8அங்குமிங்கும் தாக்கும்
படையினின்று
எனது இல்லத்தைக் காப்பதற்கு
நான் பாளையம் இறங்குவேன்;
ஒடுக்குகிறவன் எவனும் இனி
அவர்களின் நகர்களை
ஊடுருவிச் செல்லான்;
ஏனெனில், என் கண்களாலேயே
யாவற்றையும் நான்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வருங்கால அரசன்


9மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு;
மகளே எருசலேம்! ஆர்ப்பரி.
இதோ! உன் அரசர்
உன்னிடம் வருகிறார்.
அவர் நீதியுள்ளவர்;
வெற்றிவேந்தர்;
எளிமையுள்ளவர்;
கழுதையின்மேல்,
கழுதைக் குட்டியாகிய
மறியின்மேல் ஏறி வருகிறவர்.✠

10அவர் எப்ராயிமில் தேர்ப்படை
இல்லாமற் போகச்செய்வார்;*
எருசலேமில் குதிரைப்படையை
அறவே ஒழித்து விடுவார்;*
போர்க் கருவியான வில்லும்
ஒடிந்து போகும்.
வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்;
அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை,
பேராறுமுதல்
நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.✠✠

கடவுளின் மக்களுக்குக் கிடைக்கும் மீட்பு


11உன்னைப் பொறுத்தமட்டில்
உன்னோடு நான் செய்த
உடன்படிக்கையின்
இரத்தத்தை முன்னிட்டு,
சிறைப்பட்டிருக்கும்
உன்னைச் சார்ந்தோரை
நீரற்ற படுகுழியிலிருந்து விடுவிப்பேன்.✠

12நம்பிக்கையுடன் காத்திருக்கும்
சிறைக் கைதிகளே,
உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்;
இருமடங்கு நன்மைகள்
நான் உங்களுக்குத் தருவேன் என்று
நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.

13நான் யூதாவை
என் வில்லாக்கிக் கொண்டேன்;
எப்ராயிமை அம்பாக
அமைத்துக்கொண்டேன்;
சீயோனே! உன் மக்களை
யவனருக்கு எதிராக ஏவிவிட்டு
உன்னை வல்லவனின்
வாள் போல் ஆக்குவேன்.

14அப்போது அவர்கள்மீது
ஆண்டவர் தோன்றுவார்.
அவரது அம்பு மின்னலைப்போல்
பாய்ந்து செல்லும்;
தலைவராகிய ஆண்டவர்
எக்காளம் ஊதி ஒலி எழுப்புவார்;
அவர் தென்திசைச்
சூறாவளிக்கு இடையே
நடந்து வருவார்.

15படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு
அடைக்கலமாய் இருப்பார்;
அவர்கள் தங்கள் பகைவரை
ஒழித்துக்கட்டி,
அவர்களுடைய கவண் கற்களை
மிதித்துப்போடுவார்கள்;
திராட்சை இரசத்தைப்போல்
அவர்களது குருதியைக் குடிப்பார்கள்;
கிண்ணம்போல் நிரம்பி வழிந்தும்,
பலிபீடத்தின் கொம்புகளைப் போல்
நனைந்தும்,
இரத்தத்தால் நிறைந்திருப்பார்கள்.

16அந்நாளில் அவர்களுடைய
கடவுளாகிய ஆண்டவர்,
தம் மக்களாகிய அவர்களை
ஆயர் தம் மந்தையை மீட்பது போல்
மீட்டருள்வார்;
அவர்களும் அவரது நாட்டில்
மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள
கற்களைப்போல் ஒளிர்வார்கள்.

17ஆம், அக்காட்சி எத்துணை இனியது;
எத்துணை அழகியது;
கோதுமை இளங்காளையரையும்
புதுத்திராட்சை இரசம் கன்னியரையும்
செழிப்புறச் செய்யும்.


