Manage OLD TESTAMENT

  • Home
  • Manage OLD TESTAMENT
முன்னுரை:1

‘1 & 2 சாமுவேல்’ என்னும் திருநூல்களில் இஸ்ரயேல் அரசுரிமையின் தொடக்க வரலாறு காணப்படுகிறது. ‘1 & 2 அரசர்கள்’ என்னும் இந்நூல்கள் அதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளன.


‘1 அரசர்கள்’ மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது:


1. இஸ்ரயேல் மக்களினம் முழுவதன் மேலும் சாலமோன் அரசுரிமை பெறுதல்; அவர் தந்தை தாவீது இறத்தல்.

2. சாலமோனின் ஆட்சியும் மாட்சியும்; எருசலேமில் அவர் எழுப்பிய கோவிலின் சிறப்பு.

3. நாடு தெற்கு வடக்கு என்ற இரண்டு அரசுகளாகப் பிரிதல்; அவற்றைக் கி.மு. 850 வரை ஆண்ட அரசர்களின் வரலாறு.

இவ்விரு நூல்களிலும் ஒவ்வொரு அரசனும் ஆண்டவருக்கு அவன் காட்டிய பற்றுறுதிக்கேற்ப, தீர்ப்பு வழங்கப்படுகிறான்; ஆண்டவரிடம் காட்டும் பற்றுறுதி நாட்டுக்கு வெற்றியைத் தருகின்றது; மாறாக, வேற்றுத் தெய்வ வழிபாடும் கீழ்ப்படியாமையும் அழிவையே கொணர்கின்றன. இந்த அளவுகோலின்படி வடநாட்டு அரசர்கள் எல்லாருமே தீயவழியில் நடந்தார்கள் என்றும், தென்னாட்டு அரசர்களில் சிலரும் அவ்வாறு நடந்தார்கள் என்றும் காட்டப்படுகிறது.


பல இறைவாக்கினர் சிலைவழிபாட்டினின்றும் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமையினின்றும் மக்களைத் தடுத்து நிறுத்தினர். அவர்களுள் எலியா தலைசிறந்தவராக இந்நூலில் காட்டப்படுகின்றார்.


நூலின் பிரிவுகள்


1. தாவீது அரசரின் இறுதி நாள்கள் 1:1 - 2:12

2. சாலமோன் அரசராதல் 2:13 - 46

3. சாலமோனின் ஆட்சி 3:1 - 11:43

அ) ஆட்சியின் முற்பகுதி 3:1 - 4:34

ஆ) எருசலேம் கோவில் கட்டுதல் 5:1 - 8:66

இ) ஆட்சியின் பிற்பகுதி 9:1 - 11:43

4. பிளவுபட்ட நாடு 12:1 - 22:53 அ) வடகுலங்களின் கிளர்ச்சி 12:1 - 14:20

ஆ) யூதா-இஸ்ரயேல் அரசர்கள் 14:21 - 16:34

இ) இறைவாக்கினர் எலியா 17:1 - 19:21

ஈ) இஸ்ரயேல் அரசன் ஆகாபு 20:1 - 22:40

உ) யோசபாத் அகசியா அரசர்கள் 22:41 - 53



அதிகாரம் 1:1-53

தாவீதின் முதுமைப் பருவம்


1தாவீது அரசர் முதுமைப் பருவம் அடைந்தார். அத்தள்ளாத வயதில் போர்வைகளால் அவரைப் போர்த்தியும் அவரால் குளிரைத் தாங்க இயலவில்லை. 2எனவே, அவருடைய அலுவலர் அவரிடம், “அரசே! எம் தலைவராகிய உமக்கென ஒர் இளம் கன்னிப் பெண்ணைத் தேடப்போகிறோம். அவள் அரசராகிய உமக்குத் தாதியாக இருந்து பணிவிடை புரிவாள்; அவள் உமக்கருகில் படுத்து எம் தலைவரும் அரசருமாகிய உமது குளிரைப் போக்குவாள்” என்றனர். 3அவ்வாறே, அவர்கள் இஸ்ரயேல் நாடெங்கும் சென்று அழகிய ஓர் இளம் பெண்ணுக்காகத் தேடி அலைந்து, சூனேம் ஊரைச் சார்ந்த அபிசாகு என்பவளைக் கண்டு, அவளை அரசரிடம் அழைத்து வந்தார்கள். 4பேரழகியான அந்த இளம்பெண் அரசருக்குத் தாதியாயிருந்து பணிவிடை புரிந்து வந்தாள். ஆனால், அரசர் அவளோடு கூடி வாழவில்லை.


அதோனியா அரசுரிமை நாடல்


5அகித்து என்பவளிடம் பிறந்தவனான அதோனியா, “நானே அரசனாவேன்” என்று செருக்குடன் சொல்லிக் கொண்டு தனக்கெனத் தேர்ப்படையையும், குதிரைப்படையையும் தன்முன் கட்டியம் கூறிச் செல்ல ஐம்பது பேரையும் பயிற்சி செய்து வைத்திருந்தான்.✠ 6“நீ ஏன் இப்படிச் செய்கிறாய்” என்று அவன் தந்தை அவனை ஒருபோதும் கண்டித்ததே இல்லை. அவன் அழகு மிக்கவன்; அப்சலோமுக்குப் பின் பிறந்தவன். 7அவன் செரூயாவின் மகனான யோவாபுடனும் குருவாகிய அபியத்தாருடனும் கூடி ஆலோசனை செய்தான். அவர்கள் அதோனியாவுக்குத் துணை நின்றார்கள். 8ஆனால், குருவாகிய சாதோக்கும் யோயாதாவின் மகன் பெனாயாவும் இறைவாக்கினர் நாத்தானும் சிமயி, இரேயி என்பவர்களும் தாவீதின் மெய்க்காப்பாளர்களும் அதோனியாவின் பக்கம் சேரவில்லை.


9அதன் பிறகு ஏன்ரோகேல் அருகேயுள்ள சோகலேத்து என்ற பாறையின் மேல் அதோனியா ஆடுகளையும் எருதுகளையும் கொழுத்த கன்றுகளையும் பலியிட்டான். அரசரின் மைந்தரான தன் உடன் பிறந்தார் அனைவரையும் அரச அலுவலரான யூதாவைச் சேர்ந்த அனைவரையும் அதற்கு அழைத்திருந்தான்.


10ஆனால், அவன் இறைவாக்கினர் நாத்தானையோ, பெனாயாவையோ மெய்க்காப்பாளர்களையோ தன் சகோதரன் சாலமோனையோ அழைக்கவில்லை.


சாலமோன் அரசராதல்


11இப்படியிருக்க, நாத்தான் சாலேமோனின் தாயான பத்சேபாவிடம் “அகித்தின் மகன் அதோனியா அரசனாகிவிட்டான். இது நம் தலைவர் தாவீதுக்குக் தெரியாது. நீர் இதுபற்றிக் கேள்விப்படவில்லையா?✠ 12உம் உயிரையும் உம் மகன் சாலமோன் உயிரையும் காத்துக்கொள்ள, நான் உமக்கு ஆலோசனை ஒன்று கூறுகிறேன்; 13உடனே அரசர் தாவீதைப் போய்ப் பாரும். அவரிடம் “என் தலைவரே! என் அரசே! நீர் உம் அடியவளாகிய எனக்கு, ‘உம் மகன் சாலமோன் எனக்குப் பின் ஆட்சியை ஏற்று என் அரியணையில் அமர்வான் என்று ஆணையிட்டுக் கூறவில்லையா? அப்படியாயின் அதோனியா அரசனாகியிருப்பது எப்படி?’ என்று கேளும். 14அங்கு நீர் அரசரோடு பேசிக்கொண்டிருக்கையில் நானும் உமக்குப்பின் வருகிறேன். வந்து நீர் பேசியவற்றை உறுதிப்படுத்துகிறேன்” என்றார்.


15அவ்வாறே, பத்சேபா பள்ளியறையில் இருந்த வயது முதிர்ந்த அரசரைப் பார்க்கச் சென்றார். அங்கே சூனேமைச் சார்ந்த அபிசாகு அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். 16பத்சேபா, அரசரைத் தாள் பணிந்து வணங்க, அரசர் “என்ன வேண்டும்?” என்று கேட்டார். 17அவரோ அவரிடம், “என் தலைவரே! நீர் உம் அடியவளாகிய எனக்கு, ‘உன் மகன் சாலமோன் எனக்குப் பின் ஆட்சியை ஏற்று என் அரியணையில் அமர்வான்’ என்று உம் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறவில்லையா? 18ஆனால், என் தலைவராகிய அரசே! இதோ உமக்குத் தெரியாமலே அதோனியா அரசனாகி விட்டான். 19அவன் மிகுதியான எருதுகளையும் கொழுத்த கன்றுகளையும் ஆடுகளையும் பலியிட்டிருக்கிறான். அரசரின் மைந்தர் அனைவரையும் குருவாகிய அபியத்தாரையும் படைத்தலைவன் யோவாபையும் அழைத்திருக்கிறான். ஆனால், உம் அடியான் சாலமோனை மட்டும் அழைக்கவில்லை.


20என் தலைவராகிய அரசே! உமக்குப் பின் அரியணை ஏறுபவன் யார் என்று நீரே அறிவிக்க வேண்டுமென்று இஸ்ரயேல் மக்கள் அனைவரும் எதிர்நோக்கியிருக்கின்றனர்.


21அப்படி அறிவிக்காவிடில் என் தலைவராகிய அரசர் தம் மூதாதையரோடு துயில் கொள்ளும் நாளில் நானும் என் மகன் சாலமோனும் குற்றவாளிகளாகக் கருதப்படுவோம்” என்றார்.


22அவர் இவ்வாறு அரசரோடு பேசிக்கொண்டிருக்கையில், இறைவாக்கினர் நாத்தான் உள்ளே வந்தார். 23அங்கே இருந்தவர்கள் அரசரிடம், “இறைவாக்கினர் நாத்தான் இங்கு வந்திருக்கிறார்” என்றார்கள். அவர் உள்ளே நுழைந்து அரசர்முன் சென்று தரைமட்டும் பணிந்து வணங்கினார். 24அப்பொழுது, நாத்தான், “என் தலைவராகிய அரசே! உமக்குப் பின் அதோனியா அரசாள்வான்; அவன் உம் அரியணைமீது அமர்வான் என்று நீர் கூறினதுண்டா? 25ஏனெனில், அதோனியா இன்று இங்கிருந்து போய் மிகுதியான எருதுகளையும், கொழுத்த கன்றுகளையும் ஆடுகளையும் பலியிட்டிருக்கிறான். அரசரின் மைந்தர் அனைவரையும் படைத்தலைவராகிய யோவாபையும்⁕ குருவாகிய அபியத்தாரையும் அதற்கு அழைத்திருக்கிறான். அவர்கள் அவனோடு உண்டு குடித்து ‘அரசர் அதோனியா வாழ்க!’ என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். 26ஆனால், உம் அடியானாகிய என்னையும் குரு சாதோக்கையும் யோயாதாவின் மகன் பெனாயாவையும் உம் அடியான் சாலமோனையும் அவன் அழைக்கவில்லை. 27என் தலைவரும் அரசருமாகிய உமக்குப் பின் அரியணையில் யார் அமர வேண்டுமென்று அடியேனுக்கு இதுவரை நீர் தெரிவிக்கவில்லை. அவ்வாறிருக்க இவையெல்லாம் என் தலைவராகிய அரசரது சொற்படி நடந்திருக்கக்கூடுமா?” என்று கேட்டார்.


28அப்பொழுது தாவீது அரசர் மறுமொழியாக, “பத்சேபாவை என் முன்னே வரவழையுங்கள்” என்றார். அவரும் அரசரிடம் வந்து அவர் முன்னிலையில் நின்றார். 29அரசர், “எல்லாத் துன்பங்களினின்றும் என் உயிரைக் காத்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை! 30‘உன் மகன் சாலமோன் எனக்குப் பின் ஆட்சியை ஏற்று என் அரியணையில் எனக்குப் பதிலாக அமர்வான்’ என்று இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர்மேல் ஆணையிட்டு முன்பு நான் சொன்னதை இன்று நான் செய்து முடிப்பேன்” என்றார்.


31அப்பொழுது பத்சேபா முகம் தரையில்படத் தாழ்ந்து அரசரை வணங்கி, “என் தலைவராகிய தாவீது அரசர் நீடூழி வாழ்க!” என்றார். 32தாவீது அரசர், “குரு சாதோக்கையும் இறைவாக்கினர் நாத்தானையும் யோயாதாவின் மகன் பெனாயாவையும் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார். அவ்வாறே, அவர்கள் அரசர்முன் வந்தார்கள். 33அரசர் அவர்களிடம், “உங்கள் தலைவனுடைய அலுவலரும் நீங்களும் சேர்ந்து என் மகன் சாலமோனை என் கோவேறு கழுதையின்மேல் அமர்த்திக் கீகோனுக்கு அழைத்துச் செல்லுங்கள். 34அங்கே குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும் அவனை இஸ்ரயேலின் அரசனாகத் திருப்பொழிவு செய்யட்டும். எக்காளம் முழங்க, ‘சாலமோன் அரசர் வாழ்க!’ என்று வாழ்த்துங்கள். 35அதன்பின், அவனை இங்கே அழைத்து வாருங்கள். அவன் வந்து என் அரியணைமீது அமர்ந்து, எனக்குப் பதிலாக அரசாள்வான். இஸ்ரயேல் மீதும் யூதாவின் மீதும் அவனைத் தலைவனாக நியமிக்கிறேன்” என்றார். 36யோயாதாவின் மகன் பெனாயா அரசருக்கு மறுமொழியாக “அப்படியே ஆகுக! என் தலைவரான அரசரின் ஆண்டவராகிய கடவுள் நீர் சொன்னதை உறுதிப்படுத்துவாராக! 37ஆண்டவர் என் தலைவரான அரசருடன் இருந்தது போல் சாலமோனுடனும் இருப்பாராக! அவரது அரியணையை என் தலைவர் தாவீது அரசர் அரியணையைவிட மாண்பு மிக்கதாக ஆக்கியருள்வாராக!” என்றான்.


38அவ்வாறே, குரு சாதோக்கு, இறைவாக்கினர் நாத்தான், யோயாதாவின் மகன் பெனாயா, கிரேத்தியர், பெலேத்தியர் ஆகியோர் அங்கிருந்து போய், சாலமோனைத் தாவீது அரசரின் கோவேறு கழுதையின் மேல் அமர்த்தி, கீகோனுக்கு அழைத்துச் சென்றனர். 39அங்கே குரு சாதோக்கு கூடாரத்திலிருந்து எண்ணெய்க் கொம்பை எடுத்து வந்து, சாலமோனை திருப்பொழிவு செய்தார். அப்பொழுது எக்காளம் முழங்க எல்லா மக்களும் “சாலமோன் அரசர் வாழ்க!” என்றனர். 40எல்லா மக்களும் தாரை ஊதிக் கொண்டு மிகுந்த அக்களிப்போடும் ஆர்ப்பரிப்போடும் அவர் பின்னால் சென்றனர். அவர்கள் எழுப்பிய பேரொலியால் நிலமே நடுங்கிற்று.


41அதோனியாவும் அவனோடிருந்த அனைத்து விருந்தினரும் உண்டு முடித்த வேளையில், இப்பேரொலி அவர்கள் காதுக்கு எட்டியது. எக்காள ஒலி காதில்விழவே யோவாபு, “நகரில் ஏன் இத்துணை ஆரவாரம்?” என்று வினவினார். 42அவர் பேசிக் கொண்டிருக்கும்பொழுது குரு அபியத்தாரின் மகன் யோனத்தான் அங்கு வந்தான். அதோனியா “உள்ளே வா; நீ திறமை மிக்கவன்; நல்ல செய்தியே கொண்டு வருவாய்” என்றான். 43யோனத்தான் அதோனியாவிடம் கூறியது: “அதுதான் இல்லை; நம் தலைவராகிய அரசர் தாவீது சாலமோனை அரசராக்கி விட்டார். 44குரு சாதோக்கு, இறைவாக்கினர் நாத்தான், யோயாதாவின் மகன் பெனாயா, கிரேத்தியர், பெலேத்தியர் ஆகியோரை அவனோடு அனுப்பி விட்டார். அவர்கள் அவனை அரசரின் கோவேறு கழுதைமேல் அமர்த்தினர். 45குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும் அவனைக் கீகோனில் அரசனாகத் திருப்பொழிவு செய்துவிட்டனர். பிறகு, அங்கிருந்து அக்களிப்போடு அவனை அழைத்து வந்துள்ளனர். எனவேதான், நகரில் இத்துணை ஆரவாரம்! 46நீங்கள் கேட்டது அந்த இரைச்சல்தான். சாலமோனும் இப்பொழுது அரச அரியணைமீது அமர்ந்துள்ளான். 47மேலும், அரசரின் அலுவலர் நம் தலைவராகிய தாவீது அரசரிடம் வந்து, ‘உம் கடவுள் உமது பெயரைவிடச் சாலமோன் பெயரைச் சிறப்புடையதாய் ஆக்குவாராக! உமது அரியணையை விட அவரது அரியணையை மாண்புடையதாய் ஆக்குவாராக!” என்று வாழ்த்தினர். அரசரும் தம் படுக்கையில் வணங்கித் தொழுது, 48“இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் போற்றி! அவர் இன்று என் அரியணைமீது ஒருவனை அமர்த்தியுள்ளார்! அதை நான் கண்குளிரச் கண்டேன்!” என்றார்.


49உடனே அதோனியாவின் விருந்தினர் அனைவரும் அச்சமுற்று எழுந்து மூலைக்கு ஒருவராக ஓட்டம் பிடித்தனர். 50அதோனியா சாலமோனுக்கு அஞ்சி ஓடி, பலிபீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டான். 51அப்பொழுது சாலமோனுக்கு இவ்வாறு தெரிவிக்கப்பட்டது; “அதோனியா, சாலமோன் அரசருக்கு அஞ்சிப் பலி பீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டிருக்கிறான். மேலும் அவன், அரசர் சாலமோன், ‘என் அடியானாகிய உன்னை வாளால் கொல்லமாட்டேன்’ என்று இன்றே ஆணையிட்டுக் கூறட்டும் என்று வேண்டுகிறான்.” 52சாலமோனும், “அவன் ஒழுங்கான முறையில் நடந்து கொண்டால், அவன் தலைமுடி ஒன்றுகூடத் தரையில் விழாது. ஆனால், அவனிடம் வஞ்சனை எதுவும் காணப்பட்டால் அவன் சாக வேண்டும்” என்று பதிலளித்தார். 53எனவே, சாலமோன் அரசர் ஆளனுப்பிப் பலிபீடத்திலிருந்து அவனை இழுத்துக்கொண்டு வரச் செய்தார். அவனும் வந்து சாலமோன் அரசர்முன் வீழ்ந்து வணங்கினான். சாலமோன் அவனிடம் “நீ உன் வீட்டுக்குப் போகலாம்” என்றார்.


1:5 2 சாமு 3:4. 1:11 2 சாமு 12:24. 1:25 ‘படைத் தலைவர்கள்’ என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 2:1-46

தாவீது சாலமோனுக்குத் தந்த இறுதி அறிவுரை


1தாவீதின் இறுதி நாள் நெருங்கினபோது அவர் தம் மகன் சாலமோனுக்குப் பணித்துக் கூறியது இதுவே; 2“அனைத்துலகும் போகும் வழியே நானும் போகிறேன். நீ நெஞ்சுறுதியும் வீரமும் கொண்டவனாயிரு. 3உன் கடவுளாகிய ஆண்டவரின் ஆணைகளைக் கடைப்படி. அவர் காட்டும் வழியில் நட. மோசேயின் சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள கடவுளுடைய நியமங்கள், விதிமுறைகள், நீதிச் சட்டங்கள், ஒழுங்கு முறைகள் ஆகியவற்றைக் கடைப்பிடி. இப்படிச் செய்தால், நீ செய்யும் காரியங்களிலும் செல்லும் இடங்களிலும் வெற்றி காண்பாய். 4ஏனெனில், ஆண்டவர் என்னை நோக்கி, ‘உன் மைந்தர்கள் தங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் என் முன்னிலையில் உண்மையுடன் நடப்பார்களானால், இஸ்ரயேலின் அரியணையில் அமர்வதற்கேற்ற ஒருவன் அவர்களுள் இல்லாமல் போவதில்லை’ என்று எனக்குக் கொடுத்த வாக்கு அப்போதுதான் நிலைத்திருக்கும்.

5இஸ்ரயேலின் இரு படைத்தலைவர்களான நேரின் மகன் அப்னேர், எத்தேரின் மகன் அமாசா ஆகியோருக்கு செரூயாவின் மகன் யோவாபு செய்ததும் அதனால் எனக்கு நேர்ந்ததும் உனக்குத் தெரியும். அவன், போர்க்காலத்தில் சிந்தப்பட்ட இரத்தத்திற்குப் பழிவாங்கச் சமாதான காலத்தில் அவர்களைக் கொன்றான். அவ்வாறு செய்து, அவன் தன் அரைக்கச்சையிலும் தன் மிதியடிகளிலும் இரத்தக்கறை படியச் செய்தான்.✠ 6ஆகையால் அவனுடன் விவேகமாய் நடந்துகொள். அவன் நரைமுடியனாய் மன அமைதியுடன் பாதாளத்தில் இறங்க விட்டுவிடாதே.

7கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் மைந்தர்களுக்கோ இரக்கம் காட்டு. உன் பந்தியில் உண்பவர்களோடு அவர்களும் இருக்கட்டும். ஏனெனில், உன் சகோதரன் அப்சலோமுக்கு அஞ்சி நான் ஓடியபொழுது எனக்கு அவர்கள் துணைநின்றார்கள். இன்னும் கேள்.✠ 8பகுரிம் ஊரைச் சார்ந்த பென்யமினனாகிய கேராவின் மகன் சிமயி உன்னோடு இருக்கிறான் அல்லவா? அவன், மகனயிமுக்கு நான் சென்றபோது, மிகவும் இழிவான முறையில் பேசி என்னைச் சபித்தான். ஆயினும், யோர்தானுக்கு அருகில் என்னைச் சந்திக்க வந்தபோது, ‘உன்னை வாளால் கொல்லமாட்டேன்’ என்று ஆண்டவர்மேல் ஆணையிட்டு அவனுக்கு நான் சொன்னேன்.✠ 9எனினும், நீ அவனைக் குற்றமற்றவனென எண்ணி விடாதே. நீ விவேகமுள்ளவன். அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று உனக்குத் தெரியும். அவன் நரைமுடியனாய் இரத்தத்தில் தோய்ந்து பாதாளத்தில் இறங்கும்படி செய்.”


தாவீதின் இறப்பு


10பின்னர், தாவீது தம் மூதாதையருடன் துயில் கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டார். 11தாவீது இஸ்ரயேலின்மீது ஆட்சி செலுத்திய காலம் நாற்பது ஆண்டுகள். அவர் எபிரோனில் ஏழு ஆண்டுகளும் எருசலேமில் முப்பத்து மூன்று ஆண்டுகளும் ஆட்சி செலுத்தினார்.✠ 12சாலமோன் தம் தந்தை தாவீதின் அரியணையில் அமர்ந்தார். அவருடைய ஆட்சி உறுதியாக நிலைநாட்டப்பட்டது.✠


அதோனியா கொலை செய்யப்படல்


13அகித்தின் மகன் அதோனியா சாலமோனின் தாய் பத்சேபாவிடம் வந்தான். “நீ வருவதன் நோக்கம் என்ன? சமாதானமா?” என்று அவர் கேட்டார். 14அதற்கு அவன், “ஆம்; சமதானமே” என்றான். பிறகு அவன், “நான் உம்மிடம் ஒன்று சொல்லவேண்டும்” என்றான். அவரும் “சொல்” என்றார். 15அதற்கு அவன், “அரசுரிமை என்னுடையதே. நான் அரசனாக வேண்டும் என்று இஸ்ரயேல் மக்கள் அனைவரும் விரும்பினர். இது உமக்குத் தெரிந்ததே. ஆனால், நடந்தது வேறு. அரசுரிமை என் சகோதரனுக்குப் போய்விட்டது. 16அது ஆண்டவரின் திருவுளம். ஆயினும், உம்மிடம் ஒன்று வேண்டிக் கொள்ள விரும்புகிறேன். அதை நீர் எனக்கு மறுக்கக்கூடாது” என்றான். 17அதற்கு அவர், “அது என்ன? சொல்” என, அவன், “அரசர் சாலமோன் உம் சொல்லைத் தட்டமாட்டார். சூனேமைச் சார்ந்த அபிசாகை எனக்கு மணமுடித்து வைக்கும்படி அவரிடம் சொல்லும்” என்றான்.✠ 18அதற்குப் பத்சேபா, “நல்லது; நான் உனக்காக அரசரிடம் பரிந்து பேசுகிறேன்” என்றார்.

19பத்சேபா அதோனியாவுக்காக அரசர் சாலமோனிடம் பரிந்து பேசும் படி போனார். அப்போது அரசர் எழுந்து அவரை எதிர்கொண்டு வந்து வணங்கியபின், தம் அரியணையில் அமர்ந்து கொண்டார். அரசரின் தாய்க்கு அவரது வலப்புறத்தில் ஓர் இருக்கை போடப்பட்டது. அவரும் அதில் அமர்ந்தார். 20அப்போது அவர், “நான் உன்னிடம் கேட்க விரும்பும் சிறு வேண்டுகோள் ஒன்று உண்டு. அதை நீ மறுக்கக்கூடாது” என்றார். அதற்கு அரசர், “கேளுங்கள் அம்மா! நான் மறுக்கமாட்டேன்” என்றார். 21அப்போது அவர், “சூனேமைச் சார்ந்த அபிசாகை உன் சகோதரன் அதோனியாவுக்கு மணமுடித்துக் கொடுக்க வேண்டும்” என்றார். 22அரசர் சாலமோன் தம் தாய்க்கு மறுமொழியாக, “சூனேமைச் சார்ந்த அபிசாகை அதோனியாவுக்காக நீர் கேட்பானேன்? இந்த அரசையும் அவனுக்காக நீர் கேட்டிருக்கலாமே? அவன்தான் என் மூத்த சகோதரனாயிற்றே! மேலும் குரு அபியத்தாரும் செரூயாவின் மகன் யோவாபும் அவர் பக்கம் இருக்கின்றனரே!” என்று சொன்னார். 23பிறகு, அரசர் சாலமோன் ஆண்டவர் மேல் ஆணையிட்டு “அதோனியா சொன்ன இந்த வார்த்தை அவன் உயிருக்கே கேடு விளைவிக்கும். இல்லையேல் கடவுள் எனக்குத் தகுந்த தண்டனை அளிப்பாராக! 24எனவே, என் அரசுரிமையை நிலைநிறுத்தி என் தந்தை தாவீதின் அரியணையில் என்னை அமர்த்தித் தாம் சொன்னபடி என் குடும்பத்தை அரச பரம்பரையாக்கியவரான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அதோனியா இன்றே கொல்லப்படுவான்” என்று சொன்னார். 25சாலமோன் அரசர் யோயாதாவின் மகன் பெனாயாவுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார். அவனும் அதோனியாவைத் தாக்கவே, அவனும் இறந்தான்.


அபியத்தார் நாடு கடத்தப்படல்


26பிறகு, அரசர் குரு அபியத்தாரை நோக்கி, “உம் நிலங்கள் இருக்கிற அனத்தோத்திற்குப் போய்விடும். நீர் சாகவேண்டியவர். இருப்பினும், இன்று நான் உம்மைக் கொல்ல மாட்டேன். ஏனெனில், நீர் என் தந்தை தாவீதுக்கு முன்னால் தலைவராகிய ஆண்டவரின் பேழையைத் தூக்கி வந்தீர். மேலும், என் தந்தைக்குத் துன்பம் வந்த போதெல்லாம் நீரும் அவரோடிருந்து துன்பம் அனுபவித்தீர்” என்றார்.✠ 27இவ்வாறு, அபியத்தார் ஆண்டவரின் குருவாய் இராதபடி சாலமோன் அவரை விலக்கிவிட்டார். ஆண்டவர் சீலோவில் ஏலியின் வீட்டாரைப் பற்றி உரைத்த வார்த்தை இவ்வாறு நிறைவேறியது.✠


யோவாபு கொலை செய்யப்படல்


28இந்தச் செய்தி யோவாபுக்கு எட்டியது. அவர் அப்சலோமின் பக்கம் சாராமல், அதோனியாவின் பக்கம் சார்ந்திருந்தவர். ஆகையால் அவர் ஆண்டவரின் கூடாரத்திற்கு ஓடிப் பலிபீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டார். 29யோவாபு ஆண்டவரின் கூடாரத்திற்கு ஓடிப்போனார் என்றும் பலிபீடத்தின் அருகே அவர் நிற்கிறார் என்றும் சாலமோன் அரசருக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது சாலமோன் யோயாதாவின் மகன் பெனாயாவை அனுப்பி, “நீ போய் அவனை வெட்டி வீழ்த்து” என்றார். 30பெனாயா ஆண்டவரின் கூடாரத்திற்குப் போய் அவரைக் கண்டு, “வெளியே வா; இது அரச கட்டளை” என்றான். அதற்கு அவர் மறுமொழியாக, “முடியாது; நான் இங்கேயே சாவேன்” என்றான். எனவே, பெனாயா அரசரிடம் திரும்பி வந்து யோவாபு தனக்குக் கூறிய மறுமொழியைத் தெரிவித்தான். 31அப்போது அரசர் அவனை நோக்கி, “அவன் சொன்னபடியே செய். அவனைக் கொன்று அடக்கம் செய். இவ்வாறு, யோவாபு சிந்திய குற்றமற்ற இரத்தத்தின் பழி என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் விட்டு நீங்கச் செய். 32இந்த இரத்தப் பழியை ஆண்டவர் அவன் தலைமேலேயே விழச் செய்வாராக! ஏனெனில், அவன் தன்னை விட நேர்மையிலும் பண்பிலும் சிறந்தவர்களான நேரின் மகனும் இஸ்ரயேலின் படைத் தலைவனுமான அப்னேர், எத்தேரின் மகனும் யூதாவின் படைத்தலைவனுமான அமாசா ஆகியோரை என் தந்தை தாவீதுக்குத் தெரியாமல் தாக்கி வாளால் கொன்றான். 33இந்த இரத்தப்பழி யோவாபின் தலைமேல் மட்டுமன்று; அவன் வழி மரபினர் தலை மேலும் என்றென்றும் இருப்பதாக! ஆனால், தாவீது, அவர் வழிமரபினர், அவர் வீட்டார் ஆகியோர் மீதும் அவர் அரியணை மீதும் என்றென்றும் ஆண்டவரின் சமாதானம் தங்கி இருப்பதாக!” என்றார். 34அவ்வாறே, யோயாதாவின் மகன் பெனாயா புறப்பட்டுப் போய் யோவாபைத் தாக்கிக் கொன்றான். அவர் பாலை நிலத்திலிருந்த தம் வீட்டில் அடக்கம் செய்யப்பட்டார். 35அப்பொழுது அரசர் யோவாபுக்குப் பதிலாக யோயாதாவின் மகன் பெனாயாவைப் படைத்தலைவனாக நியமனம் செய்தார். மேலும், அபியத்தாருக்குப் பதிலாகச் சாதோக்கைக் குருவாக நியமித்தார்.


