Manage OLD TESTAMENT

  • Home
  • Manage OLD TESTAMENT
முன்னுரை:1

இந்நூல் மக்கபேயர் முதல் நூலின் தொடர்ச்சியன்று; ஒரு வகையில் அதற்கு இணையானது. அந்தியோக்கு எப்பிபானின் தந்தை நான்காம் செலூக்குவின் ஆட்சி தொடங்கி நிக்கானோரை யூதா மக்கபே வெற்றி பெற்றது வரையிலான காலக்கட்டத்தில் (ஏறத்தாழ கி.மு. 180-161) நடந்த நிகழ்ச்சிகள் இங்கு இடம்பெறுகின்றன. இவை ஏற்கெனவே மக்கபேயர் முதல் நூலின் முதல் ஏழு அதிகாரங்களில் காணப்படுகின்றன.

சீரேனைச் சேர்ந்த யாசோன் கிரேக்க மொழியில் ஐந்து தொகுதிகளில் விரிவாக எழுதிய வரலாற்றின் இரத்தினச் சுருக்கம் இந்நூல் (2:19-32). எருசலேம் யூதர்கள் எகிப்துவாழ் யூதர்களுக்கு விடுத்த இரண்டு மடல்கள் இதற்கு முன்னுரையாக (1:1 - 2:18) அமைகின்றன. “படிக்க விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிக்கவும், மனப்பாடம் செய்ய விரும்புவோருக்கு எளிதாக அமையவும், அனைவருக்கும் பயன் தரவும்” (2:25) ஏறத்தாழ கி.மு. 124இல் இது எழுதப்பெற்றதால், வரலாற்றுக் கண்ணோட்டத்தைவிடத் திருவுரைப் பாணியில் அமைந்த இறையியல் கண்ணோட்டமே இதில் முன்னிடம் பெறுகிறது. இறைத் தலையீட்டை விளக்கும்பொருட்டு வெளிப்பாட்டு இலக்கிய நடைக்குரிய காட்சிகள் ஆங்காங்கே (2:21; 3:24-34; 5:2-4; 10:29-30; 15:11-16) புகுத்தப்பட்டுள்ளன.

திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்போர்க்குக் கடவுள் கைம்மாறு அளிப்பார் என்னும் மையக் கருத்தை இந்நூல் விளக்குகிறது. நீதிமான்களின் உயிர்ப்பு (7:9, 11, 14, 23; 14:46), இறந்தோருக்காக வேண்டுதல் (12:39-46), மறைசாட்சி இறப்பின் சிறப்பு (6:18-7:42; 14:37-46), மண்ணக மனிதருக்காக விண்ணகப் புனிதர்களின் மன்றாட்டு (15:12-16) போன்ற பழைய ஏற்பாட்டின் பிற நூல்களில் இடம்பெற்றிராத புதிய கருத்துகள் இதில் காணக்கிடக்கின்றன.


நூலின் பிரிவுகள்


1. எகிப்திய யூதர்களுக்கு விடுத்த மடல்கள் 1:1 - 2:18
2. நூலாசிரியரின் முன்னுரை 2:19-32
3. கோவிலைத் தீட்டுப்படுத்த எலியதோரின் முயற்சி 3:1 - 40 4. அந்தியோக்கு எப்பிபானும் யூதர்களின் துன்பமும் 4:1 - 7:42 5. யூதாவின் வெற்றிகள் 8:1 - 10:8 6. மீண்டும் யூதர்களின் துன்பம் 10:9 - 15:36 7. முடிவுரை 15:37 - 39



அதிகாரம் 1:1-35

1. எகிப்திய யூதர்களுக்கு விடுத்த மடல்கள்

முதல் மடல்

1“எகிப்து நாட்டில் உள்ள தங்கள் யூத உறவின் முறையினருக்கு எருசலேமிலும் யூதேயா நாட்டிலும் உள்ள யூத உறவின்முறையினர் நலனும் அமைதியும் பெருக வாழ்த்தி எழுதுவது: 2கடவுள் உங்களுக்கு நன்மை செய்து, நம்பிக்கைக்குரிய தம் அடியார்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவு கூர்வாராக! 3தம்மை வழிபடவும் தமது திருவுளத்தைப் பரந்த உள்ளத்தோடும் தாராள மனத்தோடும் நிறைவேற்றவும் வேண்டிய இதயத்தை உங்கள் அனைவருக்கும் அளிப்பாராக! 4தம்முடைய திருச்சட்டம், கட்டளைகளைப் பொறுத்தவரை உங்களுக்குத் திறந்த உள்ளத்தையும் அமைதியையும் அருள்வாராக! 5உங்கள் மன்றாட்டுக்குச் செவிசாய்ப்பாராக; உங்களோடு ஒப்புரவுசெய்து, இடுக்கண் வேளையில் உங்களைக் கைவிடாதிருப்பாராக! 6இப்போது நாங்கள் இங்கு உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டு வருகிறோம்.”

7-8“தெமேத்திரி மன்னரது ஆட்சியில், நூற்று அறுபத்தொன்பதாம் ஆண்டில்* யாசோனும் அவனுடைய தோழர்களும் தூய நாட்டுக்கும் அதன் ஆட்சிக்கும் எதிராகத் துரோகம் செய்து, கோவில் வாயிலைத் தீக்கிரையாக்கி மாசற்ற குருதியைச் சிந்திய காலத்துக்குப்பின் எங்களுக்கு ஏற்பட்ட இன்னல் இடையூறுகளின்போது நாங்கள் உங்களுக்கு எழுதினோம்; ஆண்டவரிடம் மன்றாடினோம். எங்கள் மன்றாட்டு கேட்கப்பட்டது. நாங்கள் பலியும் உணவுப் படையலும் ஒப்புக்கொடுத்தோம்; விளக்கேற்றினோம்; அப்பம் படைத்தோம். 9எனவே நீங்கள் கிஸ்லேவ் மாதம் கூடாரத் திருவிழாவைக் கொண்டாடக் கருத்தாயிருங்கள். நூற்று எண்பத்தெட்டாம் ஆண்டு* இது எழுதப்பெற்றது.”


இரண்டாம் மடல்


10“தாலமி மன்னரின் ஆசிரியரும் திருப்பொழிவு பெற்ற குருக்கள் வழிமரபில் தோன்றியவருமான அரிஸ்தோபுலுக்கும் எகிப்தில் உள்ள யூதர்களுக்கும் எருசலேம் மக்களும் யூதேயாவின் குடிகளும் ஆட்சிக் குழுவினரும் யூதாவும் நலம்பெற வாழ்த்தி எழுதுவது; 11மன்னருக்கு எதிராக எம் பக்கம் நின்று, பேரிடர்களிலிருந்து எங்களைக் காப்பாற்றிய கடவுளுக்குப் பெரிதும் நன்றி நவில்கிறோம்; 12ஏனெனில் அவர் திருநகருக்கு எதிராகப் போரிட்டவர்களை விரட்டியடித்தார். 13வெல்லற்கரியதாய்த் தோன்றிய தம் படையோடு அந்தியோக்கு பாரசீகத்தில் நுழைந்தபோது, நானயா என்னும் தேவதையின் அர்ச்சகர்கள் சூழ்ச்சிசெய்து கோவிலிலேயே அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள். 14அந்தியோக்கு அத்தேவதையை மணமுடிக்கும் பாவனையில் கோவிலின் திரளான செல்வத்தைச் சீர்வரிசையாகப் பெறுவதற்காகத் தம் நண்பர்களோடு அங்குச் சென்றார். 15நானயாவின் அர்ச்சர்கள் செல்வத்தை வெளியே எடுத்துவைத்தபொழுது, அந்தியோக்கு தம் நண்பர்கள் சிலரோடு கோவில் முற்றத்தினுள் நுழைந்தார். அவர் நுழைந்ததும் அர்ச்சகர்கள் கோவிலை அடைத்தார்கள். 16மேல்தட்டில் மறைவாக இருந்த கதவைத் திறந்து கற்களை எறிந்து மன்னரைத் தாக்கினார்கள்; அவரையும் அவருடைய ஆள்களையும் துண்டு துண்டாக்கித் தலைகளையும் வெட்டி வெளியே நின்றுகொண்டிருந்தவர்கள்முன் வீசியெறிந்தார்கள். 17இறைப்பற்றில்லாதவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கிய நம் கடவுள் எல்லாவற்றிலும் போற்றப்படுவாராக.”

18“கிஸ்லேவ் மாதம் இருபத்தைந்தாம் நாள் கோவிலின் தூய்மைப் பாட்டு விழாவை நாங்கள் கொண்டாடவிருக்கிறோம்; நெகேமியா கோவிலையும் பலிபீடத்தையும் மீண்டும் கட்டி எழுப்பிப் பலிசெலுத்திய வேளையில் தோன்றிய நெருப்பை நினைவுகூரும் கூடாரத் திருவிழாவை நீங்களும் கொண்டாடுமாறு உங்களுக்கு இதை அறிவிப்பது முறை என்று எண்ணினோம். 19ஏனெனில் நம் மூதாதையர் பாரசீகத்திற்கு நாடு கடத்தப்பட்டபொழுது இறைப்பற்று உடையவர்களாய் அன்று விளங்கிய குருக்கள் பலிபீடத்தினின்று யாரும் அறியாதவாறு நெருப்பை எடுத்து, ஒரு பாழ்கிணற்றில் இருந்த பொந்து ஒன்றில் மறைத்துவைத்தார்கள்; அந்த இடம் எவருக்கும் தெரியாதவாறு பார்த்துக் கொண்டார்கள். 20பல ஆண்டுகள் கடந்தபின் கடவுள் விரும்பியபொழுது, பாரசீக மன்னரின் ஆணையோடு நெகேமியா, நெருப்பை ஒளித்துவைத்திருந்த குருக்களின் வழிமரபினரை அதைக் கொணரும்படி அனுப்பினார். அவர்கள் நெருப்புக்குப் பதிலாக ஒரு கெட்டியான நீர்மத்தையே கண்டதாக எங்களுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அதை எடுத்துவருமாறு அவர் கட்டளையிட்டார். 21விறகின் மேல் பலிப்பொருள்கள் வைக்கப்படவே, அவற்றின்மீது அந்நீர்மத்தைத் தெளிக்கும்படி நெகேமியா குருக்களுக்குக் கட்டளையிட்டார். 22அவ்வாறே செய்யப்பட்டது. முன்னர் முகில்களால் மூடப்பட்டிருந்த கதிரவன் சிறிது நேரத்திற்குப்பின் ஒளிரத் தொடங்கினான். உடனே பெரும் நெருப்பு பற்றியெரிந்தது. அதனால் அனைவரும் வியப்படைந்தனர்! 23பலிப்பொருள்கள் எரிந்து கொண்டிருந்த வேளையில் குருக்களும் மற்ற அனைவரும் வேண்டுதல் செய்தார்கள்; யோனத்தான் வழிநடத்த, நெகேமியாவைப்போல மற்றவர்களும் அதற்குப் பதிலுரைத்தார்கள்.”

24“அவ்வேண்டல் பின்வருமாறு: ‘ஆண்டவரே, கடவுளாகிய ஆண்டவரே, அனைத்தையும் படைத்தவரே, நீர் அச்சத்துக்குரியவர், வல்லவர், நீதியுள்ளவர், இரக்கமுடையவர்; நீர் ஒருவரே அரசர், அருள்கூர்பவர். 25நீர் ஒருவரே வாரி வழங்குபவர், நீதியுள்ளவர், எல்லாம் வல்லவர், என்றும் உள்ளவர். நீரே இஸ்ரயேலை எல்லாத் தீமைகளினின்றும் விடுவிப்பவர். எங்கள் மூதாதையரைத் தெரிந்தெடுத்து உமக்கென்று உரித்தாக்கிக் கொண்டவரும் நீரே. 26உம் மக்களான இஸ்ரயேலர் அனைவரின் பெயராலும் இப்பலியை ஏற்றுக்கொள்ளும்; உமது பங்கைப் பாதுகாத்து உமக்கென்று உரித்தாக்கிக் கொள்ளும். 27சிதறிக்கிடக்கும் எங்கள் மக்களை ஒன்றுசேரும்; பிற இனத்தார் நடுவே அடிமைகளாய் இருப்பவர்களுக்கு விடுதலை வழங்கும்; புறக்கணிக்கப்பட்டவர்களையும் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களையும் கனிவுடன் கண்ணோக்கும். நீரே எங்கள் கடவுள் எனப் பிற இனத்தார் அறிந்து கொள்ளட்டும். 28எங்களை ஒடுக்கிறவர்களையும் இறுமாப்புக் கொண்டு கொடுமைப்படுத்துகிறவர்களையும் தண்டியும். 29மோசே வாக்களித்ததுபோல் உமது தூய இடத்தில் உம் மக்களை உறுதிப்படுத்தும்.”✠

30“பின்பு குருக்கள் புகழ்ப்பா இசைத்தார்கள். 31பலிப் பொருள்கள் முற்றிலும் எரிந்தபின் எஞ்சியிருந்த நீர்மத்தைப் பெரிய கற்களின்மேல் ஊற்றும்படி நெகேமியா பணித்தார். 32அவ்வாறு செய்தபோது தீப்பிழம்பு கொழுந்துவிட்டெரிந்தது; ஆனால் பலி பீடத்திலிருந்து எழுந்து வந்த பேரொளியின்முன் அது மங்கிவிட்டது.”

33“இதுபற்றிய செய்தி எங்கும் பரவியது. நாடு கடத்தப்பட்ட குருக்கள் தீயை மறைத்துவைத்த இடத்தில் நீர்மம் காணப்பட்டதும், அதைக் கொண்டு நெகேமியாவும் அவரோடு இருந்தவர்களும் பலிப்பொருள்களை எரித்துத் தூய்மைப்படுத்தியதும் பாரசீக மன்னருக்கு அறிவிக்கப்பட்டது. 34மன்னர் இதுபற்றிக் கேட்டறிந்தார்; அந்த இடத்தைச் சுற்றி அடைத்து அதைத் தூய இடமாக அமைத்தார். 35அங்கிருந்து கிடைத்த திரளான வருவாயிலிருந்து மன்னர் தாம் விரும்பியவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்குவார். 36நெகேமியாவும் அவரோடு இருந்தவர்களும் அந்த நீர்மத்தை ‘நெப்தார்’ என்று அழைத்தார்கள். அதற்குத் ‘தூய்மைப்பாடு’ என்பது பொருள். ஆனால் ‘நெப்தாய்’ என்றே பலரும் அதை அழைக்கின்றனர்.”


1:7 2 மக் 4:7-22. 1:13-16 2 மக் 9:1-29; 1 மக் 6:1-16. 1:29 இச 30:3-8. 1:7 கி.மு. 143. 1:9 கி.மு. 124.



அதிகாரம் 2:1-32

1“முன்னர் விளக்கியபடி, சிறிதளவு நெருப்பை நாடு கடத்தப்பட்டோர் எடுத்துச்செல்ல இறைவாக்கினர் எரேமியாவே ஆணையிட்டார் என்பது ஆவணங்களிலிருந்து தெரியவருகிறது. 2அவர்களுக்கு இறைவாக்கினர் இவ்வாணையைக் கொடுத்தபின், ஆண்டவருடைய கட்டளைகளை மறவாதிருக்க அவர்களை எச்சரித்தார்; பொன், வெள்ளிச் சிலைகளையும் அவற்றின் அணிகலன்களையும் காணும்பொழுது மனம் குழம்பி சிதைந்துவிடாதபடி இருக்க அறிவுறுத்தினார்; 3திருச்சட்டம் அவர்களின் உள்ளத்தினின்று நீங்கா வண்ணம் இவை போன்ற வேறு பல சொல்லி அவர்களுக்கு அறிவூட்டினார். 4இறை வெளிப்பாட்டால் ஏவப்பெற்று, கூடாரத்தையும் பேழையையும் தம்மோடு கொண்டுவரும்படி இறைவாக்கினர் பணித்தார்; முன்பு மோசே ஏறிச்சென்று கடவுளின் உரிமைச் சொத்தைக் கண்ட மலைக்கு இவரும் சென்றார் — இவையெல்லாம் அதே ஆவணங்களில் காணக்கிடக்கின்றன.✠ 5எரேமியா அங்குச்சென்று ஒரு குகையைக் கண்டார்; கூடாரத்தையும் பேழையையும் தூபபீடத்தையும் கொண்டுசென்று அதில் வைத்து வாயிலை மூடி முத்திரையிட்டார்.”

6“அவரைப் பின்தொடர்ந்தவர்களுள் சிலர் அக்குகைக்குச் செல்லும் வழியை அடையாளம் கண்டு கொள்ள முயன்றனர்; ஆனால் அவர்களால் அதைக் கண்டுகொள்ள முடியவில்லை. 7எரேமியா இதை அறிந்தபோது அவர்களைக் கடிந்து, ‘கடவுள் தம் மக்களுக்கு இரக்கம் காட்டி, மீண்டும் அவர்களை ஒன்றுசேர்க்கும் வரை அந்த இடம் எவருக்கும் தெரியாதிருக்கட்டும். 8அப்போது ஆண்டவர் இதையெல்லாம் வெளிப்படுத்துவார். மோசே காலத்திலும், சிறப்பான முறையில் கோவிலில் அர்ப்பணிக்கப்படுமாறு சாலமோன் வேண்டிக்கொண்ட வேளையிலும் நிகழந்தது போல் ஆண்டவருடைய மாட்சியும் முகிலும் தோன்றும்’ என்று கூறினார்.”✠


9“மேலும், ஞானம் நிறை சாலமோன் கோவில் வேலை நிறைவுற்றபோது அர்ப்பணிப்புப் பலி ஒப்புக்கொடுத்தார்; 10மோசே ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டபோது விண்ணகத்திலிருந்து நெருப்பு இறங்கி வந்து பலிப்பொருள்களை எரித்தது போல, சாலமோனும் வேண்டிக் கொண்டபோது நெருப்பு இறங்கி வந்து எரிபலிகளை எரித்தது என்றும் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.✠ 11(பாவம் போக்கும் பலியை உண்ணாத காரணத்தால் அது எரிக்கப்பட்டது என்று மோசே கூறியிருந்தார்.)✠ 12இவ்வாறு சாலமோன் எட்டு நாள் விழா கொண்டாடினார்.”

13“இந்நிகழ்ச்சிகளெல்லாம் அரசு ஆவணங்களிலும் நெகமியாவுடைய வாழ்க்கைக் குறிப்புகளிலும் எழுதப்பட்டுள்ளன. மேலும் நெகேமியா ஒரு நூல்நிலையம் நிறுவி மன்னர்கள், இறைவாக்கினர்கள்பற்றிய நூல்களையும் தாவீது எழுதியவற்றையும் நேர்ச்சைப் படையல்கள் தொடர்பான மன்னர்களின் மடல்களையும் அதில் சேகரித்து வைத்தார். 14அதுபோன்று யூதாவும் எங்களிடையே ஏற்பட்ட போரினால் சிதறிப்போன நூல்களையெல்லாம் சேகரித்து வைத்தார். அவை இன்றும் எங்களிடம் உள்ளன.✠ 15உங்களுக்குத் தேவைப்படுமாயின், அவற்றை எடுத்துச்செல்ல ஆளனுப்புங்கள்.”

16“நாங்கள் கோவில் தூய்மைப்பாட்டு விழாவைக் கொண்டாட விருப்பதால் நீங்களும் அவ்விழாவைக் கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளவே உங்களுக்கு எழுதுகிறோம்.✠ 17திருச்சட்டம் வழியாகக் கடவுள் உறுதி மொழிந்ததுபோல், அவரே தம் மக்களாகிய நம் அனைவரையும் மீட்டார்; உரிமைச்சொத்து, ஆட்சி, குருத்துவம், கோவில், தூய்மைப்பாடு ஆகியவற்றை நம் எல்லாருக்கும் மீண்டும் அளித்தார். 18அவர் விரைவில் நம்மீது இரக்கம் கொள்வார் என்றும், வானத்தின்கீழ் உள்ள எல்லா இடங்களினின்றும் தமது தூய இடத்தில் நம்மை ஒன்று சேர்ப்பார் என்றும், அவரிடம் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்; ஏனெனில் அவர் பெரும் தீங்குகளினின்று நம்மை விடுவித்துள்ளார்; தம் இடத்தையும் தூய்மைப்படுத்தியுள்ளார்.”✠


2. நூலாசிரியரின் முன்னுரை


19யூதா மக்கபே, அவருடைய சகோதரர்கள் ஆகியோரின் வரலாறு, திருப்பெருங் கோவிலின் தூய்மைப்பாடு, பலிபீட அர்ப்பணிப்பு, 20அந்தியோக்கு எப்பிபானுக்கும் அவனுடைய மகன் யூப்பாத்தோருக்கும் எதிராக நடைபெற்ற போர்கள், 21யூத நெறிக்காகத் துணிவுடன் போராடியவர்களுக்கு விண்ணகத்தினின்று வழங்கப்பட்ட காட்சிகள், யூதர்கள் சிலராய் இருந்தபோதிலும் அவர்கள் நாடு முழுவதையும் கைப்பற்றி அங்கு இருந்த அயல்நாட்டார்⁕ கூட்டத்தைத் துரத்தியடித்து, 22அனைத்துலகப் புகழ் பெற்ற கோவிலைத் திரும்பப் பெற்று, எருசலேம் நகரை விடுவித்து, அழிந்து போகும் நிலையில் இருந்த சட்டங்களை மீண்டும் நிலைநாட்டியது, ஆண்டவரும் அவர்கள்மீது இரக்கம் காட்டிப் பேரருள் புரிந்தது 23ஆகிய அனைத்தையும் சீரேனைச் சேர்ந்த யாசோன் ஐந்து தொகுதிகளில் விளக்கியுள்ளார். இவற்றை ஒரே நூலில் சுருக்கித் தர முயல்வோம். 24இவற்றில் எண்ணற்ற புள்ளிவிவரங்கள் காணப்படுகின்றன. வரலாற்று நிகழ்ச்சிகள் மிகுதியாக இருப்பதால் அந்நிகழ்ச்சித் தொகுப்புகளில் ஆய்வு செய்ய விழைவோர் பெரும் இடர்ப்பாடுகளைச் சந்திக்க நேரிடும். இவற்றை மனத்தில் கொண்டு, 25படிக்க விரும்புவோருக்கு இந்நூல் மகிழ்ச்சி அளிக்கவும், மனப்பாடம் செய்ய விரும்புவோருக்கு எளிதாக அமையவும், அனைவருக்கும் பயன் தரவும் நாங்கள் கருத்தாய் இருந்தோம். 26சுருக்கி எழுதும் இக்கடினமான உழைப்பை மேற்கொண்ட எங்களுக்கு இது வியர்வை சிந்தி உறக்கம் இழக்கச் செய்யும் வேலையே அன்றி எளிதானது அல்ல. 27விருந்தினர்களை நிறைவு செய்யும்படி விருந்து ஏற்பாடு செய்வதைப்போன்றே இதுவும் கடினமானது. ஆயினும் பலரின் நன்றியுணர்வைப் பெறுவதற்காக நாங்கள் இக்கடினமான உழைப்பை மகிழ்வுடன் மேற்கொள்வோம்.✠ 28சரியான விவரங்களைச் சேகரிக்கும் பொறுப்பை வரலாற்று ஆசிரியருக்கு விட்டுவிட்டு, அவற்றின் சுருக்கத்தைத் தருவதில் மட்டும் எங்கள் மனத்தைச் செலுத்துவோம். 29புது வீடு கட்டும் கட்டடக் கலைஞர் முழு அமைப்பிலும் கருத்தாய் இருக்க வேண்டும். ஆனால் அதற்கு வண்ணம் பூசி அழகுபடுத்துபவர் அதன் அழகுக்குத் தேவையானதில் மட்டும் கவனம் செலுத்துவார். இதைப் போன்றதே எங்கள் பணியும் என்பது என் கருத்து. 30தாம் எழுதும் பொருளைத் தம்வயமாக்கி, அதன் நிகழ்ச்சிகளை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆய்வு செய்து விவரங்களின் மீது ஆழ்ந்த கவனம் செலுத்துவது வரலாற்று ஆசிரியரின் கடமை. 31ஆனால் வரலாற்றைச் சுருக்கி எழுதுபவருக்கு, நிகழ்ச்சிகளைக் குறுக்கவும் விரிவான விளக்கங்களை விட்டுவிடவும் உரிமை உண்டு. 32ஆகவே மேலும் விரித்துரைக்காமல் வரலாற்றை எழுதத் தொடங்குகிறோம். முன்னுரையை நீளமாக்கி வரலாற்றையே சுருக்குவது அறிவின்மையாகும்.