9:1 எசா 17:1-3; எரே 49:23-27; ஆமோ 1:3-5. 9:1-4 எசா 23:1-18; எசே 26:1-28:26; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; மத் 11:21-22; லூக் 10:13-14. 9:5-7 எசா 14:29-31; எரே 47:1-7; எசே 35:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7. 9:9 மத் 21:5; யோவா 12:15. 9:10 திபா 72:8. 9:11 விப 24:8.


9:10 ‘செய்வேன்… விடுவேன்’ என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 10:1-12

விடுதலைக்கான ஆண்டவரின் வாக்குறுதி


1இளவேனில் காலத்தில் மழைக்காக
ஆண்டவரிடம் மன்றாடுங்கள்;
ஆண்டவரே
மின்னல்களை உண்டாக்குபவர்;
மனிதர்க்கு அவரே மழையைத் தருபவர்;
வயல்வெளிகளில் பயிரினங்களை
முளைப்பிப்பவரும் அவரே;

2குலதெய்வங்கள்
வீணானதையே கூறுகின்றன;
குறிசொல்வோர்
பொய்க்காட்சி காண்கின்றனர்;
அவர்கள் போலிக் கனவுகளை
எடுத்துரைக்கின்றனர்;
வெறுமையான ஆறுதல் மொழிகளைச்
சொல்கின்றனர்;
ஆதலால், மக்கள் ஆடுகளைப்போல்
சிதறுண்டு அலைந்தனர்;
ஆயரில்லாததால் துன்புறுகின்றனர்.

3ஆயர்களுக்கு எதிராக
என் கோபம் பற்றியெரிகின்றது;
தலைவர்களை நான்
தண்டிக்கப் போகின்றேன்;
ஏனெனில், படைகளின் ஆண்டவர்
தம் மந்தையாகிய யூதா குடும்பத்தாரைக்
கண்காணிக்கிறார்;
அவர்களை, வலிமைமிகு
போர்க் குதிரைகளைப்போல் ஆக்குவார்.

4அவர்களிடமிருந்தே
மூலைக் கல் தோன்றும்;
கூடார முளையும், போர்வில்லும்,
ஆட்சியாளர் அனைவரும் ஒருங்கே
அவர்களிடமிருந்துதான் தோன்றுவர்.

5அவர்கள், ஆற்றல்மிக்க
போர்வீரர்களைப்போல்,
பகைவரைச் சேற்றில் தள்ளி
மிதிப்பார்கள்.

6“யூதா குடும்பத்தை
ஆற்றல் மிக்கதாய் ஆக்குவேன்;
யோசேப்பு குடும்பத்தை மீட்டருள்வேன்;
அவர்கள்மீது
இரக்கம் கொண்டுள்ளதால்
அவர்களை நான்
திரும்பி வரச்செய்வேன்;
அவர்கள் என்னால்
தள்ளிவிடப்படாதவர்களைப் போல்
இருப்பார்கள்;
ஏனெனில், நானே அவர்களுடைய
கடவுளாகிய ஆண்டவர்;
நான் அவர்களின் மன்றாட்டுக்கு
மறுமொழி அளிப்பேன்.

7எப்ராயிம் மக்கள்
ஆற்றல்மிக்க வீரரைப்போலாவார்கள்;
திராட்சை மது அருந்தியவரின்
உள்ளத்தைப்போல்
அவர்கள் உள்ளம் களிப்படையும்;
அவர்கள் பிள்ளைகளும்
அதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள்;
ஆண்டவரில் அவர்கள் இதயம்
மகிழ்ந்து களிப்புறும்.

8சீழ்க்கை ஒலி எழுப்பி
நான் அவர்களைச்
சேர்த்துக் கொள்வேன்;
ஏனெனில் நானே அவர்களை
மீட்டருள்வேன்;
முன்போலவே அவர்கள்
பல்கிப் பெருகுவார்கள்.