சிமயி கொலை செய்யப்படல்


36பிறகு அரசர் சிமயியை வரவழைத்து அவனை நோக்கி, நீ எருசலேமில் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு வேறெங்கும் செல்லாமல் அங்கேயே குடியிரு. 37என்று நீ வெளியேறித் கிதரோன் நீரோடையைக் கடப்பாயோ, அன்றே நீ கொல்லப்படுவது உறுதி. இதைத் திண்ணமாய் அறிந்துகொள். உன் இரத்தத்தின் பழி உன் தலைமேலேயே விழும்” என்றார். 38சிமயி அரசரைப் பார்த்து, “நல்லது, அரசே! என் தலைவராகிய நீர் சொன்னபடியே அடியேன் செய்வேன்” என்றான்.

39அவ்வாறே, சிமயி நெடுநாள் எருசலேமில் குடியிருந்தான். மூன்று ஆண்டுகளுக்குப் பின் சிமயியின் அடிமைகளில் இருவர் காத்தின் மன்னனாகிய மாக்கா மகன் ஆக்கிசிடம் ஓடிவிட்டனர். அந்த அடிமைகள் காத்தில் இருப்பதாகச் சிமயி கேள்விப்பட்டான். 40உடனே சிமயி தன் கழுதைக்குச் சேணம் பூட்டித் தன் அடிமைகளைத் தேடப் புறப்பட்டான். அவன் காத்திலிருந்து ஆக்கிசிடம் சென்று, தன் அடிமைகளைக் கண்டு அங்கிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தான்.

41சிமயி எருசலேமிலிருந்து காத்துக்குப் போய்த் திரும்பி வந்தான் என்று சாலமோனுக்கு அறிவிக்கப்பட்டது. 42அப்போது அரசர் சிமயியை வரவழைத்து “என்று நீ வெளியேறி வேறெங்காவது போவாயோ, அன்றே நீ கொல்லப்படுவது உறுதி. இதைக் திண்ணமாய் அறிந்து கொள் என்று நான் உனக்கு முன்பே எச்சரிக்கை செய்து, உன்னையும் ஆண்டவர்மேல் ஆணையிடச் செய்யவில்லையா? நீயும் அதற்கு, ‘நல்லது, நீர் சொன்னபடி கேட்கிறேன்’ என்று பதில் கூறவில்லையா? 43அப்படியிருக்க ஆண்டவர்மேல் நீ இட்ட ஆணையையும் உனக்கு நான் இட்ட கட்டளையையும் மீறியது ஏன்?” என்று கேட்டார். 44மேலும், அரசர் சிமயியைப் பார்த்து, “என் தந்தை தாவீதுக்கு நீ இழைத்த தீங்குகள் அனைத்தையும் பற்றி உன் நெஞ்சே அறியும். ஆகையால், நீ செய்த தீங்கு உன்னையே அழிக்கும்படி ஆண்டவர் செய்வார். 45ஆனால், அரசராகிய சாலமோன் ஆசி பெற்றவராய் இருப்பார். தாவீதின் அரியணையும் ஆண்டவர் முன்னிலையில் என்றென்றும் நிலைத்து நிற்கும்” என்று சொன்னார். 46பின்னர், யோயாதாவின் மகன் பெனாயாவுக்கு அரசர் கட்டளையிட, அவன் சென்று சிமயியைத் தாக்கவே, அவனும் இறந்தான். இவ்வாறு, சாலமோனின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது.


2:5 2 சாமு 3:27; 20:10. 2:7 2 சாமு 17:27-29. 2:8 2 சாமு 16:5-13; 19:16-23. 2:11 2 சாமு 5:4-5; 1 குறி 3:4. 2:12 1 குறி 29:23. 2:17 1 அர 1:3-4. 2:26 1 சாமு 22:23; 2 சாமு 15:24. 2:27 1 சாமு 2:27-36.



அதிகாரம் 3:1-28

சாலமோன் ஞானத்திற்காக மன்றாடல்


(2 குறி 1:3-12)


1பின்னர், சாலமோன் எகிப்து மன்னனான பார்வோனின் மகளை மணந்து, பார்வோனுடன் உடன்பாடு செய்துகொண்டார். மேலும் தம் அரண்மனை, ஆண்டவர் இல்லம், எருசலேமின் சுற்றுமதில் ஆகியவற்றைக் கட்டி முடிக்கும் வரை அவளைத் தாவீதின் நகரில் தங்கியிருக்கச் செய்தார். 2அந்நாள் வரை ஆண்டவரின் பெயருக்குக் கோவில் எழுப்பப்படவில்லை. எனவே, மக்கள் தொழுகை மேடுகளில் பலியிட்டு வந்தார்கள். 3ஆண்டவர்மீது சாலமோன் அன்பு கொண்டு, தம் தந்தையான தாவீது விதித்த நியமங்களின்படி நடந்து வந்தார். ஆனால், அவரும் தொழுகை மேடுகளில் பலியிட்டுத் தூபம் காட்டி வந்தார். 4ஒருநாள் அரசர் பலி செலுத்துமாறு கிபயோனுக்குச் சென்றார். அங்கேதான் மிக முக்கியமான தொழுகைமேடு இருந்தது. அங்கிருந்த பலிபீடத்தின் மேல்தான் சாலமோன் ஆயிரம் எரிபலிகளைச் செலுத்தியிருந்தார். 5அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!” என்று கடவுள் கேட்டார். 6அதற்குச் சாலமோன், “உம் அடியாராகிய என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர். அந்தப் பேரன்பை அவருக்கு என்றும் காட்டி வந்து, இன்று அவரது அரியணையில் வீற்றிருக்கும் மகனை அவருக்குத் தந்தீர். 7என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை. 8இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். 9எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும். இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?” என்று கேட்டார்.


10சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. 11கடவுள் அவரிடம், “நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். 12இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை. 13அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால், உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான். 14மேலும், உன் தந்தை தாவீதைப் போல் நீயும் என் வழிகளில் நடந்து, என் நியமங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடித்து வந்தால் உனக்கு நீண்ட ஆயுளையும் வழங்குவேன்” என்றார். 15சாலமோன் கனவினின்று விழித்தெழுந்தார். பின்னர், எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்று ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின்முன் நின்று எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினார். பின் தம் அலுவலர் அனைவருக்கும் பெரும் விருந்து அளித்தார்.


சாலமோனின் ஞானமிகு தீர்ப்பு


16ஒரு நாள், இரு விலைமாதர் அரசர் முன்னிலையில் வந்து நின்றனர். 17அவர்களுள் ஒருத்தி, “என் தலைவரே! இந்தப் பெண்ணும் நானும் ஒரே வீட்டில் குடியிருக்கிறோம். அந்த வீட்டில் அவள் என்னுடன் இருந்தபோது நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தேன். 18என் குழந்தை பிறந்து மூன்று நாள் ஆன பின், அவளும் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்த வீட்டில் எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை. 19இவள் இரவில் தூங்கும்போது தன் மகன் மீது புரண்டுவிட்டதால் அவன் இறந்துபோனான். 20அவள் நள்ளிரவில் எழுந்து, உம் பணிப்பெண்ணாகிய நான் தூங்கிக் கொண்டிருக்கையில், என்னருகில் கிடந்த என் மகனை எடுத்துத் தன் நெஞ்சருகில் வைத்துக்கொண்டு, இறந்துவிட்ட தன் மகனை என் நெஞ்சருகில் கிடத்திவிட்டாள். 21விடியற்காலையில் பிள்ளைக்குப் பால் கொடுக்க நான் எழுந்தபோது, ஐயோ! அது செத்துக் கிடந்தது. சற்று விடிந்தபின் பிள்ளையை உற்று பார்த்தபோது, அது நான் பெற்ற பிள்ளை அல்ல என்று கண்டேன்” என்றாள். 22இதைக் கேட்ட மற்றவளோ, “இல்லை! உயிரோடிருப்பதே என் பிள்ளை. செத்துப் போனது உன் பிள்ளை” என்றாள். முதல் பெண்ணோ, “இல்லை! செத்த பிள்ளைதான் உன்னுடையது. உயிரோடிருக்கும் பிள்ளை என்னுடையது” என்றாள். இவ்வாறு அரசர்முன் அவர்கள் வாதாடினர்.


23அப்பொழுது அரசர், “என்ன இது? ஒருத்தி, ‘உயிரோடு இருக்கிற இவன் என் மகன்; செத்துவிட்டவன் உன் மகன்’ என்கிறாள். மற்றவளோ ‘இல்லை! செத்துவிட்டவன் உன் மகன்; உயிரோடு இருக்கிறவன் என் மகன்’ என்கிறாள்” என்றார். 24பின்னர் அரசர், “ஒரு வாளைக் கொண்டு வாருங்கள்” என்றார். 25அவ்வாறே அவர்கள் அரசரிடம் ஒரு வாள் கொண்டு வந்தனர். பிறகு அரசர், “உயிரோடிருக்கும் குழந்தையை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை ஒருத்தியிடமும் மறு பாதியை மற்றொருத்தியிடமும் கொடுங்கள்” என்றார்.


26உடனே, உயிரோடிருந்த பிள்ளையின் தாய் தன் மகனுக்காக நெஞ்சம் பதறி அரசரிடம், “வேண்டாம் என் தலைவரே! கொல்ல வேண்டாம். உயிரோடிருக்கும் குழந்தையை அவளிடமே கொடுத்து விடுங்கள்” என்று வேண்டினாள். மற்றவளோ, “அது எனக்கும் வேண்டாம்; உனக்கும் வேண்டாம்; அதை இரண்டாக வெட்டுங்கள்” என்றாள். 27உடனே அரசர், “உயிரோடிருக்கும் அந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டாம். முதல் பெண்ணிடமே கொடுங்கள். அவள்தான் அதன் தாய்” என்று முடிவு கூறினார். 28அரசர் அளித்த தீர்ப்பைப் பற்றி இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் கேள்விப்பட்டனர். நீதித் தீர்ப்பு வழங்குவதற்கெனக் கடவுள் அருளிய ஞானம் அவரிடம் உள்ளது என்று கண்டு, அவருக்கு அஞ்சி நடந்தனர்.



அதிகாரம் 4:1-34

சாலமோனின் அலுவலர்


1சாலமோன் அரசர் இஸ்ரயேலர் அனைவர்மீதும் ஆட்சி செலுத்தி வந்தார். 2அவருடன் இருந்த அதிகாரிகள் இவர்களே; 3குரு: சாதோக்கின். மகன் அசரியா. தலைமைச் செயலர்; சீசாவின் மைந்தர் எலிகோரேபு, அகியா. அமைச்சன்; அகிலூதின் மகன் யோசபாத்து. 4படைத் தலைவன்; யோயாதாவின் மகன் பெனாயா. குருக்கள்; சாதோக்கு, அபியத்தார். 5தலைமைக் கண்காணிப்பாளன்; நாத்தானின் மகன் அசரியா. அரசரின் ஆலோசகன்; நாத்தானின் மகன் குரு சாபூது. 6அரண்மனை மேற்பார்வையாளன்; அகிசார். கட்டாய வேலைக்காரர் மேற்பார்வையாளன்; அப்தாவின் மகன் அதோனிராம். 7இஸ்ரயேல் நாடெங்கும் சாலமோனின் கீழ் பன்னிரு ஆளுநர் இருந்தனர். அவர்கள் அரசருக்கும் அவரது அரண்மனைக்கும் வேண்டிய உணவுப் பொருட்களைச் சேகரித்துக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் மாதத்திற்கு ஒருவராக ஆண்டு முழுவதும் தேவையான பொருள்களைச் சேகரித்துத் தந்தார்கள். 8அவர்களின் பெயர்கள்: பென்கூர் — மலை நாடான எப்ராயிம் இவனுக்கு உரியது. 9பென்தெக்கர் — மாக்காசு, சாயல்பிம், பேத்சமேசு, ஏலோன் பெத்கானான் ஆகிய நகர்கள் இவனுக்கு உரியவை. 10பென்கெசது — அருபோத்து, சோக்கோவும் ஏபேர் பகுதி முழுவதும் இவனுக்கு உரியவை. 11சாலமோனின் மகள் தாப்பாத்தின் கணவன் பென் அபினதாபு — நாபத்தோர் பகுதி முழுவதும் இவனுக்கு உரியது.


12அகிலூதின் மகன் பாகனா — தானாக்கு, மெகிதோ, பெத்சான் நகர்ப் பகுதிகளும் சாரத்தானை அடுத்து, இஸ்ரயேலுக்குத் தெற்கே, பெத்சானிலிருந்து ஆபேல் மெகோலா வரை, யோக்மாயாமின் மறுபக்கம் உள்ள பகுதியும் இவனுக்குரியவை. 13பென்கெபர் — ராமோத்து கிலயாதும் மனாசேயின் மகன் யாயிர்க்குச் சொந்தமான கிலயாது நாட்டுச் சிற்றூர்களும், பாசானிலுள்ள அர்கோபு நாட்டின் மதிற்சுவர்களும் வெண்கலக் குறுக்குக் கம்பிகளும் கொண்ட அறுபது நகர்களும் இவனுக்கு உரியவை. 14இத்தோவின் மகன் அகினதாபு — மகனயிம் இவனுக்கு உரியது. 15சாலமோனின் மகள் பாஸ்மத்தின் கணவன் அகிமாசு — நப்தலி இவனுக்கு உரியது. 16ஊசாயின் மகன் பாகனா — ஆசேர், பெயலோத்து இவனுக்கு உரியவை. 17பாருவாகின் மகன் யோசபாத்து — இசக்கார் இவனுக்கு உரியது. 18ஏலாவின் மகன் சிமயி — பென்யமின் இவனுக்கு உரியது. 19ஊரியின் மகன் கெபேர் — எமேரியரின் மகன் சீகோனுக்கும் பாசானின் மன்னன் ஓகுக்கும் உரியதாய் இருந்த கிலயாது நாடு இவனுக்குரியது.


சாலமோனின் சீரும் சிறப்பும்


20இவர்களைத் தவிர யூதாப் பகுதிக்கு ஆளுநர் ஒருவர் இருந்தார். யூதா, இஸ்ரயேல் மக்கள் கடற்கரை மணலைப் போல் திரளாய் இருந்தனர்; உண்டு குடித்து மகிழ்ந்திருந்தனர்.


21சாலமோன், யூப்பிரத்தீசு, தொடங்கிப் பெலிஸ்தியரின் நாடு வரையிலும், எகிப்தின் எல்லை வரையிலும் இருந்த நாடுகளின் மேலும் ஆட்சி செலுத்தி வந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் அந்நாடுகளின் மக்கள் சாலமோனுக்குக் கப்பம் கட்டி அடிபணிந்திருந்தனர்.✠ 22சாலமோன் வீட்டில் நாள்தோறும் உணவுக்காகத் தேவைப்பட்டவை; முப்பது ‘கலம்’* மிருதுவான மாவு; அறுபது “கலம்’** நொய்;✠ 23கொழுத்த மாடுகள் பத்து; மேய்ச்சலிலிருந்து வந்த மாடுகள் இருபது; ஆடுகள் நூறு; கலைமான்கள், சிறுமான்கள், வரையாடுகள், கொழுத்த கோழிகள் ஆகியவை. 24திப்சாவிலிருந்து காசா வரையிலும் யூப்பரத்தீசின் மேற்குப் புறத்தில் உள்ள நாடுகள் அனைத்தின் மீதும், அந்த ஆற்றுக்கு மேற்கே இருந்த அரசுகள் அனைத்தின் மீதும் அவர் ஆட்சி செலுத்தி வந்தார். எல்லைப்புறப் பகுதிகள் அனைத்திலும் அமைதி நிலவியது. 25சாலமோனின் வாழ்நாளெல்லாம் தாண் முதல் பெயேர்செபா வரையிலும் பரவியிருந்த யூதா, இஸ்ரயேல் மக்கள் பாதுகாப்புடன் வாழ்ந்தனர். அவர்களுள் ஒவ்வொருவரும் திராட்சைத் தோட்டங்களையும் அத்திமரங்களையும் உடைமையாகக் கொண்டிருந்தனர்; 26சாலமோனுக்கு இருந்த தேர்க்குதிரை இலாயங்கள் நாற்பதினாயிரம்; குதிரை வீரர்கள் பன்னீராயிரம்.✠ 27ஆளுநர்கள் அவரவர் முறைப்படி மாதந்தோறும் அரசர் சாலமோனுக்கும் அவரோடு உணவு அருந்தி வந்த அனைவருக்கும் தேவையான உணவுப் பொருள்களைக் கொடுத்து வந்தார்கள். ஒரு குறையும் வைக்கவில்லை. 28மேலும், அவர்கள் தேர்க் குதிரைகளுக்கும் கோவேறு கழுதைகளுக்கும் தேவைப்பட்ட வாற்கோதுமையையும் வைக்கோலையும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட முறையின்படி, அவை இருந்த இடத்திற்குக் கொண்டு வந்தார்கள். 29கடவுள் சாலமோனுக்கு மிகுந்த ஞானத்தையும் அறிவுக் கூர்மையையும் கடற்கரை மணலெனப் பரந்த அறிவாற்றலையும் அளித்திருந்தார். 30கீழை நாட்டினர் அனைவரின் ஞானத்தையும், எகிப்தியரின் எல்லாவகை ஞானத்தையும்விடச் சாலமோனின் ஞானம் சிறந்ததாய் விளங்கிற்று. 31எசுராகியனான ஏத்தானைவிட, ஏமான், கல்கோல், தர்தா என்ற மாகோலின் புதல்வர், மற்ற மனிதர் அனைவரையும் விட, அவரே ஞானத்தில் சிறந்து விளங்கினார்.✠ 32சுற்றிலுமிருந்த நாடுகள் அனைத்திலும் அவர் புகழ் பரவிற்று. அவர் மூவாயிரம் நீதிமொழிகளை உரைத்தார். அவர் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை ஆயிரத்து ஐந்து.✠ 33லெபனோனின் கேதுரு முதல் சுவரில் முளைக்கும் ஈசோப்பு வரை உள்ள எல்லா மரவகைகளைக் குறித்தும் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகியவற்றைக் குறித்தும் கருத்துரை வழங்கினார். 34சாலமோனின் ஞானத்தைக் கேட்கப் பல்வேறு இனத்தைச் சார்ந்தவர் அவரை நாடி வந்தனர். அவரது ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்ற பின்னர் அனைவரும் அவரைத் தேடி வந்தனர்.


4:21 தொநூ 15:18;2 குறி 9:26. 4:26 1 அர 10:26; 2 குறி 1:14; 9:25. 4:32 நீமொ 1:1; 10:1; 25:1; இபா 1:1. 4:22 ‘கோர்’ என்பது எபிரேய பாடம். 4:31 திபா 89 தலைப்பு.



அதிகாரம் 5:1-18

திருக்கோவில் கட்டுவதற்கான சாலமோனின் முன்னேற்பாடுகள்


(2 குறி 2:1-18)


1தீரின் மன்னர் ஈராம் தாவீதுக்கு அவரது வாழ்நாளெல்லாம் நண்பராயிருந்தார். சாலமோன் தம் தந்தையாகிய தாவீதுக்குப் பின் அரசாரகத் திருப்பொழிவு பெற்றுள்ளார் எனறு அவர் கேள்விப்பட்டுத் தம் தூதரை அவரிடம் அனுப்பினார். 2சாலமோனும் ஈராமிடம் தூதனுப்பி, “ஆண்டவர் என் தந்தை தாவீதின் எதிரிகளை அவருக்கு அடிபணியச் செய்யும் வரை, எப்பக்கமும் இடையறாது போர் நடந்து வந்தது என்பது உமக்குத் தெரியும். 3இதனால், தம் ஆண்டவராகிய கடவுளின் பெயருக்குக் கோவில் எழுப்ப அவரால் முடியாமல் போயிற்று என்பதும் உமக்குத் தெரியும். 4இப்பொழுதோ, என் கடவுளாகிய ஆண்டவர் என் எல்லைகள் எங்கும் அமைதி நிலவும்படி செய்திருக்கிறார். எனக்கு எதிரியுமில்லை; இடையூறுமில்லை. 5ஆகையால், ஆண்டவர் என் தந்தை தாவீதை நோக்கி, ‘உனக்குப் பின் உன் அரியணையில் நான் அமர்த்தும் உன் மகனே என் பெயருக்குக் கோவில் கட்டுவான்’ என்று சொன்னபடியே, என் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்குக் கோவில் எழுப்ப எண்ணியுள்ளேன்.✠ 6எனக்குத் தேவையாயிருக்கும் கேதுரு மரங்களை லெபனோனிலிருந்து வெட்டித்தருமாறு உம் பணியாளருக்குக் கட்டளையிடும். மரம் வெட்டுவதில் சீதோனியரைப் போல் திறமையுள்ளவர் என் குடிமக்களுள் ஒருவரும் இல்லை என்பது உமக்குத் தெரியும். என் பணியாளர் உம் பணியாளரோடு சேர்ந்து வேலை செய்வார்கள். உம் பணியாளருக்கு நீர் குறிப்பிடும் கூலியை நான் கொடுத்து விடுகிறேன்” என்று சொல்லக் சொன்னார்.


7ஈராம் சாலமோனின் வார்ததைகளைக் கேட்டு மிகவும் மகிழ்ந்து, “அந்த எராளமான மக்களை ஆளும்படி தாவீதுக்கு ஞானமுள்ள ஒரு மகனைக் கொடுத்த ஆண்டவர் இன்று வாழ்த்தப் பெறுவாராக!” என்றார். 8மேலும், ஈராம் சாலமோனிடம் ஆளனுப்பி “நீர் எனக்குச் சொல்லி அனுப்பியதைக் கேட்டேன். உமது விருப்பபடியே கேதுரு மரங்களையும், நூக்கு மரங்களையும் அனுப்பி வைக்கிறேன். 9என் பணியாளர் லெபனோனிலிருந்து அவற்றைக் கடற்கரைக்குக் கொண்டு வருவார்கள். தெப்பம் தெப்பமாகக் கட்டி, கடல் வழியாக நீர் குறிக்கும் இடத்திற்கு அனுப்பி, அங்கே அவற்றை அவிழ்த்து உம்மிடம் சேர்ப்பிப்பேன். அவற்றை நீர் பெற்றுக் கொள்ளும். என் வீட்டாருக்கு உணவுப் பொருள் கொடுத்தால் போதும், இதுவே என் விருப்பம்” என்று தெரிவித்தார். 10அப்படியே ஈராம் சாலமோனுக்கு கேதுரு மரங்களையும், நூக்கு மரங்களையும் அவர் விரும்பியபடி அனுப்பிக் கொண்டிருந்தார். 11சாலமோன் ஈராம் வீட்டாரின் உணவுக்காக. இருபதாயிரம் கலம்* கோதுமையும் இருநூறு குடம்** பிழிந்து வடிகட்டிய ஒலிவ எண்ணெயும் கொடுத்தார். இவ்வாறு, ஈராமுக்குச் சாலமோன் ஆண்டுதோறும் கொடுத்து வந்தார்.✠✠ 12ஆண்டவர் தாம் சாலமோனுக்கு வாக்களித்திருந்தபடியே அவருக்கு ஞானத்தைத் தந்தருளினார்.ஈராமும் சாலமோனும் நல்லுறவு கொண்டிருந்தனர். இருவரும் உடன்படிக்கை செய்து கொண்டனர்


13அரசர் சாலமோன் இஸ்ரயேல் முழுவதிலிருந்தும் முப்பதாயிரம் பேரைக் கட்டாய வேலைக்கு உட்படுத்தினார். 14ஒவ்வொரு மாதமும் அவர்களுள் பத்தாயிரம் பேரை லெபனோனுக்கு மாற்றி மாற்றி அனுப்பி வைத்தார். அவர்கள் ஒரு மாதம் லெபலோனில் வேலை செய்வார்கள்; இரண்டு மாதம் வீட்டிலிருப்பார்கள். அதோனிராம் கட்டாய வேலையைக் கண்காணித்து வந்தான்.✠ 15சுமைதூக்க எழுபதானாயிரம் பேரையும், மலை நாட்டில் கல்வெட்ட எண்பதாயிரம் பேரையும் சாலமோன் அமர்த்தியிருந்தார். 16வேலையைக் கவனிக்கச் சாலமோனால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகளைத் தவிர, வேலையாட்களை மேற்பார்வையிட மூவாயிரத்து முந்நூறு கண்காணிகளும் இருந்தார்கள். 17அரசரின் கட்டளைப்படி அவருடைய ஆட்கள் கோவிலுக்கு அடித்தளமிடத் தேவையான கற்களைச் செதுக்குவதற்கென மிகப்பெரிய தரமான கற்களை வெட்டினார்கள். 18சாலமோனின் சிற்பிகளும், ஈராமின் சிற்பிகளும் கெபேல் ஊராரும் சேர்ந்து கோவில் கட்டுவதற்கான மரங்களையும் கற்களையும் செதுக்கித் தயார் செய்தனர்.


5:5 2 சாமு 7:12-13; 1 குறி 17:11-12. 5:14 1 அர 12:18. 5:11 ‘கோர்’ என்பது எபிரேய பாடம். 5:11 ‘இருபது கோர்’ என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 6:1-38

சாலமோன் திருக்கோவில் கட்டுதல்


1இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின நானூற்று எண்பதாம் ஆண்டு, சாலமோன் இஸ்ரயேலுக்கு அரசரான நான்காம் ஆண்டு, ‘சிவு’ என்ற இரண்டாம் மாத்தில் அவர் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டத் தொடங்கினார். 2அரசர் சாலமோன் ஆண்டவருக்கென கட்டின இல்லத்தின் அளவு; நீளம் அறுபது முழம், அகலம் இருபது முழம், உயரம் முப்பது முழம். 3கோவிலது தூயகத்தின் முன் மண்டபம், கோவிலின் அகலத்திற்குச் சமமாய் இருபது முழ நீளமும், கோவிலுக்கு முன்னால் பத்து முழு அகலமும், கொண்டிருந்தது. 4வெளிப்புறம் குறுகி உட்புறம் விரிந்த பலகணிகளை அவர் கோவிலில் அமைத்தார். 5கோவிலின் சுவரைச் சுற்றி, — அதாவது தூயகத்தையும் கருவறையையும் சுற்றி இருந்த — சுவரை ஒட்டி மேடை எழுப்பி அதன் மேல் அடுக்கடுக்காய்ச் சிற்றறைகளைக் கட்டினார்.


6கீழிருந்த அறைகள் ஐந்து முழ அகலமும், நடுவிலிருந்த அறைகள் ஆறு முழ அகலமும், மேலிருந்த அறைகள் ஏழு முழ அகலமுமாய் இருந்தன. அந்த அறைகளின் விட்டங்கள் கோவிலின் சுவருக்குள் போகாதபடி அவற்றைத் தாங்குவதற்கென, சுற்றிலும் வெளிப்புறத்தில் ஒட்டுச்சுவர் அமைத்தார்.c 7செதுக்கி முடித்த கற்களாலேயே கோவில் கட்டப்பட்டதால், அது கட்டப்பட்டபோது, சுத்தியல் உளி போன்ற எந்த இரும்புக் கருவியின் ஒலியும் கோவிலில் கேட்கவில்லை.


8கீழறைகளுக்குப் போகும் வாயில் கோவிலின் தென்புறம் இருந்தது. சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், அங்கிருந்து மேல் அறைகளுக்கும் ஏறிச் செல்வர். 9அவர் கேதுரு மர விட்டங்களாலும் பலகைகளாலும் கோவிலுக்கு மச்சுப்பாவி அதைக் கட்டிமுடித்தார். 10கோவிலைச் சுற்றிலும் ஐந்து முழ உயரமாகச் சுற்றுக்கட்டு எழுப்பி, அதைக் கேதுரு மரங்களால் கோவிலோடு இணைத்தார்.✠


11அப்போது ஆண்டவரின் வாக்கு சாலமோனுக்கு உரைக்கப்பட்டது. 12அவர், “நீ என் நியமங்களின்படி ஒழுகி, என் நீதிச்சட்டங்களின்படி செயலாற்றி, என் கட்டளைகளைக் கடைப்பிடித்து நடந்து வருவாயாகில், நீ கட்டுகிற இக் கோவிலைக் குறித்து நான் உன் தந்தை தாவீதுக்குச் சொன்ன என் வாக்கை உன்னிடம் நிறைவேற்றுவேன். 13இஸ்ரயேல் மக்களிடையே குடியிருப்பேன்; என் மக்களாகிய இஸ்ரயேலரைக் கைவிடமாட்டேன்” என்றார். 14சாலமோன் கோவிலைக் கட்டிமுடித்தார்.