2:2-3 பாரூ 6:4-5. 2:4 இச 32:49; 34:1. 2:8 விப 24:16; 40:34; 1 அர 8:10-11. 2:10 லேவி 9:23-24; 2 குறி 7:1. 2:11 லேவி 10:16-20. 2:14 1 மக் 1:57. 2:16 1 மக் 4:59. 2:18 இச 30:3-4; எசே 39:27-28. 2:27 சீஞா 32:1-2.


2:21 ‘காட்டுமிராண்டிகள்’ என்பது மூலப்பாடம். கிரேக்கர் அல்லாதவரை இவ்வாறு அழைப்பது கிரேக்கர்களின் வழக்கம். இங்குக் கிரேக்கர்களையே குறிக்க இச்சொல் பாயன்படுகிறது.



அதிகாரம் 3:1-40

3. கோவிலைத் தீட்டுப்படுத்த எலியதோரின் முயற்சி


எலியதோரின் எருசலேம் வருகை

1தலைமைக் குருவான ஓனியாவின் இறைப்பற்றையும் தீமைமீது அவர் கொண்டிருந்த வெறுப்பையும் முன்னிட்டுத் திருநகரில் முழு அமைதி நிலவியது; சட்டங்கள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டன. 2மன்னர்களே அந்த இடத்தை மதித்தார்கள்; சிறப்பான நன்கொடைகள் அனுப்பிக்கோவிலை மாட்சிப்படுத்தினார்கள். 3ஆசியாவின் மன்னரான செலூக்கு கூட, பலி ஒப்புக்கொடுக்கும் திருப்பணிக்குத் தேவையான எல்லாச் செலவுகளையும் தம் சொந்த வருமானத்தினின்று கொடுத்துவந்தார்.

4ஆனால் பென்யமின் குலத்தைச் சேர்ந்தவனும் கோவில் நிர்வாகியாக அமர்த்தப் பெற்றிருந்தவனுமாகிய சீமோன், நகரின் சந்தையை நடத்தும் முறைபற்றித் தலைமைக் குருவோடு மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்தான். 5அவன் ஓனியாவை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாததால், தர்சு என்பவரின் மகனும் அந்நாளில் கூலேசீரியா, பெனிசியா ஆகிய நாடுகளின் ஆளுநனுமான அப்பொல்லோனிடம் சென்றான். 6எருசலேம் கோவிலில் உள்ள கருவூலம் இதுவரை கேள்விப்பட்டிராத செல்வத்தால் நிறைந்துள்ளது; அதில் கணக்கிட முடியாத அளவுக்குப் பணம் இருக்கிறது; அது பலிகளின் கணக்கில் சேராதது; அதை மன்னனின் கட்டுப்பாட்டுக்குள் கொணர முடியும் என்றெல்லாம் அவனிடம் கூறினான்.

7மன்னனை அப்பொல்லோன் சந்தித்தபோது பணத்தைப்பற்றித் தான் கேள்விப்பட்டதை அவனிடம் எடுத்துரைத்தான். மன்னனும் தன் கண்காணிப்பாளான எலியதோரைத் தேர்ந்தெடுத்து, மேலே குறிப்பிட்ட பணத்தை எடுத்துவரும்படி ஆணை பிறப்பித்து அனுப்பினான். 8உடனே எலியதோர் புறப்பட்டுக் கூலேசீரியா, பெனிசியா ஆகிய நாடுகளின் நகரங்களைப் பார்வையிடும் பாவனையில் மன்னனின் திட்டத்தை நிறைவேற்றப் பயணமானான். 9அவன் எருசலேமுக்கு வந்தபோது அந்நகரின் தலைமைக் குரு அவனைக் கனிவுடன் வரவேற்றார். அவன் அங்கு வந்ததன் நோக்கத்தை விளக்கினான்; தனக்குக் கிடைத்த செய்திபற்றிக் குருவிடம் எடுத்துரைத்து அதெல்லாம் உண்மைதானா என்று வினவினான். 10கைம்பெண்களுக்கும் ஆதரவற்றோருக்கும் உரிய சிறு நிதி கோவிலில் இருப்பதாகத் தலைமைக் குரு அவனுக்கு விளக்கினார்; 11மற்றுமொரு தொகை மிக உயர்நிலையில் இருந்த தோபியாவின் மகனான இர்க்கானுடையது என்றும், மொத்தம் பதினாறு டன் வெள்ளியும் எட்டு டன் பொன்னும்⁕ மட்டுமே உள்ளன என்றும் சொன்னார். ஆனால் நெறிகெட்ட சீமோன் உண்மைக்குப் புறம்பானவற்றைக் கூறியிருந்தான்.✠✠ 12மேலும், அவ்விடத்தின் தூய்மையிலும் அனைத்துலகப் புகழ்ப்பெற்ற அக்கோவிலின் புனிதத்திலும் மங்கா மாட்சியிலும் நம்பிக்கை கொண்டுள்ள மக்களுக்குத் தீங்கிழைப்பது முற்றிலும் முடியாத செயலாகும் என்றும் தலைமைக் குரு கூறினார்.


கோவிலில் நுழைய எலியதோரின் முயற்சி


13எலியதோர் தான் மன்னிடமிருந்து பெற்றிருந்த ஆணையின் பொருட்டு, அந்தப் பணம் மன்னனின் கருவூலத்திற்காக எப்படியாவது பறிமுதல் செய்யப்படவேண்டும் என்று கூறினான்; 14ஆகவே தான் குறித்த ஒரு நாளில் நிதி நிலைமையை ஆய்ந்தறியும்பொருட்டுக் கோவிலுக்குள் சென்றான். நகர் முழுவதும் பெரும் துயரில் ஆழ்ந்தது. 15குருக்கள் தங்கள் குருத்துவ உடைகளோடு பலிபீடத்தின்முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்கள்; நிதிபற்றி விதிமுறைகளைக் கொடுத்திருந்த விண்ணக இறைவனைத் துணைக்கு அழைத்தார்கள்; நிதியைச் சேமித்துவைத்திருந்தவர்கள் பொருட்டு அதனைக் காப்பாற்றும்படி மன்றாடினார்கள். 16தலைமைக் குருவின் தோற்றத்தைப் பார்த்தபோது மனம் புண்பட்டது; அவருடைய முகத் தோற்றமும் நிறமாற்றமும் அவரது மனத்துயரை வெளிப்படுத்தின. 17பேரச்சமும் நடுக்கமும் அவரை ஆட்கொள்ள, அவரின் உள்ளத்தில் உறைந்திருந்த ஆழ்துயர் காண்போருக்குத் தெளிவாயிற்று. 18தூயஇடம் தீட்டுப்படவிருந்ததை அறிந்த மக்கள் பொதுவில் மன்றாடத் தங்கள் வீடுகளிலிருந்து கூட்டமாக ஓடிவந்தார்கள். 19பெண்கள் தங்களது மார்புக்குக் கீழே சாக்கு உடுத்தியவர்களாய் தெருக்களில் திரளாகக் கூடினார்கள்; வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாத கன்னிப்பெண்களுள் சிலர் நகர வாயில்களுக்கும் சிலர் நகர மதில்களுக்கும் ஓடினார்கள்; மற்றும் சிலர் பலகணி வழியாக எட்டிப் பார்த்தார்கள். 20அவர்கள் அனைவரும் விண்ணகத்தை நோக்கித் தங்கள் கைகளை உயர்த்தியவாறு மன்றாடினார்கள். 21மக்கள் அனைவரும் குப்புற விழுந்து கிடந்ததையும் பெரும் துன்பத்தில் இருந்த தலைமைக் குருவின் ஏக்கத்தையும் பார்க்க இரங்கத்தக்கதாய் இருந்தது. 22கோவலில் ஒப்புவிக்கப்பட்டவற்றை ஒப்புவித்தவர்கள் பொருட்டு நன்கு பாதுகாக்கும்படி எல்லாம் வல்ல ஆண்டவரை அவர்கள் மன்றாடினார்கள். 23ஆனால் எலியதோர் தனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையைச் செயல்படுத்துவதில் முனைந்து நின்றான்.


எலியதோர் பெற்ற தண்டனை


24எலியதோர் தன் காவலர்களோடு கருவூலத்தை அடைந்தபோது, அதிகாரம் தாங்கும் ஆவிகளுக்கும் பேரரசர் மாபெரும் காட்சி ஒன்று தோன்றச்செய்ய, அவனைப் பின்பற்றத் துணிந்த அத்தனை பேரும் ஆண்டவருடைய ஆற்றலைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அச்சத்தால் மயங்கி விழுந்தனர்; 25ஏனெனில் அணிமணி பூட்டிய ஒரு குதிரையையும் அதன்மேல் அச்சுறுத்தும் தோற்றமுடைய ஒரு குதிரைவீரரையும் கண்டார்கள். அக்குதிரை எலியதோரை நோக்கிச் சீற்றத்துடன் பாய்ந்து தன் முன்னங்குளம்புகளால் அவனைத் தாக்கியது. குதிரைமேல் இருந்தவர் பொன் படைக்கலங்களை அணிந்தவராகத் தோன்றினார். 26மேலும் இரண்டு இளைஞர்கள் அவன்முன் தோன்றினார்கள். அவர்கள் மிக்க வலிமை வாய்ந்தவர்கள், அழகுமிக்கவர்கள், பகட்டான உடை அணிந்தவர்கள். அவர்கள் அவனுக்கு இரு பக்கத்திலும் நின்றுகொண்டு தொடர்ந்து சாட்டையால் அவனை அடித்துக் காயப்படுத்தினார்கள். 27காரிருள் சூழ, அவன் தரையில் விழுந்தபொழுது அவனுடைய ஆள்கள் அவனைத் தூக்கி, ஒரு தூக்குப்படுக்கையில் கிடத்தினார்கள்: 28சிறிது நேரத்திற்குமுன் தன் படையோடும் காவலர்களோடும் கருவூலத்திற்குள் நுழைந்தவன் தனக்குத்தானே உதவி செய்து கொள்ள முடியாத நிலையில் இருந்தபோது அவனைத் தூக்கிச் சென்றார்கள். இதனால் அவர்கள் கடவுளின் மாபெரும் ஆற்றலைத் தெரிந்து கொண்டார்கள். 29கடவுளின் இச்செயலால் அவன் பேச்சற்று, மீண்டும் நலம் பெறும் நம்பிக்கையற்றவனாய்க் கிடந்தான். 30தம் சொந்த இடத்தை வியத்தகு முறையில் மாட்சிமைப்படுத்திய ஆண்டவரை யூதர்கள் போற்றினார்கள். மேலும் சிறிது நேரத்திற்குமுன் அச்சத்தாலும் குழப்பத்தாலும் நிறைந்திருந்த கோவிலில் எல்லாம் வல்லவரான ஆண்டவர் தோன்றவே, அது மகிழ்ச்சியாலும் உவகையாலும் நிறைந்து வழிந்தது.

31உடனே, இறக்கும் தறுவாயில் இருந்த எலியதோருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி உன்னத இறைவனிடம் மன்றாடுமாறு அவனுடைய நண்பர்கள் சிலர் ஓனியாவைக் கெஞ்சினர். 32எலியதோருக்கு எதிராக யூதர்கள் யாதேனும் சூழ்ச்சி செய்திருப்பார்கள் என மன்னன் எண்ணலாம் என்று அஞ்சி, தலைமைக் குரு அவனுடைய உடல்நலனுக்காகப் பலி செலுத்தினார். 33தலைமைக் குரு பாவக்கழுவாய்ப் பலி ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்தபோது அவ்விளைஞர்கள் அதே ஆடைகளை அணிந்தவர்களாய் எலியதோருக்கு மீண்டும் தோன்றினார்கள்; நின்றவாறு அவர்கள், “தலைமைக் குரு ஓனியாவிடம் மிகுந்த நன்றியுடையவனாய் இரு; ஏனெனில் அவரை முன்னிட்டே ஆண்டவர் உனக்கு உயிர்ப்பிச்சை அளித்துள்ளார். 34விண்ணக இறைவனால் தண்டிக்கப்பட்ட நீ கடவுளின் மாபெரும் ஆற்றலை எல்லா மனிதருக்கும் எடுத்துக் கூறு” என்றார்கள். இதைச் சொன்னதும் அவர்கள் மறைந்துவிட்டார்கள்.


எலியதோரின் மனமாற்றம்


35அப்போது எலியதோர் ஆண்டவருக்குப் பலி செலுத்தியதுமன்றித் தன் உயிரைக் காத்தவருக்குப் பெரும் நேர்ச்சைகள் செய்தான். பின் ஓனியாவிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தன் படைகளோடு மன்னனிடம் திரும்பிச் சென்றான்; 36மாபெரும் கடவுளின் செயல்களைத் தன் கண்ணால் கண்டு மனிதர் அனைவர்முன்னும் அவற்றுக்குச் சான்று பகர்ந்தான். 37எருசலேமுக்கு மீண்டும் அனுப்புவதற்கு எத்தகைய மனிதன் தகுதியானவன் என்று மன்னன் எலியதோரை வினவினான். அதற்கு அவன், 38“உமக்குப் பகைவன் அல்லது உமது அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்பவன் எவனாயினும் இருந்தால் அவனை அங்கு அனுப்பும்; அவன் உயிர் பிழைக்க நேரிட்டாலும் நன்றாகக் கசையடிபட்டவனாகவே உம்மிடம் திரும்பி வருவான். ஏனெனில், அந்த இடத்தில் கடவுளின் ஆற்றல் உண்மையாகவே விளங்குகிறது. 39விண்ணகத்தில் உறைகின்றவரே அந்த இடத்தைக் காத்துவருவதுமன்றி, அதற்கு உதவியும் செய்கிறார்; அதற்குத் தீங்கு இழைக்க வருபவர்களைத் தாக்கி அழிக்கிறார்” என்றான். 40இதுதான் எலியதோரின் கதை; இவ்வாறே கருவூலம் காப்பாற்றப்பட்டது.


3:11 பதினாறு டன் - ‘நானூறு தாலந்து’; எட்டு டன் - ‘இருநூறு தாலந்து’ என்பது கிரேக்க பாடம். 3:11 ‘நானூறு தாலந்து’ என்பது கிரேக்க பாடம். 3:11 ‘இருநூறு தாலந்து’ என்பது கிரேக்க பாடம்.



அதிகாரம் 4:1-50

4. அந்தியோக்கு எப்பிபானும் யூதரின் துன்பமும்

சீமோன் செய்த தீமைகள்

1தன் சொந்த நாட்டுக்கு எதிராக நிதியைப்பற்றி அறிவித்த சீமோன், ஓனியாவைப்பற்றிப் பழிதூற்றினான்; ஓனியாவே எலியதோரைத் தூண்டிவிட்டவர் என்றும், இந்தக் கேட்டுக்கெல்லாம் அவரே காரணம் என்றும் கூறினான். 2நகரின் புரவலரும் தம் நாட்டு மக்களின் காவலரும் திருச்சட்டத்தின்மீது பற்றார்வமிக்கவருமாய் விளங்கிய ஓனியாவை அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்பவர் என்று கூறத்துணிந்தான். 3சீமோனின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களுள் ஒருவன் கொலைகள் செய்யும் அளவிற்குச் சீமோன் ஓனியாவிடம் கொண்டிருந்த பகைமை முற்றியது. 4இத்தகைய எதிர்ப்பு பேரிடர் விளைவிப்பது என்றும், மெனஸ்தேயின் மகனும் கூலேசிரியா, பெனிசியா ஆகியவற்றின் ஆளுநனுமான அப்பொல்லோன், சீமோனின் தீச்செயல்களை முடுக்கிவிடுகிறான் என்றும் ஓனியா உணர்ந்தார். 5ஆகவே அவர் மன்னனிடம் சென்றார்; தம் நாட்டு மக்கள்மீது குற்றம் சாட்ட அல்ல, அவர்கள் அனைவருடைய தனிப்பட்ட, பொது நலனையும் கருதியே சென்றார். 6ஏனெனில் மன்னன் தலையிட்டாலொழிய பொது அலுவல்களில் அமைதியான தீர்வு காண முடியாது என்றும், சீமோன் தன்னுடைய மடமையைக் கைவிடமாட்டான் என்றும் கண்டார்.


யாசோன் கிரேக்கமயமாக்கலைப் புகுத்துதல்


7செலூக்கு இறந்தபின் எப்பிபான் என்று அழைக்கப்பெற்ற அந்தியோக்கு அரியணை ஏறினான். அப்போது ஓனியாவின் சகோதரனான யாசோன் கையூட்டுக் கொடுத்துத் தலைமைக் குரு பீடத்தைக் கைப்பற்றினான். 8ஏனெனில் மன்னனை அணுகி, பதினாலாயிரத்து நானூறு கிலோ* வெள்ளியம், வேறொரு வருமானத்திலிருந்து மூவாயிரத்து இருநூற்று கிலோ வெள்ளியும்** கொடுப்பதாக உறுதியளித்திருந்தான்.✠✠✠ 9மேலும் உடற்பயிற்சிக்கூடம் ஒன்றும் அதற்காக இளைஞர் குழு ஒன்றும் அமைக்கவும், எருசலேமின் குடிகளை அந்தியோக்கி நகரின் குடிகளாகப் பதிவுசெய்யவும் அவனுக்கு அதிகாரம் தர இசைந்தால் ஆறாயிரம் கிலோ⁕ வெள்ளி கூடுதலாகக் கொடுப்பதாகவும் உறுதி கூறியிருந்தான். 10மன்னன் அதற்கு இசையவே, யாசோன் தலைமைக் குருபீடத்தைக் கைப்பற்றினான்; உடனே தன் நாட்டார் கிரேக்க வாழ்க்கைமுறையை ஏற்றுக்கொள்ளுமாறு செய்தான்.✠ 11உரோமையர்களோடு நட்பும் ஒப்பந்தமும் செய்துகொள்ளப் பின்னர் அனுப்பப்பெற்ற யூப்பொலேமின் தந்தையாகிய யோவான் வழியாக யூதர்களுக்கு கிடைத்திருந்த அரச சலுகைகளை யாசோன் புறக்கணித்தான்; சட்டப்படி அமைந்த வாழ்க்கை முறைகளை அறிந்து அவற்றுக்கு முரணான புதிய பழக்கவழக்கங்களைப் புகுத்தினான்.✠ 12மலைக்கோட்டைக்கு அடியிலேயே ஓர் உடற்பயிற்சிக் கூடத்தை விரைவிலே நிறுவினான்; மிகச் சிறந்த இளைஞர்கள் உடற்பயிற்சி விளையாட்டுகளில் கலந்துகொள்ளவும் தூண்டினான்.✠ 13இறைப்பற்றில்லாதவனும் உண்மையான குரு அல்லாதவனுமான யாசோனின் அளவு மீறிய தீச்செயலால், கிரேக்க வாழ்க்கைமுறை மீதும் வெளிநாட்டுப் பழக்கவழக்கங்கள்மீதும் மக்கள் கொண்டிருந்த போரார்வம் உச்சக்கட்டத்தை அடைந்தது. 14அதனால் குருக்கள் பலிபீடத்தில் பணி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை; மாறாக, கோவிலை வெறுத்தார்கள்; பலிகளைப் புறக்கணித்தார்கள்; அடையாள ஒலி கேட்டவுடன் சட்டத்துக்கு முரணான பயிற்சிகளில் பங்குகொள்ள விளையாட்டரங்குக்கு ஓடினார்கள்; 15தங்கள் மூதாதையர் பெருமைமிக்கவை என்று கருதியவற்றை வெறுத்து ஒதுக்கினார்கள்; கிரேக்கர்கள் உயர்வாகக் கருதியவற்றைப் பெரிதும் மதித்தார்கள். 16இதன் பொருட்டு பேரிடர்கள் அவர்களுக்கு நேர்ந்தன. யூதர்கள் யாருடைய வாழ்க்கைமுறையை வியந்து பாராட்டி முழுமையாகப் பின்பற்ற விரும்பினார்களோ, அவர்களே யூதர்களுக்குப் பகைவர்களாக மாறித் துன்புறுத்தினார்கள். 17ஏனெனில் கடவுளின் கட்டளைகளை இழிவபடுத்துவது சிறிய செயல் அன்று, இதைப் பின்வரும் நிகழ்ச்சி தெளிவுபடுத்தும்.

18ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் விளையாட்டு விழா தீர் நகரில் நடைபெற்றபோது மன்னனும் அங்கு இருந்தான். 19அவ்வேளையில் கொடியவனான யாசோன் எருசலேமில் இருந்த அந்தியோக்கி நகரக் குடிகளைப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்து, எர்க்குலசு தெய்வத்துக்குப் பலிசெலுத்த தொள்ளாயிரம் கிராம்⁕ வெள்ளியைக் கொடுத்தனுப்பினான். அப்பணத்தைக் கொண்டுசென்றவர்களோ அதனைப் பலிக்குப் பயன்படுத்துவது முறைகேடானது என்றும் வேறு நோக்கத்திற்காகச் செலவிடுவதே சிறந்தது என்றும் எண்ணினார்கள். 20எர்க்குலசுக்குப் பலிசெலுத்துவது இப்பணத்தை அனுப்பியவரின் நோக்கம்; எனினும் அதைக் கொண்டு சென்றவர்கள் போர்க்கப்பல் கட்டுவதற்குச் செலவிட முடிவு செய்தார்கள்.

21பிலமேத்தோர் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு மெனஸ்தேயின் மகனான அப்பொல்லோன் எகிப்துக்கு அனுப்பப்பட்டபோது, பிலமேத்தோர் தன் அரசுக்கு எதிரி என்று அந்தியோக்கு அறிந்து, தன் பாதுகாப்புக்கான வழிவகைகளைத் தேடினான். ஆகவே யாப்பாவுக்குச் சென்று அங்கிருந்து எருசலேமுக்குப் புறப்பட்டான். 22யாசோனும் அந்நகர மக்களும் அவனைச் சிறப்பாக வரவேற்றார்கள்; தீவட்டிகளோடும் முழக்கங்களோடும் உள்ளே அழைத்துச் சென்றார்கள். பின்பு அவன் பெனிசியாவுக்குத் தன் படையுடன் சென்றான்.


மெனலா தலைமைக் குருவாதல்


23மூன்று ஆண்டுக்குப்பின் மன்னனுக்குப் பணம் கொண்டுசெல்லவும், உடனடியாகக் கவனிக்கவேண்டியவை பற்றி மன்னனின் முடிவுகளை அறிந்து வரவும் சீமோனின் சகோதரனான மெனலாவை யாசோன் அனுப்பி வைத்தான். 24மன்னன் முன்னிலையில் மெனலா வந்தபொழுது, தன்னை அதிகாரமுள்ளவனாகக் காட்டிக்கொண்டு அவனை அளவு மீறிப் புகழ்ந்தான்; யாசோன் கொடுத்ததைவிட பன்னிரண்டு டன் வெள்ளி மிகுதியாகக் கொடுத்து, தலைமைக் குருபீடத்தைத் தனக்கென்று கைப்பற்றிக் கொண்டான். 25மன்னனின் ஆணையைப் பெற்றுக்கொண்டு திரும்பிய அவனிடம் தலைமைக் குருவுக்குரிய தகுதியே இல்லை. கொடுங்கோலனுக்குரிய சினமும் காட்டு விலங்குக்குரிய சீற்றமும் மட்டுமே இருந்தன. 26இவ்வாறு, தன் சகோதரனை அகற்றிய யாசோனும் வேறொருவனால் அகற்றப்பட்டு அம்மோன் நாட்டுக்கு அகதியாகத் துரத்தப்பட்டான். 27மெனலா தொடர்ந்து தலைமைக் குருவாக இருந்தபோதிலும், தான் மன்னனுக்குக் கொடுப்பதாக உறுதியளித்திருந்த பணத்தைச் செலுத்தவில்லை. 28மலைக்கோட்டைக்குத் தளபதியான சோசித்திராத்து வரி தண்டும்பொறுப்பும் உடையவனானதால், மெனலாவிடமிருந்து பணத்தைக் கேட்டுக் கொண்டேயிருந்தான். இது தொடர்பாக மன்னன் அவ்விருவரையும் தன்னிடம் அழைத்தான். 29தலைமைக் குரு மெனலா தன் சகோதரனான லிசிமாக்கைத் தன் பதிலாளாய் விட்டுச் சென்றான்; சைப்பிரசு நாட்டுப் படைத்தலைவனான கிராத்துவைத் தன் பதிலாளாய் சோசித்திராத்து ஏற்படுத்தினான்.