9மக்களினங்களிடையே
நான் அவர்களைச் சிதறடித்தாலும்,
தொலை நாடுகளில்
என்னை அவர்கள்
நினைத்துக் கொள்வார்கள்;
தங்கள் மக்களோடு வாழ்ந்து
திரும்பி வருவார்கள்.

10நான் அவர்களை எகிப்து நாட்டினின்று
திரும்பிவரச் செய்வேன்;
அசீரியாவிலிருந்து அவர்களைக்
கூட்டிக்கொண்டு வருவேன்;
கிலயாது, லெபனோன் நாடுகளுக்கு
அவர்களைக் கொண்டு வருவேன்;
இடம் இல்லாமல் போகுமட்டும்
வந்து சேருவார்கள்.

11எகிப்தியக் கடலை அவர்கள்
கடந்து செல்வார்கள்;
கடல் அலைகள்
அடித்து நொறுக்கப்படும்;
பேராற்றின் ஆழங்களெல்லாம்
வறண்டுபோகும்;
அசீரியாவின் ஆணவம் அடக்கப்படும்;
எகிப்து நாட்டின் செங்கோல்
அகற்றப்படும்.

12ஆண்டவருக்குள் அவர்களை
ஆற்றல் மிக்கவர்கள் ஆக்குவேன்;
ஆண்டவரின் பெயரில்
அவர்கள் பெருமைகொள்வார்கள்,”
என்கிறார் ஆண்டவர்.



அதிகாரம் 11:1-17

1லெபனோனே! உன் வாயில்களைத்
திறந்துவை; நெருப்பு உன் கேதுரு
மரங்களைச் சுட்டெரிக்கட்டும்.

2தேவதாரு மரங்களே!
புலம்பியழுங்கள்;
ஏனெனில், கேதுரு மரங்கள்
வீழ்த்தப்பட்டன;
ஓங்கி வளர்ந்த மரங்கள் பாழாயின;
பாசான் நாட்டுக் கருவாலி மரங்களே!
புலம்பியழுங்கள்;
ஏனெனில், அடர்ந்த காடு
வெட்டி வீழ்த்தப்பட்டது.

3அவர்கள் அலறியழும் குரல் கேட்கின்றது;
ஏனெனில் அவர்களின் மேன்மை
பாழ்படுத்தப்பட்டது;
இளம் சிங்கங்களின் கர்ச்சனை
கேட்கின்றது;
ஏனெனில், யோர்தானின் காடு
அழிக்கப்பட்டது.


ஆயர் இருவர்


4என் கடவுளாகிய ஆண்டவர் கூறியது இதுவே: வெட்டுவதற்கு குறிக்கப்பட்ட ஆடுகளை மேய்ப்பாயாக! 5விலைக்கு வாங்குவோர் அவற்றைக் கொன்றுவிடுவர்; ஆயினும் குற்றப்பழி அவர்கள் மீது சுமத்தப்படாது. அவற்றை விற்பவர்களோ, “ஆண்டவர் போற்றி! போற்றி! எங்களுக்குச் செல்வம் சேர்ந்தது” என்று சொல்கிறார்கள். ஆனால் ஆயர்கள் அவற்றின்மீது இரக்கம் காட்டவில்லை. 6“இனிமேல் நான் உலகில் வாழ்வோர்க்கு இரக்கம் காட்ட மாட்டேன்,” என்கிறார் ஆண்டவர். இதோ! மனிதர் ஒவ்வொருவரையும் அவரவர் அடுத்திருப்பார் கையிலும் அரசர்களின் கையிலும் சிக்கும்படி ஒப்புவிக்கப் போகிறேன். அவர்கள் நாட்டை அழித்தொழிப்பார்கள். அவர்கள் கையிலிருந்து நான் யாரையும் தப்புவிக்கமாட்டேன்.