திருக்கோவிலின் உள் வேலைப்பாடுகள்


(2 குறி 3:8-14)


15பின்னர், கோவில் சுவர்களின் உட்புறத்தைக் கீழ்த்தளம் முதல் மேல் மச்சுவரை, கேதுரு பலகைகளால் அவர் மூடினார்; இவ்வாறு உட்புறம் முழுவதையும் மரத்தால் அவர் மூடினார்; மேலும் கோவிலின் கீழ்த்தளத்தை நூக்கு மரப்பலகைகளால் பாவினார். 16கோவிலின் பிற்பகுதியில் இருபது முழ இடத்தை, கீழ்த்தளம் முதல் மேல் மச்சுவரை, கேதுருப் பலகைகளால் தடுத்து, திருத்தூயகமாகிய கருவறையை அவர் அமைத்தார். 17அதற்கு முன்னால் நாற்பது முழஇடம் கோவில் தூயகமாய் அமைந்தது. 18கோவிலின் உட்புறமெங்கும் மூடியிருந்த கேதுருப் பலகைகளில் மொக்கு வடிவங்களும் விரிந்த மலர்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டிருந்தன. உட்புறமெங்கும் முற்றிலும் கேதுருப் பலகை மூடியிருந்ததால் கல்லே காணப்படவில்லை. 19ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்கென்று கோவிலின் உட்புறத்தில் கருவறையை அவர் அமைத்திருந்தார். 20கருவறை இருபது முழ நீளமும், இருபது முழ அகலமும், இருபது முழ உயரமுமாய் இருந்தது. அவர் அதனைப் பசும்பொன் தகடுகளால் மூடினார். பீடத்தையும் கேதுருப் பலகைகளால் மூடினார். 21கோவிலின் உட்புறத்தைச் சாலமோன் பசும் பொன்னால் மூடினார்; கருவறைக்கு முன்னால் பொன்னில் பொதியப்பட்ட பொற்சங்கிலிகளைத் தொங்கவிட்டார். 22இவ்வாறு, கோவில் முழுவதையும், ஓரிடமும் விடாமல், பொன்னால் அவர் மூடினார்; கருவறைப் பீடம் முழுவதையும் பொன்னால் மூடினார்.✠


23கருவறையில் ஒலிவ மரத்தால் பத்து முழ உயரமான இரு கெருபுகளை அவர் செய்து வைத்தார். 24முதல் கெருபின் ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம், கெருபின் மறு இறக்கையின் நீளமும் ஐந்து முழம். இரு இறக்கை நுனிகளுக்கு இடையே இருந்த தூரம் பத்து முழம். 25இரண்டாம் கெருபின் அளவும் இருந்தன. இரண்டாம் கெருபின் அளவும் பத்து முழம். இரு கெருபுகளும் ஒரே அளவாயும் ஒரே வடிவமாயும் இருந்தன. 26ஒரு கெருபு பத்து முழ உயரம் இருந்தது. 27மற்ற கெருபும் அதே அளவாய் இருந்தது. அவர் அந்தக் கெருபுகளைக் கோவிலின் உட்பகுதியில் வைத்தார். அவற்றின் இறக்கைகள் விரிந்தவாறு இருந்தன. ஒரு கெருபின் இறக்கை ஒரு பக்கத்துச் சுவரையும் மறு கெருபின் இறக்கை மறுபக்கத்துச் சுவரையும் தொட்டுக் கொண்டிருந்தன. 28அவர் அக்கெருபுகளையும் பொன்னால் மூடினார். 29கோவிலின் சுவர்களெங்கும் சுற்றிலும், உள்ளும் புறமும் கெருபுகள், ஈச்ச மரங்கள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களை அவர் செதுக்கி வைத்தார். 30கோவிலின் பிற்பகுதியிலும் முற்பகுதியிலும் தளத்தைப் பொன்னால் அவர் மூடினார்.


31கருவறையின் நுழைவாயிலுக்கு இரட்டைக் கதவையும் ஐங்கோண வடிவத்தில் கதவு நிலைகளையும் ஒலிவ மரத்தால் அவர் செய்து வைத்தார். 32ஒலிவ மரத்தாலான இந்த இரட்டைக் கதவில் கெருபுகள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களை அவர் செதுக்கி வைத்தார். அவற்றைப் பொன்னால் வேய்ந்தார்.


33அவர் தூயக நுழைவாயிலுக்கு நாற்கோண வடிவத்தில் கதவு நிலைகளை ஒலிவ மரத்தால் செய்து நிறுத்தினார். 34>அதன் இரு கதவுகளும் நூக்கு மரத்தால் செய்யப்பட்டிருந்தன. மறுகதவும் இரு மடிப்பாய்ச் செய்யப்பட்டிருந்தது. 35அவற்றில் கெருபுகள்,ஈச்ச மரங்கள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களைச் செதுக்கி, அவற்றின் அளவுக்கேற்ற பொன் தகட்டால் அவர் மூடினார். 36உள் முற்றத்தின் சுவர்களை, மூன்று வரிசை செதுக்கிய கற்களாலும், ஒரு வரிசை கேதுருக் கட்டைகளாலும் அவர் அமைத்தார்.


37நான்காம் ஆண்டு “சிவு” மாதத்தில் ஆண்டவரின் இல்லத்திற்கு அடித்தளம் இடப்பட்டது. 38பதினோராம் ஆண்டு “பூல்” என்ற எட்டாம் மாதத்தில் கோவிலின் எல்லாப் பகுதிகளும் திட்டமிட்டபடியே கட்டி முடிக்கப்பட்டன. இவ்வாறு கோவிலைக் கட்டி முடிக்க ஏழு ஆண்டுகள் ஆயின.


6:10 விப 26:33-34. 6:22 விப 30:1-3. 6:23-28 விப 25:18-20.



அதிகாரம் 7:1-51

சாலமோனின் அரண்மனை


1சாலமோன் தம் அரண்மனை முழுவதையும் கட்டி முடிக்கப் பதின்மூன்று ஆண்டுகள் ஆயின. 2அவர் ‘லெபனோனின் வனம்’ எனப்பட்ட மாளிகையையும் கட்டினார். அதன் நீளம் நூறு முழம்; அகலம் ஐம்பது முழம்; உயரம் முப்பது முழம். நான்கு வரிசையாக கேதுருத் தூண்களை நிறுத்தி, அவற்றின் மேல் கேதுரு விட்டங்களைப் பொருத்தி அம்மாளிகையை அவர் கட்டினார். 3வரிசைக்குப் பதினைந்தாக நின்ற நாற்பத்தைந்து தூண்களின்மேல் அமைந்திருந்த அறைகள், கேதுரு மரங்களாலேயே மச்சுப் பாவபட்டிருந்தன. பலகணிகள் மூன்று வரிசையாக அமைந்திருந்தன. 4மூன்று வரிசையிலும் அவை ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன. 5எல்லாக் கதவுகளும் கதவு நிலைகளும் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று வரிசையிலும் அவை ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன.

6அவர் ‘தூண்-மண்டபம்’ ஒன்றும் கட்டினார். அதன் நீளம் ஐம்பது முழம்; அகலம் முப்பது முழம். அதற்கு முன் தூண்களும் விதானமும் கொண்ட வேறோரு மண்டபமும் அவர் அமைத்தார்.

7நீதி வழங்குவதற்கென்று அரியணை மண்டபம் ஒன்றையும் கட்டினார். அது ‘நீதி மண்டபம்’எனப்படும். அது தளம் முழுவதும் கேதுருப் பலகைகளால் பாவப்பெற்றிருந்தது.

8இம்மண்டபத்திற்குப் பின்புறம் இருந்த முற்றத்தில், அவர் குடியிருப்பதற்காகக் கட்டிய அரண்மனையும் அதே வேலைப்பாடு கொண்டதாய் இருந்தது. சாலமோன் தாம் மணந்து கொண்ட பார்வோனின் மகளுக்கென்று அம்மண்டபத்தைப் போன்ற ஒரு மாளிகையையும் கட்டினார்.✠

9இவையனைத்தும், அளவுக்கேற்ப இருபுறமும் வெட்டிச் செதுக்கிய விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்டன. அடித்தளம் முதல் கூரை வரை, வெளிச்சுற்று முதல் பெரு முற்றம் வரை, இவ்வாறே செய்யப்பட்டன. 10அடித்தளம் பத்து, எட்டு முழ அரிய பெரிய கற்களால் ஆனது. 11அதன் மேல் அளவுக்கேற்பச் செதுக்கப் பெற்ற தரமான கற்களும் கேதுருப் பலகைகளும் பொருத்தப் பெற்றிருந்தன. 12பெரு முற்றத்தைச் சுற்றிலும் இருந்த சுவர்கள் மூன்று வரிசை செதுக்கப் பெற்ற கற்களாலும், ஒரு வரிசை கேதுரு கட்டைகளாலும் அமைக்கப் பெற்றிருந்தன. ஆண்டவரின் இல்லத்தின் உள்முற்றமும் கோவிலின் முன்மண்டபமும் அவ்வாறே அமைக்கப்பெற்றிருந்தன.


சிறப்புச் சிற்பி ஈராம்


13அரசர் சாலமோன் தீரிலிருந்து ஈராமை வரவழைத்திருந்தார். 14இவர் நப்தலி குலத்தைச் சார்ந்த ஒரு கைம்பெண்ணின் மகன். இவர் தந்தை தீர்நகரத்தவர்; வெண்கல வேலையில் கை தேர்ந்தவர். ஈராமும் எல்லா வகையான வெண்கல வேலையும் செய்யத்தக்க அறிவுக்கூர்மையும் நுண்ணறிவும் கைத்திறனும் கொண்டிருந்தார். இவர் அரசர் சாலமோனிடம் வந்து அவர் இட்ட வேலையை எல்லாம் செய்தார்.


இரு வெண்கலத்தூண்கள்

(2 குறி 3:15-17)


15அவர் இரண்டு வெண்கலத் தூண்களை வார்த்தார். ஒவ்வொன்றின் உயரம் பதினெட்டு முழம்; சுற்றளவு பன்னிரண்டு முழம்; வெண்கலக் கன அளவு நான்கு விரற்கடை. 16அத்தூண்களின் உச்சியல் வைப்பதற்கென்று வெண்கலத்தால் இரு போதிகைகள் வார்த்தார். ஒவ்வொன்றின் உயரம் ஐந்து முழம்.

17அவர் அவ்விரு தூண்களின் மேல் இருந்த போதிகைகளுக்கென வலைப்பின்னல்களும் சங்கிலித் தொங்கல்களும் ஏழேழு செய்தார். 18மேலும், அவர் இரண்டு வரிசை மாதுளம் பழ வடிவங்கள் செய்து அவற்றைத் தூணின் உச்சியிலுள்ள போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலின் மேல் இரு வரிசையாக அமைத்தார்; மற்றதற்கும் அவ்வாறே செய்தார். 19முன்மண்டபத் தூண்களின் உச்சியில் இருந்த போதிகைகள் அல்லி மலர் வடிவாய் இருந்தன. அவற்றின் உயரம் நான்கு முழம். 20மேலும், தூண்களின் மேலுள்ள போதிகைகளின் பின்னல்களை ஒட்டிப் புடைத்திருந்த பகுதிகளைச் சுற்றிலும் தூணுக்கு இருநூறு மாதுளம் பழ வடிவங்கள் இரண்டு வரிசையில் இருந்தன. 21இவ்விரு தூண்களையும் தூயகத்தின் முன்மண்டபத்தின் முன் அவர் நாட்டினார். அவர் தென்புறம் நாட்டிய தூணுக்கு ‘யாக்கின்’ என்றும் வடபுறம் நாட்டிய தூணுக்குப் ‘போவாசு’ என்றும் பெயரிட்டார். 22தூண்களின் உச்சியில் அல்லி மலர் வேலைப்பாடு இருந்தது. இவ்வாறு, தூண்களின் வேலைப்பாடு முடிவுற்றது.


வார்ப்புக் கடல்

(2 குறி 4:2-5)


23அவர் ‘வார்ப்புக்கடல்’ அமைத்தார். அது வட்ட வடிவமாய் இருந்தது. அதன் விட்டம் பத்து முழம்; உயரம் ஐந்து முழம்; சுற்றளவு முப்பது முழம். 24அதன் விளிம்பைச் சுற்றிலும் கீழே முழத்திற்குப் பத்தாக மொக்கு வடிவங்கள் செய்யப்பட்டிருந்தன. இரு வரிசையில் இருந்த மொக்குகளும் அந்த வார்ப்புக் கடலோடு ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தன. 25அது பன்னிருகாளை வடிவங்களின்மேல் வைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும், மூன்று மேற்கையும், மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கி இருந்தன. அவற்றின்மேல் வார்ப்புக்கடல் வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் பின்புறங்கள் உள்நோக்கி இருந்தன.

26வார்ப்புக் கடலின் கன அளவு நான்கு விரற்கடை; அதன் விளிம்பு பானையின் விளிம்பைப் போலவும் அல்லி மலரைப் போலவும் விரிந்து இருந்தது. அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் கொள்ளும்.


வெண்கலத் தள்ளுவண்டிகள்


27மேலும், அவர் பத்து வெண்கலத் தள்ளுவண்டிகளைச் செய்தார். ஒவ்வொரு வண்டியும் நான்கு முழ நீளமும், நான்கு முழ அகலமும், மூன்று முழ உயரமும் கொண்டது. 28வண்டிகளின் அமைப்பு பின்வருமாறு; அவற்றுக்குக் குறுக்குக் கம்பிகள் இருந்தன. அவை சட்டங்களின் மேல் இணைக்கப்பட்டிருந்தன. 29சட்டங்களில் இணைக்கப் பெற்றிருந்த கம்பிகளின்மேல் சிங்கங்கள், காளைகள், கெருபுகள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் மேலும் கீழும், சட்டங்களின் மேல் கைவினைத் தோரணங்கள் இருந்தன. 30ஒவ்வொரு வண்டிக்கும் நான்கு வெண்கலச் சக்கரங்களும், வெண்கல அச்சுகளும், அதன் நான்கு மூலைகளிலும் தொட்டியைத் தாங்க நான்கு முட்டுகளும் இருந்தன. அந்த முட்டுகள் ஒவ்வொன்றைச் சுற்றிலும் தோரணங்கள் பதிக்கப் பெற்றிருந்தன. 31அதன் வாய்ப்பகுதி ஒரு வளையத்தினுள் ஒரு முழ உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அது வட்டமாகவும், ஒன்றரை முழ ஆழம் உடையதாகவும் ஒரு தாங்கியைப் போல் செய்யப்பட்டிருந்தது. வாய்ப்பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் இருந்தன. அதன் குறுக்குக் கம்பிகள் வட்டமாக இல்லாமல், சதுரமாக அமைக்கப்பட்டிருந்தன. 32நான்கு சக்கரங்களும் குறுக்குக் கம்பிகளின் கீழே இருந்தன. சக்கரங்களின் அச்சுகள், வண்டியுடன் ஒரே வார்ப்பாய் இருந்தன. சக்கரங்களின் உயரம் ஒன்றரை முழம். 33சக்கரங்கள் தேர்ச்சக்கரங்கள் போல் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் அச்சுகள், வட்டைகள், ஆரக்கால்கள், குடங்கள் ஆகியவை வார்ப்பால் ஆனவை.

34வண்டியின் நான்கு மூலைகளிலும் நான்கு பிடிகள் இருந்தன. 35அவையும் வண்டியும் ஒரே வார்ப்பாய் இருந்தன. ஒவ்வொரு வண்டியின் மேற்பகுதியிலும் அரை முழ உயரமான வட்ட விளிம்பு இருந்தது. வண்டியின் மேற்பகுதியில் அதன் பிடிகளும் குறுக்குக் கம்பிகளும் ஒரே வார்ப்பாய் இருந்தன. 36அதன் பிடிகள், குறுக்குக் கம்பிகள் ஆகியவற்றின் மேல் கெருபுகள், சிங்கங்கள், ஈச்ச மரங்கள் ஆகியவற்றை அவற்றுக்குரிய இடத்தில் சுற்றுத் தோரணங்களோடு அவர் செதுக்கினார். இவ்வாறு, பத்து வண்டிகள் செய்தார். 37இதே முறையில் பத்து வண்டிகளையும் அவர் செய்தார்; அவை யாவும் ஒரே வார்ப்பும், ஒரே அளவும், ஒரே வடிவமும் கொண்டனவாய் இருந்தன.

38அவர் பத்து வெண்கலத் தொட்டிகளைச் செய்தார். ஒவ்வொரு தொட்டியும் நாற்பது குடம் கொள்ளும். ஒவ்வொன்றின் அகலமும் நான்கு முழம், வண்டிக்கு ஒரு தொட்டியாக பத்து வண்டிகளிலும் தொட்டிகள் இருந்தன.✠ 39அவர் ஐந்து வண்டிகளைக் கோவிலின் தென்புறத்திலும் ஐந்து வண்டிகளைக் கோவிலின் வடபுறத்திலும் நிறுத்தினார். ஆனால், வார்ப்புக் கடலைத் தென்கிழக்கு மூலையில் வைத்தார்.


திருக்கோவிலுக்கான பொருள்களின் பட்டியல்

(2 குறி 4:11-5:1)


40பின்னர், கொப்பரைகள், கரண்டிகள், கிண்ணங்கள் ஆகியவற்றை ஈராம் செய்தார். ஆண்டவரின் இல்லத்திற்காக அரசர் சாலமோன் பணித்தபடி ஈராம் செய்து முடித்த அனைத்துப் பணிகள்: 41இரு தூண்கள், தூண்களின் உச்சியில் வைக்க இரு கிண்ணப் போதிகைகள்; அவற்றை மூட இரு வலைப் பின்னல்கள்; 42நானூறு மாதுளம் பழ வடிவங்கள். இவை ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் இரு வரிசைகளாக அமைக்கபட்டுத் தூண்களின் உச்சியிலிருந்த கிண்ணப் போதிகைகளை மூடியிருந்தன. 43பத்து வண்டிகள், அவற்றின் மேல் வைக்கப் பத்துப் தொட்டிகள். 44‘சவார்ப்புக் கடல்’ ஒன்று; அதைத் தாங்கப் பன்னிரு காளை வடிவங்கள்.

45கொப்பரைகள், கரண்டிகள், கிண்ணங்கள். அரசர் சாலமோன் கட்டளைப்படி ஆண்டவரின் இல்லத்திற்காக ஈராம் செய்த துணைக் கலன்கள் எல்லாம் பளபளக்கும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. 46அரசர் இவற்றை யோர்தானுக்கடுத்த சமவெளியில் சுக்கோத்துக்கும் சாரத்தானுக்கும் நடுவேயுள்ள களிமண் களத்தில் வார்ப்பித்தார். 47இந்தத் துணைக்கலன்கள் ஏராளமாய் இருந்தமையால், சாலமோன் அவற்றை எடை பார்க்கவில்லை. வெண்கலத்தின் எடையும் கணிக்கப்படவில்லை.

48மேலும், சாலமோன் ஆண்டவரின் இல்லத்திற்காகப் பின்வரும் பொருள்கள் அனைத்தையும் செய்தார்; பொன் பலிபீடம், திருமுன்னிலை அப்பத்திற்கான பொன் மேசை;✠ 49கருவறையின் முன்னே, தென்புறம் ஐந்தும் வடபுறம் ஐந்துமாக வைக்க, பசும்பொன் விளக்குத் தண்டுகள்; பொன்னாலான மலர் வடிவங்கள், அகல்கள், குறடுகள்;✠ 50பசும் பொன்னாலான மலர்க் குவளைகள், அணைப்பான்கள், கிண்ணங்கள், தட்டுகள், தீச்சட்டிகள்; உட்கோவிலின் திருத்தூயகத்தின் கதவுகளுக்கும் கோவிலின் தூயகத்தின் கதவுகளுக்கும் வேண்டிய பொன் முளைகள்.

51இவ்வாறு, அரசர் சாலமோன் ஆண்டவரின் இல்லத்திற்காகச் செய்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தன. மேலும், சாலமோன் தம் தந்தை தாவீது அர்ப்பணித்திருந்த வெள்ளி, பொன், துணைக்கலன்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து ஆண்டவரின் இல்லத்துக் கருவூலத்தில் வைத்தார்.✠


7:8 1 அர 3:1. 7:38 விப 30:17-21. 7:48 விப 25:23-30; 30:1-3. 7:49 விப 25:31-40. 7:51 2 சாமு 8:11; 1 குறி 18:11.



அதிகாரம் 8:1-66

உடன்படிக்கைப் பேழை திருக்கோவிலுக்குக் கொண்டுவரப்படல்

(2 குறி 5:2-6:2)


1பின்னர், சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தாவீதின் நகர் சீயோனினின்று கொண்டுவர விரும்பினார். அதற்காக அவர் இஸ்ரயேலின் பெரியோரையும் எல்லாக் குலத்தவர்களையும் இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களையும் எருசலேமிற்குத் தம்மிடம் வரும்படி அழைத்தார்.✠ 2அதற்கிணங்க, அவர்கள் அனைவரும் ஏழாம் மாதமாகிய ‘ஏத்தானிம்’ மாதத்தின் பண்டிகையின் போது, அரசர் சாலமோன் முன் கூடினர்.✠ 3இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் வந்தனர். குருக்கள் பேழையைத் தூக்கிக் கொண்டனர். 4ஆண்டவரின் பேழை, சந்திப்புக் கூடாரம், கூடாரத்தின் தூய கலன்கள் அனைத்தையும் குருக்களும் லேவியரும் சுமந்துசென்றனர். 5அரசர் சாலமோனும், அவரிடம் வந்து குழுமிய இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும், எண்ணவோ கணக்கிடவோ முடியாத அளவு திரளான ஆடுகளையும் மாடுகளையும் பேழைக்கு முன்னால் பலியிட்டனர். 6பின்னர், குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைக் கோவில் கருவறையாகிய திருத்தூயகத்தில் அதற்குரிய இடத்தில் கெருபுகளின் இறக்கைகளின் கீழே கொண்டு வந்து வைத்தனர். 7அக்கெருபுகள் பேழை இருக்கும் இடத்தில் தங்கள் இரண்டு இறக்கைகளையும் விரித்து, பேழையையும், அதன் தண்டுகளையும் மூடியவாறு இருந்தன. 8தண்டுகள் நீளமாய் இருந்ததால், அவற்றின் முனைகள் கருவறைக்கு முன்னுள்ள தூயகத்திலிருந்து காணக் கூடியவையாய் இருந்தன; ஆனால், வெளியினின்று தெரியாது. இன்றுவரை அந்தத் தண்டுகள் அங்கேதான் இருக்கின்றன. 9இரு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் பேழைக்குள் இல்லை; இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறியபொழுது அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்ட ஓரேபு மலையில் மோசே அதற்குள் வைத்தவை அவை.✠

10குருக்கள் தூயகத்தினின்று வெளியே வருகையில் ஒரு மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று. 11அம்மேகத்தின் பொருட்டு குருக்கள் திருப்பணி புரிய அங்கு நிற்க இயலவில்லை. ஏனெனில், ஆண்டவரின் மாட்சி அவர் இல்லத்தை நிரப்பிற்று. 12அப்பொழுது சாலமோன், “ஆண்டவரே! நீர் கரிய மேகத்தில் உறைவதாகக் கூறினீர்.✠ 13நீர் என்றென்றும் தங்கி வாழ உயர் இல்லம் ஒன்றை உமக்காக நான் கட்டியுள்ளேன்” என்றார்.


சாலமோன் மக்களை நோக்கிக் கூறல்

(2 குறி 6:3-11)


14பின்னர், அரசர் மக்கள் பக்கம் திரும்பி, இஸ்ரயேல் சபையார் அனைவருக்கும் ஆசி வழங்கினார். அப்பொழுது இஸ்ரயேல் சபையார் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். 15அப்போது அவர் உரைத்தது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! அவர் என் தந்தை தாவீதுக்கு வாயால் உரைத்ததைக் கையால் செய்து முடித்தார். 16‘என் மக்களாகிய இஸ்ரயேலை எகிப்திலிருந்து அழைத்து வந்த நாள் முதல் இன்றுவரை, என் பெயர் விளங்கும்படி ஒரு கோவிலைப் கட்டுவதற்காக, இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களுக்குச் சொந்தமான எந்த நகரையும் நான் தேர்ந்து கொள்ளவில்லை. ஆனால், தாவீதாகிய உன்னை என் மக்களாகிய இஸ்ரயேலை ஆளும்படி தேர்ந்து கொண்டேன்.’✠ 17இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்குக் கோவில் கட்டவேண்டும் என்ற எண்ணம் என் தந்தை தாவீதின் உள்ளத்தில் இருந்தது. 18ஆயினும் ஆண்டவர் என் தந்தை தாவீதை நோக்கி, ‘என் பெயருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உன் உள்ளத்தில் இருக்கிறது. அது நல்லதுதான், 19ஆயினும், நீ அக்கோவிலைக் கட்டபோவதில்லை. உனக்குப் பிறக்கும் உன் மகனே என் பெயருக்கு அக்கோவிலைக் கட்டுவான்’ என்றார்.✠ 20இவ்வாறு, ஆண்டவர் தாம் உரைத்த வாக்கை இப்போது நிறைவேற்றியுள்ளார். ஆண்டவர் சொன்னடியே நான் என் தந்தை தாவீதின் இடத்திற்கு உயர்ந்து, இஸ்ரயேலின் அரியணையில் அமர்ந்துள்ளேன். மேலும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு இந்தக் கோவிலையும் கட்டியுள்ளேன். 21இதனுள் ஆண்டவர் நம் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த போது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை வைக்க, ஒரு தனி இடத்தையும் ஏற்பாடு செய்துள்ளேன்.”


சாலமோனின் மன்றாட்டு

(2 குறி 6:12-42)


22பின்னர், சாலமோன் ஆண்டவரின் பலிபீடத்தை நோக்கி நின்று கொண்டு, இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையில் வானத்திற்கு நேரே தம் கைகளை உயர்த்தி 23அவர் மன்றாடியது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உம்மைப் போன்ற வேறு கடவுள் யாரும் இல்லை. உமது முன்னிலையில் முழு உள்ளத்தோடு உமக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் உம்முடைய அடியார்க்கு உமது உடன்படிக்கையின்படி தவறாது பேரன்பு காட்டி வருகிறீர். 24நீர் உம் அடியானாகிய என் தந்தை தாவீதுக்கு உரைத்ததை நிறைவேற்றினீர். அன்று உம் வாயால் உரைத்ததை இன்று கையால் செய்து முடித்தீர். 25இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! நீர் உம் அடியானாகிய என் தந்தை தாவீதை நோக்கி, “நீ என்னை மறவாமல் நடந்து கொண்டதுபோல் உன் பிள்ளைகள் என்னை மறவாது தக்க நெறியில் நடப்பார்களேயாகில், இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருக்க அவர்களுள் ஒருவன் இல்லாமல் போகமாட்டான்’ என்று சொன்னதை நிறைவேற்றும்!✠ 26இஸ்ரயேலின் கடவுளே! உம் அடியானாகிய என் தந்தை தாவீதுக்கு நீர் சொன்ன உமது வார்த்தை நிலை பெறுவதாக!

27கடவுள் உண்மையில் இந்த மண்ணுலகில் தங்கியிருப்பாரா? வானமும் வான மண்டலங்களும் உம்மைக் கொள்ள இயலாதிருக்க நான் கட்டியுள்ள இக்கோவில் எப்படி உம்மைக் கொள்ளும்?✠ 28என் கடவுளாகிய ஆண்டவரே! உம் அடியான் செய்கிற வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டருளும்; உம் அடியான் இன்று உம் முன்னிலையில் எழுப்பும் கூக்குரலுக்கும் செய்யும் வேண்டுதலுக்கும் செவிசாய்த்தருளும்! 29‘என் பெயர் இவ்விடத்தில் விளங்கும்’ என்று இக்கோவிலைப்பற்றி நீர் சொல்லியிருக்கிறீர்! இவ்விடத்தில் உம் அடியான் செய்யும் வேண்டுதலைக் கேட்டருள்வதற்காக, இரவும் பகலும் உமது கண்கள் இதனை நோக்கி இருப்பனவாக!✠ 30உம் அடியானின் விண்ணப்பத்திற்கும் இவ்விடத்தை நோக்கிச் செய்கிற உம் மக்கள் இஸ்ரயேலர் வேண்டுதலுக்கும் செவிசாய்ப்பீராக! உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு அருள்வீராக! கேட்டு மன்னிப்பு அருள்வீராக! 31ஒருவர் தமக்கு அடுத்திருப்பவர்க்கு எதிராகப் பாவம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்தக் கோவிலில் உமது பீடத்தின் முன் ஆணையிடுமாறு கொண்டு வரப்பட்டால், 32விண்ணிலிருந்து நீர் அதைக் கேட்டுச் செயல்பட்டு உமது அடியாருக்குத் தீர்ப்பு வழங்குவீராக! தீயவரை தீயவராகக் கணித்து, அதற்குரிய பழியை அவர் தலைமேல் சுமத்துவீராக! நேர்மையானவருக்கு அவரது நேர்மைக்குத் தக்கவாறு, அவர் நேர்மையாளர் எனத் தீர்ப்பளிப்பீராக!

33உம் மக்களாகிய இஸ்ரயேலர் உமக்கு எதிராய்ப் பாவம் செய்ததனால், எதிரியிடம் தோல்வியுற்றுப் பின் உம்மிடம் திரும்பி வந்து, உம் திருப்பெயரை ஏற்றுக்கொண்டு இக்கோவிலில் உம்மை நோக்கி வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் செய்தால், 34விண்ணிலிருந்து நீர் அவர்களுக்கு செவிசாய்த்து உம் மக்களாகிய இஸ்ரயேலரின் பாவத்தை மன்னித்து, அவர்களின் மூதாதையர்க்கென நீர் அளித்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பி வரச் செய்வீராக! 35அவர்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்ததனால், வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும்போது அவர்கள் இவ்விடத்தை நோக்கி வேண்டுதல் செய்து, உம் பெயரை ஏற்றுக் கொண்டு, நீர் அனுப்பும் துன்பத்தினால் பாவம் செய்வதிலிருந்து மனம் மாறினால்,

36விண்ணிலிருந்து நீர் அவர்களுக்குச் செவிசாய்த்து, உம் அடியாரும் உம் மக்களாகிய இஸ்ரயேலரும் செய்த பாவத்தை மன்னிப்பீராக! அவர்கள் நடக்க வேண்டிய நல்வழியை அவர்களுக்குக் காட்டுவீராக! நீர் உம் மக்களுக்கு உரிமைச் சொத்தாக அளித்த நாட்டில் மழை பொழியச் செய்வீராக! 37நாட்டில் பஞ்சம், கொள்ளை நோய் உண்டாகும் போதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, தத்துக்கிளி ஆகியவற்றால் பயிர் அழிவுறும் போதும், நாட்டின் எந்த நகரையாவது எதிரிகள் முற்றுகையிடும் போதும், கொள்ளை நோயோ வேறெந்த நோயோ வரும் போதும், 38உம் மக்களாகிய இஸ்ரயேலருள் யாராவது மனம் நொந்து, இக்கோவிலை நோக்கித் தம் கைகளை உயர்த்திச் செய்யும் எல்லா வேண்டுதலுக்கும், விண்ணப்பத்திற்கும், 39உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் செவி சாய்த்து மன்னிப்பீராக! ஒவ்வொருவரின் உள்ளத்தையும் அறியும் நீர் அவரவர் செயல்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பீராக! ஏனெனில், நீர் ஒருவரே எல்லா மானிடரின் உள்ளங்களையும் அறிபவர். 40இதனால், அவர்கள் தங்கள் மூதாதையருக்கு நீர் அளித்த நாட்டில் தம் வாழ்நாள் எல்லாம் உமக்கு அஞ்சி நடப்பார்கள்.