ஓனியா கொலை செய்யப்படுதல்


30நிலைமை இவ்வாறு இருக்க, மன்னன் தன் காமக்கிழத்தியான அந்தியோக்கிக்குத் தர்சு, மல்லோத்தா ஆகிய நகரங்களை அன்பளிப்பதாகக் கொடுத்திருந்ததால் அந்நகரங்களின் மக்கள் கிளர்ச்சி செய்தார்கள். 31ஆகவே மன்னர் உயர் பதவி வகித்துவந்தோருள் ஒருவனான அந்திரோனிக்கைத் தன் பதிலாளாய் விட்டுவிட்டு, குழப்பத்தைத் தீர்க்க அந்நகரங்களுக்கு விரைந்து சென்றான். 32ஆனால் மெனலா இதுவே தக்க வாய்ப்பு என்று எண்ணியவனாய், கோவிலுக்குச் சொந்தமான பொற்கலன்கள் சிலவற்றைத் திருடி அந்திரோனிக்குக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான்; மற்றக் கலன்களைத் தீர் நகரிலும் சுற்றியிருந்த நகரங்களிலும் ஏற்கெனவே விற்றுவிட்டான். 33இவை முற்றிலும் உண்மை என்று ஓனியா அறியவந்த பொழுது அந்தியோக்கி நகருக்கு அருகில் தாப்னேயில் இருந்த தூய இடத்தில் அடைக்கலம் புகுந்தபின் மெனலாவைப் பொதுவில் கடிந்து கொண்டார். 34எனவே அந்திரோனிக்கை மெனலா தனியே சந்தித்து, ஓனியாவைக் கொல்லும்படி வேண்டினான். அந்திரோனிக்கு ஓனியாவிடம் சென்று நண்பனைப் போல நடித்து நயமாகப் பேசி ஆணையிட்டான். இதுபற்றி ஓனியாவுக்கு ஐயம் ஏற்றபட்டபோதிலும் அந்திரோனிக்கு அவரைத் தூய இடத்திலிருந்து வெளியே வர இணங்கவைத்து, நீதிக்கு அஞ்சாமல் உடனே அவரைக் கொலை செய்தான்.


அந்திரோனிக்கு பெற்ற தண்டனை


35இதன்பொருட்டு யூதர்கள் மட்டுமல்ல, மற்ற நாடுகளைச் சேர்ந்த பலரும் இம்மனிதன் செய்த முறையற்ற கொலையினால் எரிச்சலுற்றுச் சீற்றம் கொண்டார்கள். 36சிலிசியாப் பகுதியிலிருந்து மன்னன் திரும்பிவந்தபோது அந்தியோக்கில் இருந்த யூதர்கள் ஓனியாவின் காரணமற்ற கொலைபற்றி முறையிட்டார்கள்; கிரேக்கர்களும் இக்குற்றத்தை வெறுத்தார்கள். 37ஆகவே அந்தியோக்கு மனம் வருந்தி இரக்கம் நிறைந்தவனாய், இறந்தவருடைய அறிவுத்திறனையும் நன்னடத்தையையும் நினைத்து அழுதான். 38மேலும் சினம் மூண்டவனாய், அந்திரோனிக்கிடமிருந்து அரச ஆடைகளை உடனே உரித்தெடுத்து, அவனுடைய மற்ற ஆடைகளையும் கிழித்தெறிந்து, நகர் முழுவதும் அவனை நடத்திச் சென்று, ஓனியாவைக் கொன்ற அதே இடத்திற்குக் கொண்டு சென்று அந்த இரத்தவெறியனை அங்கேயே கொன்றான். இவ்வாறு ஆண்டவர் அவனுக்குத் தகுந்த தண்டனை அளித்தார்.


லிசிமாக்கு கொலை செய்யப்படுதல்


39மெனலாவின் மறைமுக ஆதரவுடன் லிசிமாக்கு எருசலேம் கோவில் பொருள்களைத் திருடி அதைத் தீட்டுப்படுத்தும் பல செயல்களைச் செய்தான். திரளான பொற்கலன்கள் ஏற்கெனவே களவு செய்யப்பட்டுவிட்டன என்னும் செய்தி எங்கும் பரவியபொழுது மக்கள் லிசிமாக்கை எதிர்த்து எழுந்தார்கள். 40மக்கள் கூட்டம் சீற்றமுற்று லிசிமாக்கை எதிர்த்தெழ, அவன் போர்க்கோலம் பூண்ட ஆள்கள் ஏறத்தாழ மூவாயிரம் பேரைத் திரட்டி, வயதில் முதிர்ந்தவனும் மடமையில் ஊறியவனுமான அவுரானின் தலைமையில் முறைகேடாக அவர்களைத் தாக்கினான். 41இத்தாக்குதலுக்கு லிசிமாக்கே காரணம் என்று யூதர்கள் அறிந்தபொழுது, சிலர் கற்களை எடுத்தனர்; சிலர் தடிகளைத் தூக்கினர்; சிலர் அங்குக் கிடந்த சாம்பலைக் கை நிறைய அள்ளினர்; பெருங் குழப்பத்திற்கிடையில் லிசிமாக்கின்மீதும் அவனுடைய ஆள்கள்மீதும் அவற்றை எறிந்தனர். 42அதன் விளைவாக அவர்களுள் பலரைக் காயப்படுத்தினர்; சிலரைக் கொலை செய்தனர்; மற்ற அனைவரையும் ஓட வைத்தனர். மேலும், அந்தக் கோவில் திருடனைக் கருவூலத்தின் அருகிலேயே கொன்றனர்.


மெனலாமீது வழக்கு


43இந்நிகழ்ச்சி தொடர்பாக மெனலாவுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. 44மன்னன் தீர் நகருக்கு வந்தபோது ஆட்சிக் குழுவினால் அனுப்பப்பெற்ற மூவர் அவன்முன் இவ்வழக்குபற்றி எடுத்துக் கூறினர். 45ஏற்கெனவே தோல்வியுற்ற நிலையில் இருந்த மெனலா, தொரிமேனின் மகனான தாலமிக்கு ஒரு பெருந் தொகை கொடுப்பதாக உறுதி கூறினான்; மெனலாவின் கருத்துக்கு மன்னனைத் தாலமி இணங்க வைக்குமாறு கேட்டுக்கொண்டான். 46ஆகவே தாலமி காற்று வாங்கப் போவதுபோல மன்னனைத் திறந்த வெளிஅரங்குப் பக்கம் தனியாக அழைத்துச் சென்று அவனுடைய மனத்தை மாற்றிக்கொள்ளுமாறு தூண்டினான். 47அதனால் எல்லாத் தீமைகளுக்கும் காரணமான மெனலாவுக்கு எதிராகச் சாட்டப்பட்ட குற்றங்களினின்று மன்னன் அவனை விடுவித்தான்; இரங்குதற்குரிய அம்மூவருக்கும் சாவுத் தண்டனை அளித்தான். இவர்கள் சித்தியர்களிடமே⁕ முறையிட்டிருந்தாலும் குற்றம் அற்றவர்கள் என்று தீர்ப்புப் பெற்றிருப்பர்! 48இவ்வாறு நகரத்திற்காகவும் மக்களுக்காகவும் கோவிலின் கலன்களுக்காகவும் குரல் எழுப்பியவர்கள் உடனடியாக முறையற்ற தண்டனைக்கு உள்ளானார்கள். 49இதன்பொருட்டுத் தீர் நகரத்தார்கூட இக்குற்றத்தினை வெறுத்து அவர்களுடைய அடக்கத்திற்குத் தாராளமாக உதவினர். 50ஆனால் அதிகாரம் செலுத்தியவர்களின் பேராசையால் மெனலா பதவியில் தொடர்ந்தான்; தீமை செய்வதில் ஊறிப்போய், தன் சொந்த மக்களுக்கு எதிராகவே கொடிய சூழ்ச்சி செய்துவந்தான்.


4:10 1 மக் 1:13. 4:11 1 மக் 8:17. 4:12 1 மக் 1:14.


4:8 பதினாலாயிரத்து நானூறு கிலோ - ‘முந்நூற்று அறுபது தாலந்து’ மூவாயிரத்து இருநூற்று கிலோ - ‘எண்பது தாலந்து’ என்பது கிரேக்க பாடம். 4:8 ‘முந்நூற்று அறுபது தாலந்து’ என்பது கிரேக்க பாடம். 4:8 ‘எண்பது தாலந்து’ என்பது கிரேக்க பாடம். 4:9 ‘நூற்றைம்பது தாலந்து’ என்பது கிரேக்க பாடம். 4:19 ‘முந்நூறு திராக்மா’ என்பது கிரேக்க பாடம். 4:47 ‘சித்தியர்கள்’ கொடியவர்களாக, காட்டு மிராண்டிகளாகக் கருதப்பட்டார்கள்.



அதிகாரம் 5:1-27

எகிப்தின்மீது படையெடுப்பு


1அதே வேளையில் அந்தியோக்கு எகிப்தின்மீது இரண்டாம் முறையாகப் படையெடுத்தான். 2எருசலேமெங்கும் ஏறத்தாழ நாற்பது நாள் நடுவானில் காட்சிகள் தோன்றின; பொன்னாடை அணிந்த குதிரைவீரர்கள் ஈட்டியை ஏந்தினவர்களாய் உருவிய வாளுடன் கூட்டமாக உலவிக் கொண்டிருந்தார்கள். 3குதிரைப்படை அணிவகுத்து நின்றது: அப்பக்கமும் இப்பக்கமுமாகத் தாக்குதல்களும் எதிர்த் தாக்குதல்களும் தொடுக்கப்பட்டன; கேடயங்கள் சுழன்றன; ஈட்டிகள் குவிந்தன. அம்புகள் பாய்ந்தோடின. குதிரைகளுக்குரிய பொன் அணிகளும் எல்லாவகைப் படைக்கலங்களும் மின்னின. 4ஆகவே இக்காட்சி ஒரு நல்ல அறிகுறியாக இருக்கவேண்டும் என்று எல்லாரும் மன்றாடினர்.


யாசோன் எருசலேமை முற்றுகையிடல்


5அந்தியோக்கு இறந்துவிட்டதாக ஒரு புரளி பரவியது. உடனே யாசோன் ஆயிரத்திற்கும் குறையாத ஆள்களைக் கூட்டிக்கொண்டுபோய்த் திடீரென எருசலேமைத் தாக்கினான். நகர மதில்மேல் இருந்த படையினர் துரத்தியடிக்கப்பட்டனர். இறுதியாக நகர் பிடிபடும் நிலையில் இருந்தபோது மெனலா கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்தான். 6ஆனால் யாசோன் தன் சொந்த நகரத்தாரையே இரக்கமின்றிக் கொன்று குவித்தான்; தன் இனத்தார்மீதே கொள்ளும் வெற்றி மாபெரும் தோல்வி என்பதை அவன் உணரவில்லை; தன் சொந்த மக்கள்மீது அல்ல, தன் எதிரிகள்மீதே வெற்றி கொள்வதாக எண்ணிக்கொண்டான். 7ஆயினும் ஆட்சிப் பொறுப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. இறுதியில் தன் சூழ்ச்சியின்பொருட்டு இழிவுற்றவனாய் அம்மோனியர் நாட்டில் மீண்டும் அடைக்கலம் புகுந்தான். 8இறுதியில் அவன் இரங்கத்தக்க முடிவை அடைந்தான்; ஏனெனில் அரேபியருடைய மன்னனான அரேத்தா முன்பு குற்றம்சாட்டப்பட்டான்;⁕ நகர் விட்டு நகர் ஓடினான்; அனைவராலும் துரத்தியடிக்கப்பட்டான்; சட்டங்களை எதிர்ப்பவன் என்று வெறுக்கப்பட்டான்; தன் சொந்த நாட்டையும் மக்களையும் கொல்பவன் என்று அருவருக்கப்பட்டான்; இறுதியில் எகிப்துக்கு விரட்டப்பட்டான்; 9இலசதேமோனியரோடு யூதர்கள் கொண்டிருந்த உறவின்பொருட்டு அவர்களிடமிருந்து பாதுகாப்புப்பெறலாம் என்னும் நம்பிக்கையுடன் கடல் கடந்து சென்றான்; பலரையும் தங்கள் சொந்த நாட்டினின்று அகதிகளாகக் கடத்தியவனே இறுதியில் அகதியாக மாண்டான். 10அடக்கம் செய்யாமல் பலரையும் வெளியே வீசியெறிந்த அவனுக்காகத் துயரம் கொண்டாடுவார் யாருமில்லை. அவனுக்கு எவ்வகை அடக்கச் சடங்கும் நிகழவில்லை; அவனுடைய மூதாதையரின் கல்லறையில் இடமும் கிடைக்கவில்லை.


அந்தியோக்கு எருசலேமைத் தாக்குதல்


11நடந்தவைபற்றிய செய்தி அந்தியோக்கு மன்னனுக்கு எட்டியபோது யூதேயா நாடு கிளர்ச்சியில் இறங்கியுள்ளது என்று அவன் எண்ணினான்; ஆகவே சீறியெழுந்து எகிப்தினின்று புறப்பட்டு எருசலேமை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான்.✠ 12எதிர்ப்பட்ட எவரையும் இரக்கமின்றி வெட்டி வீழ்த்தவும், வீடுகளில் தஞ்சம் புகுந்தோரைக் கொல்லவும் தன் படைவீரர்களுக்கு ஆணையிட்டான். 13இளைஞரும் முதியோரும் படுகொலை செய்யப்பட்டார்கள்; பெண்களும் சிறுவர்களும் அழிக்கப்பட்டார்கள்; கன்னிப்பெண்களும் குழந்தைகளும் கொலையுண்டார்கள். 14மூன்று நாளுக்குள் எண்பதாயிரம் பேர் மறைந்துவிட்டனர்; நாற்பதாயிரம் பேர் போரில் கொல்லப்பட்டனர்; எஞ்சிய நாற்பதாயிரம் பேர் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

15இத்தோடு மனநிறைவு அடையாத அந்தியோக்கு, திருச்சட்டத்துக்கும் தன் நாட்டுக்கும் துரோகியான மெனலா காட்டிய வழியில் உலகெங்கும் மிகக் தூயது என்று கருதப்பட்ட கோவிலிலும் புகத் துணிந்தான்; 16தீட்டுப்பட்ட தன் கைகளால் தூய கலன்களைக் கைப்பற்றினான்; தூய இடத்தின் மாட்சியும் பெருமையும் ஓங்க, வேற்று நாட்டு மன்னர்கள் அளித்திருந்த நேர்ச்சைப் படையல்களைத் தன் மாசுபடிந்த கைகளால் கவர்ந்து சென்றான். 17இறுமாப்புக் கொண்டவனாய் அந்தியோக்கு, அந்நகரில் வாழ்ந்தவர்களின் பாவங்களைமுன்னிட்டே சிறிது காலத்திற்கு ஆண்டவர் அவர்கள்மீது சினங்கொண்டுள்ளார் என்பதை உணராதவனாய்த் தூய இடத்திற்குக் களங்கம் வருவித்தான். 18அந்நகர மக்கள் பற்பல பாவச் செயல்களில் ஈடுபடாதிருந்ததால், கருவூலத்தைப் பார்வையிடச் செலூக்கு மன்னனால் அனுப்பப் பெற்ற எலியதோரைப்போல், இம்மனிதனும் அங்கு வந்தவுடனேயே கசையடிபட்டிருப்பான்; தன் விவேக மற்ற செயலை விட்டுவிட்டுப் பின்வாங்கியிருப்பான். 19ஆண்டவர் தூய இடத்திற்காக மக்களைத் தேர்ந்து கொள்ளவில்லை; மக்களுக்காகவே அந்த இடத்தைத் தேர்ந்துகொண்டார். 20ஆதலால் மக்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களில் அந்த இடத்திற்கும் பங்கு கிடைத்தது. பின்னர் அவர்கள் அடைந்த நன்மைகளிலும் அது பங்கு கொண்டது. எல்லாம் வல்லவருடைய சினத்தால் கைவிடப்பட்ட அந்த இடம், மாபெரும் ஆண்டவரோடு மக்கள் ஒப்புரவானபின், தன் முன்னைய மாட்சியை மீண்டும் பெற்றது.

21எனவே கோவிலிருந்து எழுபத்து இரண்டு டன்⁕ வெள்ளியை எடுத்துக்கொண்டு அந்தியோக்கி நகருக்கு அந்தியோக்கு மன்னன் சென்றான்; அவனது மனம் செருக்குற்றிருந்ததால் தன்னால் தரையில் கப்பலைச் செலுத்தவும் கடலில் நடந்து செல்லவும் முடியும் என்று இறுமாப்போடு எண்ணினான்;✠ 22மக்களை வதைக்கக் கண்காணிப்பாளர்களை ஏற்படுத்தினான்; பிரிகிய இனத்தினனும் தன்னை அமர்த்தியவரைவிடக் கொடிய பண்பினனுமான பிலிப்பை எருசலேமில் கண்காணிப்பாளனாக அமர்த்தினான்; 23அந்திரோனிக்கைக் கெரிசிமில் கண்காணிப்பாளனாக ஏற்படுத்தினான்; இவர்கள் நீங்கலாக, மற்றவர்களைவிடக் கொடுமையாகத் தன் சொந்த மக்களையே அடக்கியாண்ட மெனலாவையும் அமர்த்தினான்; யூதர்கள்மீது கொண்டிருந்த பகைமை காரணமாக, 24மீசியர்களின் படைத்தலைவனாகிய அப்பொல்லோனை இருபத்திரண்டாயிரம் படைவீரர்களோடு அந்தியோக்கி நகருக்கு அனுப்பி வைத்தான்; வயதுவந்த ஆண்கள் அனைவரையும் கொல்லவும், பெண்களையும் இளைஞர்களையும் அடிமைகளாக விற்கவும் ஆணையிட்டான்; 25அப்பொல்லோன் வந்தபோது, நட்பு நாடி வந்தவன்போல நடித்து, தூய ஓய்வுநாள்வரை காத்திருந்தான்; அப்போது யூதர்கள் வேலை செய்யாமல் இருந்ததைக் கண்டு, படைக்கலங்கள் தாங்கி அணிவகுக்குமாறு தன் வீரர்களைப் பணித்தான். 26வேடிக்கை பார்க்க வெளியில் வந்த அத்தனை பேரையும் வாளுக்கு இரையாக்கினான்; பின்பு படைக்கலங்கள் தாங்கிய வீரர்களோடு நகருக்குள் பாய்ந்து பெரும்திரளான மக்களை வெட்டி வீழ்த்தினான். 27ஆனால் மக்கபே என்று அழைக்கப்பெற்ற யூதா ஏறத்தாழ ஒன்பது பேருடன் பாலைநிலத்திற்கு ஓடிச்சென்றார். காட்டு விலங்குகளைப் போன்று அவரும் அவருடைய தோழர்களும் மலைகளில் வாழ்ந்தார்கள்; தங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளாதவாறு காட்டுக் கீரைகளை உண்டு காலம் கழித்தார்கள்.✠


5:11 1 மக் 1:17. 5:11-20 1 மக் 1:20-63. 5:21 2 மக் 9:8. 5:27 1 மக் 2:28.


5:8 ‘சிறைப்பிடிக்கப்பட்டான்’ என்பது கிரேக்க பாடம். 5:21 ‘ஆயிரத்து எண்ணூறு தாலந்து’ என்பது கிரேக்க பாடம்.



அதிகாரம் 6:1-31

கிரேக்க வழிபாட்டுத் திணிப்பு


1சிறிது காலத்துக்குப்பின், யூதர்கள் தங்கள் மூதாதையரின் சட்டங்களைக் கைவிடும்படியும், கடவுளுடைய சட்டங்களின்படி நடப்பதை விட்டுவிடும்படியும் அவர்களைக் கட்டாயப்படுத்துமாறு ஏதன்சு நகர ஆட்சிமன்றத்தைச் சேர்ந்த ஒருவனை அந்தியோக்கு மன்னன் அனுப்பி வைத்தான். 2மேலும் எருசலேமில் இருந்த கோவிலைத் தீட்டுப்படுத்தி அதற்கு “ஒலிம்பு மலைச் சேயுவின் கோவில்” எனப் பெயரிடவும், கெரிசிமில் வாழ்ந்த மக்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க அங்கு இருந்த கோவிலை, “அன்னியர்களின் நண்பர் சேயுவின் கோவில்” என அழைக்கவும் அவனைப் பணித்தான்.✠

3இந்தத் தீச்செயல் மக்களுக்குத் துன்பம் தருவதாயும் தாங்க முடியாததாயும் இருந்தது. 4ஏனெனில் பிற இனத்தாரின் ஒழுக்கக்கேட்டாலும் களியாட்டத்தாலும் கோவில் நிறைந்திருந்தது. அவர்கள் விலைமாதரோடு காமக் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள். திருஉறைவிடத்து எல்லைக்குள்ளேயே பெண்களோடு உடலுறவு கொண்டார்கள். விலக்கப்பட்ட பொருள்களையும் கோவிலுக்குள் எடுத்துச் சென்றார்கள். 5சட்டங்கள் விலக்கியிருந்த பலிப்பொருள்களால் பீடம் நிரம்பி வழிந்தது. 6ஓய்வு நாளைக் கடைப்பிடிக்கவும், தங்கள் மூதாதையர் சிறப்பித்த திருவிழாக்களைக் கொண்டாடவும், யூதர்கள் என்று அறிக்கையிடவும்கூட அவர்களால் முடியவில்லை. 7மன்னனுடைய பிறந்த நாள் விழாவின் மாதாந்திரக் கொண்டாட்டங்களின் போது பலிப்பொருள்களில் பங்குகொள்ளுமாறு யூதர்கள் வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டார்கள். தியனீசின் திருவிழாக் கொண்டாட்டத்தின்போது கொடிகளால் புனைந்த முடி அணிந்து, தியனீசின் பெயரால் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். 8தாலமாய் நகர மக்களின் தூண்டுதலால் பக்கத்தில் இருந்த கிரேக்க நகரங்களுக்கு ஓர் ஆணை பிறந்தது; அந்த நகரங்களின் மக்களும் அதே முறையைக் கையாண்டு யூதர்களைப் பலிப்பொருள்களில் பங்குகொள்ளச் செய்யவேண்டும்; 9கிரேக்கப் பழக்கவழக்கங்களை ஏற்க விரும்பாதவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்பதே அந்த ஆணை. இதனால் யூதர்களுக்கு ஏற்பட்ட துன்பம் அனைவருக்கும் தெரிந்ததே. 10எடுத்துக்காட்டாக, தங்கள் குழந்தைகளுக்கு விருந்தசேதனம் செய்த பெண்கள் இருவரை அவர்கள் கைதுசெய்தார்கள்; பிள்ளைகளை அவர்களுடைய அன்னையரின் மார்புகளில் கட்டித் தொங்கவிட்ட வண்ணம் அவர்களை எல்லாரும் காண நகரைச் சுற்றி ஊர்வலமாக நடத்திச் சென்றார்கள்; பின்பு நகர மதில்களின் மேலிருந்து அவர்களைத் தலைகீழாகத் தள்ளிவிட்டார்கள்.✠ 11ஓய்வு நாளை மறைவாய்க் கடைப்பிடிக்கும் பொருட்டு அருகில் இருந்த குகையில் கூடியிருந்த மற்றும் சிலர் பிலிப்பிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு அவர்கள் எல்லாரும் ஒன்றாகச் சுட்டெரிக்கப்பட்டார்கள்; ஏனெனில் ஓய்வுநாள்மீது அவர்கள் கொண்டிருந்த மதிப்பின் பொருட்டு அவர்கள் தங்களையே காத்துக்கொள்ளத் தயங்கினார்கள்.✠


கடவுளின் இரக்கம்


12இந்நூலைப் படிப்போர் இத்தகைய பேரிடர்களால் மனந்தளராதிருக்குமாறு வேண்டுகிறேன்; இத்தண்டனைகள் அனைத்தும் நம் மக்களை அழிப்பதற்காக ஏற்பட்டவை அல்ல; அவர்களைப் பயிற்றுவிப்பதற்காகவே என்பதை உணரும்படி கேட்டுக்கொள்கிறேன். 13இறைப்பற்றில்லாதவர்களை நீண்ட நாளுக்குத் தங்கள் விருப்பம்போல விட்டுவிடாமல், உடனடியாகத் தண்டிப்பது, உண்மையில் பேரிரக்கத்தின் அடையாளமாகும். 14ஏனெனில் ஆண்டவர் பிற இனத்தாருடைய பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்கும்பொருட்டுப் பாவங்களின் முழு அளவை அவர்கள் அடையும்வரை பொறுமையுடன் காத்திருக்கிறார்; ஆனால் நம்மிடம் அவ்வாறு நடந்து கொள்வதில்லை; 15நம்முடைய பாவங்கள் முழுஅளவை அடையுமுன்னரே நம்மைத் தண்டித்து விடுகிறார். 16ஆகவே அவர்தம் சொந்த மக்களாகிய நமக்கு இரக்கம் காட்டத் தவறுவதில்லை; பேரிடர்களால் நம்மைப் பயிற்றுவித்தாலும் நம்மைக் கைவிடுவதில்லை. 17இவ்வுண்மையை நினைவுபடுத்தவே இவற்றையெல்லாம் உங்களுக்குக் கூறினோம்; இனிமேல் தொடர்ந்து வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு வருவோம்.