7அவ்வாறே நான் வெட்டுவதற்குக் குறிக்கப்பட்ட ஆடுகளை வணிகருக்காக மேய்க்கின்ற ஆயனானேன்; நான் இரு கோல்களைக் கையிலெடுத்து, ஒன்றிற்கு ‘இனிமை’ என்றும், மற்றதற்கு ‘ஒன்றிப்பு’ என்றும் பெயரிட்டு அம்மந்தையை மேய்த்துவந்தேன். 8ஒரே மாதத்தில் நான் மூன்று ஆயர்களை ஒழித்து விட்டேன்; நான் அவர்களைப் பொறுத்தமட்டில் பொறுமை இழந்து விட்டேன்; அவர்களும் என்னை வெறுத்தார்கள். 9அப்போது, “இனி நான் உங்களை மேய்க்கப்போவதில்லை; சாவது சாகட்டும்; அழிவது அழியட்டும்; மீதியிருப்பவை ஒன்றை ஒன்று கடித்துத் தின்னட்டும்’ 10என்று நான் சொன்னேன். ‘இனிமை’ என்ற என் கோலை எடுத்து, மக்களினங்கள் அனைத்தோடும் நான் செய்து கொண்ட உடன்படிக்கை முறியும்படி அதை முறித்துப் போட்டேன். 11அன்றே அந்த உடன்படிக்கை முறிந்து போயிற்று. அவ்வாறே என்னைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஆட்டுவணிகரும் அது ஆண்டவரின் வாக்கு என்பதை உணர்ந்து கொண்டனர். 12அப்போது நான் அவர்களை நோக்கி, ‘உங்களுக்குச் சரி என்று தோன்றினால் என் கூலியைக் கொடுங்கள்; இல்லையேல் கொடுக்க வேண்டாம், விடுங்கள்’ என்றேன். அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளைக் கொடுத்தார்கள்.✠

13ஆண்டவர் என்னிடம், “கருவூலத்தை⁕ நோக்கி அதைத் தூக்கி எறி; இதுதான் அவர்கள் எனக்கு அளித்த சிறந்த மதிப்பீடு!” என்றார். அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக் காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவரின் இல்லத்திலிருந்த கருவூலத்தில் எறிந்துவிட்டேன். 14யூதாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையே இருந்த சகோதர ஒருமைப்பாடு முறியும்படி ‘ஒன்றிப்பு’ என்ற இரண்டாம் கோலையும் நான் ஒடித்துப் போட்டேன்.

15பின்பு ஆண்டவர் என்னை நோக்கி, “அறிவற்ற ஆயன் ஒருவனின் கருவிகளை இன்னொருமுறை எடுத்துக்கொள்” என்றார். 16ஏனெனில் இதோ நாட்டில் ஆயன் ஒருவனை எழுப்புவேன்; அவன் அழிந்து போவதைக் காப்பாற்றமாட்டான். சிதறிப் போவதைத் தேடித் திரியமாட்டான்; எலும்பு முறிந்ததைக் குணப்படுத்தமாட்டான்; நலமாயிருப்பதற்கு உணவு கொடுக்க மாட்டான்; ஆனால் கொழுத்ததின் இறைச்சியைத் தின்பான்; அவற்றின் குளம்புகளைக்கூட நறுக்கிப் போடுவான்.

17ஆடுகளைக் கைவிடுகிற பயனற்ற
என் ஆயனுக்கு ஐயோ கேடு!
அவனுடைய கைமேலும்
வலக்கண் மேலும்
வாள் வந்து விழட்டும்;
அவனது கை முற்றிலும்
சூம்பிப் போகட்டும்;
அவனது வலக்கண் இருண்டு
முற்றிலும் குருடாகட்டும்.


11:12 மத் 26:15. 11:12-13 மத் 27:9-10.


11:13 ‘குயவர் நிலம்’ என்பது எபிரேய பாடம். (மத் 27:9-10).