41இஸ்ரயேல் மக்களைச் சாராத அந்நியர் ஒருவர் உமது பெயரை முன்னிட்டுத் தொலை நாட்டிலிருந்து வந்து, 42மாண்புமிக்க உமது பெயரையும், வலிமை வாய்ந்த உமது கையையும், ஆற்றல் மிகுந்த உமது புயத்தையும் பற்றிக் கேள்விப்பட்டு வந்து, இந்தக் கோவிலை நோக்கி வேண்டுதல் செய்தால், 43உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவருக்குச் செவி சாய்த்து அந்த அந்நியர் கேட்பதை எல்லாம் அருள்வீராக! இதனால் உலகின் மக்கள் எல்லோரும் உம் மக்களாகிய இஸ்ரயேலரைப் போல், உமது பெயரை அறிந்து உமக்கு அஞ்சி வாழ்வார்கள். மேலும் நான் எழுப்பியுள்ள இக்கோவிலில் உமது பெயர் போற்றப்படுவதை உணர்வார்கள். 44உம் மக்கள் தங்கள் பகைவர்களோடு போரிடச் செல்லும் பொழுது, நீர் காட்டும் வழியில் அவர்கள் செல்கையில் நீர் தேர்ந்து கொண்ட இந்நகரையும் உமது பெயருக்கு நான் காட்டியுள்ள இக்கோவிலையும் நோக்கி ஆண்டவராகிய உம்மிடம் வேண்டினால், 45விண்ணிலிருந்து நீர் அவர்களுடைய வேண்டுதலுக்கும் விண்ணப்பத்திற்கும் செவிசாய்த்து அவர்களுக்கு நீதி வழங்குவீராக! 46அவர்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தால் — பாவம் செய்யாத மனிதர் ஒருவருமில்லை — நீர் அவர்கள்மேல் சினம் கொண்டு அவர்களை எதிரிகளிடம் ஒப்படைக்க, அவர்கள் தொலையிலோ அருகிலோ இருக்கும் எதிரியின் நாட்டுக்குக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டால், 47அப்படிக் கொண்டு செல்லப்பட்ட நாட்டில் உணர்வு பெற்று, மனம் மாறி ‘நாங்கள் பாவம் செய்தோம்; நெறி தவறினோம்; தீய வழியில் நடந்தோம்’ என்று விண்ணப்பம் செய்தால், 48தங்களைக் கைதிகளாகக் கொண்டு சென்ற பகைவரின் நாட்டில் தங்கள் முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உம்மிடம் திரும்பி வந்து, நீர் அவர்கள் மூதாதையர்க்கு அளித்த தங்கள் நாட்டையும், நீர் தேர்ந்து கொண்ட இந்நகரையும், உமது பெயருக்கு நான் கட்டியுள்ள இந்தக் கோவிலையும் நோக்கி நின்று, உம்மிடம் வேண்டுதல் செய்தால், 49உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவர்களுடைய வேண்டுதலுக்கும் விண்ணப்பத்திற்கும் செவிசாய்த்து அவர்களுக்கு நீதி வழங்குவீராக! உமக்கு எதிராகப் பாவம் செய்த உம் மக்களை மன்னிப்பீராக! உமக்கு எதிராக அவர்கள் செய்த எல்லாத் தவறுகளையும் மன்னிப்பீராக! 50அவர்களைக் கைதிகளாகக் கொண்டு சென்றவர்களின் பார்வையில் நீர் அவர்களுக்குக் கருணை காட்டும்! இதனால் அவர்களும் உம் மக்களுக்குக் கருணை காட்டுவார்களாக! 51ஏனெனில், அவர்கள் உம்முடையவர்கள், உமது உரிமைச் சொத்து. அவர்களை எகிப்து என்ற இரும்பு உலைக்களத்தினின்று நீர் அழைத்து வந்தீர்!

52உம் அடியானின் விண்ணப்பத்திற்கும்; உம் மக்களாகிய இஸ்ரயேலரின் விண்ணப்பத்திற்கும், அவர்கள் உம்மை நோக்கி மன்றாடும் போதெல்லாம் நீர் அவர்களுக்குச் செவிசாய்க்கும்படி உம் கண்கள் திறந்திருப்பதாக! 53ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! நீர் எம் மூதாதையரை எதிப்திலிருந்து அழைத்து வந்தபோது, உம் ஊழியர் மோசேயைக் கொண்டு நீர் சொன்னபடியே செய்திருக்கிறீர்! உமது உரிமைச் சொத்தாக இருக்குமாறு உலகின் எல்லா இனத்தவரிடமிருந்தும் அவர்களையே நீர் பிரித்தெடுத்தீர்!”

54இவ்வாறு, சாலமோன் வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி, முழந்தாளிட்டு ஆண்டவரிடம் இந்த வேண்டுதல், விண்ணப்பத்தை எல்லாம் சொல்லி, மன்றாடினார். வேண்டி முடித்தபின் ஆண்டவரது பலிபீடத்தின்முன் எழுந்துநின்றார். 55மேலும், அவர் இஸ்ரயேல் சபையார் அனைவருக்கும் ஆசி வழங்கி உரத்த குரலில் சொன்னது: 56“தாம் வாக்களித்தபடியெல்லாம் தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கு அமைதியை அருளிய ஆண்டவர் போற்றி! போற்றி! அவர் தம் ஊழியர் மோசேயின் மூலம் கொடுத்த நல்வாக்குகள் அனைத்தும் நிறைவேறின; ஒன்றேனும் பொய்க்கவில்லை.✠ 57நம் கடவுளாகிய ஆண்டவர் நம் மூதாதையரோடு இருந்தது போல, நம்மோடும் இருப்பாராக! நம்மைக் கைவிடாமலும் நம்மை விட்டுப் பிரியாமலும் இருப்பாராக! 58நம் மூதாதையருக்கு அவர் கொடுத்த விதிமுறைகளையும் நியமங்களையும், நீதிச் சட்டங்களையும் நாமும் கடைப்பிடித்து, அவர் வகுத்த வழிகளிலெல்லாம் நடக்கும் வண்ணம் நம் உள்ளங்களைத் தம் பக்கம் ஈர்ப்பாராக! 59ஆண்டவர் முன்னிலையில் நான் செய்த இவ்விண்ணப்பம் இரவும் பகலும் நம் கடவுளாகிய ஆண்டவர் அருகில் இருப்பதாக! அவர் அடியேனுக்கும் நம் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் நாள்தோறும் தேவைக்கேற்ப நீதி வழங்குவாராக! 60‘ஆண்டவரே கடவுள்; வேறு எவரும் இல்லை’ என்று உலகின் எல்லா மக்களும் அறிவார்களாக! 61நீங்களும் இன்றுபோல் அவருடைய நியமங்களின்படி நடக்கவும், விதி முறைகளைக் கடைப்பிடிக்கவும், நம் கடவுளாகிய ஆண்டவருக்கு உங்கள் உள்ளம் முற்றிலும் பணிந்திருப்பதாக!”


திருக்கோவிலின் அர்ப்பணம்

(2 குறி 7:4-10)


62பின்பு, அரசரும் அவருடன் இருந்த இஸ்ரயேலர் அனைவரும் ஆண்டவர் முன்னிலையில் பலி செலுத்தினர். 63சாலமோன் ஆண்டவர் முன்னிலையில் இருபத்திரண்டாயிரம் காளைகளையும், ஓர் இலட்சத்து இருபதினாயிரம் ஆடுகளையும் நல்லுறவுப் பலியாகச் செலுத்தினார். இவ்வாறு செய்து, அரசரும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரின் இல்லத்தை அர்ப்பணம் செய்தனர். 64ஆண்டவர் திருமுன் இருந்த வெண்கலப் பலிபீடம் எரிபலிகளையும் உணவுப் படையல்களையும் நல்லுறவுப் பலிகளின் கொழுப்பையும் கொள்ளமாட்டாமல் மிகச் சிறியதாய் இருந்தது. எனவே, அரசர் ஆண்டவரது இல்லத்தின் முன்னேயுள்ள முற்றத்தின் நடுப்பகுதியை இந்த நாளன்று திருநிலைப்படுத்தி அங்கே எரிபலிகளையும் உணவுப் படையல்களையும் நல்லுறவுப்பலிகளின் கொழுப்பையும் படைத்தார். 65அந்த நாள்களில் சாலமோனும் இலெபோயாமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் ஓடை வரையுள்ள பகுதிகளிலிருந்து வந்த இஸ்ரயேல் சபையார் அனைவரும், அவரோடு சேர்ந்து ஆண்டவர் முன்னிலையில் விழாக்கொண்டாடினர். இந்த விழா ஏழு நாள்கள்⁕ கொண்டாடப்பட்டது.

66எட்டாம் நாளன்று அவர் மக்களை அனுப்பி வைத்தார். அவர்கள் அரசரை வாழ்த்தி ஆண்டவர் தம் அடியார் தாவீதுக்கும் தம் மக்கள் இஸ்ரயேலருக்கும் செய்தருளிய எல்லா நன்மைகளையும் நினைத்து மகிழ்ச்சியோடும் உள்ளத்து உவகையோடும் தம் இல்லங்களுக்குத் திரும்பினார்கள்.


8:1 2 சாமு 6:12-16; 1 குறி 15:25-29. 8:2 லேவி 23:24. 8:9 இச 10:5. 8:10-11 விப 40:34-35. 8:12 திபா 18:11; 97:2. 8:16 2 சாமு 7:4-11; 1 குறி 17:3-10. 8:17-18 2 சாமு 7:1-3; 1 குறி 17:1-2. 8:19 2 சாமு 7:12-13; 1 குறி 17:11-12. 8:25 1 அர 2:4. 8:27 2 குறி 2:6. 8:29 இச 12:11. 8:56 இச 12:10; யோசு 21:44-45.


8:65 ‘இன்னும் ஏழு நாள்கள்; மொத்தம் பதினான்கு நாள்கள்’ என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 9:1-28

கடவுள் சாலமோனுக்கு இரண்டாம் முறை தோன்றல்

(2 குறி 5:2-6:2)


1சாலமோன் ஆண்டவரின் இல்லத்தையும் அரச மாளிகையையும் இன்னும் கட்ட விரும்பிய, எல்லாவற்றையும் கட்டி முடித்த பின், 2ஆண்டவர் கிபயோனில் சாலமோனுக்குக் காட்சியளித்தது போல், மீண்டும் அவருக்குக் காட்சியளித்தார்.✠ 3ஆண்டவர் அவரிடம் சொன்னது: “என் முன்னிலையில் நீர் செய்த வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டேன். நீ கட்டின இக்கோவிலில் எனது பெயர் என்றென்றும் விளங்கும்படி அதைப் புனிதமாக்கினேன். என் கண்களும் என் இதயமும் எந்நாளும் அங்கே இருக்கும். 4உன் தந்தை தாவீதைப் போல் மனத்தூய்மையுடனும், நேர்மையுடனும் நான் கட்டளையிட்ட அனைத்தையும் கடைப்பிடித்து, நான் கொடுத்த நியமங்களுக்கும் நீதிச் சட்டங்களுக்கும் ஏற்ப என் முன்னிலையில் நீ நடப்பாயாகில், 5‘இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருக்க ஒருவன் இல்லாமல் போகமாட்டான்’ என்று உன் தந்தை தாவீதுக்கு நான் சொன்னபடி, இஸ்ரயேலின் மீது உன் ஆட்சி என்றென்றும் நிலைக்குமாறு செய்வேன்.✠ 6ஆனால், நீயோ உன் பிள்ளைகளோ என்னைவிட்டு விலகி, நான் உங்களுக்கு இட்ட விதிமுறைகளையும் நியமங்களையும் பின்பற்றாமல், வேறு வழியில் சென்று, வேற்றுத் தெய்வங்களை வணங்கி, அவற்றுக்கு ஊழியம் செய்தால், 7நான் இஸ்ரயேலருக்கு அளித்துள்ள நாட்டிலிருந்து அவர்களை விரட்டி விடுவேன். என் பெயர் விளங்க நான் புனிதமாக்கின இக்கோவிலை என் பார்வையில் இராதபடி தகர்த்து விடுவேன். அப்பொழுது ‘இஸ்ரயேல்’ மற்றெல்லா மக்களினங்களிடையே பழமொழியாகவும் இழுக்குச் சொல்லாகவும் அமையும். 8இக்கோவில் இடிந்த கற்குவியல்⁕ ஆகும். அதைக் கடந்து செல்லும் எவனும் திகிலடைவான்; சீழ்க்கையடித்து இகழ்ச்சியாய்ப்பேசி ‘ஆண்டவர் இந்நாட்டுக்கும் இக்கோவிலுக்கும் இப்படிச் செய்தது ஏன்?’ என்று கேட்பான்.✠ 9அதற்கு மற்றவர்கள், ‘இவ்வினத்தார் தங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த தங்கள் கடவுளாகிய ஆண்டவரை விட்டு விலகி வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு வணங்கி அவற்றுக்கு ஊழியம் செய்தனர். எனவே, ஆண்டவர் இத்துன்பமெல்லாம் அவர்களுக்கு வரச் செய்திருக்கிறார்’ என்பார்கள்.”


சாலமோன் ஈராமுடன் செய்த உடன்படிக்கை

(2 குறி 8:1-2)


10ஆண்டவரின் இல்லம், அரச மாளிகை ஆகிய இவ்விரண்டையும் சாலமோன் கட்டி முடிக்க இருபது ஆண்டுகள் ஆயின. 11இந்த வேலைகளுக்குத் தேவைப்பட்ட கேதுரு மரங்களையும் நூக்கு மரங்களையும் பொன்னையும், தீரின் மன்னன் ஈராம் சாலமோனுக்கு கொடுத்திருந்தார். அரசர் சாலமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது ஊர்களை ஈராமுக்கு வழங்கினார். 12தமக்குச் சாலமோன் தந்த ஊர்களைப் பார்வையிட ஈராம் தீரிலிருந்து புறப்பட்டு வந்தார். 13அவை அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர், “சகோதரரே! இந்த ஊர்களைத் தானா நீர் எனக்குக் கொடுப்பது?” என்றார். ஆகையால் அந்தப் பகுதி காபூல்⁕ என்று இன்றுவரை அழைக்கப்படுகிறது. 14ஈராம் நாலாயிரத்து எண்ணூற்று கிலோ⁕ பொன்னை அரசருக்கு அனுப்பியிருந்தார்.


சாலமோனின் ஏனைய பல அரிய செயல்கள்

(2 குறி 8:3-18)


15அரசர் சாலமோன் கட்டாய வேலைத் திட்டத்தின்மூலம் ஆண்டவரின் இல்லம், தம் மாளிகை, கீழைத் தாங்குதளம்,⁕ எருசலேமின் மதில், மெகிதோ, கெசேர் ஆகியவற்றைக் கட்டினார். 16இந்தக் கெசேர் எகிப்திய மன்னன் பார்வோனால் சாலமோனுக்குக் கொடுக்கப்பட்ட நகர். முன்பு அம்மன்னன் படையெடுத்து வந்து அந்நகரைப் பிடித்து, அதைத் தீக்கிரையாக்கி, அதில் குடியிருந்த கானானியரைக் கொன்றிருந்தான். அவன் தன் மகளைச் சாலமோனுக்கு மண முடித்துக் கொடுத்துபோது, அந்த இடத்தைச் சீர்வரிசையாகக் கொடுத்திருந்தான். 17சாலமோன் கெசேரைப் புதுப்பித்துக் கட்டினார். மேலும், கீழைப் பெத்கோரோனையும், 18பாலாத்து, பாலை நிலத்தில் உள்ள தாமார் ஆகிய நகர்களையும் கட்டினார். 19பண்டகசாலை நகர்கள், தேர்ப்படை நகர்கள், குதிரை வீரர் நகர்கள் ஆகியவற்றையும் கட்டினார். மேலும், எருசலேமிலும் லெபனோனிலும் தம் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடெங்கும் தமக்கு விருப்பமான எல்லாவற்றையும் சாலமோன் கட்டினார். 20இஸ்ரயேல் மக்கள் அல்லாத வேற்று இனத்தவரான எமோரியர், இத்தியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர், ஆகியோரில் விடப்பட்டிருந்தோர் — 21அதாவது, இஸ்ரயேல் மக்களால் முற்றிலும் அழிக்கப்பட இயலாமல் நாட்டில் விடப்பட்டிருந்தோரின் புதல்வர்கள் — சாலமோனின் அடிமை வேலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இன்றும் அவர்கள் அவ்வாறே இருக்கின்றனர். 22ஆனால், இஸ்ரயேல் மக்களுள் ஒருவரையும் சாலமோன் அடிமையாக்கவில்லை; அவர்கள் போர்வீரர், மெய்க்காப்பாளர், மேற்பார்வையாளர், படைத்தலைவர், தேர்ப்படைவீரர், குதிரைப்படை வீரர் ஆகியோராய் அமர்த்தப்பட்டனர்.

23சாலமோனின் வேலைகள் அனைத்தையும், அவற்றில் ஈடுபட்டிருந்த வேலையாள்களையும் கண்காணிப்பதற்கென்று ஐந்நூற்றைம்பது பேர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டனர். 24தாவீதின் நகரை விட்டுப் பார்வோனின் மகள் சென்று, சாலமோன் அவளுக்கெனக் கட்டியிருந்த மாளிகையில் குடிபுகுந்தாள். அதற்குப் பின் அவர் கீழைத் தாங்கு தளத்தைக் கட்டினார். 25சாலமோன் கோவிலைக் கட்டி முடித்த பின்; ஆண்டவருக்காகக் கட்டியிருந்த பலிபீடத்தின் மேல் ஆண்டுக்கு மும்முறை எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி, ஆண்டவர் முன்னிலையில் தூபம் காட்டி வந்தார்.✠ 26அரசர் சாலமோன் ஏதோம் நாட்டில் செங்கடல் கரையிலுள்ள ஏலோத்திற்கு அருகில் உள்ள எட்சியோன் கெபேரில் கப்பல்களைக் கட்டினார். 27அக்கப்பல்களில் சாலமோனின் பணியாளருக்குத் துணையாயிருக்கத் தேர்ச்சி மிகுந்த மாலுமிகளை ஈராம் அனுப்பி வைத்தார். 28இவர்கள் ஓபிருக்குச் சென்று, அங்கிருந்து ஏறத்தாழ பதினேழாயிரம் கிலோ பொன்னைச் சாலமோன் அரசரிடம் கொண்டு வந்து சேர்த்தனர்.


9:2 1 அர 3:5; 2 குறி 1:7. 9:5 1 அர 2:4. 9:8 2 அர 25:9; 2 குறி 36:19. 9:25 விப 23:17; 34:23; இச 16:16.


9:8 ‘உன்னதமாய் இருக்கும்’ என்பது எபிரேய பாடம். 9:13 எபிரேயத்தில், ‘பொட்டல் நிலம்’ என்பது பொருள். 9:14 ‘நூற்றிருபது தாலந்து’ என்பது எபிரேய பாடம். 9:15 ‘மில்லோ’ என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 10:1-29

சேபா நாட்டு அரசியின் வருகை

(2 குறி 9:1-12)


1ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, சாலமோன் அடைந்திருந்த புகழைப் பற்றிச் சேபா நாட்டு அரசி கேள்வியுற்றுக் கடினமான கேள்விகள் மூலம் அவரைச் சோதிக்க வந்தார். 2அவர் பரிவாரங்களோடும், நறுமணப் பொருள், மிகுதியான பொன், விலையுயர்ந்த கற்கள், ஆகியவற்றைச் சுமந்துவந்த ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்து சேர்ந்தார். அவர் சாலமோனிடம் தம் மனத்திலிருந்த கேள்விகள் அனைத்தையும் வெளிப்படுத்தினார். 3சாலமோன் அவருடைய கேள்விகளுக்கெல்லாம் விடை கூறினார். அவர் கேட்டவற்றுள் பதிலளிக்க இயலாதபடி எதுவும் அரசருக்குப் புதிராகத் தோன்றவில்லை. 4சேபாவின் அரசி, சாலமோனுக்கிருந்த பல்வகை ஞானம், அவர் கட்டியிருந்த அரண்மனை, 5அவர் உண்டு வந்த உணவு வகைகள், அவருடைய அலுவலரின் வரிசைகள், பணியாளர்களின் சுறுசுறுப்பு, அவர்களுடைய சீருடை, பானம் பரிமாறுவோரின் திறமை, ஆண்டவரின் இல்லத்தில் அவர் செலுத்திய எரிபலிகள் ஆகியவற்றைக் கண்டு பேச்சற்றுப் போனார்.

6அவர் அரசரை நோக்கிக் கூறியது: “உம்முடைய செயல்களையும் ஞானத்தையும் பற்றி என் நாட்டில் நான் கேள்விப்பட்டது உண்மையே எனத் தெரிகிறது. 7நான் இங்கு வந்து அவற்றை நேரில் காணும் வரை, அச்செய்திகளை நம்பவில்லை. இப்பொழுதோ இங்குள்ளவற்றில் பாதியைக் கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லையென அறிகிறேன். உண்மையில் நான் கேள்விப்பட்டதை விட, உம் ஞானமும் செல்வமும் மிகுதியாய் இருக்கின்றன. 8உம்முடைய மனைவியர்⁕ நற்பேறு பெற்றோர்! எப்போதும் உமக்குப் பணிபுரிந்து உம்முடைய ஞானம் நிறைந்த மொழிகளைக் கேட்கும் உம்முடைய பணியாளரும் நற்பேறு பெற்றவரே! 9உம்மீது பரிவு கொண்டு உம்மை இஸ்ரயேலின் அரியணையில் அமர்த்திய உம் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! ஆண்டவர் இஸ்ரயேலின் மீது என்றென்றும் அன்பு கொண்டுள்ளதால், அவர்களுக்கு நீதி நியாயம் வழங்க உம்மை அரசராக ஏற்படுத்தியுள்ளார்.” 10அவர் ஏறத்தாழ நாலாயிரத்து எண்ணூறு கிலோ⁕ பொன், ஏராளமான நறுமணப் பொருள்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அரசருக்கு அளித்தார். சேபாவின் அரசியிடமிருந்து வந்தது போல, அத்துணை நறுமணப் பொருள்கள் அரசர் சாலமோனுக்கு அதன் பிறகு வந்ததே இல்லை.

11ஓபீரிலிருந்து பொன்னைக் கொணர்ந்த ஈராமின் கப்பல்கள் அங்கிருந்து வாசனை மரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டுவந்தன. 12அவ்வாசனை மரங்களால் அரசர் ஆண்டவரின் இல்லத்திற்கும் அரண்மனைக்கும் ஊன்றுகால்களையும் பாடகருக்கு இசைக் கருவிகளையும் யாழ்களையும் செய்தார். அத்தகைய வாசனை மரங்கள் அதன்பின் அங்கு வந்ததுமில்லை; இன்றுவரை காணப்படவுமில்லை.

13அரசர் சாலமோன் சேபாவின் அரசிக்கு ஏராளமான பரிசுகள் கொடுத்ததுமன்றி, அவர் விரும்பிக் கேட்டவற்றையெல்லாம் கொடுத்தார். அதன்பின் அவர் தம் பணியாளர்களோடு தம் சொந்த நாட்டுக்குத் திரும்பிப்போனார்.


சாலமோனின் செல்வச் சிறப்பு

(2 குறி 9:13-28)


14சாலமோனுக்கு ஆண்டுதோறும் வந்து கொண்டிருந்த பொன்னின் நிறை ஏறத்தாழ இருபத்தி ஏழாயிரம் கிலோ. 15அதைத் தவிர, அவரிடம் வியாபாரிகளும், வணிகர்களும் அரபு நாட்டு அரசர்கள் அனைவரும் உள்நாட்டு ஆளுநர்களும் பொன் கொண்டு வருவதுண்டு. 16அரசர் சாலமோன் பொன் தகட்டால் இருநூறு கேடயங்கள் செய்தார். ஒவ்வொரு கேடயத்திற்கும் ஏறத்தாழ ஏழு கிலோ⁕ பொன் பயன்படுத்தப்பட்டது. 17மேலும், அவர் முந்நூறு சிறு கேடயங்களையும் பொன் தகட்டால் செய்தார். ஒவ்வொரு சிறு கேடயத்திற்கும் ஏறத்தாழ இரண்டு கிலோ பொன்⁕ பயன்படுத்தப்பட்டது. அவற்றை அரசர் ‘லெபனோனின் வனம்’ எனப்பட்ட மாளிகையில் வைத்தார். 18அரசர் தந்தத்தினால் பெரியதோர் அரியணை செய்து அதைப் பசும்பொன்னால் வேய்ந்தார். 19அவ்வரியணைக்கு ஆறு படிகள் இருந்தன. அரியணையின் பின்புற உச்சி காளையின் தலை உருவம் கொண்டிருந்தது. இருக்கையின் இரு புறமும் கைப்பிடிகள் இருந்தன. அவற்றின் அருகே இரு சிங்கங்களின் வடிவங்கள் நின்றன. 20ஆறு படிகளின் இருபக்கத்திலும் ஒவ்வொரு சிங்கமாக பன்னிரு சிங்க வடிவங்கள் இருந்தன. வேறெந்த அரசனுக்கும் இத்தகைய அரியணை இருந்ததில்லை. 21சாலமோன் அரசரின் பான பாத்திரங்கள் எல்லாம் தங்கத்தாலும் ‘லெபனோனின் வனம்’ எனப்பட்ட மாளிகையின் கலன்கள் அனைத்தும் பசும் பொன்னாலும் ஆனவை. ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலமோனின் காலத்தில் வெள்ளியை யாரும் உயர்வாக மதிக்கவில்லை. 22அரசரின்⁕ வணிகக் கப்பல்கள்,ஈராமின் கப்பல்களோடு சென்று கடல் வாணிபம் செய்தன. வணிகக் கப்பல்கள் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை பொன், வெள்ளியையும் தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றையும் கொண்டு வந்தன.

23உலகின் மன்னர் அனைவருள்ளும் சாலமோன் அரசரே செல்வத்திலும் ஞானத்திலும் மிகச் சிறந்து விளங்கினார். 24சாலமோனுக்கு ஆண்டவர் அருளியிருந்த ஞானத்தை நேரில் கேட்டறிய எல்லா நாட்டு மக்களும் அவரை நாடி வந்தனர். 25அவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் வெள்ளியாலும், பொன்னாலுமான பொருள்கள், பட்டாடைகள், படைக் கலன்கள், நறுமணப் பொருள்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை அன்பளிப்பாக அரசருக்குக் கொண்டு வந்தனர். 26சாலமோன் ஆயிரத்து நானூறு தேர்களும் பன்னீராயிரம் குதிரை வீரர்களும் கொண்ட படையொன்றைத் திரட்டினார். அதனைத் தேர்ப்டை நகர்களிலும் எருசலேமில் அரசனுடனும் நிறுத்தி வைத்தார்.✠ 27அவருடைய ஆட்சியின் போது, எருசலேமில் வெள்ளி கற்களைப் போலவும் கேதுரு மரங்கள் செப்பேலா சமவெளியின் காட்டத்தி போலவும் மிகுதியாய் இருந்தன. 28சாலமோன் எகிப்திலிருந்தும் கேவேயிலிருந்தும் குதிரைகளை இறக்குமதி செய்தார். அரசரின் வணிகர் அவற்றைக் கேவேயிலிருந்து விலைக்கு வாங்கி வந்தனர்.✠ 29எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தேரின் விலை அறுநூறு வெள்ளிக்காசு. ஒரு குதிரைகள் விலை நூற்றைம்பது வெள்ளிக்காசு. இவ்வாறே, அவர்கள் இத்தியரின் அனைத்து மன்னர்களுக்கும் சிரியாவின் மன்னர்களுக்கும் அவற்றை ஏற்றுமதி செய்தார்கள்.


10:1-10 மத் 12:42; லூக் 11:31. 10:26 1 அர 4:26. 10:28 இச 17:16.


10:8 ‘ஆடவர்’ என்பது எபிரேய பாடம். 10:10 ‘நூற்றிருபது தாலந்து’ என்பது எபிரேய பாடம். 10:16 ‘அறுநூறு செக்கேல்’ என்பது எபிரேய பாடம். 10:17 ‘மூன்று மினாக்கள்’ என்பது எபிரேய பாடம். 10:22 ‘தர்சீசு’ என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 11:1-43

சாலமோன் வேற்றுத் தெய்வங்களை வழிபடல்


1அரசர் சாலமோன் அயல்நாட்டுப் பெண்கள் பலர்மேல் மோகம் கொண்டார். பார்வோனின் மகளை மணந்ததுமின்றி மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர், சீதோனியர், இத்தியர் ஆகிய பல நாட்டுப் பெண்களையும் மணந்தார்.✠

2அவ்வேற்றினத்தாரைக் குறித்து ஆண்டவர் இஸ்ரயேல் மக்களிடம், “நீங்கள் அயல்நாடுகளிலிருந்து பெண் கொள்ளவும் வேண்டாம்; கொடுக்கவும் வேண்டாம்; ஏனெனில், அவர்கள் தம் தெய்வங்களை வணங்கும்படி உங்கள் உள்ளங்களை மயக்கி விடுவார்கள்” என்று கூறியிருந்தார். அப்படிக் கூறியிருந்தும் அந்நாட்டுப் பெண்கள்மேல் சாலமோன் மையல் கொண்டிருந்தார்.✠ 3சாலமோனுக்கு எழுநூறு அரசகுலப் பெண்கள் மனைவியராகவும் முந்நூறு பெண்கள் வைப்பாட்டிகளாகவும் இருந்தார்கள். அப்பெண்கள் அவரது இதயத்தைத் தவறான வழியில் திருப்பி விட்டார்கள். 4சாலமோன் முதுமை அடைந்தபோது, அவருடைய மனைவியர் அவர் இதயத்தை வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றும்படி மாற்றிவிட்டனர். அதனால் அவர் உள்ளம் தம் தந்தை தாவீதின் உள்ளத்தைப் போல் கடவுளாகிய ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கவில்லை. 5சாலமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்தையும் அம்மோனியரின் அருவருப்பான மில்க்கோமையும் வழிபடலானார். 6இவ்வாறு, சாலமோன் ஆண்டவர் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தார். தம் தந்தை தாவீது ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியது போன்று அவர் செய்யவில்லை. 7சாலமோன் எருசலேமுக்கு எதிரில் இருந்த மலையில் மோவாபியரின் அருவருப்பான கெமோசுக்கும் அம்மோனியரின் அருவருப்பான மோலேக்குக்கும் தொழுகைமேடுகளைக் கட்டினார். 8இப்படியே, தங்கள் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிப் பலியிடுவதற்காக, வேற்றினத்தாரான தம் மனைவியர் எல்லோருக்கும் சாலமோன் இவ்வாறு செய்து கொடுத்தார்.