எலயாசரின் மறைசாட்சி இறப்பு


18தலைசிறந்த மறைநூல் அறிஞர்களுள் ஒருவரும் வயதில் முதிர்ந்தவரும் மாண்புறு தோற்றம் உடைய வருமான எலயாசர் பன்றி இறைச்சி உண்ணத் தம் வாயைத் திறக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.✠ 19ஆனால் அவர் மாசுபடிந்தவராய் வாழ்வதைவிட மதிப்புடையவராய் இறப்பதைத் தேர்ந்து கொண்டு இறைச்சியை வெளியே துப்பிவிட்டுத் தாமாகவே சித்திரவதைக் கருவியை நோக்கிச் சென்றார். 20உயிர்மேல் ஆசை இருப்பினும், திருச்சட்டம் விலக்கியிருந்த பண்டங்களைச் சுவைத்தும் பாராமல் தள்ளிவிடத் துணியும் எல்லாரும் இவ்வாறே செய்யவேண்டும். 21சட்டத்திற்கு எதிரான அந்தப் பலிவிருந்துக்குப் பொறுப்பாய் இருந்தவர்கள் அவரோடு கொண்டிருந்த நீண்டகாலப் பழக்கம் காரணமாக அவரை ஒதுக்கமாக அழைத்துச் சென்று, அவர் உண்ணக்கூடிய இறைச்சியை அவரே தயாரித்துக் கொண்டுவருமாறும், மன்னன் கட்டளையிட்டபடி பலியிடப்பட்ட இறைச்சியை உண்பதுபோல நடிக்குமாறும் அவரைத் தனிமையில் வேண்டிக்கொண்டார்கள். 22இவ்வாறு செய்வதால் அவர் சாவினின்று காப்பாற்றப்படுவார் என்றும், அவரோடு அவர்கள் கொண்டிருந்த பழைய நட்பின் காரணமாக மனிதநேயத்தோடு நடத்தப்படுவார் என்றும் அவர்கள் எண்ணினார்கள். 23ஆனால் எலயாசர் தமது வயதுக்குரிய தகுதிக்கும் முதுமைக்குரிய மேன்மைக்கும் நரைமுடிக்குரிய மாண்புக்கும் சிறு வயதுமுதல் தாம் நடத்தியிருந்த மாசற்ற வாழ்க்கைக்கும் கடவுள் கொடுத்திருந்த திருச்சட்டத்திற்கும் ஏற்றபடி மேலான முறையில் உறுதிபூண்டவராய், உடனே தமது முடிவைத் தெரிவித்துத் தம்மைக் கொன்றுவிடுமாறு கூறினார். 24அவர் தொடர்ந்து, “இவ்வாறு நடிப்பது எனது வயதுக்கு ஏற்றதல்ல; ஏனெனில் தொண்ணூறு வயதான எலயாசர் அன்னியருடைய மறையை ஏற்றுக் கொண்டுவிட்டார் என இளைஞருள் பலர் எண்ணக்கூடும். 25குறுகிய, நிலையில்லாத வாழ்வுக்காக நான் இவ்வாறு நடிப்பேனாகில் என் பொருட்டு அவர்கள் நெறி பிறழ நேரிடும்; அவ்வாறு நேரிட்டால் அது என் முதுமையை நானே களங்கப்படுத்துவதும் இழிவுபடுத்துவதுமாகும். 26மனிதரின் தண்டனையினின்று நான் தற்காலிகமாக விடுபட்டாலும், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தாலும், நான் எல்லாம் வல்லவருடைய கைக்குத் தப்ப முடியாது. 27ஆகவே இப்போது என் உயிரை ஆண்மையுடன் கையளிப்பதன் மூலம் என் முதுமைக்கு நான் தகுதியடையவன் என் மெய்ப்பிப்பேன்; 28மதிப்புக்குரிய, தூய சட்டங்களுக்காக விருப்போடும் பெருந்தன்மையோடும் எவ்வாறு இறப்பது என்பதற்கு ஓர் உயரிய எடுத்துக்காட்டை விட்டுச்செல்வேன்” என்றார். இதெல்வாம் கூறி முடித்ததும் அவர் சித்திரவதைக் கருவியை நோக்கிச் சென்றார்.

29சற்றுமுன் அவரைக் கனிவோடு நடத்தியவர்கள் இப்போது கல்நெஞ்சராய் மாறினார்கள்; ஏனெனில் அவர் கூறியது அவர்களுக்கு மடமையாகத் தோன்றியது. 30அடிபட்டதால் இறக்கும் தறுவாயில் இருந்தபோது அவர் அழுது புலம்பி, “நான் சாவினின்று விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், அடியினால் என் உடலில் ஏற்படும் கொடிய துன்பங்களைத் தாங்கிக்கொள்கிறேன்; ஆண்டவருக்கு நான் அஞ்சுவதால் என் உள்ளத்தில் மகிழ்ச்சியோடு இவற்றை ஏற்றுக்கொள்கிறேன்; ஆண்டவர் தம் தூய ஞானத்தால் இவற்றையெல்லாம் அறிகிறார்” என்றார். 31இவ்வாறு, எலயாசர் உயிர்துறந்தார். அவருடைய இறப்பு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அவருடைய நாட்டு மக்கள் அனைவருக்குமே சான்றாண்மைக்கு எடுத்துக்காட்டாகவும் நற்பண்புக்கு அடையாளமாகவும் விளங்கியது.


6:2 1 மக் 1:46,54. 6:10 1 மக் 1:60-61. 6:11 1 மக் 2:32-38. 6:18 லேவி 11:7-8.



அதிகாரம் 7:1-42

சகோதரர்கள் எழுவரின் சான்று


1அக்காலத்தில் சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைதுசெய்யப்பட்டார்கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். 2அவர்களுள் ஒருவர் மற்றவர்களின் சார்பில், “நீ எங்களிடமிருந்து கேட்டறிய விரும்புவது என்ன? எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதைவிட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்” என்றார். 3உடனே மன்னன் கடுஞ்சீற்றம் கொண்டான்; அகன்ற தட்டுகளையும் கொப்பரைகளையும் சூடாக்கும்படி ஆணையிட்டான். 4அவை விரைவில் சூடாக்கப்பட்டன. முன்னர்ப் பேசியவருடைய உடன்பிறப்புகளும் தாயும் பார்த்துக்கொண்டிருக்க, அவருடைய நாக்கைத் துண்டிக்கவும், குடுமித் தோலைக் கீறி எடுக்கவும், கை கால்களை வெட்டவும் மன்னன் ஆணையிட்டான். 5அவரால் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில், அவர் இன்னும் உயிருடன் இருந்தபோதே அவரை அடுப்புக்கு அருகில் கொண்டுபோய், அகன்ற தட்டில் போட்டு வாட்டும்படி கட்டளையிட்டான். அதிலிருந்து புகை எங்கும் பரவியது. ஆனால் அவருடைய சகோதரர்களும் தாயும் மதிப்போடு இறக்கும்படி ஒருவருக்கு ஒருவர் ஊக்கமுட்டிக் கொண்டார்கள். 6“கடவுளாகிய ஆண்டவர் நம்மைக் கண்காணித்துவருகிறார்; மக்களுக்கு எதிராகச் சான்று பகர்ந்து அவர்கள்முன், ‘ஆண்டவர் தம் ஊழியர்கள்மீது இரக்கம் காட்டுவார்’ என்று மோசேயின் திருப்பாடலில் வெளிப்படுத்தியிருப்பதுபோல், அவர் உண்மையாகவே நம்மீது பரிவு காட்டுகிறார்” என்று சொல்லிக் கொண்டார்கள்.✠

7முதல் சகோதரர் இவ்வாறு இறந்தபின், கேலிசெய்யுமாறு இரண்டாம்வரைக் கூட்டிவந்தார்கள். அவருடைய தலையின் தோலை முடியோடு உரித்த பிறகு, ‘பன்றி இறைச்சியை உண்ணுகிறாயா? அல்லது உன் உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாய் நாங்கள் வதைக்கட்டுமா?’ என்று அவரிடம் கேட்டார்கள். 8அவர் தம் தாய்மொழியில், ‘உண்ணமாட்டேன்’ என்று பதில் உரைத்தார். ஆகவே அவரும் முந்தின சகோதரரைப் போலக் கொடிய துன்பங்களுக்கு உள்ளானார். 9தாம் இறுதி மூச்சு விடும் வேளையில், “நீ ஒரு பேயன். நீ எங்களை இம்மை வாழ்வினின்று அகற்றிவிடுகிறாய். ஆனால் நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்; எனெனில் நாங்கள் இறப்பது அவருடைய கட்டளைகளின் பொருட்டே” என்று கூறினார்.✠ 10அவருக்குப் பிறகு மூன்றாமவரை அவர்கள் கொடுமைப்படுத்தினார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உடனடியாகத் தம் நாக்கையும் கைகளையும் அவர் துணிவுடன் நீட்டினார்; 11“நான் இவற்றை விண்ணக இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டேன்; அவருடைய சட்டங்களுக்காக நான் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவரிடமிருந்து மீண்டும் இவற்றைப் பெற்றுக் கொள்வேன் என நம்புகிறேன்” என்று பெருமிதத்தோடு கூறினார். 12அவர்தம் துன்பங்களைப் பொருட்படுத்தவில்லை. எனவே மன்னனும் அவனோடு இருந்தவர்களும் இந்த இளைஞரின் எழுச்சியைக் கண்டுவியந்தார்கள்.

13அவரும் இறந்தபின் நான்காமவரையும் அவர்கள் அவ்வண்ணமே துன்புறுத்திக் கொடுமைப்படுத்தினார்கள். 14அவர் இறக்கும் தறுவாயில், “கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பதால், மனிதர் கையால் இறக்க விரும்புகிறேன். ஆனால் நீ வாழ்வுபெற உயிர்த்தெழமாட்டாய்” என்றார். 15அதன்பின் ஐந்தாம்வரைக் கூட்டி வந்து அவரையும் வதைத்தார்கள். 16அவர் மன்னனைப் பார்த்து, “நீ சாவுக்குரியவனாய் இருந்தும், மனிதர்மேல் உனக்கு அதிகாரம் இருப்பதால் நீ விரும்பியதைச் செய்கிறாய். ஆனால் கடவுள் எங்கள் இனத்தைக் கைவிட்டுவிட்டார் என எண்ணாதே. 17அவரின் மாபெரும் ஆற்றல் உன்னையும் என் வழிமரபினரையும் எவ்வாறு வதைக்கப்போகிறது என்பதை நீ விரைவில் காண்பாய்” என்றார்.

18அவருக்குப்பின் ஆறாமவரைக் கூட்டிவந்தார்கள். அவரும் உயிர்பிரியும் வேளையில், “வீணாக நீ ஏமாந்து போகாதே; ஏனெனில் எங்கள் பொருட்டே, எங்கள் கடவுளுக்கு நாங்கள் செய்துள்ள பாவங்களின் பொருட்டே இவ்வாறு துன்பப்படுகிறோம். ஆகவேதான் இத்தகைய வியத்தகு செயல்கள் எங்களுக்கு நிகழ்ந்துள்ளன. 19ஆனால் கடவுளுக்கு எதிராகப் போராடத் துணிந்த நீ தண்டனைக்குத் தப்பலாம் என எண்ணாதே” என்று கூறினார்.

20எல்லாருக்கும் மேலாக, அவர்களுடைய தாய் மிகவும் போற்றுதற்குரியவர், பெரும் புகழுக்குரியவர். ஒரே நாளில் தம் ஏழு மைந்தர்களும் கொல்லப்பட்டதை அவர் கண்டபோதிலும், ஆண்டவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவை அனைத்தையும் மிகத் துணிவோடு தாங்கிக் கொண்டார்; 21அவர்கள் ஒவ்வொருவருக்கும் தாய்மொழியில் அறிவுரை கூறினார்; பெருந்தன்மை நிறைந்தவராய்ப் பெண்ணுக்குரிய பண்பையும் ஆணுக்குரிய துணிவையும் இணைத்து அவர்களிடம், 22“நீங்கள் என் வயிற்றில் எவ்வாறு உருவானீர்கள் என நான் அறியேன்; உங்களுக்கு உயிரும் மூச்சும் அளித்ததும் நான் அல்ல; உங்களுடைய உள்ளுறுப்புகளை ஒன்றுசேர்த்ததும் நான் அல்ல. 23உலகைப் படைத்தவரே மனித இனத்தை உருவாக்கியவர்; எல்லா பொருள்களையும் உண்டாக்கியவர்; அவரே தம் இரக்கத்தினால் உங்களுக்கு உயிரையும் மூச்சையும் மீண்டும் கொடுப்பார்; ஏனெனில் அவருடைய சட்டங்களை முன்னிட்டு நீங்கள் இப்போது உங்களையே பொருட்படுத்துவதில்லை” என்றார்.

24தாம் இகழப்படுவதாக அந்தியோக்கு நினைத்தான்; அந்தத் தாயின் கூற்றில் ஏளனம் இருப்பதாக ஐயுற்றான்; எல்லாருக்கும் இளைய சகோதரர் இன்னும் உயிரோடு இருக்கக் கண்டு, “உன் முதாதையரின் பழக்கவழக்கங்களை நீ கைவிட்டுவிட்டால், உன்னைச் செல்வனாகவும் பிறர் அழுக்காறுகொள்ளும் வகையில் உயர்ந்தவனாகவும் ஆக்குவதோடு, என் நண்பனாகவும் ஏற்றுக்கொண்டு உனக்கு உயர் பதவி வழங்குவேன்” என்று சொன்னது மட்டுமன்றி உறுதியும் கூறி ஆணையிட்டான். 25அவ்விளைஞர் மன்னனின் சொற்களுக்குச் சிறிதும் செவிசாய்க்காததால், அவருடைய தாயை அவன் தன்னிடம் அழைத்து, அந்த இளைஞர் தம்மையே காத்துக்கொள்ளும்படி அறிவுரை கூறுமாறு வேண்டினான். 26மன்னன் அவரை மிகவும் வேண்டிக்கொண்டதனால், அந்தத் தாய் தம் மகனை இணங்க வைக்க இசைந்தார். 27ஆனால் அந்தக் கொடுங்கோலனை ஏளனம் செய்தவராய், அவர் தம் மகன் பக்கம் குனிந்தவாறு தம் தாய்மொழியில், “மகனே, என்மீது இரக்கங்கொள். ஒன்பது மாதம் உன்னை என் வயிற்றில் சுமந்தேன்; மூன்று ஆண்டு உனக்குப் பாலூட்டி வளர்த்தேன்; இந்த வயது வரை உன்னைப் பேணிக் காத்துவந்துள்ளேன். 28குழந்தாய், உன்னை நான் வேண்டுவது: விண்ணையும் மண்ணையும் பார்; அவற்றில் உள்ள அனைத்தையும் உற்று நோக்கு. கடவுள் இவை அனைத்தையும் ஏற்கெனவே இருந்தவற்றிலிருந்து உண்டாக்கவில்லை. இவ்வாறே மனித இனமும் தோன்றிற்று என்பதை அறிந்துகொள்வாய். 29இக்கொலைஞனுக்கு அஞ்சாதே; ஆனால் நீ உன் சகோதரர்களுக்கு ஏற்றவன் என மெய்ப்பித்துக் காட்டு. இறைவனின் இரக்கத்தால் உன் சகோதரர்களோடு உன்னையும் நான் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி இப்போது சாவை ஏற்றுக்கொள்” என்று சொல்லி ஊக்கமூட்டினார்.

30தாய் பேசி முடிப்பதற்குள் அந்த இளைஞர் பின்வருமாறு கூறினார்: “எதற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? மன்னனின் கட்டளைக்கு நான் கீழ்ப்படியமாட்டேன். மோசே வழியாக எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தின் கட்டளைகளுக்கே கீழ்ப்படிவேன். 31எபிரேயருக்கு எதிராக எல்லா வகைத் துன்பங்களையும் திட்டமிட்ட நீ, கடவுளின் கைக்குத் தப்பமாட்டாய்; 32எங்கள் சொந்தப் பாவங்களின் பொருட்டே நாங்கள் துன்புறுத்துகிறோம். 33எங்களைக் கண்டிக்கவும் பயிற்றுவிக்கவும் உயிருள்ள எங்கள் ஆண்டவர் சிறிது காலம் சினங்கொண்டாலும், தம் ஊழியர்களாகிய எங்களோடு மீண்டும் நல்லுறவு கொள்வார். 34ஆதலால், இழிந்தவனே, எல்லா மனிதருள்ளும் கேடுகெட்டவனே, விண்ணக இறைவனின் மக்களை நீ தண்டிக்கும்போது செருக்குறாதே; உறுதியற்றவற்றை நம்பித் திமிர் கொண்டு துள்ளாதே. 35எல்லாம் வல்லவரும் அனைத்தையும் காண்பவருமான கடவுளின் தண்டனைத் தீர்ப்பினின்று நீ இன்னும் தப்பிவிடவில்லை. 36என் சகோதரர்கள்⁕ சிறிது துன்பப்பட்டபின் கடவுளுடைய உடன்படிக்கைக்கு ஏற்ப என்றுமுள வாழ்வில் பங்கு கொண்டார்கள்; ஆனால் நீ கடவுளின் தண்டனைத் தீர்ப்பால் உன்னுடைய ஆணவத்திற்கு ஏற்ற தண்டனையைப் பெறுவாய். 37என் சகோதரர்களைப் போன்று எங்கள் மூதாதையரின் சட்டங்களுக்காக நானும் என் உடலையும் உயிரையும் ஒப்படைக்கிறேன்; எங்கள் நாட்டின்மீது விரைவில் இரக்கம் காட்டுமாறும், துன்பங்களாலும் சாட்டையடிகளாலும் அவர் ஒருவரே கடவுள் என நீ அறிக்கையிடுமாறும் அவரை மன்றாடுகிறேன். 38எங்கள் இனம் முழுவதன்மீதும் முறைப்படி வந்துள்ள எல்லாம் வல்லவருடைய சினம் என் வழியாகவும் என் சகோதரர்கள் வழியாகவும் முடிவுக்கு வருமாறும் அவரை வேண்டுகிறேன்.”

39அவருடைய ஏளனச் சொற்களால் எரிச்சல் அடைந்த மன்னன் சீற்றம் அடைந்தான்; மற்ற அனைவரையும்விட அவரை மிகக் கொடுமையாய் வதைத்தான். 40எனவே அந்த இளைஞர் ஆண்டவரிடம் முழு நம்பிக்கை கொண்டவராய் மாசற்ற நிலையில் மாண்டார். 41இறுதியாக, தம் மக்களைத் தொடர்ந்து அந்தத் தாயும் இறந்தார்.

42பலிப்பொருள்களை உண்ண யூதர்கள் கட்டாயத்துக்கு உள்ளானது பற்றியும் அதற்காக அவர்கள் பட்ட பாடுபற்றியும் இதுவரை எழுதியது போதும்.


7:6 இச 31:21,26; 32:36. 7:9 எபி 11:35.


7:36 ‘நம் சகோதரர்கள்’ என்பது கிரேக்க பாடம்.



அதிகாரம் 8:1-36

5. யூதாவின் வெற்றிகள்

யூதாவின் கிளர்ச்சி

1யூதா மக்கபேயும் அவருடைய தோழர்களும் யாருக்கும் தெரியாமல் ஊர்களில் நுழைந்து தங்களுடைய உறவினர்களை அழைத்து, யூத நெறியில் பற்றுறுதியோடு இருந்த மற்றவர்களையும் சேர்த்து, ஏறத்தாழ ஆறாயிரம் பேரைத் திரட்டினார்கள். 2அவர்கள் ஆண்டவரைத் துணைக்கு அழைத்து, அனைவராலும் ஒடுக்கப்பட்ட மக்களைக் கண்ணோக்கும்படியும் இறைப்பற்றில்லாத மனிதரால் தீட்டுப்பட்ட கோவில்மீது இரக்கங்கொள்ளும்படியும் மன்றாடினார்கள்; 3அழிந்து தரைமட்டமாகும் நிலையில் இருந்த நகரின்மீது இரக்கம் காட்டும்படியும், ஆண்டவரை நோக்கி முறையிடும் குருதியின் குரலுக்குச் செவிசாய்க்கும்படியும். 4சட்டத்துக்கு எதிராக மாசற்ற குழந்தைகளைப் படுகொலை செய்ததையும் அவரது பெயரைப் பழித்துரைத்ததையும் நினைவுகூரும்படியும், தீமைமீது அவருக்குள்ள வெறுப்பை வெளிப்படுத்தும்படியும் வேண்டினார்கள்.

5மக்கபே தம் வீரர்களுக்கு முறையான பயிற்சி அளித்ததால் பிற இனத்தார் அவரை எதிர்த்துநிற்க முடியவில்லை; ஆண்டவருடைய சினம் அப்போது இரக்கமாக மாறியிருந்தது. 6மக்கபே திடீரென வந்து நகரங்கள், ஊர்கள்தோறும் புகுந்து அவற்றுக்குத் தீவைப்பார்; போர்த்திற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கைப்பற்றியபின் பல பகைவர்களைத் துரத்தியடிப்பார். 7இத்தகைய தாக்குதலுக்கு இரவு வேளை மிகவும் ஏற்றதாக இருக்கக் கண்டார். அவருடைய பேராண்மை பற்றிய பேச்சு எங்கும் பரவிற்று.


நிக்கானோரின் படையெடுப்பு


8யூதா சிறிது சிறிதாக முன்னேறி வருவதையும் மேன்மேலும் வெற்றிகள் பெற்றுவருவதையும் கண்ட பிலிப்பு, அரசின் நலன்களைக் காக்க உதவிக்கு வருமாறு கூலேசீரியா, பெனிசியா நாடுகளின் ஆளுநரான தாலமிக்கு மடல் எழுதினார். 9உடனடியாகப் பத்ரோக்குலின் மகனும் மன்னனின் முக்கிய நண்பர்களுள் ஒருவனுமான நிக்கானோரைத் தாலமி தேர்ந்தெடுத்து, யூத இனம் முழுவதையும் அடியோடு அழிப்பதற்காகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இருபதாயிரத்திற்குக் குறையாத வீரர்களுக்குத் தலைவனாக அவனை அனுப்பி வைத்தான்; படைத்தலைவனும் போர்த் தொழிலில் மிகுந்த பட்டறிவும் கொண்டவனுமான கோர்கியாவையும் அவனுடன் சேர்த்து அனுப்பினான். 10பிடிபடும் யூதர்களை அடிமைகளாக விற்பதால் கிடைக்கும் தொகையைக் கொண்டு, உரோமையர்களுக்கு மன்னன் திறையாகச் செலுத்தவேண்டிய எண்பது டன்⁕ வெள்ளியைக் கொடுக்க நிக்கானோர் திட்டமிட்டான். 11எல்லாம் வல்லவரின் தண்டனைத் தீர்ப்பு தன்மேல் வரப்போகிறது என்பதை எதிர்பாராத நிக்கானோர், நாற்பதுகிலோவெள்ளிக்கு அடிமைகளைக் கொடுப்பதாக உறுதியளித்து, யூத அடிமைகளை வாங்க வருமாறு கடலோர நகரங்களுக்கு உடனே சொல்லியனுப்பினான்.

12நிக்கானோரின் படையெடுப்பை அறிந்த யூதா அவனது படையின் வருகைபற்றித் தம்மோடு இருந்தவர்களிடம் கூறினார். 13கோழைகளும் கடவுளின் நீதியில் நம்பிக்கையற்றவர்களும் அவரைவிட்டு ஓடினார்கள்; 14மற்றவர்கள் தங்களிடம் எஞ்சியிருந்த உடைமைகள் அனைத்தையும் விற்றார்கள்; போரிடுமுன்பே தங்களை விற்றுவிட்ட கொடியவனான நிக்கானோரிடமிருந்து தங்களை விடுவிக்குமாறு ஆண்டவரை வேண்டினார்கள். 15தங்கள்பொருட்டு ஆண்டவர் இவ்வேண்டுதலை நிறைவேற்றாவிடினும், அவர் தங்கள் மூதாதையரோடு செய்திருந்த உடன்படிக்கைகளின் பொருட்டாவது, அவர்கள் தாங்கியிருந்த தூய்மையும் மாட்சியும் மிக்க பெயரின் பொருட்டாவது நிறைவேற்றும்படி மன்றாடினார்கள்.