அதிகாரம் 12:1-14

எருசலேமின் வருங்கால மீட்பும் வளமும்


1ஓர் இறைவாக்கு: இஸ்ரயேலைக் குறித்து அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: விண்வெளியை விரித்தவரும், மண்ணுலகை நிலைநாட்டியவரும், மனிதரின் ஆவியை அவர்களுள் தோற்றுவித்தவருமான ஆண்டவர் கூறுவது இதுவே: 2இதோ! சூழ்ந்திருக்கும் மக்களினங்கள் அனைத்திற்கும் போதையேற்றித் தள்ளாடச் செய்யும் மதுக்கிண்ணமாக நான் எருசலேமை ஆக்கப்போகிறேன்; எருசலேமுக்கு எதிரான முற்றுகையில் யூதாவுக்கும் அதே நிலைதான் ஏற்படும். 3அந்நாளில் நான் மக்களினங்கள் அனைத்திற்கும் எருசலேமைப் பளுவான கல்லாக்குவேன்; அதைத் தூக்கும் எவரும் காயமடைவது திண்ணம்; உலகிலுள்ள வேற்றினத்தார் அனைவரும் அதற்கு எதிராகப் படைதிரண்டு வருவார்கள். 4அந்நாளில் நான் குதிரைகளை எல்லாம் திகிலாலும் அவற்றின்மேல் ஏறிவருவோரை எல்லாம் பைத்தியத்தாலும் வதைப்பேன், என்கிறார் ஆண்டவர். 5யூதா குடும்பத்தாரைக் கடைக்கண்ணோக்கி மக்களினங்களின் அனைத்துக் குதிரைகளின் கண்களையும் குருடாக்குவேன். அப்போது யூதா நாட்டின் குடும்பத்தலைவர்கள், எருசலேமில் குடியிருப்போரின் வலிமை அவர்களுடைய கடவுளாகிய படைகளின் ஆண்டவரில்தான் இருக்கிறது என்று தங்களுக்குள் சொல்லிக்கொள்வார்கள்.

6அந்நாளில் நான் யூதாவின் குடும்பத் தலைவர்களை விறகுகளுக்கிடையில் வைத்த நெருப்புச்சட்டிபோலும், வைக்கோல் கட்டுகளுக்குள் தீப்பந்தம் போலும் ஆக்குவேன்; அவர்கள் தங்களைச் சூழ்ந்துள்ள மக்களினங்கள் அனைத்தையும் வலப்பக்கமும் இடப்பக்கமுமாய் அழித்தொழிப்பார்கள்; எருசலேம் மக்களோ முன்பு இருந்த இடமாகிய எருசலேமிலேயே குடியிருப்பார்கள்.

7தாவீது குடும்பத்தாரின் மேன்மையும் எருசலேமில் குடியிருப்போரின் மேன்மையும் யூதாவின் மேன்மையைவிட மிகுந்துவிடாதிருக்க ஆண்டவர் யூதாவின் கூடாரங்களுக்கே முதலில் விடுதலை அளிப்பார். 8அந்நாளில் எருசலேமில் குடியிருப்போருக்கு ஆண்டவர் அடைக்கலமாய் இருப்பார்; அந்நாளில் அவர்களுள் காலூன்றி நிற்க வலுவில்லாதோர் கூடத் தாவீதைப்போலிருப்பர். தாவீதின் குடும்பத்தார் கடவுளைப்போலும் அவர்களுக்கு முன்சென்ற ஆண்டவரின் தூதரைப்போலும் இருப்பர். 9அந்நாளில் நான் எருசலேமுக்கு எதிராக வரும் வேற்றினத்தார் அனைவரையும் அழிக்க வகைதேடுவேன்.