9ஆண்டவர் சாலமோன்மீது சினமுற்றார். ஏனெனில், தமக்கு இருமுறை காட்சியளித்திருந்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து அவர் இதயம் விலகிச் சென்றது. 10வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம் என்று ஆண்டவர் அவருக்குக் கட்டளையிட்டிருந்தும், அக்கட்டளையை அவர் கடைப்பிடிக்கவில்லை. 11ஆகையால், ஆண்டவர் சாலமோனை நோக்கி, “நான் உன்னோடு செய்த உடன்படிக்கையையும், நான் உனக்கு விதித்த நியமங்களையும் மீறி, நீ இவ்வாறு நடந்துகொண்டதால் உன் அரசை உன்னிடமிருந்து பறித்து அதை உன் பணியாளனுக்குக் கொடுக்கப்போவது உறுதி. 12ஆயினும், உன் தந்தை தாவீதின் பொருட்டு, உன் காலத்தில் நான் இதைச் செய்யமாட்டேன். உன் மகன் கையினின்று அதைப் பறித்து விடுவேன். 13ஆயினும், அரசு முழுவதையும் பறித்துவிடாமல், என் அடியான் தாவீதின் பொருட்டும் நான் தேர்ந்து கொண்ட எருசலேமின் பொருட்டும் ஒரு குலத்தை உன் மகனிடம் விட்டுவைப்பேன்” என்றார்.


சாலமோனின் எதிரிகள்


14பிறகு, ஆண்டவர் ஏதோமியனாகிய அதாது என்பவனைச் சாலமோனுக்கு எதிராக எழச் செய்தார். இவன் ஏதோம் மன்னர் குலத்தைச் சார்ந்தவன். 15முன்பு தாவீது ஏதோமில் இருந்தபோது படைத்தலைவன் யோவாபு ஏதோமின் எல்லா ஆண்களையும் வெட்டி வீழ்த்திப் புதைக்கச் சென்றார். 16யோவாபும் இஸ்ரயேலர் அனைவரும் அங்கு ஆறு மாதம் தங்கியிருந்து ஏதோமிலிருந்த எல்லா ஆண்களையும் வெட்டி வீழ்த்தினர். 17ஆனால், அதாது அவன் தந்தையின் ஏதோமியப் பணியாளருள் சிலரோடு சேர்ந்து எகிப்துக்குத் தப்பி ஓடிப் போனான். அப்போது அவன் சிறு பையனாய் இருந்தான்.

18அவர்கள் மிதியானிலிருந்து புறப்பட்டுப் பாரானுக்குச் சென்று பாரானில் சில ஆள்களைச் சேர்த்துக் கொண்டு எகிப்திய அரசன் பார்வோனிடம் சென்றார்கள். பார்வோன் அதாதுக்கு வீடொன்று கொடுத்து, உணவுக்கும் வழி செய்து நிலமும் அளித்தான். 19பார்வோனுக்கு அதாது மிகவும் உகந்தவனாய் இருந்தபடியால், தன் மனைவியும் அரசியுமான தகபெனேசின் தங்கையை அவனுக்கு மணமுடித்து வைத்தான். 20தகபெனேசின் தங்கையாகிய இவள் அவனுக்கு கெனுபத்து என்ற ஒரு மகனைப் பெற்றாள். தகபெனேசு அவனைப் பார்வோன் வீட்டில் வளர்த்தாள். அப்படியே கெனுபத்து பார்வோனின் வீட்டில் அவனுடைய புதல்வருடன் வளர்ந்து வந்தான். 21தாவீது துயில்கொண்டு தம் மூதாதையரோடு சேர்ந்து கொண்டார் என்றும், படைத்தலைவர் யோவாபு இறந்துவிட்டார் என்றும், எகிப்தில் அதாது கேள்விப்பட்டு பார்வோனை நோக்கி, “நான் என் சொந்த நாட்டுக்குப் போக விரும்புகிறேன்; என்னை அனுப்பி வைக்கவேண்டும்” என்றான். 22அதற்குப் பார்வோன், “நீ உன் சொந்த நாட்டுக்குப் போக விரும்புவது ஏன்? இங்கு உனக்கு என்ன குறை?” என்று கேட்டான். அதற்கு அவன், “ஒரு குறையுமில்லை; ஆயினும் எனக்குப் போக விடைதாரும்” என்றான்.

23மேலும், கடவுள் எலயாதாவின் மகன் இரேசோனையும் சாலமோனுக்கு எதிராக எழச் செய்தார். அவன் தன் தலைவனாகிய அதாதேசர் என்னும் சோபா நாட்டு மன்னனிடமிருந்து தப்பி ஓடியவன். 24முன்பு தாவீது படையெடுத்து அந்நாட்டினரை வெட்டி வீழ்த்தியபோது இரேசோன் தன்னோடு சிலரைச் சேர்த்துக் கொண்டு தன் தலைமையில் ஒரு கிளர்ச்சிக் கூட்டத்தை அமைத்துக் கொண்டான். அவன் அவர்களோடு தமஸ்குவுக்குச் சென்று, அதில் குடியேறி அங்கே அரசன் ஆனான். 25சாலமோன் வாழ்நாள் முழுவதும் அவன் இஸ்ரயேலின் எதிரியாய் இருந்தான். அவன் சிரியாவை ஆண்டு கொண்டு, இஸ்ரயேலைப் பகைத்து அதாதைப் போல் தீங்கிழைத்து வந்தான்.


எரொபவாமுக்குக் கடவுள் தந்த வாக்குறுதி


26எப்ராயிமின் செரேதாவைச் சார்ந்த நெபாற்று என்பவனின் மகனும் சாலமோனின் பணியாளருள் ஒருவனுமான எரொபவாம் அரசருக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்தான். அவனுடைய தாய் செருவா என்பவள் ஒரு கைம்பெண். 27அவன் அரசருக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்ததன் விவரம் பின்வருமாறு; சாலமோன் கீழைத் தாங்குதளத்தைக் கட்டித் தம் தந்தை தாவீதின் நகரில் இடிந்து போன இடங்களைப் பழுது பார்த்தார். 28எரொபவாம் ஆற்றல் மிக்கவனாய் இருந்தான். அவன் செயல்திறமை மிக்க ஓர் இளைஞன் என்று கண்டு, சாலமோன் யோசேப்பு வீட்டிலிருந்து கட்டாய வேலைசெய்ய வந்த அனைவரையும் கண்காணிக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்திருந்தார். 29ஒரு நாள் எரொபவாம் எருசலேமிலிருந்து வெளியே போனபோது சீலோமைச் சார்ந்த அகியா என்ற இறைவாக்கினர், அவனை வழியில் கண்டார். அவர் புது சால்வை ஒன்று அணிந்திருந்தார். இருவரும் வயல் வெளியே தனித்திருந்தனர். 30அப்பொழுது அகியா தாம் போர்த்தியிருந்த புது சால்வையை எடுத்து அதைப் பன்னிரு துண்டுகளாய்க் கிழித்தார். 31பிறகு, அவர் எரொபவாமை நோக்கிப் பின் வருமாறு கூறினார்: “இவற்றில் பத்துத் துண்டுகளை உனக்கென எடுத்தக் கொள். ஏனெனில், இஸ்ரயேலரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இவ்வாறு கூறுகிறார்: ‘இதோ, நான் சாலமோன் கையினின்று அரசைப் பறித்து, பத்துக் குலங்களை உனக்கு அளிக்கப் போகிறேன்.

32ஆயினும், உன் ஊழியன் தாவீதை முன்னிட்டும், இஸ்ரயேலரின் நகர்கள் அனைத்திலிருந்தும் நான் தேர்ந்து கொண்ட எருசலேம் நகரை முன்னிட்டு ஒரு குலம் மட்டும் அவன் கையில் இருக்கும். 33ஏனெனில், சாலமோன் என்னைவிட்டு விலகி, சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்து, மோவாபியரின் தெய்வமான கெமோசு, அம்மோனியரின் தெய்வமான மில்க்கோம் ஆகியவற்றை வழிபட்டு வருகிறான். அவனுடைய தந்தை தாவீது நடந்தது போல் அவன்⁕ என் வழிகளைப் பின்பற்றவில்லை. என் முன்னிலையில் நேர்மையாக நடக்கவில்லை. என் நியமங்களையும், நீதிச் சட்டங்களையும் கடைப்பிடிக்கவுமில்லை. 34ஆயினும், அரசு முழுவதையும் அவன் கையிலிருந்து நான் எடுத்து விடப்போவதில்லை. நான் தேர்ந்து கொண்டவனும் என் விதிமுறைகளையும் நியமங்களையும் கடைப்பிடித்தவனுமான என் ஊழியன் தாவீதின் பொருட்டு அவன் வாழ்நாள் முழுவதும் அரசனாக இருக்கும்படி செய்வேன். 35எனினும், அரசை அவன் மகன் கையிலிருந்து எடுத்து, அதிலிருந்து பத்துக் குலங்களை உனக்குக் கொடுப்பேன். 36எனது பெயர் நிலைத்திருக்குமாறு நான் தேர்ந்து கொண்ட நகராகிய எருசலேமில் என் திருமுன் அடியான் தாவீதின் குலவிளக்கு எந்நாளும் என் முன்னிலையில் ஒளிரும் வண்ணம் நான் அவன் மகனுக்கு ஒரு குலத்தை அளிப்பேன். 37உன் விருப்பப்படியே நீ ஆட்சிசெலுத்தும்படி உன்னை நான் இஸ்ரயேலின் அரசனாய் அமர்த்துவேன். 38நான் கட்டளையிடும் அனைத்தையும் நீ கேட்டு, என் வழிகளில் நடந்து என் ஊழியன் தாவீது செய்தது போல் என் நியமங்களையும், விதிமுறைகளையும் கைக்கொண்டு, எனக்கு ஏற்புடையதைச் செய்தால், நான் உன்னோடு இருந்து தாவீதின் குடும்பத்தைப்போல் உன் குடும்பத்தையும் நிலை நாட்டி இஸ்ரயேலை உன்னிடம் ஒப்படைப்பேன். 39தாவீதின் வழிமரபினர் செய்தவற்றுக்காக, அவர்களைத் தாழ்வுறச் செய்வேன்; ஆயினும் எந்நாளுமன்று.” 40இதன் பொருட்டுச் சாலமோன் எரொபவாமைக் கொல்ல வழி தேடினார். ஆனால், அவன் எகிப்திற்குத் தப்பி ஓடி அங்கு எகிப்திய மன்னன் சீசாக்கிடம் தஞ்சம் புகுந்து, சாலமோன் இறக்கும்வரை அங்கேயே தங்கியிருந்தான்.


சாலமோனின் இறப்பு

(2 குறி 9:29-31)


41சாலமோனின் பிற செயல்களும், அவர் செய்தவை அனைத்தும் அவரது ஞானமும் ‘சாலமோன் வரலாற்று நூலில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா? 42சாலமோன் எருசலேமில் இருந்து கொண்டு இஸ்ரேயல் முழுவதன்மீதும் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார். 43பின்பு, சாலமோன் தம் மூதாதையரோடு துயில் கொண்டு தம் தந்தை தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டார். அவர் மகன் ரெகபெயாம் அவருக்குப் பின் ஆட்சி செய்தான்.


11:1 இச 17:7. 11:2 விப 34:16; இச 7:3-4.


11:33 ‘அவர்கள்’ என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 12:1-33

வடகுலங்கள் கிளர்ச்சி செய்தல்

(2 குறி 10:1-19)


1ரெகபெயாம் செக்கேமுக்குச் சென்றான். ஏனெனில், அங்கு இஸ்ரயேலர் அனைவரும் அவனை அரசனாக்குவதற்காக ஒன்று கூடியிருந்தனர். 2சாலமோன் அரசருக்கு அஞ்சி எகிப்திற்கு ஓடிப் போய் அங்குக் குடியிருந்தவனும் நெபாற்றின் மகனுமான எரொபவாம் இதைக் கேள்வியுற்றான். 3இஸ்ரயேல் சபையார் ஆளனுப்பி அவனை வரவழைத்தார்கள். பின்பு அவர்கள் அனைவருடன் எரொபவாமும், ரெகபெயாமிடம் வந்து அவனை நோக்கி, 4“உம் தந்தை பளுவான நுகத்தை எங்கள் மேல் சுமத்தினார். இப்போது நீர் உம் தந்தை சுமத்திய கடும் வேலைகளைக் குறைத்து, அவர் எங்கள் மேல் வைத்த பளுவான நுகத்தை எளிதாக்க வேண்டும். அப்படிச் செய்தால் நாங்கள் உமக்காகப் பணியாற்றுவோம்” என்றனர். 5அவன் அவர்களிடம், “நீங்கள் போய் மூன்று நாள் கழித்து என்னிடம் திரும்பி வாருங்கள்” என்றான். அப்படியே மக்கள் சென்றனர்.

6அப்பொழுது அரசன் ரெகபெயாம் தன் தந்தை சாலமோன் உயிரோடிருக்கையில் அரசவையில் பணியாற்றிய முதியோரிடம் “இம் மக்களுக்கு என்ன மறுமொழி கூறலாம்? உங்கள் கருத்தென்ன?” என்று ஆலோசனை கேட்டான். 7அவர்கள் அவனிடம், “இன்று இம்மக்களுக்கு நீ பணியாளனாகி அவர்களுக்குப் பணிந்து இனிய சொற்களில் பதிலளித்தால், அவர்கள் எந்நாளும் உனக்குப் பணியாளர்களாய் இருப்பார்கள்” என்றனர். 8அவனோ முதியோர் தனக்களித்த அறிவுரையைத் தள்ளி விட்டு, தன்னோடு வளர்ந்து தன் அவையில் இருந்த இளைஞரோடு கலந்து ஆலோசித்தான். 9“‘உம் தந்தை எம்மேல் வைத்த நுகத்தை எளிதாக்கும்” என்று என்னிடம் சொன்ன இம்மக்களுக்கு என்ன மறுமொழி கூறலாம்? உங்கள் கருத்தென்ன?” என்று அவன் அவர்களிடம் வினவினான். 10அவனோடு வளர்ந்த அந்த இளைஞர் அவனை நோக்கி, “உம் தந்தை எங்கள் மீதுள்ள நுகத்தைப் பளுவாக்கினார். நீர் அதன் பளுவைக் குறைத்தருளும் என்று அம்மக்கள் உம்மிடம் வேண்டினார்கள் அல்லவா? அவர்களுக்கு இந்தப் பதில் கொடும்: ‘என் சுண்டு விரல் என் தந்தையின் இடுப்பை விடப் பெரியது; 11என் தந்தை பளுவான நுகத்தை உங்கள் மேல் சுமத்தினார்; நானோ அதை இன்னும் பளுவாக்குவேன். என் தந்தை உங்களைச் சாட்டையால் அடித்தார்; நானோ உங்களை முள் சாட்டையால் அடிப்பேன்’ என்று நீர் சொல்லும்” என்றனர்.

12‘மூன்றாம் நாள் மீண்டும் என்னிடம் வாருங்கள்’ என்று ரெகபெயாம் சொல்லியிருந்தபடியே எரொபவாமுடன் மக்கள் அனைவரும் அவனிடம் மூன்றாம் நாள் வந்தனர். 13அப்பொழுது அரசன், முதியோர் தனக்கு அளித்த அறிவுரையைத் தள்ளிவிட்டு, மக்களுக்கு மிகக் கடுமையான பதில் அளித்தான். 14இளைஞரின் அறிவுரைக்கேற்ப, “என் தந்தை பளுவான நுகத்தை உங்கள் மேல் சுமத்தினார்; நானோ அதை இன்னும் பளுவாக்குவேன். என் தந்தை உங்களைச் சாட்டையால் அடித்தார்; நானோ உங்களை முள் சாட்டையால் அடிப்பேன்” என்று கூறினான். 15இவ்வாறு, அரசன் மக்களின் வேண்டுகோளை ஏற்க மறுத்து விட்டான். இந்தத் திருப்பம் ஆண்டவரால் நிகழ்ந்தது. சீலோவைச் சார்ந்த அகியாவின் மூலம் நெபாற்றின் மகன் எரொபவாமிற்குத் தாம் கூறிய வாக்கை ஆண்டவர் இவ்வாறு நிறைவேற்றினார்.

16இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அரசன் தங்களது வேண்டுகோளுக்கு இணங்க மறுத்து விட்டதைக் கண்டு, “எங்களுக்குத் தாவீதுடன் என்ன பங்கு? எங்கள் உரிமைச் சொத்து ஈசாயின் மகனிடம் இல்லை. இஸ்ராயேலரே! உங்கள் கூடாரங்களுக்குத் திரும்புங்கள். தாவீதே! உன்வீட்டை நீயே பார்த்துக்கொள்!” என்று அவனுக்கு எதிராக முழங்கிக் கொண்டே தம் கூடாரங்களுக்குத் திரும்பினர்.✠ 17எனினும், யூதாவின் நகர்களில் குடியிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு ரெகபெயாமே அரசனாய் இருந்தான். 18பின்பு, அரசன் ரெகபெயாம் கட்டாய வேலைத் திட்டத்தைச் செயல்படுத்தியவனான அதோராமைப் பிற இஸ்ரயேலரிடம் தூதனுப்பி வைத்தான். ஆனால், அவர்கள் எல்லாரும் சேர்ந்து அவனைக் கல்லால் எறிந்து கொன்றனர். அதைக் கேட்ட அரசன் ரெகபெயாம் விரைந்து தேரில் ஏறி எருசலேமுக்குத் தப்பி ஓடிப்போனான்.

19தாவீதின் குடும்பத்துக்கு எதிராக அன்று கிளர்ந்தெழுந்த இஸ்ரயேலர் இன்றுவரை அவ்வாறே இருக்கின்றனர். 20எரொபவாம் திரும்பி வந்து விட்டான் என்பதை இஸ்ரயேலர் அனைவரும் கேள்வியுற்று, அவனுக்கு ஆளனுப்பிச் சபைக்கு வரவழைத்து அவனை இஸ்ரயேல் நாடு முழுவதற்கும், அரசனாக்கினர். யூதா குலம் தவிர, வேறு எந்தக் குலமும் தாவீது குடும்பத்தின் பக்கம் சேரவில்லை.


செமாயாவின் இறைவாக்கு

(2 குறி 11:1-4)


21எருசலேமுக்குத் திரும்பி வந்த சாலமோனின் மகனாகிய ரெகபெயாம் இஸ்ரயேலர்மீது போர் தொடுக்கவும் அந்நாட்டைத் தன்னுடைய ஆட்சிக்குள் கொண்டு வரவும் எண்ணினான். இதற்கென அவன் யூதாவின் வீட்டிலிருந்தும் பென்யமின் குலத்திலிருந்தும் இலட்சத்து எண்பதினாயிரம் போர் வீரர்களைத் திரட்டினான். 22அப்போது இறையடியார் செமயாவுக்குக் கடவுள் அருளிய வாக்கு; 23“சாலமோனின் மகனும் யூதாவின் அரசனுமான ரெகபெயாமிடமும் யூதா, பென்யமின் வீட்டார் அனைவரிடமும் ஏனைய மக்களிடமும் போய்ச் சொல்: 24‘நீங்கள் படையெடுத்து உங்கள் சகோதரரான இஸ்ரயேலரோடு போரிடச் செல்ல வேண்டாம். எல்லாரும் அவரவர் வீடு திரும்புங்கள். இது நிகழ்வது என்னாலேயே’ என்று ஆண்டவர் உரைக்கிறார்.” ஆண்டவரின் வாக்கைக் கேட்ட அவர்கள் அவரது சொற்படியே திரும்பிப் போய் விட்டார்கள்.


எரொபவாம் வேற்றுத் தெய்வங்களை வழிபடல்


25எரொபவாம், எப்ராயிம் மலைநாட்டில் செக்கேமைக் கட்டி எழுப்பி, அங்குக் குடியிருந்தான். பின்பு அங்கிருந்து வெளியேறிப் பெனுவேலைக் கட்டி எழுப்பினான். 26அப்பொழுது எரொபவாம் “இப்போதுள்ள நிலை நீடித்தால் அரசு தாவீதின் வீட்டுக்கே திரும்பிச் சென்று விடும். 27ஏனெனில், இம்மக்கள் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்தில் பலிசெலுத்த இனிமேலும் போவார்களானால் அவர்களது உள்ளம் யூதாவின் அரசன் ரெகபெயாம் என்ற தங்கள் தலைவனை நாடும்; என்னைக் கொலை செய்து விட்டு யூதாவின் அரசன் ரெகபெயாம் பக்கம் சேர்ந்து கொள்வார்கள்” என்று தன் இதயத்தில் சொல்லிக் கொண்டான். 28இதைப் பற்றித் தீரச் சிந்தித்து, அவன் பொன்னால் இரு கன்றுக் குட்டிகளைச் செய்தான். மக்களை நோக்கி, “நீங்கள் எருசலேமுக்குப் போய் வருவது பெருந்தொல்லை அல்லவா! இஸ்ரயேலரே! இதோ, உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டுவந்த உங்கள் தெய்வங்கள்!” என்றான்.✠ 29இவற்றுள் ஒன்றைப் பெத்தேலிலும் மற்றொன்றைத் தாணிலும் வைத்தான். 30இச்செயல் பாவத்துக்குக் காரணமாயிற்று. ஏனெனில், மக்கள் கன்றுக் குட்டியை வணங்கத் தாண் வரையிலும் செல்லத் தொடங்கினர். 31மேலும், அவன் தொழுகை மேட்டுக் கோவில்கள்⁕ கட்டி லேவியரல்லாத சாதாரண மக்களை அவற்றில் குருக்களாக நியமித்தான்.


பெத்தேலில் நடந்த வழிபாடு கண்டிக்கப்படல்


32அதுவுமின்றி, யூதாவின் விழாவுக்கு இணையாக, எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் எரொபவாம் ஒரு விழாவை ஏற்படுத்திப் பலிபீடத்தின் மேல் பலியிட்டான். அவ்வாறே, பெத்தேலிலும் தான் செய்து வைத்த கன்றுக் குட்டிகளுக்குப் பலியிட்டான். மேலும், தான் அமைத்திருந்த தொழுகை மேடுகளின் குருக்களைப் பெத்தேலில் பணி செய்யும்படி அமர்த்தினான். 33தான் நினைக்கும்படி குறித்த எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் அவன் பெத்தேலில் கட்டியிருந்த பலிபீடத்திற்குச் சென்றான். இஸ்ரயேல் மக்களுக்கென்று தான் ஏற்படுத்திய விழாவின்போது பலிபீடத்தின்மேல் பலி செலுத்தித் தூபம் காட்டினான்.


12:16 2 சாமு 20:1. 12:28 விப 32:4. 12:32-33 லேவி 23:33-34.


12:31 ‘ஒரு கோவில்’ என்பது எபிரேய பாடம் (காண் 1 அர 13:32).



அதிகாரம் 13:1-34

1எரொபவாம் தூபம் காட்டப் பீடத்தருகில் நிற்கையில், இதோ இறையடியார் ஒருவர் ஆண்டவரின் சொற்படி யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்தார். 2ஆண்டவரின் வாக்கிற்கு இணங்க அவர் அப்பீடத்திற்கு எதிராகக் குரலெழுப்பி, “பலிபீடமே! பலிபீடமே! இதோ, தாவீதின் குடும்பத்தில் யோசியா என்ற பெயருள்ள ஒரு மகன் பிறப்பான்; அவன் உன்மீது தூபத்தை எரிக்கும் தொழுகைமேடுகளின் குருக்களை உன்மீதே பலியிடுவான்! மனிதரின் எலும்புகளை உன்மீது சுட்டெரிப்பான், என்கிறார் ஆண்டவர்” என்றார்.✠ 3“பேசியுள்ளவர் ஆண்டவரே என்பதற்கு இதுவே அடையாளம்; இதோ! இப்பலிபீடம் இடிந்து விழும்; அதன் மீதுள்ள சாம்பல் கீழே கொட்டப்படும்” என்று கூறி ஓர் அடையாளத்தையும் அதே நாளில் தந்தார்.

4பெத்தேலில் இருந்த அப்பலிபீடத்துக்கு எதிராக இறையடியார் கூறின சொற்களை அரசன் எரொபவாம் கேட்டவுடன், பலிபீடத்திலிருந்து தன் கையை நீட்டி, “அவனைப் பிடியுங்கள்” என்றான். நீட்டிய கை விறைத்து நின்று விட்டது; அதை அவனால் மடக்க முடியவில்லை. 5ஆண்டவரின் வாக்கிற்கு இணங்க இறையடியார் கொடுத்திருந்த அடையாளத்திற்கேற்ப, பலிபீடம் இடிந்து விழுந்தது; அதன் மேலிருந்த சாம்பலும் கீழே கொட்டியது. 6அப்போது அரசன் இறையடியாரை நோக்கி, “எனக்காக நீர் உம் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி இறைஞ்சி மன்றாடும்; என் கை முன்போல் ஆகிவிடும்” என்றான். அவ்வாறே இறையடியார் ஆண்டவரை நோக்கி மன்றாட, அரசனது கை முன் போல் ஆயிற்று.

7அப்பொழுது அரசன் இறையடியாரிடம், “நீர் என்னோடு என் வீட்டுக்கு வந்து உண்டு இளைப்பாறும். உமக்கு அன்பளிப்பு வழங்குவேன்” என்றான். 8ஆனால், இறையடியார் அரசனிடம், “நீர் எனக்கு உம் வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடு வரமாட்டேன். இவ்விடத்தில் உண்ண மாட்டேன்; தண்ணீர் குடிக்கவும் மாட்டேன். 9ஏனென்றால், ‘உணவு அருந்தக் கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, போன வழியாய்த் திரும்பி வரக்கூடாது’ என்று ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்” என்று சொன்னார். 10அவ்வாறே அவர் பெத்தேலுக்குத் தாம் வந்த வழியாகச் செல்லாமல் வேறு வழியாகத் திரும்பிப் போனார்.


பெத்தேலின் முதிய இறைவாக்கினர்


11வயது முதிர்ந்த இறைவாக்கினர் ஒருவர் பெத்தேலில் வாழ்ந்து வந்தார். அவருடைய மைந்தர்கள் தங்கள் தந்தையிடம் வந்து இறையடியார் அன்று பெத்தேலில் செய்தவை அனைத்தையும், அரசனுக்குக் கூறியவற்றையும் அறிவித்தார்கள். 12அவர்களின் தந்தை அவர்களை நோக்கி, “அவர் எவ்வழியாகச் சென்றார்?” என்று வினவினார். அதற்கு அவர்கள் யூதாவிலிருந்து வந்த அந்த இறையடியார் சென்ற வழியைச் சுட்டிக் காட்டினார்கள். 13அவர் தம் மைந்தர்களிடம், “கழுதைக்குச் சேணம் பூட்டுங்கள்” என்றார். அவர்களும் கழுதைக்குச் சேணம் பூட்டிக் கொண்டுவர, அவர் அதன் மேல் ஏறிக் கொண்டார். 14அந்த இறையடியாரைப் பின்தொடர்ந்து சென்று அவர் ஒரு கருவாலி மரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு, “யூதாவிலிருந்து வந்த இறையடியார் நீர்தாமோ?” என்று அவரைக் கேட்டார். அதற்கு அவர், “நான்தான்” என்றார். 15முதியவர் அவரை நோக்கி, “என்னோடு என் வீட்டிற்கு வந்து உணவருந்தும்” என்று கேட்டுக்கொண்டார். 16அதற்கு அவர், “நான் திரும்பி உம்மோடு வர இயலாது. இந்த இடத்தில் உம்மோடு உணவு அருந்த மாட்டேன். தண்ணீர் குடிக்கவும் மாட்டேன். ஏனென்றால், ‘அங்கே நீ உணவு அருந்தக் கூடாது; 17தண்ணீர் குடிக்கக் கூடாது; போன வழியாய்த் திரும்பி வரக்கூடாது’ என்று ஆண்டவர் எனக்குக் கூறியிருக்கிறார் என்றார். 18அதற்கு முதியவர், “உம்மைப் போல் நானும் இறைவாக்கினர்தான். ‘உணவருந்திக் தண்ணீர் குடிக்க நீ அவனை உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போ’ என்று ஆண்டவர் ஒரு வானதூதர் வாயிலாக எனக்குச் சொன்னார்” என்றார். ஆனால், அவர் சொன்னதோ பொய். 19ஆயினும் இறையடியார் அதை நம்பி அவரோடு திரும்பிச் சென்று அவரது வீட்டில் உணவருந்தித் தண்ணீர் குடித்தார்.

20அவர்கள் பந்தியில் அமர்ந்திருந்தபோது, அவரை அழைத்துக் கொண்டு வந்த இறைவாக்கினருக்கு ஆண்டவரின் வாக்கு உரைக்கப்பட்டது. 21அவர் யூதாவிலிருந்து வந்த இறையடியாரை நோக்கி உரத்த குரலில், “ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவரின் சொல்லை நீ மீறினாய்; உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இட்ட கட்டளையின்படி நீ நடக்கவில்லை. 22நீ உணவு அருந்தவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டிருக்க, நீ அவர் விலக்கின இடத்திற்குத் திரும்பி வந்து உணவு அருந்தித் தண்ணீர் குடித்ததால், உனது சடலம் உன் மூதாதையரின் கல்லறையில் வைக்கப்படமாட்டாது” என்று கூறினார். 23அழைத்து வரப்பட்ட இறைவாக்கினர் உண்டு குடித்த பிறகு முதியவர் அவருக்காகக் கழுதைக்குச் சேணம் பூட்டிக் கொடுத்தார். 24அவர் திரும்பிப் போகையில், ஒரு சிங்கம் வழியில் அவரைக் கண்டு அடித்துக் கொன்றது. அவரது சடலம் வழியில் கிடந்தது. அதன் அருகில் கழுதை நின்று கொண்டிருந்தது. சிங்கமும் அச்சடலத்தின் அருகே நின்று கொண்டிருந்தது.