16மக்கபே தம் ஆள்கள் ஆறாயிரம் பேரையும் ஒன்று திரட்டினார்; பகைவரைக் கண்டு கலங்காதிருக்கவும், தகுந்த காரணமின்றித் தங்களை எதிர்த்து வருகின்ற பெருந்திரளான பிற இனத்தார்முன் அஞ்சாமலிருக்கவும், துணிவுடன் போராடவும் அவர்களுக்கு அறிவுரை கூறினார்; 17மேலும் சட்டத்துக்கு முரணாகப் பிற இனத்தார் திருஉறைவிடத்தைத் தீட்டுப்படுத்தியதையும், இழிவுற்ற நகருக்குக் கொடுஞ்செயல் புரிந்ததையும், தங்கள் மூதாதையருடைய வாழ்க்கைமுறையை மாற்றியதையும் தங்கள் கண்முன் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். 18“பிற இனத்தார் படைக்கலங்களையும் தீரச்செயல்களையும் நம்பியிருக்கின்றனர்; நாமோ நம் எதிரிகளையும், ஏன் — உலகம் அனைத்தையுமே — ஒரு தலையசைப்பால் அழிக்கக்கூடிய எல்லாம் வல்ல கடவுளை நம்பியிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.✠ 19மேலும், தம் மூதாதையருக்கு உதவி கிடைத்த நேரங்களைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொன்னபோது சனகெரிபின் காலத்தில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேர் அழிந்தனர் என்று மொழிந்தார்;✠ 20பாபிலோனியாவில் கலாத்தியருக்கு எதிராக நடைபெற்ற போரில் நான்காயிரம் மாசிடோனியருடன் சேர்ந்து எண்ணாயிரம் யூதர்கள் மட்டுமே கலாத்தியரை எதிர்த்தார்கள்; இருப்பினும் மாசிடோனியர் நெருக்கப்பட்டபோது அந்த எண்ணாயிரம் யூதர்கள் விண்ணக இறைவனிடமிருந்து தங்களுக்குக் கிடைத்த உதவியைக்கொண்டு இலட்சத்து இருபதாயிரம் கலாத்தியரைக் கொன்றார்கள்; மிகுந்த கொள்ளைப்பொருள்களையும் எடுத்துச் சென்றார்கள் என்றும் கூறினார்.


நிக்கானோரின் வீழ்ச்சி


21இத்தகைய சொற்களால் மக்கபே தம் ஆள்களுக்கு ஊக்கமுட்டினார்; தங்கள் சட்டங்களுக்காகவும் நாட்டுக்காகவும் உயிரைக் கொடுக்க அவர்களை ஆயத்தப்படுத்தினார்; அதன்பின் தம் படையை நான்காகப் பிரித்தார்; 22ஒவ்வொரு பிரிவுக்கும் தலைவராகத் தம் சகோதரர்களான சீமோன், யோசேப்பு, யோனத்தான் ஆகியோரை ஏற்படுத்தி, ஒவ்வொரு பிரிவுக்கும் ஆயிரத்து ஐந்நூறு வீரர்களை ஒதுக்கினார்; 23மேலும், திருநூலிலிருந்து உரக்கப் படிக்க எலயாசரை ஏற்படுத்தினார்; “கடவுளே நமக்குத் துணை” என்று கூறிப் போர்க்குரல் எழுப்பினார். பின்னர் முதல் படைப்பிரிவைத் தாமே நடத்திச் சென்று நிக்கானோரை எதிர்த்துப் போர்தொடுத்தார். 24எல்லாம் வல்லவர் அவர்கள் பக்கம் நின்று போர்புரியவே, ஒன்பதாயிரத்திற்கும் மிகுதியான எதிரிகளை அவர்கள் கொன்றார்கள்; நிக்கானோரின் படையில் பெரும்பாலோரைக் காயப்படுத்தி முடமாக்கினார்கள்; பகைவர்கள் எல்லாரும் நிலைகுலைந்து ஓடச் செய்தார்கள்; 25தங்களை அடிமைகளாக வாங்க வந்திருந்தவர்களிடமிருந்து பணத்தைக் கைப்பற்றினார்கள். சிறிது தொலை பகைவர்களைத் துரத்திச் சென்றபின் ஏற்கெனவே நேரமாகிவிட்டதால் அவர்கள் திரும்பி வரவேண்டியதாயிற்று. 26அன்று ஓய்வுநாளுக்கு முந்திய நாளாய் இருந்த காரணத்தால் நீண்ட தொலை அவர்களைத் துரத்திச்செல்லும் முயற்சியைக் கைவிட்டார்கள். 27எதிரிகளின் படைக்கலங்களை ஒன்றுசேர்த்துப் பொருள்களைப் பறித்துக்கொண்ட பின் ஆண்டவரைப் போற்றி நன்றி கூறி ஓய்வுநாளைக் கடைப்பிடித்தார்கள்; ஏனெனில் அவர் அந்நாள்வரை அவர்களைப் பாதுகாத்திருந்தார்; அந்நாளில் அவர்கள்மீது தம் இரக்கத்தைப் பொழியத் தொடங்கியிருந்தார். 28ஓய்வு நாளுக்குப்பின் கொள்ளைப் பொருள்களுள் சிலவற்றைப் போரில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் ஆதரவற்றோர்க்கும் கொடுத்தார்கள்; எஞ்சியதைத் தங்களுக்குள்ளும் தங்கள் பிள்ளைகளோடும் பகிர்ந்து கொண்டார்கள். 29இதன்பின் அவர்கள் பொதுவில் கடவுளிடம் கெஞ்சி மன்றாடினார்கள்; தம் ஊழியர்களோடு முழுமையாக நல்லுறவு கொள்ளும்படி இரக்கமுள்ள ஆண்டவரை இறைஞ்சி வேண்டினார்கள்.


திமொத்தேயு, பாக்கீதின் வீழ்ச்சி


30திமொத்தேயு, பாக்கீது ஆகியோரின் படைகளோடு யூதர்கள் போராடியபோது அவர்களுள் இருபதாயிரத்திற்கும் மிகுதியானவர்களைக் கொன்று, அவர்களின் மிக உயர்ந்த கோட்டைகளுள் சிலவற்றைக் கைப்பற்றினார்கள். மிகுந்த கொள்ளைப் பொருள்களுள் ஒரு பாதியைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டார்கள்; மறு பாதியைப் போரில் துன்புறுத்தப்பட்டோர், ஆதரவற்றோர், கைம்பெண்கள், முதியோர் ஆகியோருக்குப் பகிர்ந்தளித்தார்கள். 31எதிரிகளின் படைக்கலங்களை ஒன்றுசேர்த்து மிகக் கவனத்துடன் அவை அனைத்தையும் போர்த்திறன் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சேமித்துவைத்தார்கள்; எஞ்சிய கொள்ளைப்பொருள்களை எருசலேமுக்குக் கொண்டுசென்றார்கள். 32திமொத்தேயுவின் படைத்தலைவனை அவர்கள் கொன்றார்கள். அவன் மிகக் கொடியவன்; யூதர்களைக் கடுமையாகத் துன்புறுத்தியவன். 33தங்கள் மூதாதையரின் நகரில் வெற்றிவிழாவை அவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, ஏற்கெனவே தூய இடத்தின் கதவுகளைத் தீக்கிரையாக்கியிருந்தோரைச் சுட்டெரித்தார்கள். இவர்களுள், ஒரு சிறு வீட்டிற்குள் ஓடி ஒளிந்து கொண்ட கல்லிஸ்தேனும் ஒருவன், இவ்வாறு இவன் தன் தீச்செயல்களுக்கு ஏற்ற தண்டனையை அடைந்தான்.


நிக்கானோரின் சான்று


34யூதர்களை விலைக்கு வாங்கும்படி ஆயிரம் வணிகர்களைக் கூட்டி வந்திருந்த மாபெரும் கயவனான நிக்கானோரை, 35இழிந்தவர்கள் என்று அவனால் கருதப்பட்டவர்கள் ஆண்டவரின் துணையோடு தோற்கடிக்க, அவன் தன் உயர்தர ஆடையைக் களைந்தெறிந்துவிட்டு, தப்பியோடும் அடிமைபோல் அந்தியோக்கியை அடையும்வரை நாட்டினூடே தனிமையில் ஓடினான். தன் சொந்தப் படையை அழித்ததுதான் அவன் கண்ட பெரும் வெற்றி! 36எருசலேம் மக்களை அடிமைகளாக விற்று, அதன் வழியாகக் கிடைக்கும் தொகையைக் கொண்டு உரோமைகளுக்குத் திறை செலுத்துவதாக உறுதி கூறியிருந்த நிக்கானோர், யூதர்களுக்கு ஒரு பாதுகாவலர் உண்டு என்றும், அவரால் விதிக்கப்பட்ட சட்டங்களை அவர்கள் பின்பற்றுவதால் அவர்களைத் தோற்கடிக்க முடியாது என்றும் அறிக்கையிட்டான்.


8:1-7 1 மக் 3:1-26. 8:8-11 1 மக் 3:38-41. 8:12-19 1 மக் 3:42-54. 8:18 1 சாமு 17:45; திபா 20:7. 8:19 2 மக் 15:22; 2 அர 19:35. 8:21-29 1 மக் 3:55-4:27.


8:10 ‘இரண்டாயிரம் தாலந்து’ என்பது கிரேக்க பாடம்.



அதிகாரம் 9:1-29

அந்தியோக்கின் முடிவு


1அக்காலத்தில் அந்தியோக்கு பாரசீகப் பகுதிகளிலிருந்து இழிவுற்ற நிலையில் பின்வாங்கினான்; 2ஏனெனில் பெர்சப்பொலி என்னும் நகரில் புகுந்து கோவில்களைக் கொள்ளையடிக்கவும் நகரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முயன்றிருந்தான். உடனே மக்கள் படைக்கலங்களோடு தங்களைக் காத்துகொள்ள விரைந்தார்கள்; அவனையும் அவனுடைய ஆள்களையும் தோற்கடித்தார்கள். இதனால் அந்தியோக்கு அப்பகுதி மக்களால் துரத்தியடிக்கப்பட்டு, வெட்கத்தோடு பின்வாங்க நேரிட்டது. 3அவன் எக்பத்தானாவுக்குச் சென்றபோது நிக்கானோருக்கும் திமொத்தேயுவின் படைக்கும் நிகழ்த்தவை பற்றி அறியவந்தான்; 4உடனே சீற்றங் கொண்டான்; தன்னைத் துரத்தியடித்தவர்களால் தனக்கு நேர்ந்த தீங்குகளை யூதர்கள்மேல் திருப்பிவிட எண்ணினான்; ஆகவே, தன் பயணம் முடியும்வரை எந்த இடத்திலும் நிறுத்தாமல் ஓட்டும்படி தன் தேரோட்டிக்குக் கட்டளையிட்டான். ஆனால் விண்ணக இறைவனின் தீர்ப்பு அவனைத் தொடர்ந்தது. ஏனெனில்,‘நான் எருசலேம் சென்றவுடன் அதனை யூதர்களின் கல்லறையாக மாற்றுவேன்’ என்று அவன் இறுமாப்புடன் கூறியிருந்தான். 5அனைத்தையும் காணும் ஆண்டவரும் இஸ்ரயேலின் கடவுளுமானவர் கண்ணுக்குப் புலப்படாத, தீராத நோயால் அவனை வதைத்தார். அவன் மேற்சொன்னவாறு பேசி முடித்தவுடனே, அவனது குடலில் தாங்க முடியாத வலியும் உள்ளுறுப்புகளில் பொறுக்க முடியாத நோவும் ஏற்பட்டன. 6கேட்டிராத பற்பல கொடுமைகளால் பிறருடைய குடல்களை வதைத்திருந்த அவனுக்கு இவ்வாறு நேர்ந்தது முறையே. 7இருப்பினும் அவனுடைய திமிர் எவ்வகையிலும் அடங்கவேயில்லை. அவன் மேலும் இறுமாப்புற்றான். யூதர்களுக்கு எதிராக அவனது சீற்றக் கனல் பற்றியெரிந்தது. எனவே இன்னும் விரைவாகத் தேரை ஓட்டுமாறு கட்டளையிட்டான். ஆனால் மிக விரைவாகப் பாய்ந்து சென்றுகொண்டிருந்த தேரிலிருந்து கீழே வீழ்ந்தான்; அந்தப் படுவீழ்ச்சியால் அவனது உடலின் ஒவ்வோர் உறுப்பும் துன்பத்துக்கு உள்ளாயிற்று 8இவ்வாறு இயல்புக்கு மீறிய இறுமாப்பால் தூண்டப்பட்டு, கடல் அலைகளுக்குத் தன்னால் கட்டளையிட முடியும் என்று நினைத்தவன், உயர்ந்த மலைகளைத் துலாக்கோலில் வைத்துத் தன்னால் நிறுத்தமுடியும் என்று கற்பனை செய்தவன், அந்தோ தரையில் வீழ்த்தப்பட்டான்! கடவுளின் ஆற்றல் அனைவருக்கும் வெளிப்படும் வகையில் ஒரு தூக்குக் கட்டிலில் வைத்துத் தூக்கிச் செல்லப்பட்டான்.✠ 9அக்கொடியவனின் உடலிலிருந்து புழுக்கள் ஒன்றாய்த் திரண்டு எழுந்தன. அவன் கடுந்துன்ப துயரோடு வாட, குற்றுயிராய்க் கிடந்தபடியே அவனது சதை அழுகி விழுந்தது; அதனின்று எழுந்த கொடிய நாற்றத்தால் அவனுடைய படை முழுவதும் அருவருப்பு அடைந்தது. 10விண்மீன்களைத் தன்னால் தொடமுடியும் என்று சற்றுமுன் எண்ணிக்கொண்டிருந்த அவனை, பொறுக்க முடியாத நாற்றத்தின் பொருட்டு அப்போது எவனும் தூக்கிச் செல்ல இயலவில்லை.

11இறுதியில் மனமுடைந்தவனாய்த் தனது இறுமாப்பைக் கைவிடத்தொடங்கினான்; கடவுளால் தண்டிக்கப்பட்ட நிலையில் அறிவு தெளிந்தான்; ஏனெனில், தொடர்ந்து பெருந்துன்பத்திற்கு உள்ளானான். 12தன் நாற்றத்தைத் தானே தாங்கமுடியாதபோது அவன், “கடவுளுக்கு அடங்கியிருப்பதே முறை; அழிவுக்குரிய மனிதன் தன்னைக் கடவுளுக்கு இணையாக எண்ணுவது தவறு” என்று கூறினான். 13அக்கயவன் ஆண்டவருக்கு ஒரு பொருத்தனை செய்தான்; ஆனால் அவர் அவனுக்கு இரக்கம் காட்டுவதாக இல்லை. 14அப்பொருத்தனைப்படி, திருநகரைத் தரை மட்டமாக்கி, அதைக் கல்லறையாக்க விரைந்து வந்தவன் இப்போது அதற்கு விடுதலை கொடுக்க முடிவுசெய்தான்; 15யூதர்கள் அடக்கம் செய்யப்படுவதற்குக் கூடத் தகுதியற்றவர்கள் என்று கருதி, அவர்களையும் அவர்களுடைய பிள்ளைகளையும் காட்டு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இரையாக எறிந்துவிடத் திட்டமிட்டிருந்தவன், அவர்கள் எல்லாரையும் ஏதன்சு நகரத்தாருக்கு இணையாக நடத்தவும் எண்ணினான். 16தான் முன்பு கொள்ளையடித்திருந்த திருக்கோவிலை அழகுமிக்க நேர்ச்சைப் படையல்களால் அணிசெய்வதாகவும், தூய கலன்கள் அனைத்தையும் பன்மடங்காகத் திருப்பிக் கொடுப்பதாகவும், பலிகளுக்கான செலவுகளைத் தன் சொந்த வருவாயிலிருந்து கொடுப்பதாகவும் முடிவு செய்தான்; 17எல்லாவற்றுக்கும் மேலாக, தானே ஒரு யூதனாக மாறுவதாகவும், மக்கள் குடியிருக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று கடவுளுடைய ஆற்றலை அறிக்கையிடுவதாகவும் உறுதி கூறினான்.

18ஆயினும், கடவுளின் முறையான தண்டனைத் தீர்ப்புக்கு அவன் உள்ளானதால், அவனுடைய துன்பங்கள் எவ்வகையிலும் குறையவில்லை. நம்பிக்கை முழுவதும் இழந்தவனாய், கெஞ்சும் மொழியில் ஒரு மடலை யூதர்களுக்கு வரைந்தான். அது வருமாறு: 19“மதிப்புக்குரிய யூத மக்களுக்கு, அவர்களுடைய மன்னரும் படைத்தலைவருமாகிய அந்தியோக்கு, எல்லா நலமும் பெற வாழ்த்தி எழுதுவது: 20நீங்களும் உங்கள் மக்களும் நலமுடன் இருப்பின், உங்கள் விருப்படியே அனைத்தும் சிறப்பாக நடக்குமாயின், எனக்கு மகிழ்ச்சியே. என் நம்பிக்கை விண்ணக இறைவனில் உள்ளதால், 21நீங்கள் என்மீது கொண்டுள்ள மதிப்பையும் நல்லெண்ணத்தையும் அன்புடன் நினைவு கூர்கிறேன்; பாரசீகத்திலிருந்து நான் திரும்புகையில், ஒரு கொடிய நோயால் பீடிக்கப்பட்டேன்; அதனால் உங்கள் அனைவருடைய பொது நலனுக்கும் ஆவன செய்வது இன்றியமையாதது என்று கண்டேன். 22என் நிலையைக் குறித்து நான் மனமுடையவில்லை; ஏனெனில் நோயினின்று நலம் பெறுவேன் என்னும் நம்பிக்கை எனக்குப் பெரிதும் உண்டு. 23என் தந்தை மலை நாடுகளில் தம் படையை நடத்திச் சென்ற வேளைகளில் தமக்கு ஒரு பதிலாளை ஏற்படுத்தியதை நான் அறிவேன். 24இதனால் யாதேனும் எதிர்பாராதது நடப்பினும் அல்லது விரும்பாத செய்திகள் வந்தாலும், அவருடைய ஆட்சிக்குட்பட்ட மக்களுக்குத் தொல்லைகள் நேரா; ஏனெனில் ஆட்சி யாருக்கு உரியது என்பதை அவர்கள் அறிவார்கள். 25இதுதவிர, அண்டை நாட்டு மன்னர்கள், குறிப்பாக என் அரசின் எல்லை நாட்டு மன்னர்கள் தக்கவாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் என்ன நடக்கப்போகிறது என கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆகவே நான் என் மகன் அந்தியோக்கை மன்னராக ஏற்படுத்தியிருக்கிறேன். நான் மலைநாடுகளுக்கு விரைந்தபோதெல்லாம் அவரை உங்களுள் பலருடைய பொறுப்பில் ஒப்படைத்துப் பரிந்துரைத்ததும் உண்டு. இங்கு நான் எழுதியள்ளதை அவருக்கும் எழுதியுள்ளேன். 26ஆகவே, பொதுவாகவும் தனிப்பட்ட முறையிலும் நான் உங்களுக்குச் செய்துள்ள நன்மைகளை நினைவுகூர்ந்து என்மீதும் என் மகன்மீதும் இப்போது கொண்டுள்ள நல்லெண்ணத்தை நீங்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் எனக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். 27அவர் என் கொள்கைகளைப் பின்பற்றி, உங்களைப் பண்போடும் மனிதநேயத்தோடும் நடத்துவார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.”

28இவ்வாறு, கொலைகாரனும் இறைபழிப்போனுமான அந்தியோக்கு மற்றவர்களுக்குக் கொடுத்திருந்தவற்றைப் போன்ற கொடிய துன்பங்களைத் தானும் அனுபவித்தபின் அயல்நாட்டின் மலைகளில் மிகவும் இரங்கத்தக்க நிலையில் சாவைச் சந்தித்தான். 29அந்தியோக்கின் நெருங்கிய நண்பனான பிலிப்பு அவனது உடலை வீட்டுக்கு எடுத்துச்சென்றான்; பின்பு அவனுடைய மகனுக்கு அஞ்சி, எகிப்தில் இருந்த தாலமி பிலமேத்தோரிடம் அடைக்கலம் புகுந்தான்.


9:1-10 1 மக் 6:1-7; 2 மக் 1:11-17. 9:8 2 மக் 5:21. 9:11-17 1 மக் 6:8-17.



அதிகாரம் 10:1-38

6. மீண்டும் யூதர்களின் துன்பம்

கோவில் தூய்மைப்பாடு

1மக்கபேயையும் அவருடைய ஆள்களையும் ஆண்டவர் வழி நடத்திச் செல்லவே அவர்கள் எருசலேம் கோவிலையும் நகரையும் மீட்டுக் கொண்டார்கள்; 2அயல்நாட்டார் பொது இடங்களில் அமைத்திருந்த சிலைவழிபாட்டுக்குரிய பலிபீடங்களையும் கோவில்களையும் இடித்துத் தள்ளினார்கள்; 3எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்தியபின் புதியதொரு பலிபீடம் எழுப்பினார்கள்; கற்களிலிருந்து நெருப்பு உண்டாக்கி, இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பின் பலிகள் ஒப்புக் கொடுத்தார்கள்; நறுமணப்புகை எழுப்பி விளக்கு ஏற்றி காணிக்கை அப்பங்களைப் படைத்தார்கள். 4இவை யாவும் செய்தபின் அவர்கள் குப்புற விழுந்து, இனி ஒருபோதும் இத்தகைய கேடுகள் தங்களுக்கு நேராதவாறு ஆண்டவரை வேண்டினார்கள்; இனிமேல் எப்போதாவது அவர்கள் பாவம் செய்ய நேரிட்டால், அவரால் பரிவோடு தண்டிக்கப்படவும், கடவுளைப் பழிக்கின்ற, பண்பாடு குன்றிய பிற இனத்தாரிடம் கையளிக்கப்படாதிருக்கவும் மன்றாடினார்கள். 5அயல்நாட்டார் கோவிலைத் தீட்டுப்படுத்தியதன் ஆண்டு நிறைவு நாளிலேயே, அதாவது, கிஸ்லேவ் மாதம் இருபத்தைந்தாம் நாளிலேயே கோவில் தூய்மைப்பாட்டு விழா நடைபெற்றது. 6சில நாள்களுக்கு முன் அவர்கள் மலைகளிலும் குகைகளிலும் காட்டு விலங்குகளைப்போல் அலைந்து திரிந்துகொண்டிருந்தபோது கொண்டாடிய கூடாரத் திருவிழாவை நினைவு கூர்ந்து, இவ்விழாவையும் அதைப்போன்றே எட்டு நாளாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்; 7எனவே தழைகளால் அழகுசெய்யப்பட்ட கழிகளையும் பசுங்கிளைகளையும் குருத்தோலைகளையும் ஏந்தியவர்களாய், தமது திருவிடத்தை வெற்றிகரமாகத் தூய்மைப்படுத்தும்படி செய்த கடவுளுக்குப் புகழ்ப்பாக்கள்பாடி நன்றி செலுத்தினார்கள்; 8யூத இனத்தார் அனைவரும் ஆண்டுதோறும் இவ்விழாவைக் கொண்டாடவேண்டும் என்று பொதுவில் சட்டம் இயற்றி முடிவு செய்தார்கள்.


ஐந்தாம் அந்தியோக்கின் ஆட்சித் தொடக்கம்


9எப்பிபான் என்று பெயர்பெற்றிருந்த அந்தியோக்கின் முடிவு இவ்வாறு அமைந்தது. 10அந்தக் கயவனுடைய மகன் அந்தியோக்கு யூப்பாத்தோரின் ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றையும் போர்களின்போது ஏற்பட்ட பேரிடர்களையும் இப்போது சுருக்கமாகக் காண்போம். 11யூப்பாத்தோர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது லீசியாவை ஆட்சியாளனாகவும், கூலேசீரியா, பெனிசியா ஆகிய நாடுகளின் தலைமை ஆளுநராகவும், ஏற்படுத்தினான். 12முன்பு யூதர்களுக்கு இழைக்கப்பட்டிருந்த அநீதியை முன்னிட்டு அவர்களுக்கு நீதி வழங்குவதில் மக்ரோன் என்று அழைக்கப்பெற்ற தாலமி முன்னோடியாகத் திகழ்ந்தான்; அவர்களோடு நல்லுறவை ஏற்படுத்த முயன்றான்; 13இதன் விளைவாக, மன்னனின் நண்பர்களால் யூப்பாத்தோர் முன் அவன் குற்றம்சாட்டப்பட்டான்; பிலமேத்தோர் தன்னிடம் ஒப்படைத்திருந்த சைப்பிரசு நாட்டைக் கைவிட்டதாலும் அந்தியோக்கு எப்பிபானோடு சேர்ந்துகொண்டதாலும் ‘துரோகி’ என்று எல்லாரும் தன்னை அழைப்பதைத் தன் காதால் கேட்டான்; தன் பதவிக்கு ஏற்ற மரியாதையைப் பெற முடியாததால் நஞ்சு உண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டான்.