10நான் தாவீது குடும்பத்தார்மேலும், எருசலேமில் குடியிருப்போர்மேலும் இரக்க உள்ளத்தையும் மன்றாடும் மனநிலையையும் பொழிந்தருள்வேன். அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்றுநோக்குவார்கள்; அவனை உற்று நோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்துபோன தம் தலைப் பிள்ளைக்காகக் கதறி அழுபவர் போலும் மனம் கசந்து அழுவார்கள்.✠ 11அந்நாளில் எருசலேமில் எழும்பும் ஓலம் மெகிதோவின் சமவெளியில் அதத்ரிம்மோனின் புலம்பலைப்போலப் பெரிதாயிருக்கும். 12நாடு முழுவதும் குடும்பம் குடும்பமாக புலம்பிக் கொண்டிருக்கும்; தாவீது குடும்பத்தாரின் குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும், நாத்தான் குடும்பத்தாரின் குடும்பம் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும், 13லேவி குடும்பத்தாரின் குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும், சிமயி குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும் புலம்பி அழுவார்கள். 14எஞ்சியுள்ள எல்லாக் குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியேயும் அவற்றிலுள்ள பெண்கள் தனித்தனியேயும் புலம்பி அழுவார்கள்.


12:10 யோவா 19:37; திவெ 1:7. 12:10-14 மத் 24:30; திவெ 1:7.



அதிகாரம் 13:1-9

1அந்நாளின் பாவத்தையும் தீட்டையும் நீக்கித் தூய்மையாக்கும் நீரூற்று தாவீதின் குடும்பத்தாருக்கெனவும் எருசலேமில் குடியிருப்போருக்கெனவும் தோன்றும். 2அந்நாளிலே நான் சிலைகளின் பெயர்கள் நாட்டில் இல்லாதவாறு அறவே ஒழித்துவிடுவேன்; அதன்பின் அவற்றைப் பற்றிய நினைவு யாருக்கும் இராது; மேலும் போலி இறைவாக்கினரையும் அசுத்த ஆவியையும் நாட்டிலிருந்து விரட்டி விடுவேன்” என்கிறார் படைகளின் ஆண்டவர். 3எவனாவது மீண்டும் இறைவாக்கினனாகத் தோன்றுவானாகில் அவனைப் பெற்றெடுத்த தந்தையும் தாயும், “ஆண்டவரின் பெயரால் பொய் பேசுவதால் நீ உயிர்வாழக்கூடாது” என்று அவனிடம் சொல்வார்கள். அவன் இறைவாக்கு உரைக்கும்போதே அவனைப் பெற்றெடுத்த தாய் தந்தையர் அவனைக் குத்திக் கொன்று போடுவார்கள். 4அந்நாளில் இறைவாக்கினருள் ஒவ்வொருவனும் இறைவாக்கு உரைக்கும்போது தான் கண்ட காட்சியைக் குறித்து வெட்கமடைவான்; ஏமாற்றுவதற்காகக் கம்பளி மேலாடையைப் போர்த்திக் கொள்ளமாட்டான். 5ஆனால், “நான் இறைவாக்கினன் அல்ல; நிலத்தைப் பயிரிடுகிற உழவன்; என் இளமை முதல் நிலத்தை உழுது பயிர் செய்பவன்” என்று சொல்வான். 6“உன் மார்பில் இந்த வடுக்கள் எவ்வாறு ஏற்பட்டன?” என ஒருவன் வினவினால், “என் நண்பர் இல்லத்தில் காயமுற்றபோது இவை ஏற்பட்டன” என மறுமொழி பகர்வான்.

7“வாளே எழுந்திடு, என் ஆயனுக்கும் நெருங்கிய நண்பனுக்கும் எதிராகக்கிளர்ந்தெழு” என்கிறார் படைகளின் ஆண்டவர். “ஆயனை வெட்டு; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்; சிறியோர்க்கு எதிராக என் கையை ஓங்குவேன்.✠

8நாட்டு மக்களுள் மூன்றில் இரு பங்கினர் வெட்டுண்டு மாள்வர்; மூன்றில் ஒரு பங்கினரே எஞ்சியிருப்பர்”, என்கிறார் ஆண்டவர்.