25அவ்வழியே சென்ற ஆள்கள் வழியில் கிடந்த சடலத்தையும் அதனருகில் நின்று கொண்டிருந்த சிங்கத்தையும் கண்டனர். அவர்கள் முதிய இறைவாக்கினர் குடியிருந்த நகருக்கு வந்து அதைத் தெரிவித்தார்கள்.

26தம் வழியே சென்ற இறையடியாரைத் திரும்பி வரச் செய்த இறைவாக்கினர் அதைக் கேட்டபோது, “இந்த இறையடியார் ஆண்டவரின் சொல்லை மீறியவர். எனவே, ஆண்டவர் அவருக்குச் சொல்லியிருந்தபடியே அவரைச் சிங்கத்துக்கு இரையாக்கினார். அது அவரைப் பீறிக் கொன்றுவிட்டது” என்றார். 27பின்னர், தம் மைந்தரை நோக்கி, “எனக்காகக் கழுதைக்குச் சேணம் பூட்டுங்கள்” என்றார். அவர்களும் சேணம் பூட்டினார்கள். 28அவர் புறப்பட்டுச்சென்று வழியில் அந்த இறையடியாரின் சடலம் கிடப்பதையும் அதனருகில் கழுதை, அந்தச் சிங்கமும் நிற்பதையும் கண்டார். அந்தச் சிங்கமோ சடலத்தைத் தின்னவுமில்லை; கழுதையைப் பீறிப் போடவுமில்லை. 29அப்பொழுது அந்த முதிய இறைவாக்கினர் இறையடியாரின் சடலத்தை எடுத்துக் கழுதையின்மேல் ஏற்றி, துக்கம் கொண்டாடவும் அதை அடக்கம் செய்யவும் தம் ஊருக்குக் கொண்டு வந்தார். 30அவர் அவரது சடலத்தைத் தம் கல்லறையில் அடக்கம் செய்தார். பிறகு அவர்கள், “ஐயோ! என் சகோதரனே!” என்று அவருக்காகப் புலம்பித் துக்கம் கொண்டாடினார்கள். 31அவர் அவரை அடக்கம் செய்தபின் தம் மைந்தரை நோக்கி, “நான் இறந்த பின் இறையடியாராகிய இவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே என்னையும் அடக்கம் செய்யுங்கள். அவர் எலும்புகள் அருகே என் எலும்புகளையும் வையுங்கள். 32பெத்தேலில் இருக்கும் பலிபீடத்தையும் சமாரியாவின் நகர்களிலிருக்கும் எல்லாத் தொழுகை மேட்டுக் கோவில்களைப் பற்றியும் அவர் கூறிய ஆண்டவரின் வாக்கு திண்ணமாக நிறைவேறும்” என்றார்.


எரொபவாமின் மாபெரும் பாவம்


33இவற்றின் பின்னும் எரொபவாம் தன் தீய வழியை விட்டு விலகாமல் சாதாரண மக்களைத் தொழுகை மேட்டுக் குருக்களாக அமர்த்தினான். யார் விரும்பினார்களோ, அவர்களை அவன் திருநிலைப்படுத்த, அவர்கள் தொழுகை மேட்டுக் குருக்கள் ஆயினர். 34இச்செயல் எரொபவாமின் வீடு பாவத்திற்கு உள்ளாவதற்கும் மண்ணிலிருந்து அழிந்தொழிந்து போவதற்கும் காரணமாயிற்று.


13:2 2 அர 23:15-16.



அதிகாரம் 14:1-31

எரொபவாமின் மகன் சாதல்


1அக்காலத்தில் எரொபவாமின் மகன் அபியா நோயுற்றான். 2அப்போது எரொபவாம் தன் மனைவியைப் பார்த்து, “நீ எரொபவாமின் மனைவி என்று ஒருவரும் அறியாதபடி மாறுவேடம் பூண்டு சீலோவுக்குப் போ. நான் இம்மக்களுக்கு அரசனாவேன் என்று சொன்ன இறைவாக்கினர் அகியா அங்கேதான் குடியிருக்கிறார். 3பத்து அப்பங்களையும் தின்பண்டங்களையும் ஒரு கலயம் தேனையும் எடுத்துக் கொண்டு அவரிடம் போ. பிள்ளைகளுக்கு என்ன நேரும் என்று அவர் உனக்கு அறிவிப்பார்”

என்றான். 4எரொபவாமின் மனைவியும் அவ்வாறே செய்தாள். அவள் சீலோவுக்குப் புறப்பட்டுப் போய் அகியாவின் வீட்டை அடைந்தாள். அகியா முதியவராய் இருந்ததால், கண்கள் மங்கிப் பார்க்க முடியாதவராய் இருந்தார். 5ஆண்டவர் அகியாவிடம், “இதோ! எரொபவாமின் மனைவி நோயுற்றிருக்கிற தன் மகனைப் பற்றி உன்னிடம் கேட்க வருகிறாள். நான் கூறும் வண்ணம் நீ அவளிடம் பேச வேண்டும். அவள் மாறுவேடத்தில் வருகிறாள்” என்றார்.

6அவ்வாறே, அவள் வாயிலில் நுழைந்தவுடன், அவளது காலடி ஓசை கேட்ட அகியா கூறியது: “எரொபாவாமின் மனைவியே! உள்ளே வா! மாறுவேடத்தில் நீ வருவது ஏன்? துயரமான செய்தியையே உனக்குச் சொல்ல வேண்டும் என்பது எனக்கு வந்த கட்டளை.

7நீ எரொபவாமிடம் போய், ‘இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: மக்களிடையே நான் உன்னை உயர்த்தினேன். என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு உன்னைத் தலைவனாக்கினேன். 8தாவீதின் வீட்டினின்று அரசைப் பிடுங்கி, அதை உன் கையில் ஒப்படைத்தேன். ஆயினும், என் ஊழியன் தாவீதைப் போல் நீ நடந்து கொள்ளவில்லை. அவன் என் விதிமுறைகளைக் கைக்கொண்டு, நான் காட்டிய வழியில் தன் முழு இதயத்தோடு நடந்து, என் பார்வையில் ஏற்புடையவற்றை மட்டுமே செய்தான். நீயோ அவ்வாறு செய்யவில்லை. 9அது மட்டுமின்றி, உனக்கு முன் ஆட்சியில் இருந்த எல்லாரையும் விட நீ மிகுதியான தீமைகளைச் செய்துள்ளாய். நீ போய் வேற்றுத் தெய்வங்களை, வார்ப்புச் சிலைகளை உனக்கென உருவாக்கிக் கொண்டு என்னை ஒதுக்கிக் தள்ளினாய்; எனக்குச் சின மூட்டினாய்; ஆகையால், எரொபவாம் வீட்டுக்கு அழிவு வரும். 10இஸ்ரயேலில் அடிமையாகவோ, குடிமகனாகவோ உள்ள எரொபவாமின் ஆண் மக்கள் அனைவரையும் அழித்து விடுவேன். குப்பையை எரித்து ஒன்றும் இல்லாமல் ஆக்குவது போல், எரொபவாமின் வீட்டை அறவே அழித்தொழிப்பேன்.✠ 11எரொபவாமைச் சார்ந்தவருள் நகரில் மடிபவர்கள் நாய்களுக்கு இரையாவர்; வயல் வெளியில் மடிபவர் வானத்துப் பறவைகளுக்கு இரையாவர், இது ஆண்டவர் தரும் வாக்கு. நீ புறபப்பட்டு உன் வீட்டிற்குப் போ. 12நீ நகரினுள் கால் வைத்தவுடன் உன் பிள்ளை இறந்து போவான். 13அவனுக்காக இஸ்ரயேலர் அனைவரும் துக்கம் கொண்டாடி அவனை அடக்கம் செய்வர். எரொபவாமின் வீட்டில் அவன் ஒருவன் மட்டுமே இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு உகந்தவனாய் இருந்ததால், அவன் மட்டும் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவான்.

14ஆண்டவர்தாமே இஸ்ரயேலுக்கு ஓர் அரசன் எழுப்புவார். அவன் இன்றே, இப்போதே எரொபவாமின் வீட்டை அழித்து விடுவான். 15ஆண்டவர் இஸ்ரயேலரைத் தண்டிப்பார்; தண்ணீரில் நாணல் போல் அவர்கள் அலைக்கழிக்கப்படுவார்கள்; அவர்களுடைய மூதாதையருக்குத் தாம் வழங்கியிருந்த நல்ல நாட்டிலிருந்து இஸ்ரயேலரை வேரோடு பிடுங்குவார்; அவர்களை யூப்பிரத்தீசு ஆற்றுக்கு அப்பால் சிதறடிப்பார்; ஏனெனில், அவர்கள் அசேராக் கம்பங்கள் செய்து, ஆண்டவருக்குச் சினமூட்டினர். 16எரொபவாம் செய்த பாவத்திற்காகவும், அவன் காரணமாக இஸ்ரயேல் செய்த பாவத்திற்காகவும் ஆண்டவர் இஸ்ரயேலைக் கைவிட்டு விடுவார்.”

17பிறகு, எரொபவாமின் மனைவி புறப்பட்டுத் தீர்சாவுக்கு வந்தாள். அவள் தன் வீட்டு வாயிலில் கால் வைத்தவுடன் பிள்ளை இறந்து போனான். 18இறைவாக்கினரான அகியா என்ற தம் அடியார் மூலம் ஆண்டவர் சொல்லியிருந்த வாக்கின்படியே, அப்பிள்ளையை அடக்கம் செய்து இஸ்ரயேலர் எல்லாரும் துக்கம் கொண்டாடினர்.


எரொபவாமின் சாவு


19எரொபவாமின் பிற செயல்கள், அவன் செய்த போர், அவனது ஆட்சியைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா? 20எரொபவாம் இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தபின் தன் மூதாதையரோடு துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் நாதாபு அரசன் ஆனான்.


யூதா அரசன் ரெகபெயாம்

(2 குறி 11:5-12:5)


21இப்படியிருக்க, சாலமோனின் மகன் ரெகபெயாம் யூதாவில் ஆட்சி செய்து வந்தான். ரெகபெயாம் அரசனான போது, அவனுக்கு வயது நாற்பத்தொன்று. ஆண்டவர் தமது திருப்பெயரை நிலைநாட்டும் பொருட்டு இஸ்ரயேலின் குலங்கள் அனைத்திலிருந்தும், தேர்ந்து கொண்ட நகராகிய எருசலேமில் அவன் பதினேழு ஆண்டுகள் அரசாண்டான். அம்மோனிய நாட்டினளான நாமா என்பவளே அவன் தாய். 22யூதா நாட்டு மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தார்கள். அவர்கள் தம் மூதாதையர் செய்த எல்லாவற்றையும் விட, மிகுதியான பாவம் செய்து அவருக்குப் பொறாத சினத்தைக் கிளப்பினர்.

23அவர்கள் தொழுகைமேடுகள் எழுப்பி, ஒவ்வோர் உயர் குன்றிலும், பசுமரத்தின் அடியிலும், கல்தூண்களையும் அசேராக் கம்பங்களையும் நிறுத்தினர்.✠ 24நாட்டில் விலைஆடவர் இருந்தனர். இஸ்ரயேல் மக்கள்முன் இராதபடி ஆண்டவர் விரட்டியத்த வேற்றினத்தாரின் அருவருப்பான செயல்கள் அனைத்தையும் அவர்கள் செய்தார்கள்.✠

25ரெகபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னனாகிய சீசாக்கு எருசலேமின் மீது படையெடுத்து வந்தான். 26ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களையும் அரசனது அரண்மனையின் செல்வங்களையும் சாலமோன் செய்து வைத்த பொற்கேடயங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு போனான்.✠ 27அக்கேடயங்களுக்குப் பதிலாக, அரசன் ரெகபெயாம் வெண்கலக் கேடயங்களைச் செய்து, அவற்றை அரண்மனை வாயிற்காப்போரின் தலைவர்களிடம் கொடுத்தான். 28அரசன் ஆண்டவரது இல்லத்திற்குள் நுழையும் போதெல்லாம் அரண்மனைக் காவலர்கள் அவற்றைத் தூக்கிக் கொண்டு போய்த் திரும்பி வந்து அவற்றைக் காவலறையில் வைப்பார்கள்.

29ரெகபெயாமின் பிற செய்திகளும் அவன் செய்தவை யாவும் ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா? 30ரெகபெயாமுக்கும் எரொபவாமுக்கும் இடையே அவர்கள் ஆண்ட காலமெல்லாம் தொடர்ந்து போர்நடந்து வந்தது. 31ரெகபெயாம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு, அவர்களோடு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அம்மோனியா நாட்டினளான நாமா என்பவளே அவன் தாய். அவனுக்குப் பின் அவனுடைய மகன் அபியாம் அரசன் ஆனான்.


14:10 1 அர 15:29. 14:23 2 அர 17:9-10. 14:24 இச 23:17. 14:26 1 அர 10:16-17; 2 குறி 9:15-16.



அதிகாரம் 15:1-34

யூதா அரசன் அபியாம்

(2 குறி 13:1-14:1)


1நெபாற்றின் மகன் எரொபவாம் ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் அபியாம் யூதாவின் அரசன் ஆனான். 2அவன் எருசலேமில் மூன்று ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். அபிசலோமின் மகள் மாக்கா என்பவளே அவன் தாய்.

3அவனுக்குமுன் அரசனாயிருந்த அவன் தந்தை செய்த எல்லாப் பாவங்களையும் அவனும் செய்தான். அவன் உள்ளம் தம் மூதாதையான தாவீதின் உள்ளத்தைப்போல் கடவுளாகிய ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கவில்லை. 4ஆயினும், தாவீதின் பொருட்டு அவருடைய கடவுளாகிய ஆண்டவர் எருசலேமில் அவரது குலவிளக்கை ஒளிரச் செய்தார். அவருடைய மகனை அவருக்குப் பின் எழுப்பி, எருசலேமை நிலைபெறச் செய்தார்.✠ 5ஏனெனில், தாவீது ஆண்டவரின் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தார். இத்தியனான உரியாவிடம் நடந்து கொண்ட முறையைத் தவிர, தம் வாழ்நாளெல்லாம் அவர் ஆண்டவரின் கட்டளைகளினின்று வழுவியதில்லை.✠ 6அபியாம் ஆண்ட காலமெல்லாம் அவனுக்கும் எரொபவாமுக்குமிடையே தொடர்ந்து போர் நடந்து வந்தது. 7அபியாமின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா? அபியாமிற்கும் எரொபவாமுக்குமிடையே போர் நடந்தது. 8பிறகு, அபியாம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் ஆசா அரசன் ஆனான்.


யூதா அரசன் ஆசா

(2 குறி 15:16-16:6)


9இஸ்ரயேலின் அரசன் எரொபவாம் ஆட்சியேற்ற இருபதாம் ஆண்டில், ஆசா யூதாவின் அரசன் ஆனான். அவன் நாற்பத்தோராண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான். 10அபிசலோமின் மகள் மாக்கா என்பவளே அவன் தாய். 11ஆசா தன் மூதாதை தாவீதைப் போல் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தான். 12அவன் விலை ஆடவர்களை நாட்டிலிருந்து துரத்திவிட்டுத் தன் மூதாதையர் செய்து வைத்திருந்த சிலைகளையெல்லாம் அகற்றினான். 13மேலும், அவனுடைய தாய் மாக்கா அசேராவுக்கு அருவருப்பான உருவமொன்றைச் செய்து வைத்திருந்தாள். எனவே, அவன் அவளை அரச அன்னைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவ்வுருவத்தைத் தகர்த்து கிதரோன் ஓடையருகே சுட்டெரித்தான்.

14ஆனால், தொழுகை மேடுகள் அப்படியே இருந்தன. எனினும், ஆசாவின் உள்ளம் அவன் வாழ்நாளெல்லாம் ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருந்தது. 15தன் தந்தை நேர்ந்து கொண்டவற்றையும் தான் நேர்ந்து கொண்ட வெள்ளி, தங்கத்தால் ஆன பொருள்களையும் ஆசா ஆண்டவரின் இல்லத்திற்குள் கொண்டு வந்து சேர்த்தான்.

16ஆசாவுக்கும் இஸ்ரயேலின் அரசன் பாசாவுக்கும் இடையே அவர்கள் ஆண்ட காலமெல்லாம் தொடர்ந்து போர் நடந்து வந்தது. 17இஸ்ரயேலின் அரசன் பாசா யூதாவின்மீது படையெடுத்து வந்து, அரசன் ஆசாவுடன் இருந்த போக்குவரத்தைத் தடுக்க இடையில் இராமா நகரைக் கட்டினான். 18ஆசா ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களிலும் அரண்மனைச் செல்வங்களிலும் எஞ்சியிருந்த எல்லா வெள்ளியையும், பொன்னையும் தன் பணியாளர் மூலம், எசியோனின் மகனான தபரிம்மோனுக்குப் பிறந்து, தமஸ்குவில் வாழ்ந்த பெனதாது என்ற சிரியா மன்னனுக்கு அனுப்பிக் கூறியது: 19“என் தந்தையும் உம் தந்தையும் செய்தது போல், நீரும் நானும் உடன்படிக்கை செய்து கொள்வோம். இதற்கெனப் பொன், வெள்ளி முதலியவற்றை நான் உமக்கு அன்பளிப்பாய் அனுப்புகிறேன். இஸ்ரயேலின் அரசன் பாசாவோடு நீர் செய்து கொண்ட உடன்படிக்கையை முறித்து விடும். அப்பொழுது அவன் என்னைவிட்டு அகன்று போவான்”. 20பெனதாது அரசன் ஆசாவுக்கு இணங்கித் தன் படைத் தலைவர்களை இஸ்ரயேலின் நகர்களின் மேல் படை எடுக்குமாறு அனுப்பினான். அவர்கள் ஈயோன் தாண், ஆபேல், பெத்மாக்கா ஆகிய நகர்களையும் கினரோத்து முழுவதையும் நப்தலி நாடு அனைத்தையும் தாக்கி முறியடித்தார்கள். 21பாசா இதைக் கேள்வியுற்று, இராமாவைக் கட்டுவதை நிறுத்தி விட்டு, தீர்சா நகருக்குத் திரும்பினான்.

22அப்பொழுது அரசன் ஆசா, யூதா முழுவதற்கும் விதி விலக்கின்றி அனைவருக்கும் ஆணையிட்டான். அதன்படி அவர்கள் பாசா இராமாவைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய கற்களையும், மரங்களையும் எடுத்து வந்தனர். அவற்றைக்கொண்டு அரசன் ஆசா பென்யமினைச் சார்ந்த கேபாவையும் மிஸ்பாவையும் கட்டி எழுப்பினான். 23ஆசாவின் பிற செயல்களும் அவனுடைய எல்லா வீரச் செயல்களும் அவன் செய்தவை யாவும் அவன் நகர்களைக் கட்டியதும், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா? முதியவயதில் அவன் கால்களில் நோய் கண்டது. 24ஆசா தன் மூதாதையரோடு துயில் கொண்டு, தன் மூதாதை தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் யோசபாத்து அரசன் ஆனான்.


இஸ்ரயேல் அரசன் நாதாபு


25யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில் எரொபவாமின் மகன் நாதாபு இஸ்ரயேலின் அரசன் ஆனான். அவன் இஸ்ரயேலின் மீது ஈராண்டுகள் ஆட்சி செலுத்தினான். 26அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து தன் தந்தையின் வழியிலேயே நடந்து, அவனைப் போலவே இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்தான்.

27இசக்கார் வீட்டைச் சேர்ந்த அகியாவின் மகன் பாசா அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தான். நாதாபும் இஸ்ரயேல் படை முழுவதும் பெலிஸ்தியருடைய கிபத்தோன் என்னும் நகரை முற்றுகையிட்டிருக்கையில், பாசா அங்கே சென்று அவனை வெட்டி வீழ்த்தினான். 28இவ்வாறு, யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற மூன்றாம் ஆண்டில் பாசா நாதாபுவைக் கொன்று விட்டு அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான். 29அவன் அரசன் ஆனவுடன் எரொபவாமின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்று போட்டான். சீலோவைச் சார்ந்த அகியா என்ற தம் ஊழியர் மூலம் ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, எரொபவாமின் குடும்பத்தவர் அனைவரையும், எந்த உயிரையும் விட்டு வைக்காமல், அடியோடு அழித்தான்.

30இந்த அழிவுக்கு எரொபவாம் தானே பாவங்கள் செய்ததும், இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்ததும், இவற்றால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு அவன் சினமூட்டியதுமே காரணம். 31நாதாபின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும், ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா? 32ஆசாவுக்கும் இஸ்ரயேலின் அரசன் பாசாவுக்கும் இடையே அவர்கள் ஆண்ட காலமெல்லாம் தொடர்ந்து போர் நடந்து வந்தது.


இஸ்ரயேல் அரசன் பாசா


33யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற மூன்றாம்ஆண்டில் அகியாவின் மகன் பாசா இஸ்ரயேல் முழுவதின்மீதும் தீர்சாவில் இருந்து கொண்டு இருபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். 34அவனும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். எரொபவாமின் வழியிலேயே நடந்து, அவனைப் போல் இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாயிருந்தான்.


15:4 1 அர 11:36. 15:5 2 சாமு 11:27.



அதிகாரம் 16:1-34

1பாசாவுக்கு எதிராக அனானியின் மகனான ஏகூவுக்கு ஆண்டவரின் வாக்கு உரைக்கப்பட்டது: 2“தூசிக்கு நிகரான உன்னை நான் உயர்த்தி என் மக்களாகிய இஸ்ரயேலுக்குத் தலைவனாக ஏற்படுத்தினேன். நீயோ எரொபவாமின் வழி நடந்து என் மக்களாகிய இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்து, அவர்களுடைய பாவங்களால் எனக்குச் சினமூட்டினாய். 3எனவே, இதோ! நான் பாசாவையும் அவன் வீட்டையும் முற்றிலும் அழிக்கப்போகிறேன். நெபாற்றின் மகனான எரொபவாமின் வீட்டுக்குச் செய்ததைப் போல, உன் வீட்டுக்கும் செய்வேன். 4பாசாவைச் சார்ந்தவருள் நகரில் மடிபவர் நாய்களுக்கு இரையாவர்; வயல்வெளியில் இறப்பவர் வானத்துப் பறவைகளுக்கு இரையாவர்.”

5பாசாவின் பிறசெயல்களும் அவன் செய்தவை யாவும் அவனுடைய வீரச் செயல்களும், “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா? 6பாசா தன் மூதாதையரோடு துயில் கொண்டபின் திர்சாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் ஏலா அரசன் ஆனான். 7ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைப் பாசா செய்ததாலும், எரொபவாமின் வீட்டை அடியோடு அழித்ததாலும் அவன் அவருக்குச் சினமூட்டினான். ஆகையால், அவர்களுக்கு நேர்ந்தது போலவே பாசாவுக்கும் அவன் குடும்பத்துக்கும் நேரும் என்று அனானியின் மகன் ஏகூ என்ற இறைவாக்கினர் மூலம் ஆண்டவரின் வாக்கு உரைக்கபட்டது.


இஸ்ரயேல் அரசன் ஏலா


8யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற இருபத்தாறாம் ஆண்டில், பாசாவின் மகனான ஏலா இஸ்ரயேலின் அரசனாகித் திர்சாவில் இருந்து கொண்டு ஈராண்டுகள் ஆட்சி செய்தான். 9அவனது தேர்ப்படையின் பாதிக்குத் தலைவனாய் இருந்த சிம்ரி என்ற அவனுடைய பணியாளன் அவனை ஒழித்து விடச் சூழ்ச்சி செய்தான். திர்சாவில் அரண்மனை மேற்பார்வையாளன் அர்சாவின் வீட்டில் ஏலா குடிபோதையில் இருந்துபோது, 10சிம்ரி உட்புகுந்து அவனை வெட்டிக் கொன்று விட்டு, அவனுக்குப் பதிலாக அரசனானான். இது யூதா அரசன் ஆசாவினது ஆட்சியின் இருபத்தேழாம் ஆண்டில் நிகழ்ந்தது.

11அவன் அரியணை ஏறி அரசாளத் தொடங்கியவுடன், பாசாவின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றான். பாசாவின் உறவினர், நண்பர் ஆகியோருள் எந்த ஆணையும் அவன் விட்டுவைக்கவில்லை. 12இவ்வாறு, இறைவாக்கினர் ஏகூவின்மூலம் ஆண்டவர் பாசாவுக்கு எதிராக உரைத்த வாக்கின்படி, பாசாவின் குடும்பத்தினர் அனைவரையும் சிம்ரி ஒழித்துக் கட்டினான். 13பாசாவும் அவன் மகன் ஏலாவும் பல்வேறு பாவங்கள் செய்ததாலும், இஸ்ரயேல் பாவம் செய்யக் காரணமாய் இருந்து சிலை வழிபாட்டினால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டியதாலும், இது நேர்ந்தது. 14ஏலாவின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?


இஸ்ரயேல் அரசன் சிம்ரி


15யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற இருபத்தேழாம் ஆண்டு, சிம்ரி திர்சாவில் இருந்துகொண்டு ஏழு நாள்கள் அரசாண்டான். அப்போது படைவீரர் பெலிஸ்தியருக்குச் சொந்தமான கிபத்தோனுக்கு எதிராகப் பாளையம் இறங்கியிருந்தனர். 16சிம்ரி சூழ்ச்சி செய்து அரசனைக் கொன்றுவிட்டான் என்பதை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த இஸ்ரயேல் மக்கள் கேள்விப்பட்டு, படைத்தலைவனாகிய ஓம்ரியை அன்றே பாளையத்திலிருந்து இஸ்ரயேல் முழுவதற்கும் அரசனாக்கினர். 17அப்போது ஓம்ரி கிபத்தோனிலிருந்து இஸ்ரயேலர் அனைவருடன் சேர்ந்து புறப்பட்டுப் போய்த் தீர்சாவை முற்றுகையிட்டான். 18நகர் வீழ்ச்சியுற்றதைக் கண்டு, சிம்ரி அரண்மனையின் உட்கோட்டைக்குள் புகுந்தான். அந்த அரண்மனைக்குத் தீயிட்டு, தானும் அதில் மாண்டான். 19ஏனெனில். அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து, எரொபவாமின் வழியில் நடந்து, அவனைப் போலவே இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாயிருந்தான். 20சிம்ரியின் பிற செயல்களும் அவன் செய்த சூழ்ச்சியும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?


இஸ்ரயேல் அரசன் ஓம்ரி


21அப்போது இஸ்ரயேலின் மக்கள் இரு பகுதியாகப் பிரிந்தனர். ஒரு பகுதியினர் கீனத்தின் மகன் திப்னியையும் மறுபகுதியினர் ஓம்ரியையும் அரசனாக்க முயன்றனர். 22கீனத்தின் மகன் திப்னியின் ஆள்களை விட ஓம்ரியின் ஆள்கள் வலிமை மிகுந்திருந்ததால், ஓம்ரி அரசனானான். திப்னி உயிரிழந்தான்.

23ஓம்ரி அரசனாகி இஸ்ரயேல்மீது பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். முதல் ஆறு ஆண்டுகள் அவன் திர்சாவில் இருந்து கொண்டு அரசாண்டான். 24பின்னர், அவன் செமேர் என்பவனிடமிருந்து ‘சமாரியா’ என்ற மலையை ஏறத்தாழ எண்பது கிலோ எடையுள்ள வெள்ளிக்கு வாங்கினான். அம்மலையின் மீது நகர் ஒன்றைக் கட்டி முன்னாள் உரிமையாளனான செமேரின் பெயரையொட்டி அந்நகருக்குச் ‘சமாரியா’ என்று பெயரிட்டான்.

25ஓம்ரி ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். அவன் தனக்கு முன்பிருந்த எல்லாரையும் விட மிகவும் தீயவனாய் இருந்தான். 26அவன் நெபாற்றின் மகன் எரொபவாமின் எல்லா வழிகளிலும் நடந்து, இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்து, சிலை வழிபாட்டினால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டினான். 27ஓம்ரியின் பிறசெயல்களும் அவனுடைய வீரச் செயல்களும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா? 28ஓம்ரி தன் மூதாதையரோடு துயில் கொண்டு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் ஆகாபு அரசன் ஆனான்.

29யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற முப்பத்தெட்டாம் ஆண்டில், ஓம்ரியின் மகன் ஆகாபு இஸ்ரயேலை அரசாளத் தொடங்கினான். அவன் சமாரியாவில் இருந்துகொண்டு இஸ்ரயேலின்மீது இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். 30ஓம்ரியின் மகன் ஆகாபு ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைத் தனக்கு முன் இருந்த எல்லாரையும் விட மிகுதியாய்ச் செய்தான். 31நெபாற்றின் மகன் எரொபவாமின் வழிகளில் அவன் நடந்தது போதாதென்று, சீதோனிய மன்னன் எத்பாகாலின் மகள் ஈசபேலை மணந்துகொண்டு பாகால் தெய்வத்தை வணங்கி வழிபடலானான்.

32மேலும், சமாரியாவில் பாகாலுக்கு ஒரு கோவில் கட்டி, அத்தெய்வத்துக்கு ஒரு பலிபீடமும் எழுப்பினான். 33அதுவுமின்றி, ஆகாபு அசேராக் கம்பத்தை நிறுத்தி, தனக்கு முன்பிருந்த இஸ்ரயேலின் அரசர்கள் எல்லாரையும்விட மிகுதியாக, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டினான். 34அவனது ஆட்சியில் பெத்தேலைச் சார்ந்த ஈயேல் எரிகோவைக் கட்டினான் நூனின் மகன் யோசுவாமூலம் ஆண்டவர் உரைத்த வாக்கின்படி ஈயேல் அதற்கு அடிக்கல் இட்டபோது தன் தலைமகன் அபிராமையும் அதன் வாயில்களை அமைத்தபோது தன் கடைசி மகன் செகுபையும் சாகக் கொடுத்தான்.✠


16:34 யோசு 6:26.