இதுமேயரின் வீழ்ச்சி


14கோர்கியா அப்பகுதிக்கு ஆளுநனானபோது, கூலிப்படையை அமர்த்தி, வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் யூதர்களைத் தாக்கி வந்தான். 15மேலும் முக்கிய கோட்டைகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இதுமேயரும் யூதர்களுக்குத் தொல்லை கொடுத்துவந்தனர்; எருசலேமிருந்து துரத்தியடிக்கப்பட்டவர்களையும் ஏற்றுக்கொண்டு போரைத் தொடர்ந்து நடத்த முயன்றனர். 16ஆனால் மக்கபேயும் அவருடைய ஆள்களும் பொதுவில் வேண்டுதல் செய்து, கடவுள் தங்கள் சார்பாகப் போரிடுமாறு மன்றாடியபின் இதுமேயருடைய கோட்டைகளை நோக்கி விரைந்தார்கள்; 17விறுவிறுப்போடு அந்த இடங்களைத் தாக்கிக் கைப்பற்றினார்கள்; மதில்மேல் நின்று போராடிய அனைவரையும் துரத்தியடித்தார்கள்; தங்களை எதிர்த்து வந்தவர்களுள் இருபதாயிரம் பேரையாவது வெட்டிக் கொன்றார்கள். 18முற்றுகையைச் சமாளிப்பதற்குத் தேவையானவையெல்லாம் கொண்ட வலிமைவாய்ந்த இரு கோட்டைகளில் குறைந்தது ஒன்பதாயிரம்பேர் அடைக்கலம் புகுந்தார்கள். 19அப்போது மக்கபே, அவற்றை முற்றகையிடப் போதுமான ஒருபடையை, அதாவது சீமோன், யோசேப்பு ஆகியோருடன் சக்கேயுவையும் அவருடைய ஆள்களையும் விட்டுவிட்டு, தமது உதவி மிகவும் தேவைப்பட்ட இடங்களுக்குச் சென்றார். 20ஆனால் சீமோனுடைய ஆள்களுள் பணத்தாசை கொண்டவர்கள் கோட்டைகளில் இருந்த சிலரிடமிருந்து இருநூற்றுப் பத்து கிலோ⁕ வெள்ளியைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு அவர்களுள் சிலரைத் தப்பியோட விட்டுவிட்டார்கள். 21நடந்தது பற்றி மக்கபேயுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர் மக்களின் தலைவர்களைக் கூட்டினார்; தங்களுக்கு எதிராக மீண்டும் போரிடும்பொருட்டுப் பகைவர்களை விட்டுவிட்டதன் மூலம் பணத்திற்காகத் தங்கள் உறவின்முறையினையே விற்றுவிட்டார்கள் என்று அவர்கள்மேல் குற்றம் சாட்டினார்; 22இவ்வாறு காட்டிக்கொடுத்த அந்த ஆள்களைக் கொன்றார்; இரு கோட்டைகளையும் உடனடியாகக் கைப்பற்றினார். 23தம் படைவலியால் தம் முயற்சிகளிலெல்லம் வெற்றி கண்ட அவர் அந்த இரண்டு கோட்டைகளிலும் இருந்தவர்களுள் இருபதாயிரத்திற்கும் மிகுதியானவர்களைக் கொன்றார்.


திமொத்தேயுவின் வீழ்ச்சி


24முன்பு யூதர்களால் தோற்கடிக்கப்பட்ட திமொத்தேயு எண்ணற்ற அயல் நாட்டவரைக் கொண்ட கூலிப்படையைத் திரட்டினான்; ஆசியாவிலிருந்து மாபெரும் குதிரைப்படையையும் சேர்த்துக்கொண்டு யூதேயாநாட்டைப் படைவலியால் கைப்பற்றும் எண்ணத்தோடு வந்தான். 25அவன் நெருங்கி வந்தபோது மக்கபேயும் அவருடைய ஆள்களும் தங்கள் தலைமேல் புழுதியைத் தூவிக்கொண்டும் தங்கள் இடையில் சாக்கு உடை உடுத்திக் கொண்டும் கடவுளிடம் கெஞ்சி மன்றாடினார்கள்; 26பலிப்பீடத்தின்முன் இருந்த படி மீது குப்புற விழுந்து தங்கள் மீது இரக்கம் காட்டவும் திருச்சட்டம் கூறுவது போலத் தங்கள் எதிரிகளுக்கு எதிரிகளாகவும் பகைவர்களாகவும் இருக்கவும் அவரை வேண்டினார்கள்.✠

27வேண்டலுக்குப்பின் தங்கள் படைக்கலங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் நகரிலிருந்து நெடுந்தொலை சென்றார்கள்; எதிரிகள் இருந்த இடத்திற்கு அருகில் வந்ததும் அங்குத் தங்கினார்கள். 28பொழுது புலர்ந்ததும் இரு படையினரும் போர்தொடுத்தனர். யூதர்கள் தங்கள் வெற்றிக்கும் புகழுக்கும் தங்கள் வலிமையை மட்டும் நம்பவில்லை; ஆண்டவர்மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். மற்றவர்களுக்கு அவர்களது சீற்றமே படைத்தலைவனாய் அமைந்தது. 29போர் கடுமையானபோது ஒளி பொருந்திய ஐந்து மனிதர்கள் பொற் கடிவாளம் பூட்டிய குதிரைகள் மேல் அமர்ந்து யூதர்களை நடத்துவது போன்று பகைவர்களுக்கு விண்ணிலிருந்து தோன்றினார்கள். 30அந்த ஐவரும் மக்கபேயைச் சூழ்ந்துகொண்டு தங்கள் படைக்கலங்களால் அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்து, காயப்படாதவாறு அவரைக் காப்பாற்றினார்; பகைவர்கள்மீது அம்புகளையும் தீக்கணைகளையும் வீசினர். அதனால் பகைவர்கள் பார்வை இழந்து குழப்பம் அடைந்து சிதறண்டு ஓட, யூதர்கள் அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள். 31இருபதாயிரத்து ஐந்நூறு காலாட்படை வீரர்களும் அறுநூறு குதிரை வீரர்களும் கொல்லப்பட்டார்கள்

32கைரயா என்ற படைத்தலைவனுடைய நன்கு அரண் செய்யப்பட்ட கசாரா என்ற கோட்டைக்குத் திமொத்தேயு தப்பியோடினான். 33அப்போது மக்கபேயும் அவருடைய ஆள்களும் எழுச்சியுற்றுக் கோட்டையை நான்கு நாளாய் முற்றுகையிட்டார்கள். 34கோட்டைக்கு உள்ளே இருந்தவர்கள் அதன் வலிமையில் நம்பிக்கை கொண்டு, இழி சொற்களால் இறைவனைப் பழித்துக்கொண்டிருந்தார்கள். 35ஐந்தாம் நாள் விடிந்தபோது மக்கபேயின் படையைச் சேர்ந்த இருபது இளைஞர்கள் இத்தகைய இறைப்பழிப்பைக் கேட்டுச் சீற்றங்கொண்டு, துணிவுடன் மதிலைத் தாக்கிக் காட்டு விலங்கு போலச் சீறிப் பாய்ந்து தாங்கள் எதிர்கொண்டவர்கள் அனைவரையும் வெட்டி வீழ்த்தினார்கள். 36மற்றவர்கள் மேலே ஏறிச்சென்று எதிரிகளைச் சுற்றி வளைத்துக்கொண்டு, கோட்டைகளுக்குத் தீ வைத்தார்கள்; அத்தீயைக் கிளறி விட்டு இறைவனைப் பழித்தவர்களை உயிருடன் எரித்தார்கள். மற்றும் சிலர் கதவுகளை உடைத்து எஞ்சியிருந்த படைவீரர்களை உள்ளே நுழையவிட, அவர்கள் நகரைக் கைப்பற்றினார்கள். 37ஒரு கிணற்றில் ஒளிந்துகொண்டிருந்த திமொத்தேயுவையும் அவனுடைய சகோதரனான கைரயாவையும் அப்பொல்லோபானையும் அவர்கள் கொன்றார்கள். 38இவற்றையெல்லாம் அவர்கள் செய்து முடித்தபின், இஸ்ரயேல் மீது பேரிரக்கம் காட்டுபவரும் அதற்கு வெற்றியை வழங்குபவருமாகிய ஆண்டவரைப் புகழ்ப்பாக்களாலும் நன்றிப் பாடல்களாலும் போற்றினார்கள்.


10:1-8 1 மக் 4:36-61. 10:14-23 1 மக் 5:1-8. 10:26 விப 23:22.


10:20 ‘எழுபதாயிரம் திராக்மா’ என்பது கிரேக்க பாடம்.



அதிகாரம் 11:1-38

லீசியாவின் வீழ்ச்சி


1சிறிது காலத்திற்குப்பின் மன்னனுடைய பாதுகாவலனும் உறவினனும் ஆட்சிப் பொறுப்பாளனுமான லீசியா நடந்தவற்றைக் கண்டு பெரிதும் எரிச்சல் அடைந்தான். 2ஏறத்தாழ எண்பதாயிரம் காலாட்படையினரையும் குதிரைப்படையினர் அனைவரையும் திரட்டிக்கொண்டு யூதர்களுக்கு எதிராகப் புறப்பட்டான்; எருசலேம் நகரைக் கிரேக்கர்களின் குடியிருப்பாக மாற்றத் திட்டமிட்டான்; 3பிறஇனத்தாரின் கோவில்கள் மீது வரி விதித்ததுபோல் எருசலேம் கோவில் மீதும் வரி விதிக்கவும் ஆண்டுதோறும் தலைமைக் குரு பீடத்தை விலை பேசவும் எண்ணினான். 4கடவுளின் ஆற்றல் பற்றி அவன் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை; மாறாக, பெருந்திரளான தன் காலாட்படையினரையும் ஆயிரக்கணக்கான குதிரைப்படையினரையும் எண்பது யானைகளையும் நம்பி இறுமாப்புக் கொண்டான். 5யூதேயா நாட்டின் மீது லீசியா படையெடுத்துச் சென்று, எருசலேமிலிருந்து ஏறத்தாழ முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அரண்சூழ் நகரான பெத்சூரை நெருங்கி அதை வன்மையாகத் தாக்கினான்.

6கோட்டைகளை லீசியா முற்றுகையிட்டதுபற்றி மக்கபேயும் அவருடைய ஆள்களும் அறிய நேர்ந்தது. அப்பொழுது இஸ்ரயேலை மீட்க ஒரு நல்ல வானதூதரை அனுப்புமாறு அவர்களும் எல்லா மக்களும் அழுது புலம்பி மன்றாடினார்கள். 7மக்கபே தாமே முதலில் படைக்கலம் எடுத்துக்கொண்டார்; தங்கள் உறவின் முறையினருக்கு உதவி புரியம்படி மற்றவர்களும் தம்மோடு சேர்ந்து தங்கள் உயிரைப் பணயம் வைக்குமாறு தூண்டினார். அவர்களும் விருப்புடன் ஒன்றாகச் சேர்ந்து முன்னேறிச் சென்றார்கள். 8அவர்கள் எருசலேமுக்கு அருகில் இருந்தபோதே, வெண்ணாடை அணிந்து பொன் படைக்கலங்களைச் சுழற்றிக்கொண்டிருந்த குதிரைவீரர் ஒருவர் அவர்களது தலைக்குமேல் தோன்றினார். 9அப்போது அவர்கள் அனைவரும் இணைந்து இரக்கமுள்ள கடவுளைப் போற்றினார்கள்; அவர்கள் எத்துணை ஊக்கம் அடைந்திருந்தார்கள் என்றால், மனிதரை மட்டுமல்ல, கொடிய காட்டு விலங்குகளையும் இரும்பு மதில்களையுமே தாக்கும் அளவுக்குத் துணிந்திருந்தார்கள். 10விண்ணக இறைவனாகிய ஆண்டவர் அவர்கள்மீது இரக்கங்கொண்டு, அவர்களுக்குத் துணைசெய்யவே, அவர்கள் போரில் முன்னேறிச் சென்றார்கள். 11அவர்கள் சிங்கங்களைப்போலத் தங்கள் எதிரிகள்மீது சீறிப் பாய்ந்து அவர்களுள் பதினோராயிரம் காலாட்படையினரையும் ஆயிரத்து அறுநூறு குதிரைப் படையினரையும் கொன்றார்கள்; எஞ்சியிருந்த அனைவரையும் புறமுதுகு காட்டி ஓடச் செய்தார்கள். 12அவர்களுள் பலர் காயமடைந்து படைக்கலங்களை இழந்து தப்பிச் சென்றார்கள். லீசியாவும் இழிவுற்றுத் தப்பியோடினான்.


லீசியா யூதர்களோடு சமாதானம் செய்துகொள்ளல்


13அறிவாளியான லீசியா தனக்கு நேரிட்ட தோல்வியைப்பற்றிச் சிந்திக்கலானான்; ஆற்றல் படைத்த கடவுள் யூதர்கள் சார்பாகப் போரிட்டதால்தான் அவர்களை வெல்ல முடியவில்லை என்பதை உணர்ந்துகொண்டான். 14ஆகவே அவர்களிடம் ஆள் அனுப்பி முறையாக உடன்பாட்டுக்கு இசையுமாறு அவர்களைத் தூண்டினான்; மன்னனை வற்புறுத்தி அவர்களின் நண்பனாக்க முயல்வதாக உறுதி மொழிந்தான். 15பொது நன்மையைக் கருதி லீசியாவின் பரிந்துரைகள் அனைத்துக்கும் மக்கபே இசைந்தார்; அவர் யூதர்கள் சார்பாக அவனிடம் எழுத்துமூலம் விடுத்திருந்த வேண்டுகோள்கள் அனைத்தையும் மன்னன் ஏற்றுக்கொண்டான்.

16லீசியா யூதர்களுக்கு எழுதிய மடல் பின்வருமாறு: “யூத மக்களுக்கு லீசியா வாழ்த்துக் கூறி எழுதுவது: 17நீங்கள் அனுப்பி வைத்த யோவானும் அப்சலோமும் உங்களது மனுவை என்னிடம் கொடுத்து அதில் குறிப்பிட்டுள்ளவற்றை நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டார்கள். 18மன்னருக்குத் தெரிவிக்கப்பட வேண்டிய அனைத்தையும் நான் ஏற்கெனவே அறிவித்து விட்டேன்; அவரும் தம்மால் கூடுமானவற்றைச் செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார். 19அரசிடம் நீங்கள் நல்லெண்ணம் காட்டினால் எதிர்காலத்தில் உங்கள் நலனுக்காப் பாடுபட முயல்வேன். 20இவற்றைப் பற்றி விளக்கமாக உங்களோடு கலந்து பேசுமாறு உங்களுடைய தூதர்களுக்கும் என்னுடைய பிரதிநிதிகளுக்கும் பணித்திருக்கிறேன். 21வணக்கம். நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு⁕ தியோகொரிந்து மாதம் இருபத்து நான்காம் நாள் இம்மடல் விடுக்கப்பட்டது.”

22லீசியாவுக்கு மன்னன் விடுத்த மடல் வருமாறு: “தம் சகோதரர் லீசியாவுக்கு அந்தியோக்கு மன்னர் வாழ்த்துக் கூறி எழுதுவது: 23எம் தந்தை இறையடி சேர்ந்துவிட்டதால் நம் ஆட்சிக்கு உட்பட்ட குடிமக்கள் கலக்கமின்றித் தங்கள் அலுவல்களில் ஈடுபடவேண்டும் என விரும்புகிறோம். 24கிரேக்கர்களுடைய பழக்கவழக்கங்களை யூதர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எம் தந்தை கொண்டுவந்திருந்த திட்டத்திற்கு அவர்கள் இணங்கவில்லை என்றும், தங்கள் வாழ்க்கை முறையையே அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள விரும்புகிறார்கள் என்றும், தங்கள் பழக்கவழக்கங்களையே கடைப்பிடிக்க நம்மிடம் இசைவு கேட்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டோம். 25இம்மக்களும் தொல்லையின்றி வாழவேண்டும் என நாம் விரும்புவதால், அவர்களுடைய கோவில் அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்படவேண்டும் என்றும், அவர்கள் தங்கள் மூதாதையருடைய பழக்க வழக்கப்படியே வாழலாம் என்றும் நாம் முடிவு செய்கிறோம். 26ஆகையால் நீர் அவர்களுக்கு இச்செய்தியை அனுப்பி, நமது நட்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அதனால் அவர்கள் நம் முடிவுகளை அறிந்து கவலையின்றித் தங்கள் அலுவல்களில் மகிழ்ச்சியோடு ஈடுபடுவார்கள்.”

27யூத மக்களுக்கு மன்னர் விடுத்த மடல் வருமாறு: “யூதர்களின் ஆட்சிக்குழுவினருக்கும் மற்ற யூதர்களுக்கும் அந்தியோக்கு மன்னர் வாழ்த்துக் கூறி எழுதுவது: 28நலம். நலம் அறிய நாட்டம். 29நீங்கள் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்று, உங்கள் சொந்த அலுவல்களைக் கவனிக்க விரும்புவதாக மெனலா எம்மிடம் தெரிவித்துள்ளார். 30ஆதலால், சாந்திக்கு மாதம் முப்பதாம் நாளுக்குள் வீடு திரும்பகிறவர்கள் எல்லாருக்கும் நமது ஆதரவு எப்போதும் உண்டு. 31முன்புபோல யூதர்கள் தங்கள் உணவுமுறைகளையும் சட்டங்களையும் கடைப்பிடிக்க முழு இசைவு அளிக்கிறோம். அறியாமையால் செய்திருக்கக்கூடிய குற்றங்களில் யாதொன்றுக்காகவும் எவ்வகையிலும் அவர்களுள் எவனும் தொல்லைக்கு உள்ளாகமாட்டான். 32உங்களுக்கு ஊக்கமூட்ட மெனலாவை அனுப்பியுள்ளோம். 33வணக்கம். நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு⁕ சாந்திக்கு மாதம் பதினைந்தாம் நாள் இம்மடல் விடுக்கப்பட்டது.”

34உரோமையர்களும் யூதர்களுக்கு ஒரு மடல் விடுத்தார்கள். அம்மடல் பின்வருமாறு: “யூத மக்களுக்கு உரோமையர்களுடைய தூதர்களாகிய குயிந்துமெம்மியும் தீத்து மானியும் வாழ்த்துக்கூறி எழுதுவது: 35மன்னரின் உறவினரான லீசியா உங்களுக்கு வழங்கியுள்ள சலுகைகளுக்கு நாங்களும் இசைவு தெரிவிக்கிறோம். 36ஆனால் மன்னரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தவற்றை நீங்கள் ஆராய்ந்தவுடன் உங்களுள் ஒருவரை எங்களிடம் அனுப்பிவையுங்கள். அப்போது உங்களுக்கு ஏற்ற கோரிக்கைகளை மன்னர்முன் வைக்க முடியும்; ஏனெனில் நாங்கள் அந்தியோக்கி நகருக்குப் போய்க்கொண்டிருக்கிறோம். 37எனவே உங்களது கருத்தை நாங்கள் அறிந்துகொள்ளும் பொருட்டுக் காலம் தாழ்த்தாது ஆளனுப்புங்கள். 38வணக்கம். நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு⁕ சாந்திக்கு மாதம் பதினைந்தாம் நாள் இம்மடல் விடுவிக்கப்பட்டது.”


11:1-12 1 மக் 4:26-35. 11:13-15 1 மக் 6:56-61. 11:21 கி.மு. 164. 11:33 கி.மு. 164. 11:38 கி.மு. 164.



அதிகாரம் 12:1-45

யாப்பாவில் யூதர்களின் அழிவு


1இந்த ஒப்பந்தங்களைச் செய்து கொண்டபின், மன்னனிடம் லீசியா திரும்பிச் சென்றான். யூதர்கள் தங்கள் பயிர்த்தொழிலில் ஈடுபட்டார்கள். 2ஆனால் அந்தந்த இடத்துக்கு ஆளுநர்களாகத் திமொத்தெயு, கென்னாயின் மகனான அப்பொல்லோன், மற்றும் ஏரோனிம், தெமோபோன் ஆகியோருடன் சேர்ந்து சைப்பிரசு நாட்டு ஆளுநனான நிக்கானோரும் யூதர்களைத் தொல்லையின்றி அமைதியாக வாழவிடவில்லை.

3இதே காலத்தில், யாப்பா நகரத்தார் மாபெரும் துரோகம் புரிந்தார்கள்; தங்களோடு வாழ்ந்துவந்த யூதர்களிடம் பகைமை அற்றவர்போல் காட்டிக் கொண்டு, அவர்களை மனைவி மக்களோடு, தாங்கள் ஏற்பாடு செய்திருந்த படகுகளில் ஏறும்படி கேட்டுக்கொண்டார்கள். 4இது நகரத்தாரின் பொது இசைவுடன் செய்யப்பட்டதால், அமைதியில் வாழ விரும்பிய யூதர்கள் யாதொரு ஐயப்பாட்டுக்கும் இடம் கொடாது அதற்கு இசைந்தார்கள். யாப்பா நகரத்தார் அவர்களைக் கடலுக்குள் கொண்டுபோய் மூழ்கடித்தார்கள். இவ்வாறு மூழ்கடிக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய இருநூறு பேர்.

5தம் இனத்தாருக்குச் செய்யப்பட்ட இக்கொடுமைபற்றி யூதா கேள்விப்பட்டு அதை அவர் தம் வீரர்களுக்குத் தெரிவித்தார்; 6நேர்மையான நடுவராகிய கடவுளை மன்றாடிவிட்டுத் தம் சகோதரர்களைக் கொன்றவர்களை எதிர்த்துச் சென்றார்; இரவில் துறைமுகத்துக்குத் தீவைத்துப் படகுகளைக் கொளுத்தினார்; அங்கு அடைக்கலம் புகுந்திருந்தவர்களை வாளுக்கு இரையாக்கினார்; 7நகர வாயில்கள் அடைபட்டிருந்ததால் அவர் திரும்பிச் சென்றார்; மீண்டும் வந்து யாப்பா நகரத்தார் அனைவரையும் அறவே அழிக்கத் திட்டமிட்டார்.

8யாம்னியா மக்களும் தங்களிடையே வாழ்ந்துவந்த யூதர்களை இவ்வாறே கொல்லத் திட்டமிட்டிருந்தார்கள் என்று அவர் அறிய வந்தார்; 9இரவில் யாம்னியா மக்களைத் தாக்கினார்; கப்பற்படையோடு சேர்த்துத் துறைமுகத்துக்குத் தீவைத்தார். இத்தீப்பிழம்பின் செந்தழல் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்த எருசலேம் வரை தெரிந்தது.


கிலயாதுமீது படையெடுப்பு


10யூதர்கள் யாம்னியாவிலிருந்து திமொத்தேயுவை எதிர்த்து ஏறத்தாழ இரண்டு கிலோ மீட்டர் சென்ற போது ஐந்நூறு குதிரைவீரர்களுடன் குறைந்தது ஐயாயிரம் அரேபியர்கள் அவர்களை எதிர்த்தார்கள். 11கடுஞ் சண்டைக்குப்பின் கடவுளின் உதவியால் யூதாவும் அவருடைய ஆள்களும் வெற்றி பெற்றார்கள். தோல்வியுற்ற அந்த நாடோடிகள் தங்களோடு சமாதானம் செய்துகொள்ளுமாறு யூதாவைக் கேட்டுக்கொண்டார்கள்; அவருக்குக் கால்நடைகளைக் கொடுப்பதாகவும் அவருடைய ஆள்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதாகவும் உறுதி மொழிந்தார்கள். 12அவர்கள் பலவகையிலும் உண்மையிலேயே தமக்குப் பயன்படுவார்கள் என்று உணர்ந்த யூதா அவர்களோடு சமாதானம் செய்துகொள்ள உடன்பட்டார். அவரிடமிருந்து உறுதி பெற்றபின் அவர்கள் தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினார்கள்.

13பல்வேறு இனத்தவர் வாழ்ந்த, மதில்களோடு நன்கு அரண்செய்யப்பட்ட ஒரு நகரையும் யூதா தாக்கினார். அதன் பெயர் காஸ்பின். 14அதன் உள்ளே இருந்தவர்கள் மதில்களின் வலிமையையும் சேகரிக்கப்பட்ட உணவுப்பொருள்களையும் நம்பி யூதாவிடமும் அவருடைய ஆள்களிடமும் சற்றும் மரியாதையின்றி நடந்து கொண்டார்கள். இழிசொற்களால் அவர்களைத் திட்டியதோடு இறைவனையும் பழித்தார்கள். 15ஆனால் இடிக்கும் கருவிகளையும் படைப்பொறிகளுமின்றி யோசுவா காலத்தில் எரிகோவைத் தரைமட்டமாக்கிய உலகின் பெரும் தலைவரை யூதாவும் அவருடைய ஆள்களும் துணைக்கு அழைத்து மதில்களை நோக்கிச் சீற்றத்துடன் பாய்ந்து சென்றார்கள். 16கடவுளின் திருவுளத்தால் நகரைக் கைப்பற்றினார்கள்; எண்ணற்ற பேரைக் கொன்றார்கள். இதனால் அருகே இருந்த ஏறக்குறைய அரை கிலோ மீட்டர் அகலமான ஏரி குருதியால் நிரம்பி வழிந்தது போலத் தோன்றியது.