9“இந்த மூன்றில் ஒரு பங்கினரையும் வெள்ளியை நெருப்பில் இட்டுத் தூய்மைப்படுத்துவது போல் தூய்மைப்படுத்துவேன்; பொன்னைப் புடமிடுவதுபோல் புடமிடுவேன்; அவர்கள் என் பெயரை நினைந்து மன்றாடுவார்கள்; நானும் அவர்கள் மன்றாட்டிற்குச் செவி கொடுப்பேன்; ‛இவர்கள் என் மக்கள்’ என்பேன் நான், ‛ஆண்டவர் எங்கள் கடவுள்’ என்பார்கள் அவர்கள்.”


13:7 மத் 26:31; மாற் 14:27.



அதிகாரம் 14:1-21

எருசலேமும் வேற்றினத்தாரும்


1இதோ! ஆண்டவரின் நாள் வருகின்றது, அப்போது உன்னிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருள்கள் உன் கண்ணெதிரே பங்கிடப்படும். 2எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுக்கும்படி நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்று கூட்டப்போகிறேன்; நகர் பிடிபடும்; வீடுகள் கொள்ளையிடப்படும்; பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவார்கள்; நகர் மக்களுள் பாதிப்பேர் அடிமைகளாய் நாடு கடத்தப்படுவார்கள்; ஆனால், எஞ்சியுள்ள மக்களோ, நகரிலிருந்து துரத்தப்படமாட்டார்கள். 3பின்பு, ஆண்டவர் கிளம்பிச்சென்று, முன்னாளில் செய்ததுபோல் அந்த வேற்றினத்தாருக்கு எதிராகப் போர்புரிவார். 4அந்நாளில் அவருடைய காலடிகள் எருசலேமுக்குக் கிழக்கே உள்ள ஒலிவமலையின் மேல் நிற்கும்; அப்போது ஒலிவமலை கிழக்குமேற்காய்ச் செல்லும் மிகப்பெரும் பள்ளத்தாக்கு ஒன்றில் இரண்டாகப் பிரிக்கப்படும். ஆகவே, அம்மலையின் ஒரு பகுதி வடக்கு நோக்கியும் மற்றொரு பகுதி தெற்கு நோக்கியும் விலகிநிற்கும். 5அப்போது, நீங்கள் என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய்த் தப்பியோடுவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆட்சால் வரை பரவியிருக்கும்; நீங்களோ யூதாவின் அரசன் உசியாவின் காலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது தப்பியோடியதுபோல் ஓடிப்போவீர்கள்; அப்போது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் புனிதர்கள் அனைவரோடும் வருவார்.

6அந்நாளில் வெப்பமோ குளிரோ உறைபனியோ இராது. 7அது ஒரே பகலாயிருக்கும், அதன் வரவை ஆண்டவர் மட்டுமே அறிவார். பகலுக்குப்பின் இரவு வராது. மாலை வேளையிலும் ஒளிபடரும். 8அந்நாளில் வற்றாத நீரூற்று ஒன்று எருசலேமிலிருந்து தோன்றி ஓடும்; அதன் ஒரு பாதி கீழ்க்கடலிலும் மறு பாதி மேற்கடலிலும் சென்று கலக்கும். கோடைக்காலத்திலும் குளிர்காலத்திலும் அது ஓடிக்கொண்டேயிருக்கும்.✠ 9ஆண்டவர் உலகம் அனைத்திற்கும் அரசராய்த் திகழ்வார். அந்நாளில் ஆண்டவர் ஒருவர் மட்டுமே இருப்பார்; அவர் திருப்பெயர் ஒன்று மட்டுமே இருக்கும்.