அதிகாரம் 17:1-24

எலியா காலத்துப் பஞ்சம்


1கிலயாதில் குடியிருந்த திஸ்பே ஊரைச் சார்ந்த எலியா ஆகாபு அரசனிடம், “நான் பணியும் இஸ்ரயேலின் கடவுளான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் வாக்கினாலன்றி, வரும் ஆண்டுகளில் பனியோ மழையோ பெய்யாது” என்றார்.✠ 2பின்னர், ஆண்டவரின் வாக்கு எலியாவுக்கு வந்தது; 3“இங்கிருந்து ஓடிவிடு; கிழக்கு முகமாகப் போய் யோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து ஓடையருகில் ஒளிந்து கொள். 4அந்த ஓடையில் தண்ணீர் குடித்துக் கொள். அங்கே உனக்கு உணவளிக்குமாறு காகங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்”. 5அவ்வாறே, அவர் போய் ஆண்டவரது வாக்கின்படி செய்தார். அவர் சென்று யோர்தானுக்கு அப்பாலிருந்த கெரீத்து ஓடையருகில் தங்கியிருந்தார். 6காகங்கள் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் அவருக்குக் கொண்டு வந்தன. ஓடையில் தண்ணீர் குடித்துக் கொண்டார். 7நாட்டில் மழை பெய்யாத காரணத்தால் சில நாள்களில் அந்த ஓடையும் வற்றிப் போனது.


சாரிபாத்துக் கைம்பெண்


8அப்பொழுது ஆண்டவரது வாக்கு அவருக்கு வந்தது; 9“நீ புறப்பட்டுச் சீதோன் பகுதியிலிருக்கும் சாரிபாத்துக்குப் போய் அங்கே தங்கியிரு. அங்கு உனக்கு உணவு அளிக்குமாறு ஒரு கைம்பெண்ணுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்”.✠ 10எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்த பொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, “ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்றார். 11அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, “எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா?” என்றார். 12அவர், “வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்” என்றார். 13எலியா அவரிடம், “அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள். 14இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது” என்று சொன்னார். 15அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர். 16எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை; கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.

17இதற்குப் பின் ஒருநாள், வீட்டுத் தலைவியான அந்தப் பெண்ணின் மகன் நோயுற்றான். அவனது நோய் மிகவும் முற்றவே, அவன் மூச்சு நின்று விட்டது. 18அவர் எலியாவிடம், “கடவுளின் அடியவரே, எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? என் பாவத்தை நினைவூட்டவும் என் மகனைச் சாகடிக்கவுமா நீர் வந்திருக்கிறீர்?” என்றார். 19எலியா அவரிடம், “உன் மகனை என்னிடம் கொடு” என்று சொல்லி, அவனை அவர் மடியிலிருந்து எடுத்துத் தாம் தங்கியிருந்த மாடியறைக்குத் தூக்கிச்சென்று தம் படுக்கையில் கிடத்தினார். 20அவர் ஆண்டவரை நோக்கி, “என் கடவுளாகிய ஆண்டவரே, எனக்குத் தங்க இடம் கொடுத்த கைம்பெண்ணின் மகனைச் சாகடித்து அவளைத் துன்புறுத்தலாமா?” என்று கதறினார். 21அவர் அந்தச் சிறுவன்மீது மூன்று முறை குப்புறப்படுத்து ஆண்டவரை நோக்கி, “என் கடவுளாகிய ஆண்டவரே, இந்தச் சிறுவன் மீண்டும் உயிர் பெறச் செய்யும்” என்று மன்றாடினார்.✠ 22ஆண்டவரும் எலியாவின் குரலுக்குச் செவி கொடுத்தார். சிறுவனுக்கு மீண்டும் உயிர் திரும்பி வரவே, அவன் பிழைத்துக் கொண்டான். 23எலியா சிறுவனைத் தூக்கிக் கொண்டு மாடி அறையிலிருந்து இறங்கி வீட்டிற்குள் வந்து, “இதோ! உன் மகன் உயிருடன் இருக்கிறான்” என்று கூறி அவனை அவன் தாயிடம் ஒப்படைத்தார். 24அந்தப் பெண் எலியாவிடம், “நீர் கடவுளின் அடியவரென்றும் உம் வாயிலிருந்து வரும் ஆண்டவரின் வாக்கு உண்மையானதென்றும் தெரிந்து கொண்டேன்” என்றார்.


17:1 யாக் 5:17. 17:9 லூக் 4:25-26. 17:21 2 அர 4:34-35.



அதிகாரம் 18:1-46

எலியாவும் பாகாலின் பொய்வாக்கினரும்


1பல நாள்களுக்குப் பிறகு, பஞ்சத்தின் மூன்றாம் ஆண்டில். ஆண்டவர் எலியாவிடம், “ஆகாபு உன்னைக் காணுமாறு போய் நில். நான் நாட்டில் மழை பெய்யச் செய்வேன்” என்று கூறினார். 2அவ்வாறே, எலியா தம்மை ஆகாபு காணுமாறு அவனிடம் சென்றார். அப்பொழுது சமாரியாவில் பஞ்சம் கடுமையாக இருந்தது. 3அரண்மனைக் கண்காணிப்பாளன் ஒபதியாவை, ஆகாபு தன்னிடம் அழைத்தான். ஒபதியா ஆண்டவருக்கு மிகவும் அஞ்சி நடந்தவர்.

4ஆண்டவரின் இறைவாக்கினரை ஈசபேல் அழிக்க முயன்றபோது அவர்களுள் நூறு பேரைக் குகைக்கு ஐம்பதாக மறைத்து வைத்திருந்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து வந்தார். 5ஆகாபு ஒபதியாவிடம், “நாடெங்கும் சென்று எல்லா நீருற்றுகளையும், நீரோடைகளையும் பார்ப்போம். ஒருவேளை குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் உயிர் வாழத் தேவையான புல் கிடைக்கலாம். நம்முடைய கால் நடைகளை இழக்க வேண்டியிராது” என்றான். 6சுற்றிப்பார்ப்பதற்கென நாட்டைப் பிரித்துக் கொண்டபின் ஆகாபு ஒரு திசையை நோக்கிச் சென்றார்; ஒபதியா மறுதிசையை நோக்கிச் சென்றார்.

7போகும் வழியில் ஒபதியா திடீரென எலியாவைச் சந்தித்தார். அவர் அவரை அடையாளம் கண்டு கொண்டு, தாழ்ந்து வணங்கி, “நீர் என் தலைவர் எலியா தாமோ?” என்றார். 8அவர், “ஆம், நான்தான்! நீ உன் தலைவனிடம் சென்று, ‘எலியா வந்துள்ளார்’ என்று சொல்” என்றார். 9அப்பொழுது ஒபதியா, “நான் என்ன பாவம் செய்தேன்? உம் அடியானாகிய என்னை ஆகாபு கொலை செய்யும்படி நீர் ஏன் அவனிடம் கையளிக்கிறீர்? 10வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணை! என் தலைவன் உம்மைத் தேடிப் பிடிக்கும்படி ஆளனுப்பாத நாடோ பேரரசோ இல்லை. எந்த நாடோ அரசோ ‘உம்மைக் காணவில்லை’ என்று சொன்னால், ‘உம்மைக் காணவில்லை’ என்று ஆணையிடச் செய்தான். 11ஆனால் நீரோ, ‘எலியா வந்துள்ளார்’ என என் தலைவனிடம் சொல்லச் சொல்கிறீர். 12நான் உம்மைவிட்டு அகன்றவுடன், ஆண்டவரின் ஆவி உம்மை எனக்குத் தெரியாமல் தூக்கிக் கொண்டு போய்விடலாம். ஆகாபிடம் சென்று நான் தெரிவிக்கையில், உம்மை அவன் காணவில்லையெனில், என்னைக் கொன்று விடுவான். உம் அடியானாகிய நான் இளமை முதல் ஆண்டவருக்கு அஞ்சி நடந்திருக்கின்றேன்.

13ஆண்டவரின் இறைவாக்கினரை ஈசபேல் அழிக்க முயன்றபோது, அவர்களில் நூறு பேரைக் குகைக்கு ஐம்பதாக மறைத்து வைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து வந்தது பற்றி நீர் கேள்விப்படவில்லையா? 14இப்படியிருக்க, நான் என் தலைவனிடம் சென்று, ‘எலியா வந்துள்ளார்’ என்று சொல்லச் சொல்கிறீர். என்னை அவன் கொன்றுவிடுவான்” என்றார். 15அப்பொழுது எலியா, “நான் பணியும் படைகளின் ஆண்டவர் மேல் ஆணை! இன்று அவன் காணுமாறு அவன்முன் நிற்பேன்” என்றார். 16ஒபதியா புறப்பட்டு ஆகாபைச் சந்தித்து இதைத் தெரிவித்தார். உடனே ஆகாபு எலியாவைச் சந்திக்கச் சென்றான்.

17ஆகாபு எலியாவைக் கண்டதும், “இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நீதானே?” என்றான். 18அதற்கு எலியா, “இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நானல்ல; நீயும் உன் தந்தையின் வீட்டாரும்தான். ஏனெனில், நீங்கள் ஆண்டவரின் கட்டளைகளைப் புறக்கணித்துப் பாகால் பின்னே செல்கிறீர்கள்! 19இப்போதே ஆளனுப்பி இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் கர்மேல் மலையில் என் முன்னிலையில் ஒன்று திரட்டு. ஈசபேலின் பந்தியில் உணவருந்தும் பாகாலின் நானூற்றைம்பது பொய்வாக்கினரையும் அசேராவின் நானூறு பொய்வாக்கினரையும் கொண்டுவந்து சேர்” என்றார்.

20அவ்வாறே,ஆகாபு இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் அழைத்தான். பொய்வாக்கினரையும் கர்மேல் மலையில் ஒன்று திரட்டினான். 21எலியா, மக்கள் அனைவர்முன் சென்று, “எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் கடவுள் என்றால், அவரைப் பின்பற்றுங்கள்! பாகால் தான் என்றால், அவன் பின்னே செல்லுங்கள்!”

22அப்பொழுது எலியா மக்களிடம், “ஆண்டவரின் திருவாக்கினருள் நான் ஒருவன்தான் எஞ்சியிருக்கிறேன்! பாகாலின் பொய்வாக்கினரோ நாநூற்றைம்பது பேர் இருக்கின்றனர். 23இரண்டு காளைகளை எங்களிடம் கொண்டு வாருங்கள். அவர்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்து, அதைத் துண்டு துண்டாக வெட்டி, விறகின் மேல் வைக்கட்டும்; ஆனால், நெருப்பு வைக்கலாகாது. மற்றக் காளையை நான் தயார் செய்து விறகின் மேல் வைப்பேன்; நானும் நெருப்பு வைக்க மாட்டேன். 24நீங்கள் உங்கள் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அழையுங்கள். நானோ ஆண்டவரின் பெயரைச் சொல்லி அழைப்பேன். அதற்கு நெருப்பு மூலம் பதிலளிக்கும் கடவுளே உண்மைக் கடவுள்” என்றார். மக்கள் அனைவரும் பதில்மொழியாக, “நீர் சொல்வது சரியே” என்றனர். 25பிறகு எலியா பாகாலின் பொய்வாக்கினரிடம், “நீங்கள் அதிகம் பேராய் இருப்பதால் “முதலில் நீங்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யுங்கள்; ஆனால், நெருப்பு மூட்டாதீர்கள்” என்றார். 26அவ்வாறே, அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையைக் கொண்டு வந்து தயார் செய்த பின், காலை முதல் நண்பகல் வரை பாகாலின் பெயரைக் கூப்பிட்டு, “பாகாலே! பதில் தாரும்” என்று கத்தினர். ஆனால், எக்குரலும் கேட்கவில்லை; எப்பதிலும் வரவில்லை. எனவே, அவர்கள் தாங்கள் கட்டிய பலிபீடத்தைச் சுற்றி ஆடலாயினர். 27நண்பகலாயிற்று. எலியா அவர்களைக் கேலி செய்து, “இன்னும் உரத்த குரலில் கத்துங்கள். அவன் ஒரு தெய்வம்! ஒரு வேளை அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கலாம்! அல்லது ஒதுக்குப்புறம் போயிருக்கலாம்! அல்லது பயணம் செய்து கொண்டிருக்கலாம்! அல்லது தூங்கிக் கொண்டிருக்கலாம்; அவன் விழித்தெழ வேண்டியிருக்கும்!” என்றார். 28எனவே, அவர்கள் இன்னும் உரத்த குரலில் கத்தினர். தங்கள் வழக்கப்படி வாளினாலும் வேலினாலும், இரத்தம் கொட்டும் வரை, தங்களையே கீறிக் கிழித்துக் கொண்டார்கள், 29பிற்பகல் ஆயிற்று. அவர்கள் மாலைப் பலி செலுத்தும் நேரம்வரை தொடர்ந்து உளறிக் கொண்டிருந்தார்கள். ஆயினும், எக்குரலும் கேட்கவில்லை. எப்பதிலும் வரவில்லை. கவனிப்பார் யாருமில்லை. 30அப்போது எலியா எல்லா மக்களையும் நோக்கி, “என் அருகில் வாருங்கள்” என்றார். மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர். உடனே எலியா அங்கே இடிந்து கிடந்த ஆண்டவரது பலிபீடத்தைச் செப்பனிட்டார்.

31‘உன் பெயர் இஸ்ரயேல்’ என்று ஆண்டவர் யாக்கோபுக்கு உரைத்திருந்ததன் பொருட்டு, அவர் வழிவந்த குலங்களின் எண்ணிக்கைப்படி எலியா பன்னிரு கற்களை எடுத்தார்.✠ 32அக்கற்களைக் கொண்டு ஆண்டவர் பெயரில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அப்பலி பீடத்தைச் சுற்றிலும் இரண்டு உழவுகால் அகலம் உள்ள வாய்க்காலை வெட்டினார். 33அதன்பின் விறகுக் கட்டைகளை அடுக்கி, காளையைத் துண்டு துண்டாக வெட்டி, அவற்றின் மேல் வைத்தார். 34“நான்கு குடங்கள் நிறைய தண்ணீர் கொண்டு வந்து, எரிபலியின் மேலும் விறகுக் கட்டைகளின்மேலும் ஊற்றுங்கள்” என்றார். அவர் “இரண்டாம் முறையும் செய்யுங்கள்”, என்றார். அவர்கள் இரண்டாம் முறையும் அவ்வாறே செய்தனர். அவர் “மூன்றாம் முறையும் செய்யுங்கள்” என்றார். அவர்கள் மூன்றாம் முறையும் அப்படியே செய்தனர். 35எனவே, தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடியது. மேலும், வாய்க்காலை அவர் தண்ணீரால் நிரப்பினார். 36மாலைப் பலி செலுத்தும் நேரமாயிற்று. இறைவாக்கினர் எலியா பலிபீடத்தின் அருகில் வந்து, “ஆபிரகாம், ஈசாக்கு இஸ்ரயேல் என்பவர்களின் கடவுளாகிய ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுள் நீரே என்றும், இவற்றையெல்லாம் நான் உம் வாக்கின்படியே செய்தேன் என்றும் இன்று விளங்கச் செய்தருளும். 37நீரே கடவுளாகிய ஆண்டவர் என்றும் நீரே இம்மக்களின் மனத்தை மீண்டும் மாற்றுவீர் என்றும் இம்மக்கள் அறியும்படி எனக்குப் பதில் தாரும்! ஆண்டவரே எனக்குப் பதில் தாரும்!” என்றார். 38உடனே ஆண்டவரின் நெருப்பு கீழே இறங்கி அந்த எரிபலியையும், விறகுக் கட்டைகளையும், கற்களையும், மணலையும் சுட்டெரித்து வாய்க்கால் நீரையும் வற்றச் செய்தது. 39இதைக் கண்டவுடன் மக்கள் அனைவரும் முகங்குப்புற விழுந்து, “ஆண்டவரே கடவள்! ஆண்டவரே கடவுள்!” என்றனர். 40அப்போது எலியா அவர்களை நோக்கி, “நீங்கள் பாகாலின் பொய்வாக்கினருள் எவனும் தப்பியோடாதபடி அவர்களைப் பிடியுங்கள்” என்றார். மக்கள் அவர்களைப் பிடித்துக்கொடுக்க, எலியா அவர்களைக் கீசோன் ஓடைக்குக் கொண்டுபோய் அங்கே கொன்றார்.


பஞ்சம் தீர்ந்து போதல்


41பின்பு, எலியா ஆகாபை நோக்கி, “நீர் போய் உணவும் பானமும் அருந்துவீர். ஏனெனில், பெருமழையின் ஓசை கேட்கிறது” என்றார். 42ஆகாபு உணவும் பானமும் அருந்தச் சென்றவுடன், எலியா கர்மேல் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று. அங்கே தரையில் மண்டியிட்டுத் தம் முழங்கால்களுக்கு இடையே முகத்தைப் புதைத்துக்கொணடார். 43பின்பு, அவர் தம் பணியாளனை நோக்கி, “நீ போய்க் கடல் பக்கமாய்ப் பார்” என்றார். அவன் போய்ப் பார்த்து, “ஒன்றும் இல்லை” என்றான். எலியா அவனை நோக்கி, “ஏழுமுறை மீண்டும் சென்று பார்” என்றார். 44ஏழாம் முறை அவன் சென்று பார்த்து “இதோ, மனித உள்ளங்கையளவு சிறிய மேகம் ஒன்று கடலிலிருந்து எழும்பி மேலே வருகிறது” என்றான். அப்போது எலியா அவனை நோக்கி, “நீ போய் ஆகாபிடம், மழை தடுத்து நிறுத்தாதபடி தேரைப் பூட்டிப் போய்விடும்படி சொல்” என்றார். 45இதற்கிடையில் வானம் இருண்டது; கார் மேகம் சூழ்ந்தது. காற்று அடித்தது. பெரும் மழை பெய்தது. ஆகாபு தேரில் ஏறி இஸ்ரயேலுக்குச் சென்றான். 46அந்நேரத்தில் ஆண்டவரின் ஆற்றல் எலியாவின்மேல் வந்திறங்க, அவர் தம் இடையை வரிந்து கட்டிக் கொண்டு, இஸ்ரயேல்வரை ஆகாபுக்கு முன்னே ஓடினார்.


18:31 தொநூ 32:28; 35:10. 18:42-45 யாக் 5:18.



அதிகாரம் 19:1-21

சீனாய் மலையில் எலியா


1எலியா செய்த அனைத்தையும் பொய்வாக்கினர் அனைவரையும் அவர் வாளினால் கொன்றதையும் ஆகாபு ஈசபேலுக்குத் தெரிவித்தான். 2எனவே, ஈசபேல் எலியாவிடம் தூது அனுப்பி, “நீ அவர்களது உயிரைப் பறித்தது போல், நானும் நாளை இந்நேரத்திற்குள் உன் உயிரைப் பறிக்காவிடில், தெய்வங்கள் எனக்குத் தண்டனை கொடுக்கட்டும்” என்று சொல்லச் சொன்னாள். 3ஆகவே, அவர் அச்சமுற்று, தம் உயிரைக் காத்துக் கொள்ளுமாறு தப்பி ஓடினார். யூதாவிலிருந்து பெயேர்செபாவை அடைந்ததும் அங்கே தம் பணியாளனை விட்டு விட்டு, 4அவர் பாலை நிலத்தில் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டுமெனப் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக் கொள்ளும்; நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல.”✠ 5பின்னர், அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்துறங்கினார். அப்போது வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு” என்றார். 6அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஒரு அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு பருகியபின் திரும்பவும் படுத்துக் கொண்டார். 7ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு; ஏனெனில், நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்” என்றார். 8அப்பொழுது அவர் எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

9அவர் அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவரது வாக்கு அவருக்கு வந்தது. அவர் “எலியா! நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று வினவினார். 10அதற்கு அவர், “படைகளின் கடவுளாகிய ஆண்டவர் மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகிறேன். ஆனால், இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறிவிட்டனர். உம் பலிபீடங்களைத் தகர்த்து விட்டனர். உம் இறைவாக்கினரை வாளால் கொன்றுவிட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர்” என்றார்.✠ 11அப்போது ஆண்டவர், “வெளியே வா; மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கிறேன்” என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால், ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. 12நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. 13அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, “எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது. 14அதற்கு அவர், “படைகளின் கடவுளாகிய ஆண்டவர்மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகிறேன். ஆனால், இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறி விட்டனர்; உம் பலிபீடங்களைத் தகர்த்து விட்டனர். உம் இறைவாக்கினரை வாளால் கொன்று விட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர்” என்றார். 15அப்போது ஆண்டவர் அவரிடம், “நீ வந்த வழியே திரும்பித் தமஸ்குப் பாலைநிலம் நோக்கிச் செல். அவ்விடத்தை அடைந்தவுடன் அசாவேலைச் சிரியாவுக்கு மன்னனாகத் திருப்பொழிவு செய்.✠

16நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு அரசனாக திருப்பொழிவு செய். ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்.✠ 17அசாவேலின் வாளுக்குத் தப்பினவனை ஏகூ கொல்லட்டும், ஏகூவின் வாளுக்குத் தப்பினவனை எலிசா கொல்லட்டும். 18ஆயினும், பாகாலுக்கு மண்டியிடாமலும் அவனை முத்தி செய்யாதவர்களுமான ஏழாயிரம் பேரை மட்டும் நான் இஸ்ரயேலில் விட்டுவைப்பேன்” என்றார்.✠


எலிசாவின் அழைப்பு


19எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர் மீது தூக்கிப் போட்டார். 20எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, “நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன்பின் உம்மைப் பின்செல்வேன்” என்றார். அதற்கு அவர், “சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்!” என்றார். 21எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.


19:4 யோனா 4:3. 19:10 உரோ 11:3. 19:15 2 அர 8:7-13. 19:16 2 அர 9:1-6. 19:18 உரோ 11:4.



அதிகாரம் 20:1-43

சிரியாவுடன் போர்


1சிரியாவின் மன்னன் பெனதாது தன் படை முழுவதையும் திரட்டிக்கொண்டு, முப்பத்திரண்டு மன்னர்களோடு சேர்ந்து, குதிரைகளோடும் தேர்களோடும் சமாரியாவை முற்றுகையிட்டுத் தாக்கினான். 2அப்போது நகருக்குள் இருந்த இஸ்ரயேலின் அரசனான ஆகாபிடம் தூதனுப்பி, பெனதாது கூறுவது இதுவே; 3“உன் வெள்ளியும் பொன்னும் என்னுடையவை. உன் மனைவியரிலும் புதல்வியரிலும் சிறந்தவர் என் உடைமை ஆவர்” என்று சொல்லச் சொன்னான். 4இஸ்ரயேலின் அரசன், “மன்னரே! என் தலைவரே! உமது வார்த்தையின்படி அடியேனும் என் உடைமைகள் யாவும் உம்முடையவையே” என்று பதிலளித்தான். 5அத்தூதர்கள் மீண்டும் வந்து, “பெனதாது கூறுவது இதுவே: ‘உன் வெள்ளியையும் பொன்னையும் உன் மனைவியரையும் புதல்வியரையும் என்னிடம் அளித்துவிடு’ என்று நான் முன்பே உனக்குச் சொல்லி அனுப்பினேன். 6அவ்வாறே, நாளை இந்நேரம் என் அலுவலரை உன்னிடம் அனுப்புவேன். அவர்கள் உன் அரண்மனையையும் உன் அதிகாரிகளின் மாளிகைகளையும் சோதித்து உன் பார்வையில் விலைமதிப்புள்ள அனைத்தையும் கைப்பற்றி எடுத்துச் செல்வார்கள்” என்று சொன்னார்கள்.

7அப்போது இஸ்ரயேலின் அரசன் நாட்டின் பெரியோர்களை எல்லாம் அழைத்து, “இவன் நமக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்யும் விதத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். பாருங்கள்! இவன் என் மனைவியரையும் மைந்தரையும் என் வெள்ளியையும் பொன்னையும் கேட்டான். அவற்றைக் கொடுக்க நான் மறுக்கவில்லையே!” என்று கூறினான். 8அப்போது பெரியோர் அனைவருமே அவனை நோக்கி, “நீர் அவனுக்குச் செவி கொடுக்கவோ இணங்கவோ வேண்டாம்” என்றனர். 9அவன் பெனதாதின் தூதரை நோக்கி, “நீங்கள் அரசராகிய என் தலைவரிடம் சென்று, ‘நீர் உம் அடியவனாகிய என்னிடம் முதல் முறை சொல்லியனுப்பியவாறு நான் யாவற்றையும் செய்து தருவேன். ஆனால், இம்முறை நீர் கேட்பவற்றை என்னால் தர முடியாது’ என்று தெரிவியுங்கள்” என்றான். அத்தூதரும் திரும்பிச் சென்று இப்பதிலை அவனுக்குத் தெரிவித்தனர். 10பெனதாது மீண்டும், “எனக்கடியில் உள்ள மக்கள் ஒவ்வொருவரும் கைக்கு ஒரு பிடி சமாரியாவின் புழுதியை அள்ளாமல் போனால், என் தெய்வங்கள் எனக்குத் தகுந்த தண்டனை கொடுக்கட்டும்!” என்று சொல்லி அனுப்பினான்.

11அதற்கு இஸ்ரயேலின் அரசன் மறுமொழியாக, “போர்க் கவசம் அணிந்தவுடன் போரில் வென்றவன் போல் பிதற்றக்கூடாது என்று அவனிடம் சொல்” என்று பதிலளித்தான். 12மறுமொழி வந்து சேர்ந்த நேரத்தில் பெனதாது மற்ற மன்னர்களோடு மது அருந்திக்கொண்டிருந்தான். அதைக் கேட்டு அவன் தம் அலுவலரை நோக்கி, “போரிடத் தயாராகுங்கள்” என்றான். அவர்களும் நகருக்கு எதிராகப் போரிடத் தயாராயினர்.

13அப்பொழுது ஓர் இறைவாக்கினர் இஸ்ரயேலின் அரசன் ஆகாபை அணுகி, “ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: இந்தப் பெரும் படை முழுவதையும் பார்த்தாயா? நானே உன் ஆண்டவர் என்று நீ உணரும்படி, இதோ இன்று அதை உன் கையில் ஒப்புவிக்கிறேன்” என்றார். 14ஆகாபு அவரைப் பார்த்து, “யார் மூலம் இது நடைபெறும்?” என்று வினவ அவர் “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: மாநிலத் தலைவர்களின் இளம் வீரர்கள் மூலம்” என்றார். மறுபடியும் அவன் “போரை யார் தொடங்க வேண்டும்?” என்று கேட்க, அவர் “நீ தான்?” என்றார். 15மாநிலத் தலைவர்களின் இளம் வீரர்களைக் கூட்டிச் சேர்க்க, அவர்கள் இருநூற்று முப்பத்திரண்டு பேர் இருந்தனர். பின்பு, இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் கூட்டிச் சேர்க்க அவர்கள் ஏழாயிரம் பேர் இருந்தனர்.

16இவர்கள் நண்பகல் வேளையில் வெளியே புறப்பட்டனர். பெனதாதும் அவனுக்குத் துணையாக வந்த ஏனைய முப்பத்திரண்டு மன்னர்களும் பாசறையில் குடிவெறியில் இருந்தனர். 17மாநிலத் தலைவர்களின் இளம் வீரர்கள் முதலில் வெளியே வந்தனர். பெனதாது அவர்கள் யாரென்று பார்த்து வர ஆள்களை அனுப்ப, “அவர்கள் சமாரியாவிலிருந்து வந்தவர்கள்” என்று அவனுக்கு அவர்கள் அறிவித்தனர். 18அப்போது மன்னன், “அவர்கள் சமாதான நோக்கில் வந்திருந்தாலும், போரிடும் நோக்கில் வந்திருந்தாலும், அவர்களை உயிரோடு பிடியுங்கள்” என்றான்.

19மாநிலத் தலைவர்களின் இளம் வீரர்களும் அவர்கள் பின்வந்த படையினரும் நகரை விட்டு வெளியே வந்ததும், 20ஒவ்வொருவரும் தங்களுக்கு எதிர்ப்பட்டவர்களை வெட்டி வீழ்த்தினர். சிரியர் புறமுதுகு காட்டி ஓட, இஸ்ரயேலர் அவர்களைத் துரத்திச் சென்றனர். சிரியாவின் மன்னன் பெனதாது குதிரைமீது ஏறிக் குதிரை வீரரோடு தப்பியோடினான். 21இஸ்ரயேலரின் அரசன் துரத்திச் சென்று குதிரைகளையும் தேர்களையும் கைப்பற்றி, பலரைக் கொன்று குவித்தான்.

22பின்பு, இறைவாக்கினர் இஸ்ரயேலின் அரசனிடம் வந்து, அவனை நோக்கி, “நீ போய் உன் படைவலிமையை மிகுதியாக்கிக் கொள். அடுத்த இளவேனிற் காலத்தில் சிரியாவின் மன்னன் மீண்டும் உன்னோடு போரிட வருவான். அதற்குள் நீ செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்தித்துப்பார்!” என்றார்.


சிரியாவின் இரண்டாம் படையெடுப்பு


23மேலும், சிரியாவின் மன்னனுடைய அலுவலர் அவனிடம் கூறியது: “இஸ்ரயேலரின் கடவுள் மலைகளின் கடவுள். எனவே, அவர்கள் நம்மை விட வலிமை மிகுந்தவராயிருந்தனர். ஒருவேளை நாம் அவர்களோடு சமவெளியில் போரிட்டோமானால், அவர்களை விட நாமே வலிமை மிகுந்தவராயிருப்போம். 24இதற்கு ஏற்ற வழியாதெனில் மன்னர்களைப் படைத் தலைமையினின்று நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாகப் படைத்தலைவர்களை நீர் நியமிக்க வேண்டும். 25நீர் இழந்து விட்ட படைக்குச் சமமான படையை மறுபடியும் திரட்டிக் கொள்ளும். குதிரைக்கு குதிரை, தேருக்குத் தேர், அதே அளவில் திரட்டிக் கொள்ளும். சமவெளியில் அவர்களோடு போரிட்டால், நாமே அவர்களை விட வலிமை மிக்கவராயிருப்போம் என்பது உறுதி” என்றனர். அவனும் அவர்களது பேச்சை நம்பி அவ்வாறே செய்தான்.