கர்னாயிம் மீது தாக்குதல்


17அவர்கள் அங்கிருந்து ஏறத்தாழ நூற்றைம்பது கிலோமீட்டர் கடந்து சென்றபின் ‘தோபியர்’⁕ என்று அழைக்கப்பெற்ற யூதர்கள் வாழ்ந்து வந்த காராகா என்னும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். 18அவர்கள் அங்கே திமொத்தேயுவைக் காணவில்லை; ஏனெனில் ஓர் இடத்தில் வலிமை வாய்ந்த ஒரு காவற்படையை நிறுத்தி வைத்ததைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவன் அங்கிருந்து ஏற்கெனவே புறப்பட்டுச் சென்றுவிட்டான். 19மக்கபேயிடம் படைத்தலைவர்களாய் இருந்த தொசித்தும் சோசிபத்தரும் அணிவகுத்துச் சென்று ஒரு கோட்டையில் திமொத்தேயு விட்டுவைத்திருந்த பத்தாயிரத்துக்கும் மிகுதியானவர்களை அழித்தார்கள். 20மக்கபே தம் படைகளை அணி அணியாய்ப் பிரித்து ஒவ்வோர் அணிக்கும் ஒரு தலைவரை ஏற்படுத்தியபின், திமொத்தேயுவைத் துரத்திச் சென்றார். அவனிடம் இலட்சத்து இருபதாயிரம் காலாட்படையினரும் இரண்டாயிரத்து ஐந்நூறு குதிரைப்படையினரும் இருந்தனர். 21யூதா தன்னை நெருங்கி வருவதை அறிந்த போது திமொத்தேயு பெண்களையும் பிள்ளைகளையும் பொருள்களையும் கர்னாயிம் நகருக்கு அனுப்பினான்; அங்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் ஒடுக்கமானவையாய் இருந்தமையால் அந்த இடம் முற்றுகையிடுவதற்குக் கடினமாயும் நெருங்குவதற்கு அரிதாயும் இருந்தது. 22ஆனால் யூதாவின் முதல் அணியைக் கண்டவுடனேயே அச்சமும் கலக்கமும் பகைவர்களை ஆட்கொண்டன; ஏனெனில் அனைத்தையும் காண்பவர் அவர்களுக்குத் தோன்றினார். எனவே அவர்கள் மிரண்டு தலைதெறிக்க ஓடி எல்லாப் பக்கத்திலும் சிதறுண்டு போனார்கள்; தங்களுடைய ஆள்களின் வாள் முனைகளாலேயே குத்தப்பட்டு அடிக்கடி ஒருவர் மற்றவரைக் காயப்படுத்திக் கொண்டார்கள். 23யூதா மிகுந்த வலிமையோடு அவர்களைப் பின்தொடர்ந்து அந்தக் கொடியவர்களை வாளுக்கு இரையாக்கினார்; அவர்களுள் முப்பதாயிரம் பேரை அழித்தார். 24தொசித்து, சோசிபத்தர், அவர்களுடைய ஆள்கள் ஆகியோருடைய கையில் திமொத்தேயுவே அகப்பட்டுக் கொண்டான். தன்னை உயிரோடு போகவிடவேண்டும் என்று நயவஞ்சமாக அவர்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்; அவர்களுள் பெரும்பாலோருடைய பெற்றோரும் சகோதரரும் தன்னுடைய பிடியில் இருந்ததால், எச்சலுகையும் அவர்களுக்குக் காட்டப்படமாட்டாது என்று கூறியிருந்தான். 25எத்தீங்கும் செய்யாமல் அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுவதாகக் கொடுத்திருந்த தனது வாக்கை அவன் மீண்டும் உறுதிப்படுத்தியதால், தங்கள் சகோதரர்களைக் காப்பாற்றும்பொருட்டு அவனை அவர்கள் விட்டுவிட்டார்கள்.

26யூதா அதன்பின் கர்னாயிமையும் அத்தர்காத்துக் கோவிலையும் எதிர்த்துச் சென்று இருபத்தையாயிரம் பேரைக் கொன்றார்; 27அவர்களை முறியடித்துக் கொன்றபின் எபிரோனை எதிர்த்துச் சென்றார். அரண்சூழ்ந்த அந்நகரில்தான் பன்னாட்டு மக்கள் கூட்டத்தோடு லீசியா வாழ்ந்துவந்தான். வலிமைமிக்க இளைஞர்கள் மதில்களுக்கு முன்பாக நின்றுகொண்டு அவற்றைத் துணிவுடன் பாதுகாத்தார்கள். அங்குப் படைப்பொறிகளும் எறிபடைகளும் மிகுதியாக இருந்தன. 28தமது ஆற்றலால் பகைவர்களின் வலிமையைச் சிதறடிக்க வல்லவரான இறைவனிடம் யூதர்கள் மன்றாடியபின், நகரைக் கைப்பற்றினார்கள்; அதில் இருந்தவர்களுள் இருபத்தையாயிரம் பேரைக் கொன்றார்கள். 29அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு எருசலேமிலிருந்து நூற்று இருபது கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்த சித்தோப்பொலிக்கு விரைந்தார்கள். 30ஆனால் அங்கு வாழ்ந்த யூதர்கள், சித்தோப்பொலி மக்கள் தங்களை நன்கு நடத்தியதற்கும் துன்ப காலத்திலும் தங்களுக்கு அன்பு காட்டியதற்கும் சான்று பகர்ந்தார்கள். 31அதனால் யூதாவும் அவருடைய ஆள்களும் சித்தோப்பொலி மக்களுக்கு நன்றி கூறி எதிர்காலத்திலும் தங்கள் இனத்தாருடன் அன்புறவோடு வாழும்படி கேட்டுக் கொண்டார்கள். பின் பெந்தேகோஸ்து திருவிழா⁕ நெருங்கி வந்தமையால் எருசலேமுக்குச் சென்றார்கள்.


கோர்கியாமீது வெற்றி


32யூதர்கள் பெந்தேகோஸ்து திருவிழாவுக்குப்பின் இதுமெயா நாட்டு ஆளுநனான கோர்கியாவை எதிர்க்க விரைந்தார்கள். 33அவன் மூவாயிரம் காலாட்படையினரோடும் நானூறு குதிரைப்படையினரோடும் அவர்களை எதிர்த்துச் சென்றான். 34அவர்கள் போர் தொடுத்தபோது யூதர்களுள் சிலர் கொலை செய்யப்பட்டார்கள். 35ஆனால் பக்கேனோருடைய ஆள்களுள் வலிமைமிக்க ஒருவரான தொசித்து குதிரைமேல் இருந்தபடியே கோர்கியாவைப் பிடித்துக்கொண்டார். அந்தக் கயவனுடைய மேலாடையைப் பற்றிக்கொண்டு அவனை மிக்க வலிமையோடு இழுத்த வண்ணம் உயிரோடு பிடித்துச் செல்ல எண்ணியிருந்தபோது, திராக்கோன் குதிரைவீரர்களுள் ஒருவன் தொசித்துமீது பாய்ந்து அவருடைய தோளைத் துண்டித்தான். ஆகவே கோர்கியா மாரிசாவுக்குத் தப்பியோடினான். 36எஸ்தரியும் அவருடைய ஆள்களும் நீண்ட நேரம் போர்செய்து களைப்புற்றிருந்ததால், தங்கள் சார்பாக இருந்து போரிடுவதோடு தலைமையேற்று நடத்துமாறு ஆண்டவரை யூதா வேண்டினார்; 37தம் தாய் மொழியில் போர்க்குரல் எழுப்பிப் புகழ்ப்பாக்கள் இசைத்தார். எதிர் பாராத நேரத்தில் கோர்கியாவின் படையின்மீது பாய்ந்து அவர்களைப் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்தார்.


இறந்தோருக்காக வேண்டுதல்


38பின் யூதா தம் படையைத் திரட்டிக் கொண்டு அதுல்லாம் நகரை அடைந்தார். ஏழாம் நாள் வந்தபோது அவர்கள் தங்கள் வழக்கப்படி தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு அவ்விடத்தில் ஓய்வு நாளைக் கடைப்பிடித்தார்கள். 39போரில் மடிந்தவர்களின் சடலங்களை எடுத்து அவர்களுடைய மூதாதையரின் கல்லறைகளில் உறவினர்களோடு அடக்கம் செய்ய வேண்டியிருந்ததால், அவற்றைக் கொண்டுவரும்படி மறுநாள் யூதாவும் அவருடைய ஆள்களும் புறப்பட்டார்கள். 40ஆனால் யூதர்கள் அணியலாகாது என்று திருச்சட்டம் தடைசெய்திருந்த, யாம்னியாவில் இருந்த சிலைகளின் அடையாளங்கள் கொலையுண்ட ஒவ்வொருவரின் ஆடைக்குள்ளும் தென்பட்டன. இதனால்தான் அவர்கள் மடிந்தார்கள் என்பது அப்போது எல்லாருக்கும் தெளிவாயிற்று.✠ 41ஆகவே மறைவானவற்றை வெளிப்படுத்துகிற, நீதியுள்ள நடுவராகிய ஆண்டவரின் செயல்களை எல்லாரும் போற்றினார்கள்; 42அந்தப் பாவத்தை முற்றிலும் துடைத்தழிக்குமாறு வேண்டியவண்ணம் மன்றாட்டில் ஈடுபட்டார்கள். பாவத்தினின்று அகலும்படி பெருமகனார் யூதா மக்களுக்கு அறிவுரை கூறினார்; ஏனெனில் பாவத்தின் விளைவாக மடிந்தவர்களுக்கு நேர்ந்ததை அவர்கள் தங்கள் கண்ணாலேயே பார்த்தார்கள். 43பின்பு அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர் பணம் திரட்டி ஆறு கிலோ⁕ வெள்ளி சேகரித்து, பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுக்கும்படி எருசலேமுக்கு அனுப்பிவைத்தார்; இச்செயல்மூலம் உயிர்த்தெழுதலை மனத்தில் கொண்டு நன்முறையில், மேன்மையாக நடந்து கொண்டார். 44ஏனெனில் வீழ்ந்தோர் மீண்டும் எழுவர் என்பதை எதிர் பார்த்திருக்கவில்லை என்றால், அவர் இறந்தோருக்காக மன்றாடியது தேவையற்றதும் மடமையும் ஆகும். 45ஆனால் இறைப்பற்றுடன் இறந்தோர் சிறந்த கைம்மாறு பெறுவர் என்று அவர் எதிர்பார்த்திருப்பாரெனில், அது இறைப்பற்றை உணர்த்தும் தூய எண்ணமாகும். ஆகவே இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி அவர் அவர்களுக்காகப் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுத்தார்.


12:10-16 1 மக் 5:9-54; 12:15; யோசு 6:1-21. 12:17-25 1 மக் 5:37-44. 12:26-31 1 மக் 5:45-54. 12:40 இச 7:25.


12:17 தோபி நாட்டில் வாழ்ந்ததால் தோபியர் என்று பெயர் பெற்றனர். (காண் 1மக் 5:13). 12:31 ‘வாரங்களின் விழா’ என்பது மூலப்பாடம் (காண் விப 34:22; இச 16:10). 12:43 ‘இரண்டாயிரம் திராக்மா’ என்பது கிரேக்க பாடம்.



அதிகாரம் 13:1-26

மெனலாவின் இறப்பு


1நூற்று நாற்பத்தொன்பதாம் ஆண்டு⁕ அந்தியோக்கு யூப்பாத்தோர் பெரும் படையோடு யூதேயாவை எதிர்த்து வருவதாக யூதாவுக்கும் அவருடைய ஆள்களுக்கும் செய்தி எட்டியது. 2அவனுடைய பாதுகாப்பாளனும் ஆட்சிப் பொறுப்பாளனுமான லீசியாவும் அவனோடு வந்திருந்தான். இலட்சத்துப் பத்தாயிரம் காலாள்கள், ஐயாயிரத்து முந்நூறு குதிரைவீரர்கள், இருபத்திரண்டு யானைகள், வாள் பூட்டிய முந்நூறு தேர்கள் அடங்கிய கிரேக்கப் படை ஒன்று அவர்களுக்கு⁕ இருந்தது.

3மெனலாவும் அவர்களோடு சேர்ந்துகொண்டு அந்தியோக்குக்கு நயவஞ்சமாக ஊக்கமூட்டினான்; தன் நாட்டின் நலனை முன்னிட்டு அன்று, தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்தான் அவ்வாறு செய்தான். 4ஆனால் மாவேந்தராம் இறைவன் அந்தக் கயவனுக்கு எதிராக அந்தியோக்கின் சீற்றத்தைத் தூண்டிவிட்டார்; எல்லாத் தீமைகளுக்கும் மெனலாவே காரணம் என்று லீசியா அந்தியோக்குக்குத் தெரிவித்தான். எனவே மெனலாவைப் பெரோயாவுக்குக் கொண்டுபோய் அந்த இடத்தின் வழக்கப்படி கொல்ல அந்தியோக்கு ஆணையிட்டான். 5அங்கே ஐம்பது முழ உயரமுள்ள மாடம் ஒன்று இருந்தது; அது சாம்பலால் நிறைந்திருந்தது; அம்மாடத்து விளிம்பின் உட்புறத்தைச் சுற்றிலும், சாம்பலை நோக்கிச் சரிந்த ஒரு தளம் இருந்தது. 6கோவிலைத் தீட்டுப்படுத்தியவர்களை அல்லது கொடிய குற்றம் புரிந்தவர்களை அங்கிருந்து கீழே தள்ளிக் கொன்றழிப்பது வழக்கம். 7திருச்சட்டத்தை மீறிய மெனலா இவ்வாறே இறந்தான்; அடக்கம் செய்யப்படவுமில்லை. 8தூய நெருப்பும் சாம்பலும் கொண்ட பலிபீடத்திற்கு எதிராகப் பல பாவங்களைச் செய்திருந்த அவன் சாம்பலில் உழன்று செத்தது முற்றிலும் பொருத்தமே.


மோதயினுக்கு அருகே யூதர்கள் பெற்ற வெற்றி


9மன்னன் தன் தந்தையின் காலத்தில் யூதர்கள் பட்டதைவிடக் கொடிய தீமைகளை அவர்கள்மீது சுமத்தும்படி முரட்டுச் செருக்குடன் புறப்பட்டுச் சென்றான். 10யூதா இதைக் கேள்வியுற்றதும், இரவும் பகலும் ஆண்டவரை வேண்டுமாறு தம் மக்களுக்குக் கட்டளையிட்டார்; ஏனெனில் திருச்சட்டம், நாடு, திருக்கோவில் ஆகியவற்றை அவர்கள் இழக்கும் தறுவாயில் இருந்ததால், முன்பைவிட மிகுதியாக அவருடைய உதவி அவர்களுக்கு அப்பொழுது தேவைப்பட்டது. 11மக்கள் புத்துணர்வு பெறத் தொடங்கிய வேளையிலேயே இறைவனைப் பழித்துரைக்கும் பிற இனத்தாரின் கையில் அவர்கள் விழாதிருக்குமாறு வேண்டவும் அவர் கட்டளையிட்டார். 12அவர்கள் எல்லாரும் அவ்வாறே செய்தார்கள்; மூன்று நாள் இடைவிடாமல் கண்ணீர் சிந்தி உண்ணாநோன்பிருந்து குப்புற விழுந்து இரக்கமுள்ள ஆண்டவரை மன்றாடினார்கள். தக்க ஏற்பாடுகளோடு இருக்குமாறு யூதா அவர்களுக்கு ஊக்கமூட்டினார்.

13மூப்பர்களோடு தனிமையில் கலந்து பேசியபின், மன்னனின் படை யூதேயாமீது படையெடுத்து எருசலேம் நகரைக் கைப்பற்றுமுன்பே, கடவுளின் துணையுடன் புறப்பட்டுச் சென்று போர்தொடுக்க முடிவுசெய்தார். 14உலகைப் படைத்தவரிடம் முடிவை ஒப்படைத்துவிட்டுத் திருச்சட்டம், கோவில், நகர், நாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றுக்காக இறக்கும்வரை துணிவுடன் போராடத் தம் ஆள்களுக்கு யூதா அறிவுறுத்தினார்; பின் மோதயினுக்கு அருகில் பாசறை அமைத்தார்; 15‘கடவுளுக்கே வெற்றி’ என்று தம் ஆள்களைப் போர்க்குரல் எழுப்பச் சொன்னார். ஆண்மை படைத்த இளைஞர்களினின்று தேர்ந்தெடுத்த ஒரு படைப் பிரிவோடு அவர் இரவில் மன்னனின் கூடாரத்தைத் தாக்கினார்; பாசறையில் இருந்த இரண்டாயிரம் பேரைக் கொன்றார்; முதலில் சென்ற யானையை அதன் பாகனோடு குத்திக் கொன்றார். 16இறுதியில் கலக்கமும் குழப்பமும் பாசறையை நிரப்ப, அவர்கள் வெற்றியுடன் திரும்பினார்கள். 17ஆண்டவரின் உதவி யூதாவுக்குப் பாதுகாப்பு அளித்ததால் பொழுது புலரும் வேளையில் இதெல்லாம் நடந்தது.


யூதர்களோடு ஒப்பந்தம்


18யூதர்களுடைய துணிவை நேரில் கண்டபின் அந்தியோக்கு மன்னன் அவர்களுடைய படைத்தளங்களைக் கைப்பற்றச் சூழ்ச்சியைக் கையாண்டான்; 19ஆகவே யூதர்களுடைய வலிமைமிக்க கோட்டையாகிய பெத்சூரை எதிர்த்துச் சென்றான்; ஆனால் துரத்தியடிக்கப்பட்டான்; மீண்டும் தாக்கியபோது தோல்வி கண்டான். 20கோட்டைக்குள் இருந்தவர்களுக்கு யூதா தேவையானவற்றை அனுப்பினார். 21ஆனால் யூதர்களின் படையைச் சேர்ந்த உரோதொக்கு பகைவர்களுக்குப் படைத்துறை இரகசியங்களை வெளியிட்டான். அதனால் அவனைத் தேடிப் பிடித்துச் சிறையில் அடைத்தார்கள். 22மன்னன் இரண்டாம் முறை பெத்சூரில் இருந்த மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினான்; ஒப்பந்தம் செய்துகொண்டபின் திரும்பிச் சென்றான். மீண்டும் யூதாவையும் அவருடைய ஆள்களையும் தாக்கித் தோல்வியுற்றான். 23ஆட்சிப் பொறுப்பாளனாய் மன்னன் அந்தியோக்கியில் விட்டுவைத்திருந்த பிலிப்பு கிளர்ச்சி செய்ததாக அவனுக்குச் செய்தி கிடைத்தது. கலக்கமுற்றவனாய் யூதர்களை வரவழைத்து அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இணங்கி அவர்களுடைய உரிமைகள் அனைத்தையும் காப்பதாக ஆணையிட்டான். இத்தகைய ஒப்பந்தத்தைச் செய்தபின் பலி ஒப்புக்கொடுத்தான்; கோவிலைப் பெருமைப்படுத்தி அதற்குத் தாராளமாக நன்கொடைகள் வழங்கினான்.


24மன்னன் இன்முகத்தோடு மக்கபேயை வரவேற்றான்; பின்னர் தாலமாய் முதல் கேரார்வரையிலான பகுதிக்கு எகமோனிதை ஆளுநனாக எற்படுத்தினான். 25அவன் தாலமாய்க்குச் சென்றான். ஆனால் யூதர்களோடு அவன் செய்திருந்த ஒப்பந்தம்பற்றி அந்நகர மக்கள் சினங்கொண்டார்கள்; அதன் விதிமுறைகளைச் செல்லாததாக்க விரும்பும் அளவுக்கு வெகுண்டார்கள். 26அப்போது லீசியா பொது மேடையில் ஏறித் தன்னால் முடிந்தவரை ஒப்பந்தத்துக்கு ஆதரவாகப் பேசி, அவர்களை இணங்க வைத்து அமைதிப்படுத்தினான்; அவர்களுடைய நல்லெண்ணத்தைப் பெற்றவனாய் அந்தியோக்கிக்குப் புறப்பட்டான். இவ்வாறு அந்தியோக்கு மன்னனுடைய படையெடுப்பும் பின் வாங்கலும் முடிவுற்றன.


13:18-26 1 மக் 6:48-63. 13:1 கி.மு. 163.


13:2 ‘அவர்கள் ஒவ்வொவருக்கும்’ என்பது கிரேக்க பாடம்.



அதிகாரம் 14:1-46

தலைமைக் குரு ஆல்கிம்


1மூன்று ஆண்டுகளுக்குப்பின், செலூக்கின் மகன் தெமேத்திரி ஒரு வலிமைமிக்க தரைப்படையோடும் கப்பற்படையோடும் பயணம் செய்து திரிப்போலி நகரத் துறைமுகத்துக்கு வந்து, 2அந்தியோக்கையும் அவனுடைய பாதுகாப்பாளன் லீசியாவையும் கொன்றபின் நாட்டைக் கைப்பற்றியதாக யூதாவுக்கும் அவருடைய ஆள்களுக்கும் செய்தி கிடைத்தது.

3முன்பு தலைமைக் குருவாக இருந்தவனும் கிளர்ச்சிக் காலத்தில் மனம் பொருந்தித் தம்மையே தீட்டுப்படுத்திக் கொண்டவனுமான ஆல்கிம் தனக்கு எத்தகைய பாதுகாப்பும் இல்லை என்றும், தூய பலீபீடத்தை அணுக வாய்ப்பு இல்லை என்றும் உணர்ந்தான்; 4நூற்று ஐம்பத்தோராம் ஆண்டளவில்⁕ தெமேத்திரி மன்னனிடம் சென்று ஒரு பொன்முடி, பொன் குருத்தோலை ஆகியவற்றோடு கோவிலிருந்து வழக்கமாகக் கொடுக்கப்படும் ஒலிவக்கிளைகளையும் அவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான்; அன்று அமைதியாய் இருந்தான். 5ஆனால் தன்னுடைய மதிகெட்ட திட்டத்தை நிறைவேற்ற ஆல்கிமுக்கு நல்லதொரு வாய்ப்புக் கிட்டியது. ஆட்சிமன்றக் கூட்டத்துக்குத் தெமேத்திரி அவனை அழைத்து யூதர்களின் மனநிலை, திட்டம் பற்றி வினவியபோது அவன் பின்வருமாறு பதிலிறுத்தான்: 6“யூதா மக்கபேயின் தலைமையில் செயல்படுகின்ற கசிதேயர் எனப்படும் யூதர்களே தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; பேரரசில் அமைதி நிலவாதவாறு கிளர்ச்சியைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.✠ 7ஆகவே என்னுடைய மூதாதையர் வழிவந்த பெருமையாகிய தலைமைக் குருபீடத்தை இழந்துவிட்டு இப்போது இங்கு வந்திருக்கிறேன். 8முதலாவதாக, மன்னருடைய நலன்களில் எனக்கு உண்மையான ஈடுபாடு உண்டு; இரண்டாவதாக என் நாட்டு மக்களின் நலனிலும் எனக்கு நாட்டம் உண்டு. நான் முன்குறிப்பிட்டவர்களுடைய மூட நடவடிக்கைகளால் எங்கள் இனம் முழுவதும் பெருந்துன்பத்துக்கு உள்ளாகியிருக்கிறது. 9மன்னரே, இதுபற்றிய முழு விவரமும் தாங்கள் தெரிந்துகொண்டு, எல்லாரிடமும் காட்டும் மனித நேயத்துக்கு ஏற்ப எங்கள் நாட்டுக்கும் ஒடுக்கப்படுகின்ற எங்கள் இனத்துக்கும் நன்மை செய்யுங்கள். 10யூதா உயிரோடிருக்கும் வரை பேரரசில் அமைதி நிலவ முடியாது.”