10கேபாவிலிருந்து எருசலேமுக்குத் தெற்கில் உள்ள ரிம்மோன்வரை உள்ள நாடு முழுவதும் சமவெளியாக்கப்படும்; எருசலேமோ தான் இருந்த இடத்திலேயே ஓங்கி உயர்ந்து பென்யமின் வாயிலிலிருந்து முன்னைய வாயில் இருந்த இடமான மூலைவாயில் வரையிலும், அனனியேல் காவல் மாடத்திலிருந்து அரசனுடைய திராட்சை ஆலைகள் வரையிலும் மக்கள் குடியேற்றத்தால் நிறைந்திருக்கும். 11அங்கே மக்கள் குடியிருப்பார்கள். இனி அவர்கள் சாபத்திற்கு ஆளாக மாட்டார்கள். எருசலேம் அச்சமின்றி வாழும்.✠

12எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுத்த எல்லா மக்களினங்களையும் வதைக்கும் பொருட்டு ஆண்டவர் அனுப்பும் கொள்ளை நோய் இதுவே. அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும்போதே ஒவ்வொருவனது சதையும் அழுகிப்போகும். அவர்களுடைய கண்கள் தம் குழிகளிலேயே அழுகிப்போகும். நாக்குகளும் வாய்க்குள்ளேயே அழுகி விடும். 13அந்நாளில் ஆண்டவர் அவர்களுக்கிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவார்; அப்போது அவர்கள் ஒவ்வொருவரும், அடுத்திருப்பார்மேல் கைவைப்பர்; அடுத்திருப்பாருக்கு எதிராகக் கையை ஓங்குவர். 14யூதாவும்கூட எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுக்கும்; அப்போது சுற்றிலுமுள்ள வேற்றினத்தாரின் செல்வங்களாகிய பொன், வெள்ளி, ஆடைகள் பெருமளவில் திரட்டப்படும். 15அவர்களுக்குக் கொள்ளைநோய் வந்தது போலவே அவர்களுடைய பாளையங்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலிய எல்லா விலங்குகளுக்கும் கொள்ளைநோய் வரும்.

16பின்பு எருசலேமுக்கு எதிராக எழும்பிய வேற்றினத்தாரில் எஞ்சியிருக்கும் அனைவரும் படைகளின் ஆண்டவராகிய அரசரைத் தொழவும் கூடாரத் திருவிழாவைக் கொண்டாடவும் ஆண்டுதோறும் அங்கே போவர்.✠ 17உலகின் இனத்தார் எவரேனும் படைகளின் ஆண்டவராகிய அரசரைத் தொழ எருசலேமுக்குப் போகவில்லை என்றால் அவர்கள் நாட்டில் மழை பெய்யாது. 18எகிப்து நாட்டினர் அவரை வழிபட வரவில்லையாயின் அவர்களுக்கும் மழை இல்லாமற் போகும். கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத மக்களினங்களை வதைத்த அதே கொள்ளைநோய் அவர்களையும் வதைக்கும். 19இது எகிப்தின் பாவத்திற்கும் கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத மற்றெல்லா வேற்றினத்தாரின் பாவத்திற்கும் கிடைக்கும் பயன்.

20அந்நாளில் குதிரைகளின் கழுத்திலுள்ள மணிகளில் ‘ஆண்டவருக்கென அர்ப்பணிக்கப்பட்டவை’ என்று எழுதப்பட்டிருக்கும். ஆண்டவரின் கோவிலில் இருக்கும் பானைகள் பலிபீடத்தின் முன்னிருக்கும் கிண்ணங்களைப் போலிருக்கும். 21யூதாவிலும் எருசலேமிலும் உள்ள ஒவ்வொரு பானையும் படைகளின் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டதாய் இருக்கும்; பலி செலுத்துவோர் எல்லாரும் பலி இறைச்சியைச் சமைப்பதற்காக அவற்றை எடுக்க முன்வருவார்கள். மேலும், அந்நாள் முதல் படைகளின் ஆண்டவரது கோவிலில் வணிகர் எவரும் இருக்கமாட்டார்.


14:8 எசே 47:1; யோவா 7:38; திவெ 22:1. 14:11 திவெ 22:3. 14:16 லேவி 23:39-43.