26இளவேனிற் காலம் வந்ததும் பெனதாது சிரியரைத் திரட்டிக் கொண்டு இஸ்ரயேலரோடு போரிட அபேக்குக்கு வந்தான். 27இஸ்ரயேல் மக்கள் ஒன்றுதிரண்டு, வேண்டிய உணவோடு அவர்களுக்கு எதிராய்ப் புறப்பட்டுச் சென்று பளையம் இறங்கினர். அவர்களுக்குமுன் இவர்கள் இரு சிறிய ஆட்டு மந்தைகளைப் போல் காணப்பட்டனர். சிரியரோ அங்குள்ள பகுதியையே நிரப்பி விட்.டனர். 28அப்போது கடவுளின் அடியார் ஒருவர் இஸ்ரயேலின் அரசனை அணுகி, அவனிடம், “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: சிரியர், ‘ஆண்டவர் மலைகளின் கடவுள்தான்; பள்ளத்தாக்குகளின் கடவுள் அல்லர்’. என்று நினைக்கின்றனர். எனவே, இந்தப் பெரும் படை முழுவதையும் உன் கையில் ஒப்புவிப்பேன். நானே ஆண்டவர் என்று நீ அறிந்துகொள்வாய்” என்று கூறினார்.

29ஏழு நாள்களாகப் படைகள் நேருக்கு நேர் பாளையம் இறங்கி இருந்தன. ஏழாம் நாளன்று போர் தொடங்கியது. இஸ்ரயேல் மக்கள் ஒரே நாளில் சிரியரது காலாள் படையில் இலட்சம் பேரை வெட்டி வீழ்த்தினர். 30எஞ்சியவர் அபேக்குக்குள் தப்பி ஓடினர். அங்கே மீதியிருந்த இருபத்தேழாயிரம் பேர் மீது மதில் இடிந்து விழுந்தது. பெனதாது தப்பி ஓடி நகருக்குள் ஓர் உள்ளறையில் ஒளிந்து கொண்டான். 31அப்போது அவன் பணியாளர் வந்து அவனை நோக்கி, “இஸ்ரயேல் குல அரசர்கள் இரக்கத்தின் மன்னர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, நாம் சாக்குத் துணியை இடுப்பிலும், கயிற்றைத் தலையிலும் கட்டிக்கொண்டு இஸ்ரயேலின் அரசனிடம் போவோம். ஒருவேளை அவர் உமக்காகிலும் உயிர்ப் பிச்சை அளிக்கலாம்” என்று சொன்னார்கள். 32அவ்விதமே அவர்கள் சாக்குத் துணியை இடுப்பிலும் கயிற்றைத் தலையிலும் கட்டிக்கொண்டு இஸ்ரயேல் அரசனிடம் வந்தனர். அவர்கள் அரசனிடம், “உம் பணியாளர் பெனதாது, ‘எனக்கு உயிர்ப்பிச்சை தாரும்’ என்று உம்மிடம் மன்றாடுகிறார்” என்று கூறினர். அதற்கு அரசன், “அவர் என் சகோதரர்; அவர் இன்னும் உயிரோடு இருக்கின்றாரா?” என்றார்.

33அந்த ஆள்கள் இச்சொற்களை நல்லதோர் அடையாளமாக எடுத்துக்கொண்டு, அவன் சொற்களிலேயே உடனடியாக “ஆம், உம் சகோதரர் பெனதாது உயிரோடிருக்கின்றார்” என்று பதிலளித்தனர். அப்போது அவன், “நீங்கள் போய் அவரை அழைத்து வாருங்கள்” என்றான். பெனதாது அவனிடம் வந்ததும் ஆகாபு அவனைத் தேரில் ஏற்றிக்கொண்டான். 34அப்போது பெனதாது அவனைப் பார்த்து, “என் தந்தை உம் தந்தையிடமிருந்து கைப்பற்றிய நகர்களை நான் திருப்பிக்கொடுத்து விடுகிறேன். என் தந்தை சமாரியாவில் செய்தது போல், நீரும் தமஸ்குவில் கடைவீதிகளை அமைத்துக்கொள்ளும். இதற்கான உடன்படிக்கை செய்து கொண்டபின், உம்மை நான் அனுப்பி வைப்பேன்” என்றான். அப்படியே ஆகாபு அவனோடு உடன்படிக்கை செய்து கொண்ட பின், அவனை அனுப்பிவைத்தான்.


ஆகாபு கண்டிக்கப்படுதல்


35இறைவாக்கினர் குழுவைச் சார்ந்த ஒருவர் ஆண்டவரின் வாக்கிற்கிணங்க தம் தோழன் ஒருவனை நோக்கி, “என்னை அடி” என்றார். 36அவனோ அவரை அடிக்க மறுத்துவிட்டான். அவர் அவனைப் பார்த்து, “நீ ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனதால், நீ என்னைவிட்டு அகன்றவுடன் ஒரு சிங்கம் உன்னை அடித்துக் கொல்லும்” என்றார். அவ்வாறே அவன் அவரை விட்டுச் செல்கையில் ஒரு சிங்கம் அவனைக் கண்டு அடித்துக் கொன்றது.✠ 37அதன் பிறகு அவர் வேறொருவனை நோக்கி, “என்னை அடி” என்றார். அம்மனிதனோ அவரைக் காயமுற அடித்தான். 38அவ்விறைவாக்கினர் அங்கிருந்து சென்று தம் கண்ணைக் கட்டிக்கொண்டு, மாறுவேடத்தில் அரசனுக்காக வழியில் காத்திருந்தார். 39அவ்வழியே அரசன் வந்தபோது அவர் அரசனை அழைத்து, “உம் அடியான் போர்க்களத்தினுள் நுழைந்தபோது ஒருவன் திரும்பி என்னிடம் ஓர் ஆளைக் கொண்டு வந்து, ‘இம்மனிதனைக் காவல் செய். அவன் தப்பி ஓடினால், அவன் உயிருக்கு ஈடாக உன் உயிரையோ நாற்பது கிலோ நிறையுள்ள வெள்ளியையோ கொடுக்க வேண்டும்” என்றார். 40உம் அடியான் இங்குமங்கும் வேலையாய் இருந்தபோது, அவனைக் காணவில்லை” என்றார். இஸ்ரயேலின் அரசன் அவரைப் பார்த்து “உன் தீர்ப்பை நீயே உனக்கு அளித்துவிட்டாய்” என்றான். 41உடனே அவர் தமது கண்கட்டை அவிழ்த்துக் கொள்ளவே, இஸ்ரயேலின் அரசன் அவர் இறைவாக்கினருள் ஒருவர் என்று அறிந்து கொண்டான். 42அப்போது இறைவாக்கினர் அரசனை நோக்கி, “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: சாவுக்குக் குறிக்கப்பட்டவனை நீ உன் கையிலிருந்து தப்பிப் போகும்படி செய்ததால், அவன் உயிருக்குப் பதிலாக உன் உயிரையும் அவன் மக்களுக்கு ஈடாக உன் மக்களையும் எடுத்துக் கொள்வேன்” என்றார். 43இஸ்ரயேலின் அரசனோ ஆத்திரமும் கோபமும் கொண்டவனாய் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டுச் சமாரியாவுக்குச் சென்றான்.


20:36 1 அர 13:24.



அதிகாரம் 21:1-29

நாபோத்தின் திராட்சைத் தோட்டம்


1இவற்றுக்குப் பின் நிகழ்ந்ததாவது: இஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு இஸ்ரயேலில், சமாரிய அரசன் ஆகாபின் அரண்மனை அருகில், ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. 2ஆகாபு நாபோத்திடம், “உன் திராட்சைத் தோட்டம் என் அரண்மனை அருகிலிருப்பதால், நான் அதைக் காய்கறித் தோட்டம் ஆக்கும்படி என்னிடம் கொடுத்து விடு. அதற்குப் பதிலாய் அதைவிட நல்ல திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருவேன். உனக்கு விருப்பமானால், அதன் விலையை வெள்ளியாகத் தருகிறேன்” என்றான். 3அதற்கு நாபோத்து ஆகாபிடம், “என் மூதாதையரின் உரிமைச் சொத்தை நான் உமக்குக் கொடாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக!” என்றான். 4“என் மூதாதையரின் உரிமைச் சொத்தை உமக்குக் கொடுக்க மாட்டேன்” என்று இஸ்ரயேலனாகிய நாபோத்து தன்னிடம் சொன்ன வார்த்தைகளை முன்னிட்டு, ஆகாபு ஆத்திரத்துடனும் கோபத்துடனும் தன் அரண்மனைக்கு வந்தான்; முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் கட்டிலில் படுத்துக்கிடந்தான்; உணவருந்த மறுத்துவிட்டான். 5அப்போது அவனுடைய மனைவி ஈசபேல் அவனிடம் வந்து “நீர் ஏன் மனம் சோர்ந்திருக்கிறீர்? ஏன் உணவருந்தவில்லை?” என்று அவனைக் கேட்டாள். 6அதற்கு அவன் அவளிடம், “நான் இஸ்ரயேலனாகிய நாபோத்திடம் பேசினேன். ‘உன் திராட்சைத் தோட்டத்தை அதற்கான வெள்ளிக்கு எனக்குக் கொடுத்து விடு. உனக்கு விருப்பமானால், அதற்குப் பதிலாக வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன்’ என்றேன். அதற்கு அவன் ‘என் திராட்சைத் தோட்டத்தை உமக்குத் தர மாட்டேன்’ என்று சொல்லிவிட்டான்” என்றான். 7அப்போது அவன் மனைவி ஈசபேல் அவனை நோக்கி “இஸ்ரயேலின் அரசராகிய நீர் இப்படியா நடந்துகொள்வது? எழுந்திருந்து உணவருந்தி மனமகிழ்வாய் இரும். இஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நானே உம்மிடம் ஒப்படைக்கிறேன்” என்றாள். 8எனவே, அவன் ஆகாபின் பெயரால் மடல்கள் எழுதி, அவற்றில் அவனது முத்திரையைப் பொறித்து, அம்மடல்களை நாபோத்துடன் நகரில் குடியிருந்த பெரியோருக்கும் உயர்குடி மக்களுக்கும் அனுப்பினாள். 9அம்மடல்களில் அவள், “நீங்கள் ஒரு நோன்பு அறிவித்து நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமரச் செய்யுங்கள்.✠ 10அவனுக்கு எதிராய் இழி மனிதர் இருவரை ஏவி விட்டு, ‘நீ கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தாய்’ என்று அவன் மீது குற்றம் சாட்டச்செய்யுங்கள். பின்னர், அவனை வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றுபோடுங்கள்” என்று எழுதியிருந்தாள்.

11நாபோத்துடன் அந்நகரில் குடியிருந்த பெரியோரும் உயர்குடி மக்களும் ஈசபேல் தமக்கு அனுப்பிய மடல்களில் எழுதி இருந்தவாறே செய்தனர். 12அவர்கள் ஒரு நோன்பு அறிவித்து, நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமர்த்தினர். 13அப்பொழுது அந்த இழி மனிதர் இருவரும் வந்து நாபோத்துக்கு எதிரே உட்கார்ந்தனர். அந்த இழி மனிதர் மக்களைப் பார்த்து, “நாபோத்து கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தான்” என்று அவன் மீது குற்றம் சாட்டினர். எனவே, அவர்கள் அவனை நகருக்கு வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றனர். 14பிறகு “அவர்கள் நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான்” என்று ஈசபேலுக்குச் செய்தி அனுப்பினர். 15நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்ததை ஈசபேல் கேட்டவுடன் அவள் ஆகாபை நோக்கி “நீர் எழுந்து சென்று இஸ்ரயேலனாகிய நாபோத்து உமக்கு விற்க மறுத்த அதே திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும்; நாபோத்து உயிரோடில்லை; அவன் இறந்து போனான்” என்றாள். 16நாபோத்து இறந்துபோனதை ஆகாபு கேட்டு, இஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை உடைமையாக்கிக் கொள்ளப் புறப்பட்டுப் போனான்.

17அந்நேரத்தில் திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்தவாக்கு: 18“நீ புறப்பட்டு, சமாரியாவிலிருந்து ஆட்சிசெய்யும் இஸ்ரயேலின் அரசன் ஆகாபைப் போய்ப் பார். அவன் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைத் தன் உடைமையாக்கிக் கொள்ள அங்குப் போயிருக்கிறான். 19நீ அவனிடம் சொல்ல வேண்டியது; ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ கொலை செய்து, கொள்ளையடித்திருக்கிறாய் இல்லையா? எனவே, நீ அவனிடம் சொல்ல வேண்டியது. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கிய அதே இடத்தில் அவை உனது இரத்தத்தையும் நக்கும்.” 20அப்போது ஆகாபு எலியாவை நோக்கி, “என் எதிரியே! என்னைக் கண்டுபிடித்து விட்டாயா?” என்று கேட்டான். அதற்கு அவர் “ஆம், நான் கண்டுபிடித்துவிட்டேன். ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யும் அளவுக்கு உன்னையே விற்றுவிட்டாய். 21இதோ! நான் உனக்குத் தீங்கு வரச் செய்வேன். உனது வழிமரபை ஒழித்து விடுவேன். உரிமை மக்களாகினும், அடிமைகளாயினும், இஸ்ரயேல் ஆண்மக்களை ஆகாபிடமிருந்து வெட்டி எறிவேன். 22நெபாற்றின் மகன் எரொபவாமின் குடும்பத்திற்குச் செய்ததுபோல, உன் குடும்பத்திற்கும் செய்வேன். ஏனெனில், நீ இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கி எனக்குப் பெருஞ்சினம் மூட்டினாய். 23மேலும், ஈசபேலைக் குறித்து ஆண்டவர் சொல்லுவது: இஸ்ரயேலின் மதிலருகே நாய்கள் ஈசபேலைத் தின்னும்.✠ 24ஆகாபைச் சார்ந்தவர்கள் நகரினுள் மடிந்தால் நாய்களுக்கு இரையாவர்; நகர்ப்புறத்தே இறந்தால், வானத்துப் பறவைகளுக்கு இரையாவர்” என்றார்.

25ஆண்டவர் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்யுமளவுக்குத் தன்னையே விற்றவிட்ட ஆகாபைப்போல் கெட்டவன் எவனும் இருந்ததில்லை. ஏனெனில், அவனுடைய மனைவி ஈசபேல் அவனைத் தூண்டிவிட்டாள். 26மேலும், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த எமோரியர் செய்து கொண்ட சிலைகளை எல்லாம் வழிபடும் அளவுக்கு அவன் மிகவும் இழிவாக நடந்து கொண்டான்.

27அச்சொற்களை ஆகாபு கேட்டவுடன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு வெற்றுடல்மீது சாக்கு உடை உடுத்தி, நோன்பு காத்துச் சாக்குத் துணிமீது படுத்தான்; பணிவோடு நடந்துகொண்டான். 28அப்பொழுது திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு; 29“என் திருமுன் ஆகாபு தன்னைத் தாழ்த்திக் கொண்டதைத் கண்டாயன்றோ? அவன் என் திருமுன் தன்னைத் தாழ்த்திக்கொண்டதால் நான் அவன் வாழ்நாளின்போது தீமை வரச் செய்யாமல், அவனுடைய மகனது வாழ்நாளின்போது அவனுடைய குடும்பத்தாரின் மேல் தீமை விழச்செய்வேன்.”


21:9 1 அர 22:38. 21:23 2 அர 9:36.



அதிகாரம் 22:1-53

இறைவாக்கினர் மீக்காயா ஆகாபைக் கண்டித்தல்

(2 குறி 18:2-27)


1மூன்று ஆண்டுகளாகச் சிரியாவுக்கும் இஸ்ரயேலுக்குமிடையே போர் எதுவும் நடக்கவில்லை. 2ஆனால், மூன்றாம் ஆண்டில் யூதாவின் அரசன் யோசபாத்து இஸ்ரயேலின் அரசனான ஆகாபைக் காண வந்தான். 3இஸ்ரயேலின் அரசன் தன் அலுவலரை நோக்கி, “இராமோத்து-கிலயாது நமக்குரியது என்று அறியீர்களோ? ஆயினும், அதைச் சிரியாவின் மன்னனிடமிருந்து கைப்பற்றுவதற்கு ஏதும் நாம் செய்யாதிருக்கிறோமா?” என்று கூறியிருந்தான். 4எனவே. அவன் யோசபாத்திடம், “இராமோத்து-கிலாயாதோடு போரிட என்னுடன் வருகின்றீரா?” என்று கேட்டான். அதற்கு யோசபாத்து இஸ்ரயேலின் அரசனை நோக்கி, “உம்மைப் போலவே நானும் தயார்; உம் மக்களைப் போலவே என் மக்களும்; உம் குதிரைகளைப் போலவே என் குதிரைகளும்” என்றான்.

5யோசபாத்து மீண்டும் இஸ்ரயேலின் அரசனை நோக்கி, “ஆண்டவரின் வாக்கு யாது என்று இன்று நீர் கேட்டறிய வேண்டும்” என்றான். 6அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஏறக்குறைய நானூறு பொய்வாக்கினரைக் கூட்டி வரச்செய்து அவர்களை நோக்கி, “நான் இராமோத்து-கிலயாதின் மீது போரிடப் போகலாமா? கூடாதா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “போகலாம். அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்” என்றனர்.

7பின்பு யோசபாத்து, “ஆண்டவரின் திருவாக்கினருள், ஒருவரேனும் இங்கில்லையா? அவரிடமும் இதுபற்றி நாம் கேட்டறியலாமே?” என்றான். 8அப்போது இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, “இம்லாவின் மகன் மீக்காயா என்னும் ஒருவன் இருக்கிறான். அவன்மூலம் ஆண்டவரைக் கேட்டறிந்து கொள்ளலாம். ஆனால், அவனை நான் வெறுக்கிறேன். ஏனெனில், அவன் நல்லதையன்று, தீங்கானதையே எனக்கு இறைவாக்காய் உரைக்கிறான்” என்றான். அதற்கு யோசபாத்து, “அரசே! நீர் அப்படிச் சொல்ல வேண்டாம்” என்றான். 9அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஒர் அண்ணகனைக் கூப்பிட்டு, “இம்லாவின் மகன் மீக்காயாவை விரைவில் அழைத்து வா” என்றான். 10இஸ்ரயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் சமாரியாவின் வாயில் மண்டபத்தில் அரச உடை பூண்டு தம்தம் அரியணையில் வீற்றிருந்தனர். எல்லாப் பொய்வாக்கினரும் அவர்களுக்கு முன்பாக வாக்குரைத்துக் கொண்டிருந்தனர். 11கெனானாவின் மகன் செதேக்கியா இரும்புக் கொம்புகளைச் செய்து, “‘இவற்றால் நீர் சிரியரைக் குத்தி அவர்களை அழித்துவிடுவீர்,’ என்று ஆண்டவர் கூறுகின்றார்” என்றான். 12அவ்வாறே மற்றெல்லாப் பொய்வாக்கினரும் வாக்குரைத்துக்கொண்டிருந்தனர்; “இராமோத்து-கிலயாதைத் தாக்குவீர்; வெற்றி கொள்வீர். ஏனெனில், அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்” என்றனர்.

13மீக்காயாவை அழைக்கச் சென்ற தூதன் அவரிடம், “இதோ! இறைவாக்கினர் அனைவரும் ஒரே வாய்பட அரசருக்கு உகந்ததாகவே இறைவாக்குரைத்துக் கொண்டிருக்கின்றனர். உம் வாக்கு அவர்களது வாக்கைப் போல் இருக்கட்டும். அரசருக்கு உகந்ததாகவே பேசும்!” என்றான். 14அதற்கு மீக்காயா, “ஆண்டவர் மேல் ஆணை! ஆண்டவர் என்னிடம் சொல்வதையே நான் உரைப்பேன்” என்றார். 15அவர் அரசன் முன் வந்து நிற்க, அவன் அவரை நோக்கி “மீக்காயா! நாங்கள் இராமோத்து-கிலயாதின்மீது போரிடப் போகலாமா? கூடாதா?” என்று கேட்டான். அதற்கு அவர், “போகலாம்! வெற்றிகொள்வீர்! அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்!” என்றார். 16அப்பொழுது அரசன் அவரிடம், “ஆண்டவர் பெயரால் உண்மையைத் தவிர வேறெதையும் என்னிடம் சொல்லலாகாது என்று எத்தனை முறை உன்னை ஆணையிட வைப்பது?” என்றான். 17அதற்கு அவர், “இஸ்ரயேலர் அனைவரும் ஆயன் இல்லா ஆடுகளைப் போல் மலைகளில் சிதறுண்டு கிடக்கக் கண்டேன். அப்பொழுது ஆண்டவர் கூறியது: இவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவனும் அமைதியாகத் தன் சொந்த வீட்டுக்குத் திரும்பிச் செல்லட்டும்” என்றார்.✠ 18அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, “‘இவன் நல்லதையன்று, தீங்கானதையே எனக்கு இறைவாக்காய் உரைப்பான்’ என்று உம்மிடம் நான் கூறவில்லையா?” என்றான். 19மீக்காயா மீண்டும் கூறியது: “ஆண்டவரின் வாக்கைக் கேளும்; ஆண்டவர் தமது அரியணையில் வீற்றிருக்கக் கண்டேன். வானகப் படைத்திரள் முழுவதும் அவரருகில் வலத்திலும் இடத்திலும் நின்றனர்.✠ 20அப்பொழுது ஆண்டவர் ‘இராமோத்து-கிலயாதைத் தாக்கி வீழ்ச்சியுறும்படி ஆகாபைத் தூண்டிவிடக் கூடியவன் யாரேனும் உண்டா?’ என்று கேட்டார். அதற்கு ஒருவன் ஒன்றைச் சொல்ல, வேறொருவன் வேறொன்றைச் சொன்னான். 21இறுதியாக, ஓர் ஆவி ஆண்டவர் திருமுன் வந்து நின்று, ‘நான் அவனைத் தூண்டி விடுகிறேன்.’ என்றது. அதற்கு ஆண்டவர், ‘அது எப்படி?’ என்றார். 22அப்பொழுது அது, ‘நான் போய் அவனுடைய போலி இறைவாக்கினர் அனைவரின் வாயிலும் இருந்துகொண்டு பொய் உரைக்கும் ஆவியாய் இருப்பேன்’ என்றது. அதற்கு அவர், ‘நீ அவனை ஏமாற்றி வெற்றி காண்பாய். போய் அப்படியே செய்’ என்றார். 23ஆதலால், இங்குள்ள உம்முடைய எல்லாப் போலி இறைவாக்கினரும் உம்மிடம் பொய் சொல்லும்படி ஆவியை ஆண்டவர் ஏவியிருக்கிறார். ஆண்டவர் உமக்குத் தீங்கானவற்றையே கூறியிருக்கிறார்” என்றார்.

24அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா, மீக்காயாவின் அருகே வந்து, அவரைக் கன்னத்தில் அறைந்து, “ஆண்டவரின் ஆவி உன்னிடம் பேசும்படி எப்படி என்னை விட்டுவிட்டு வந்தது?” என்று கேட்டான். 25அதற்கு மீக்காயா, “நீ உன் அறைக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் நாளன்று, அதைத் தெரிந்து கொள்வாய்” என்றார். 26அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் கட்டளையிட்டது: “மீக்காயாவைக் கைது செய்து அவனை நகரின் ஆளுநன் ஆமோனிடமும் அரசனின் மகன் யோவாசிடமும் இழுத்துச் செல்லுங்கள். 27நீங்கள், ‘அரசர் கூறுவது இதுவே; போரை முடித்து நலமாய் நான் திரும்பும் வரை இவனைச் சிறையில் அடைத்து வையுங்கள். இவனுக்குச் சிறிதளவு அப்பமும் தண்ணீருமே கொடுத்து வாருங்கள்” என்றும் கூறுங்கள். 28அப்பொழுது மீக்காயா, “நலமாய் நீர் திரும்பி வந்தீரானால், ஆண்டவர் என் மூலம் பேசவில்லை என்பது பொருள். அனைத்து மக்களே! நான் சொல்வதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

ஆகாபின் சாவு

(2 குறி 18:28-34)


29பின்பு, இஸ்ரயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் இராமோத்து-கிலயாதை நோக்கிச் சென்றனர். 30இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, “நான் மாறுவேடம் பூண்டு போர்க்களத்திற்கு வருவேன். ஆனால், நீர் அரச உடைகளை அணிந்துகொள்ளும்” என்று சொன்னான். அவ்வாறே, இஸ்ரயேலின் அரசன் மாறுவேடம் பூண்டு போர்க்களம் புகுந்தான்.

31இப்படியிருக்க, சிரியாவின் மன்னன் தன் முப்பத்திரண்டு தேர்ப்படைத் தலைவர்களை நோக்கி, “நீங்கள் சிறியோர், பெரியோர் யாரோடும் போரிடாமல் இஸ்ரயேலின் அரசன் ஒருவனோடு மட்டும் போரிடுங்கள்” என்று கட்டளையிட்டிருந்தான். 32ஆதலால், தேர்ப்படைத் தலைவர்கள் யோசபாத்தைக் கண்டவுடன், இவன்தான் இஸ்ரயேலின் அரசன் என்று நினைத்து அவனைத் தாக்குவதற்காக அவன்மேல் பாய்ந்தார்கள். அப்பொழுது யோசபாத்து பெரும் கூக்குரலிட்டான். 33அதனால், அவன் இஸ்ரயேலின் அரசன் இல்லை என்று கண்டுகொண்ட தேர்ப்படைத் தலைவர்கள் அவனை மேலும் தொடரவில்லை. 34ஆயினும், ஒருவன் வில்லை நாணேற்றிச் சரியாய்க் குறிவைக்காது அம்பை எய்தான். அது இஸ்ரயேல் அரசனது கவசத்தின் இடைவெளியே பாய்ந்தது. எனவே, அவன் தன் தேரோட்டியை நோக்கி, “தேரைத் திருப்பிப் போர் முனையினின்று வெளியே என்னைக் கொண்டு போ; ஏனெனில், நான் காயமுற்றிருக்கிறேன்” என்றான். 35அன்று முழுவதும் போர் தீவிரமாய் இருந்ததால், தேரிலேயே சிரியருக்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டான். அவனது காயத்திலிருந்து இரத்தம் வழிந்து தேரின் அடித்தளத்தை நனைத்தது. அன்று மாலையே அவன் இறந்தான். 36கதிரவன் மறைந்த நேரத்தில் ‘ஒவ்வொருவரும் அவரவர் தம் நாட்டுக்கும், தம் நகருக்கும் திரும்பட்டும்’ என்ற குரல் படை முழுவதும் எதிரொலித்தது. 37இவ்வாறு,அரசன் இறந்து, சமாரியாவிற்குக் கொண்டு வரப்பட்டான். சமாரியாவில் அவனை அடக்கம் செய்தனர். 38சமாரியாக் குளத்தில் அவனது தேரையும் கவசத்தையும் கழுவினர். ஆண்டவரின் வாக்கின்படியே நாய்கள் அவனது இரத்தத்தை நக்கின. 39ஆகாபின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் அவன் மாளிகை கட்டியதும், பல்வேறு நகர்கள் எழுப்பியதும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா? 40ஆகாபு தன் மூதாதையரோடு துயில் கொண்ட பின், அவன் மகன் அகசியா அரியணை ஏறினான்.


யூதா அரசன் யோசபாத்து

(2 குறி 20:31-21:1)


41இஸ்ரயேலின் அரசன் ஆகாபு ஆட்சி தொடங்கிய நான்காம் ஆண்டில், ஆசாவின் மகன் யோசபாத்து யூதாவின் அரசன் ஆனான். 42யோசபாத்து ஆட்சி தொடங்கிய பொழுது, அவனுக்கு வயது முப்பத்தைந்து. அவன் இருபத்தைந்து ஆண்டுகள் எருசலேமில் இருந்து கொண்டு ஆட்சி செலுத்தினான். சில்கியின் மகளான அசுபா என்பவளே அவனுடைய தாய். 43அவன் தன் தந்தை ஆசாவின் வழிகள் அனைத்திலும் நடந்தான். அவற்றினின்று அவன் பிறழவில்லை. ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்துகொண்டான். ஆயினும், அவன் தொழுகை மேடுகளை உடைத்தெறியவில்லை. மக்கள் அம்மேடைகளில் பலியிட்டுத் தூபம் காட்டி வந்தனர்.

44யோசபாத்து இஸ்ரயேலின் அரசனுடன் நல்லுறவு கொண்டிருந்தான். 45யோசபாத்தின் பிற செயல்களும், அவன் காட்டிய வீரமும், அவன் புரிந்த போர்களும் ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

46அவன் தந்தை ஆசாவின் காலத்தில் எஞ்சியிருந்த விலை ஆடவர்களுள் ஒருவரும் நாட்டில் இராதவாறு யோசபாத்து அவர்களை ஒழித்துக்கட்டினான். 47அப்போது ஏதோமில் மன்னன் இல்லாததால் ஒரு பிரதிநிதியே மன்னனாய் இருந்தான். 48யோசபாத்து தங்கம் கொண்டு வருவதற்காக ஓபீருக்குச் செல்லும் தர்சீசுக் கப்பல்களைக் கட்டினான். ஆனால், அவை அங்குப் போய்ச் சேரவில்லை. ஏனெனில், அவை எசியோன் கெபேரில் உடைந்து போயின. 49அப்போது ஆகாபின் மகன் அகசியா யோசபாத்தை நோக்கி, “என்னுடைய பணியாளர் உம் பணியாளரோடு கப்பலில் செல்லட்டும்” என்று கேட்டுக்கொண்டான். ஆனால், அதற்கு யோசபாத்து இணங்கவில்லை.


இஸ்ரயேல் அரசன் அகசியா


50யோசபாத்து தன் மூதாதையருடன் துயில்கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் யோராம் அவனுக்குப் பின் அரியணை ஏறினான். 51யூதாவின் அரசன் யோசபாத்தின் பதினேழாம் ஆட்சி ஆண்டில் ஆகாபின் மகன் அகசியா இஸ்ரயேலின் அரசன் ஆனான். அவன் சமாரியாவில் இருந்து கொண்டு இஸ்ரயேல் மீது ஈராண்டுகள் ஆட்சி செலுத்தினான். 52அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்து தன் தந்தையின் வழியிலும் தம் தாயின் வழியிலும் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரோபவாமின் வழியிலும் நடந்தான். 53மேலும், அவன் பாகாலையும் வணங்கி வழிபட்டு எல்லாவற்றிலும் தன் தந்தை வழிநின்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டினான்.


22:17 எண் 27:17; மத் 9:36; மாற் 6:34. 22:19 எசா 6:1; யோபு 1:6.