11ஆல்கிம் இவ்வாறு பேசியவுடன், யூதாவோடு பகைமை கொண்டிருந்த மன்னனின் நண்பர்களும் தெமேத்திரிக்கு மேலும் சினமூட்டினார்கள். 12எனவே தெமேத்திரி உடனடியாக யானைப் படையின் தலைவனாய் இருந்த நிக்கானோரைத் தேர்ந்தெடுத்து யூதேயாவின் ஆளுநனாக ஏற்படுத்தி அனுப்பி வைத்தான்; 13யூதாவைக் கொல்லவும் அவருடைய ஆள்களைச் சிதறடிக்கவும் சிறப்புமிகு கோவிலின் தலைமைக் குருவாக ஆல்கிமை ஏற்படுத்தவும் அவனுக்குக் கட்டளையிட்டான். 14யூதாவுக்கு அஞ்சி யூதேயாவிலிருந்து தப்பியோடியிருந்த பிற இனத்தார் நிக்கானோரோடு சேர்ந்துகொள்ள ஒன்று கூடினார்கள்; யூதர்களுக்கு நேரிடும் இன்னல், இடுக்கண்கள் தங்களுக்கு வளமூட்டும் என்று எண்ணினார்கள்.


நிக்கானோரின் நட்பும் எதிர்ப்பும்


15நிக்கானோருடைய வருகை பற்றியும் பிற இனத்தார் அவனோடு சேர்ந்துகொண்டது பற்றியும் யூதர்கள் கேள்விப்பட்டபோது, தங்கள் தலையில் புழுதியைத் தூவிக்கொண்டார்கள்; தங்களை என்றென்றும் தம் மக்களாக நிலைநிறுத்தி, தம் வெளிப்பாடுகள் மூலம் தம் வழிவழி உரிமையாகிய தங்களைக் காத்துவரும் இறைவனிடம் கெஞ்சி மன்றாடினார்கள். 16தலைவர் யூதா கட்டளையிட, அவர்கள் அங்கிருந்து உடனே புறப்பட்டுத் தெசாவு என்ற சிற்றூரில் எதிரிகளோடு போர் தொடுத்தார்கள். 17யூதாவின் சகோதரரான சீமோன், நிக்கானோரை எதிர்த்துப் போரிட்டார்; திடீரெனப் பகைவர்கள் அவரைத் தாக்கியதால், சற்றுப் பின்வாங்கினார். 18இருப்பினும் யூதா, அவருடைய ஆள்கள் ஆகியோருடைய வலிமைபற்றியும், தங்கள் நாட்டிற்காகச் செய்த போரில் அவர்கள் காட்டிய துணிவுபற்றியும் நிக்கானோர் கேள்வியுற்றபோது, குருதி சிந்துதல்மூலம் இச்சிக்கலுக்குத் தீர்வு காணத் தயங்கினான். 19ஆகவே ஒப்பந்தம் செய்துகொள்ளப் பொசிதோன், தெயதோத்து, மத்தத்தியா ஆகியோரை அனுப்பினான்.

20ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை முற்றிலும் ஆய்ந்து பார்த்தபின் அவைபற்றித் தலைவன் நிக்கானோர் தன் வீரர்களுக்கு எடுத்துக்கூறினான். அவர்கள் அனைவரும் அவற்றுக்கு இணக்கம் தெரிவித்து ஒருமனப்பட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார்கள். 21தலைவர்கள் சந்தித்துக்கொள்ள ஒருநாள் குறிப்பிடப்பட்டது. ஒவ்வொரு படையிலிருந்தும் ஒரு தேர் முன்னால் வந்தது; இருக்கைகள் போடப்பட்டன. 22பகைவர்கள் திடீரெனச் சூழ்ச்சியில் இறங்கிவிடாதவாறு படைக்கலன்களைத் தாங்கிய வீரரை முன்னேற்பாடாக முக்கியமான இடங்களில் யூதா நிறுத்திவைத்தார். இருவரும் முறைப்படி கலந்து ஆலோசித்தனர்.

23நிக்கானோர் எருசலேமிலேயே தங்கியிருந்தான். முறைகேடானது எதுவும் செய்யவில்லை. தன்னைச் சுற்றித் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை அனுப்பிவைத்தான். 24அவன் யூதாவோடு அடிக்கடி உரையாடுவான்; அவரிடத்தில் உள்ளார்ந்த பற்றுக் கொண்டிருந்தான். 25யூதா திருமணம் செய்துகொண்டு பிள்ளைகளைப் பெற்றெடுக்குமாறு அவன் தூண்டினான். அவரும் திருமணம் செய்து அமைதியில் வாழ்க்கை நடத்தினார்.

26அவர்கள் இருவருக்கும் இடையே நிலவிய நட்பைக் கண்ட ஆல்கிம், முன்பு செய்யப்பட்டிருந்த ஒப்பந்தத்தின் நகலை எடுத்துக்கொண்டு, தெமேத்திரியிடம் சென்றான்; அரசத் துரோகியான யூதாவை நிக்கானோர் தன் பின்தோன்றலாக ஏற்படுத்தியுள்ளதால் அவன் அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கிறான் என்று அவனிடம் கூறினான். 27இந்தச் சதிகாரனுடைய பொய்க் குற்றச்சாட்டுகளால் கொதிப்படைந்த மன்னன் சீற்றங்கொண்டான்; அந்த ஒப்பந்தம் தனக்கு மனநிறைவு தரவில்லை என்றும் மக்கபேயை உடனே கைதியாக அந்தியோக்கிக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் நிக்கானோருக்கு எழுதினான்.

28இந்தச் செய்தி நிக்கானோருக்குக் கிடைத்தபோது அவன்பெரிதும் கலங்கினான்; யூதா எவ்வகைக் குற்றமும் செய்யாதிருந்தபோது அவரோடு செய்திருந்த ஒப்பந்தத்தை முறிக்க வேண்டியிருந்ததைப் பற்றி வருந்தினான்; 29ஆயினும் மன்னனை எதிர்க்க முடியாததால் அவனுடைய ஆணையைச் சூழ்ச்சியாக நிறைவேற்ற ஒரு வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தான். 30ஆனால் நிக்கானோர் தம்மோடு மிகக் கண்டிப்பாய் நடந்துகொண்டதையும், வழக்கத்திற்கு மாறாகத் தம்மோடு கடுமையாய் இருந்ததையும் கண்ட மக்கபே இது நல்லெண்ணத்தால் எழுந்தது அன்று என்று முடிவு செய்தார். ஆகவே தம் ஆள்களுள் பலரைச் சேர்த்துக்கொண்டு, நிக்கானோரிடமிருந்து விலகிச் சென்று ஒளிந்து வாழ்ந்தார்.

31யூதா தன்னைச் சூழ்ச்சியினால் வென்றுவிட்டார் என்பதை உணர்ந்த நிக்கானோர், குருக்கள் வழக்கப்படி பலி செலுத்திக்கொண்டிருந்த வேளையில் திருப்பெருங் கோவிலுக்குச் சென்றான்; மக்கபேயைத் தன்னிடம் ஒப்படைக்கக் கட்டளையிட்டான். 32அவன் தேடிய மனிதர் எங்கு இருக்கிறார் என்பது தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் ஆணையிட்டார்கள். 33அப்போது நிக்கானோர் கோவிலை நோக்கித் தன் வலக்கையை நீட்டி, “நீங்கள் யூதாவைக் கைதியாக என்னிடம் ஒப்படைக்காவிட்டால் கடவுளின் இந்தத் திருஉறைவிடத்தைத் தரைமட்டமாக்குவேன்; பலிபீடத்தை இடித்துத் தள்ளுவேன்; இங்குத் தியனீசுக்கு மிகச் சிறந்த ஒரு கோவிலைக் கட்டுவேன்” என்று சூளுரைத்தான். 34இச்சொற்களைக் கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான். குருக்கள் விண்ணை நோக்கித் தங்கள் கைகளை உயர்த்தித் தம் இனத்தை எப்போதும் காத்துவருகின்றவரை மன்றாடினார்கள்: 35“அனைத்துக்கும் ஆண்டவரே, உமக்கு ஒன்றும் தேவையில்லை. எனினும் நீர் எங்களிடையே தங்குவதற்கு ஓர் உறைவிடம் அமைக்கத் திருவுளங்கொண்டீர். 36எனவே, தூய ஆண்டவரே, தூய்மைக்கெல்லாம் ஊற்றே, சிறிது காலத்துக்குமுன் தூய்மைப்படுத்தப்பெற்ற இந்த இல்லத்தை என்றென்றும் தீட்டுப்படாமல் காப்பாற்றும்” என்று வேண்டினார்கள்.


இராட்சியின் இறப்பு


37எருசலேமின் மூப்பர்களுள் ஒருவரான இராட்சிக்கு எதிராக நிக்கானோரிடம் குற்றம் சாட்டப்பட்டது. அவர் தம் மக்களிடம் அன்புகொண்டவர்; அவர்களிடையே மதிப்புப் பெற்றவர்; நல்மனம் படைத்தவர்; இதனால் யூதர்களின் தந்தை என்று பெயர் பெற்றவர்; 38முற்காலத்தில் நடந்த கிளர்ச்சியின்போது, யூத நெறிப்படி வாழ்ந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி, யூத மறைக்காகத் தம் உடலையும் உயிரையும் மிகுந்த ஆர்வத்துடன் இழக்கத் துணிந்தவர். 39யூதரோடு தனக்கு இருந்த பகைமையை வெளிப்படுத்த விரும்பி, இராட்சியைக் கைது செய்து வருமாறு ஐந்நூறுக்கும் மிகுதியான படைவீரர்களை நிக்கானோர் அனுப்பிவைத்தான்; 40இதன்மூலம் யூதர்களுக்குப் பேரிடர் விளைவிக்க எண்ணினான்; 41படைவீரர்கள் காவல் மாடத்தைக் கைப்பற்றி முற்றத்தின் கதவை உடைக்கவிருந்தபோது நெருப்பைக் கொண்டுவரச்செய்து கதவுகளை எரிக்கப் பணித்தான். அப்பொழுது அவர்களால் சூழப்பட்ட இராட்சி தம் வாளின் மேலேயே வீழ்ந்தார். 42தீயோர் கையில் அகப்பட்டுத்தம் உயர்குடிப் பிறப்புக்குத் தகாத இழிவு அடைவதைவிட மானத்தோடு இறக்க விரும்பினார். 43அப்போது ஏற்பட்ட பரபரப்பில் அவர் வாள் மீது சரியாக விழவில்லை. வீரர்கள் கதவுகளின் வழியாகப் பாய்ந்து வரவே அவர் துணிந்து மதில்மேல் ஏறி ஆண்மையோடு கூட்டத்தினூடே குதித்தார். 44ஆனால் வீரர்கள் விரைந்து விலக, அங்கு ஏற்பட்ட வெற்றிடத்தின் நடுவில் விழுந்தார். 45இன்னும் உயிர் இருக்கையில், சீற்றத்தால் பற்றியெரிந்தவராய் அவர் எழுந்தார்; குருதி பீறிடக் கொடிய காயங்களுடன் கூட்டத்தின் நடுவே ஓடி ஒரு செங்குத்தான பாறைமேல் நின்றார். 46அவருடைய குருதியெல்லாம் வடிந்ததும் அவர் தம் குடல்களைக் கீறி எடுத்து இரு கைகளாலும் பிடித்துக் கூட்டத்தை நோக்கிச் சுழற்றி எறிந்தார். இவற்றைத் தமக்குத் திரும்பவும் தருமாறு உயிருக்கும் மூச்சுக்கும் ஆண்டவரான இறைவனை மன்றாடினார். இவ்வாறு இராட்சி இறந்தார்.


14:1-10 1 மக் 7:1-21. 14:6 1 மக். 2:42; 7:13. 14:4 கி.மு. 161.



அதிகாரம் 15:1-39

நிக்கானோரின் சூழ்ச்சி


1யூதாவும் அவருடைய ஆள்களும் சமாரியா நாட்டில் இருக்கிறார்கள் என்று கேள்வியுற்ற நிக்கானோர் தனக்கு இழப்பு நேராவண்ணம் அவர்களை ஓய்வுநாளில் தாக்கத் திட்டமிட்டான். 2நிக்கானோரைப் பின்தொடரக் கட்டாயத்துக்கு உள்ளான யூதர்கள் அவனிடம், “அவர்களை இத்துணைக் கொடுமையாகவும் முரட்டுத்தனமாகவும் அழிக்கவேண்டாம்; எல்லாவற்றையும் காண்பவர் மற்ற நாள்களைவிட மாட்சிப்படுத்தித் தூய்மைப்படுத்தியுள்ள இந்நாளை மதிப்பீராக” என்றார்கள். 3அதற்கு அந்த மாபெரும் கயவன், “ஓய்வு நாளைக் கடைப்பிடிக்க கட்டளையிட்டுள்ள ஓர் அரசன் விண்ணில் இருக்கிறானோ?” என்று வினவினான். 4அப்போது அவர்கள், “என்றுமுள ஆண்டவரே விண்ணின் வேந்தர்; அவரே ஏழாம் நாளைக் கடைப்பிடிக்க எங்களைப் பணித்தவர்” என்று அறிக்கையிட்டார்கள். 5அதற்கு அவன், “மண்ணின் வேந்தன் நான். ஆகவே நீங்கள் படைக்கலங்களை எடுத்து அரச அலுவல் செய்ய நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்” என்றான். ஆயினும் தனது கொடிய திட்டத்தை நிறைவேற்றுவதில் அவன் வெற்றிபெறவில்லை.


யூதா போருக்கு ஏற்பாடு செய்தல்


6செருக்கும் இறுமாப்பும் கொண்ட நிக்கானோர் யூதாவையும் அவருடைய ஆள்களையும் வென்று, வெற்றிச் சின்னம் ஒன்றை எழுப்ப முடிவு செய்திருந்தான். 7ஆயினும் ஆண்டவரிடமிருந்து தமக்கு உதவி கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையில் மக்கபே தளராதிருந்தார்; 8பிற இனத்தாரின் தாக்குதலைப்பற்றி அஞ்சாதிருக்கவும், முன்பு விண்ணக இறைவனிடமிருந்து தங்களுக்குக் கிடைத்த உதவியை நினைவுகூரவும், இப்போதும் எல்லாம் வல்லவர் தங்களுக்கு வெற்றியை அருள்வார் என நம்பிக்கைகொள்ளவும் அவர் தம் ஆள்களுக்கு அறிவுரை வழங்கினார்; 9திருச்சட்ட நூலிருந்தும் இறைவாக்கு நூல்களிலிருந்தும் படித்துக்காட்டி அவர்களுக்கு ஊக்கமூட்டினார்; அவர்கள் ஏற்கனவே வென்றிருந்த போர்களை நினைவுபடுத்தி ஆர்வத்தைத் தூண்டிவிட்டார். 10அவர்களுக்குத் துணிவூட்டிக் கட்டளையிட்டார்; பிற இனத்தார் நம்பிக்கைத் துரோகம் புரிந்ததையும் ஆணைகளை மீறியதையும் சுட்டிக் காட்டினார்; 11கேடயம், ஈட்டி ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பாதுகாப்பைவிட ஊக்கமூட்டும் சொல் என்னும் படைக்கலத்தை அவர்கள் ஒவ்வொருவருக்கும் அணிவித்தார்; தாம் கண்ட ஒரு கனவுபற்றி அதாவது நம்பத்தகுந்த ஒருவகைக் காட்சிபற்றி விளக்கி அவர்கள் அனைவரையும் மகிழ்வித்தார்.

12அவர் கண்ட காட்சி பின்வருமாறு: ஓனியா தம் கைகளை விரித்து யூத மக்கள் அனைவருக்காகவும் மன்றாடிக் கொண்டிருந்தார். அவர் ஒரு காலத்தில் தலைமைக் குருவாய் இருந்தவர், நல்லவர், மேன்மைமிக்கவர், எளிமையான தோற்றமும் அடக்கமுடைமையும் உள்ளவர், பொருந்தப் பேசுபவர், குழந்தைப் பருவ முதல் நற்பண்புகளில் பயிற்சி பெற்றவர். 13இதேபோல வேறொரு மனிதரும் தோன்றினார்; அவர் நரைத்த முடியும் மதிப்பும் வியத்தகு மாட்சியும் அதிகாரத் தோற்றமும் கொண்டவர். 14அப்போது ஓனியா, “இவர் தம் சகோதரர்கள்மீது அன்புசெலுத்துபவர்; தம் மக்களுக்காகவும் திருநகருக்காகவும் மிகுதியாக வேண்டிக்கொள்பவர்; இவரே கடவுளின் இறைவாக்கினரான எரேமியா” என்று கூறினார். 15அப்பொழுது எரேமியா தமது வலக்கையை நீட்டி, யூதாவுக்கு ஒரு பொன் வாளைக் கொடுத்தார். அதைக் கொடுத்தபடியே, 16“கடவுளின் கொடையாகிய இத்தூய வாளை எடுத்துக்கொள்ளும்; இதைக்கொண்டு உம்முடைய எதிரிகளை அடித்து நொறுக்கும்” என்றார்.

17அஞ்சாமையைத் தூண்டிவிடக் கூடியதும் இளைஞருடைய உள்ளங்களில் வீரத்தை எழுப்பிவிடக்கூடியதுமான தம் விழுமிய சொற்களால் யூதா எல்லாருக்கும் ஊக்கமூட்டினார். எனவே காலம் தாழ்த்தாமல் துணிவுடன் தாக்கி, முழு வலிமையோடு நேருக்கு நேர் போர்செய்து நிலைமைக்கு முடிவு காண அவர்கள் உறுதிபூண்டார்கள்; ஏனெனில் நகரமும் திருஉறைவிடமும் கோவிலும் ஆபத்தான நிலையில் இருந்தன. 18தங்கள் மனைவியர், பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோரைப் பற்றி அவர்கள் பெரிதும் கவலைப்படவில்லை; தூய்மைப்படுத்தப்பெற்ற கோவிலைப்பற்றியே எல்லாவற்றுக்கும் மேலாகக் கவலைப்பட்டார்கள். 19நகரில் விடப்பட்டிருந்தவர்களும் பெரிதும் மனக்கலக்கம் அடைந்தார்கள்; ஏனெனில் திறந்தவெளியில் நடைபெறவிருந்த மோதலைப் பற்றிய கவலை அவர்களுக்கு இருந்தது.

20போரின் முடிவை எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். எதிரிகள் போருக்கு அணிவகுத்துத் தங்கள் படைகளுடன் நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். யானைகள் போர்த்திற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும், குதிரைப்படைகள் இருபக்கங்களிலுமாக நிறுத்தப்பட்டன. 21படைத்திரளின் அணிவகுப்பையும் வீரர்களின் படைக்கல வகைகளையும் யானைகளின் வெறியையும் கண்ட மக்கபே விண்ணை நோக்கித் தம் கைகளை உயர்த்தி, வியத்தகு செயல்கள் புரியும் ஆண்டவரை மன்றாடினார். ஏனெனில் படைக்கலங்களினால் அல்ல; ஆண்டவரின் திருவுளப்படி தகுதி பெற்றவர்களுக்கே அவர் வெற்றியை அருள்கிறார் என்று அறிந்திருந்தார்; 22அவர் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, யூதேயாவின் மன்னர் எசேக்கியாவின் காலத்தில் நீர் உம் வானதூதரை அனுப்ப, அவர் சனகெரிபின் பாசறையில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைக் கொன்றார்.✠ 23விண்ணின் வேந்தரே, பகைவர்களைப் பெரிதும் அஞ்சி நடுங்கவைத்து எங்களை வழிநடத்தக் கூடிய ஒரு நல்ல வானதூதரை இப்போது அனுப்பும். 24உம் தூய மக்களைத் தாக்க வந்திருக்கும் இந்த இறைப்பழிப்போரை உமது கைவன்மையால் வீழ்த்துவீராக.” இத்துடன் அவர் தம் வேண்டுதலை முடித்துக்கொண்டார்.


நிக்கானோரின் வீழ்ச்சியும் இறப்பும்


25நிக்கானோரும் அவனுடைய ஆள்களும் எக்காளங்களோடும் போர்ப் பாடல்களோடும் முன்னேறிச் சென்றார்கள். 26ஆனால் யூதாவும் அவருடைய ஆள்களும் இறைவனைத் துணைக்கு அழைத்து மன்றாடிய வண்ணம் பகைவர்களை எதிர்த்தார்கள்; 27இவ்வாறு கைகளால் போர் செய்து கொண்டும், உள்ளத்தில் கடவுளை மன்றாடிக்கொண்டும் இருந்ததால், குறைந்தது முப்பத்தையாயிரம் பேரை வீழ்த்தினார்கள்; கடவுளுடைய வெளிப்பாட்டால் பெரிதும் மகிழ்ந்தார்கள். 28போர் முடிந்து அவர்கள் மகிழ்ச்சியோடு திரும்பிக்கொண்டிருந்தபோது நிக்கானோர் தன் முழுப் போர்க்கவசத்துடன் இறந்து கிடப்பதைக் கண்டுபிடித்தார்கள். 29அப்போது அவர்கள் உரத்த குரல் எழுப்பி ஆரவாரம் செய்து வல்லவரான இறைவனைத் தங்கள் தாய்மொழியில் போற்றினார்கள். 30தம் உடலாலும் உள்ளத்தாலும் எக்காலத்தும் தம் மக்களைப் பாதுகாத்து வந்தவரும் தம் நாட்டினர்பால் இளைமைமுதல் பற்றுக்கொண்டிருந்தவருமாகிய யூதா, நிக்கானோரின் தலையையும் தோளோடு வலக்கையையும் வெட்டியெடுத்து அவற்றை எருசலேமுக்குக்கொண்டு வரும்படி தம் ஆள்களுக்குக் கட்டளையிட்டார். 31அங்குச் சேர்ந்தபோது அவர் தம் மக்களை ஒன்றுகூட்டினார்; குருக்களைப் பலிபீடத்திற்குமுன் நிறுத்தினார்; கோட்டையில் இருந்தவர்களுக்கு ஆளனுப்பினார்; 32கயவன் நிக்கானோரின் தலையையும், எல்லாம் வல்லவரின் தூய இல்லத்துக்கு எதிராக இறுமாப்போடு நீட்டிய அந்த இறைபழிப்போனின் கையையும் அவர்களுக்குக் காட்டினார்; 33கடவுள் நம்பிக்கையற்ற நிக்கானோரின் நாக்கைத் துண்டித்தார்; அதைச் சிறுசிறு துண்டுகளாக்கிப் பறவைகளுக்கு உணவாகப் போடவும், அவனுடைய மூடத்தனத்தின் விளைவை மக்கள் காணும்பொருட்டு, அவனுடைய தலையையும் கையையும் கோவிலுக்கு எதிரில் தொங்கவிடவும் கட்டளையிட்டார். 34அவர்கள் எல்லாரும் விண்ணை நோக்கி, தம்மையே வெளிப்படுத்தியிருந்த ஆண்டவரை வாழ்த்தினார்கள்: “தம் சொந்த இடத்தைத் தூய்மை கெடாதவாறு காப்பாற்றியவர் போற்றி!” என்று முழங்கினார்கள்.

35ஆண்டவரிடமிருந்து அவர்கள் பெற்றிருந்த உதவியின் தெளிவான, வெளிப்படையான அடையாளமாக எல்லாருக்கும் விளங்கும்பொருட்டு நிக்கானோரின் தலையைக் கோட்டையில் யூதா தொங்கவிட்டார். 36இந்நாளைக் கொண்டாட ஒருபோதும் தவறக் கூடாது என்றும், அரமேய மொழியில் அதார் என்ற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாள், அதாவது மொர்தக்காயின் நாளுக்கு முந்திய நாள் அதனைக் கொண்டாட வேண்டும் என்றும் பொது வாக்கெடுப்பு மூலம் அவர்கள் முடிவு செய்தார்கள்.✠


7. முடிவுரை


37இதுவே நிக்கானோரின் முடிவு. அக்காலம்முதல் எருசலேம் நகர் எபிரேயர்களுக்கு உரியதாயிற்று. இத்தோடு நானும் வரலாற்றை முடிக்கிறேன். 38இது நன்முறையிலும் கட்டுக்கோப்புடனும் எழுதப்பட்டிருப்பின் இதுவே எனது விருப்பம். குறைபாடுகளுடனும் சிறப்புக் குன்றியும் அமைந்திருந்தால் என்னால் செய்ய முடிந்தது அவ்வளவுதான். 39திராட்சை இரசத்தை மட்டும் அல்லது தண்ணீரை மட்டும் தனியாகக் குடிப்பது உடல்நலனுக்குக் கெடுதி தரும். மாறாக, தண்ணீர் கலந்த திராட்சை இரசம் இனிமையானது, சுவைமிக்கது. அதுபோல வரலாற்றை எழுதுவதில் கையாளப்படும் நடை படிப்போரின் செவிக்கு இன்பம் ஊட்டும். முற்றும்.


15:22 2 மக் 8:19; 2 அர 19:35; எசா 37:36; 1 மக் 7:40-41. 15:25-35 1 மக் 7:43-50. 15:36 1 மக் 7:49; காண். எஸ் (கி) 9:17-22.