Novena - Sacred Heart of Jesus

  • Home
  • Novena Prayers
Novena - Sacred Heart of Jesus

Novena Prayers

திரு இருதய நவநாள்

"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்" என்று திருவுளம் பற்றியிருக்கிற திவ்விய இயேசுவே, தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி ஆராதனைக்குரிய உமது திருநாளில் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக்கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக்கொள்ளும் மன்றாட்டு ஏதென்றால்.... சகல நன்மைகளுக்கும், பேறுபலன்களுக்கும் வற்றாத ஊரணியாகிய தேவரீருடைய திருஇருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன். தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்தாலன்றி வெறெங்கே நான் இதைத் தேடப்போகிறேன். தாமே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறேங்கே நான் தட்டிக் கேட்கப்போகிறேன். ஆகையால் என் நேச இயேசுவின் திரு இருதயமே தேவரீருடைய தஞ்சமாக ஓடிவந்தேன். இக்கட்டு இடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே; சோதனைக் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். -பர. அருள். பிதா. தேவரீர் சித்தம் வைத்தாலே போதும். என் செபம் பிராத்தனைகள் அனுகூலமாகும். திவ்விய இயேசுவே, தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுவதும் அபாத்திரவான்தான், ஆகிலும் நான் இதனாலே அதைரியப்பட்டு பின்னடைந்து போவேனல்ல; தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தை தேவரீர் தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் எங்களை நோக்கியருளும். என் நிர்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கு இரங்காமற் போகாது.
இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே! தேவரீரை நான் வாழ்த்தி வணங்கி போற்றி புகழ்ந்து சேவிக்க நான் ஒருகாலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே! ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதய தீர்மானத்திற்க முழுவதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியை கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும். நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேள்ற ஆசையாயிருக்கிறேன். -ஆமென்

இயேசுநாதருடைய திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் செபம்:


ஓ! மிகவும் மதுரம் நிறைந்த இயேசுவே! மனுக்குலத்தின் இரட்சகரே! உமது பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும். நாங்கள் தேவரீர்க்குச் சொந்தமானவர்கள்; உமக்கு சொந்தமானவர்களாகவே இருக்கும்படி ஆசையாய் இருக்கிறோம். இன்னும் அதிக உண்மையாய் தேவரீரோடு ஒன்றித்திருக்கத்தக்கதாக உங்களில் ஒவ்வொருவரும் எங்கள் மனதார எங்களை இன்றைக்கு உம்முடைய திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம்.
சுவாமி ! மனிதர்களுக்குள்ளே அனேகர் தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லை; வேறே அநேகர் உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழிநத்து உம்மை வேண்டாமென்று தள்ளிப்போட்டார்கள். ஓ! மகா தயாளம் நிறைந்த இயேசுவே! இவர்கள் எல்லார்பேரிலும் இரக்கமாயிரும்; இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தருகில் இழுத்தருளும். ஆண்டவரே! உம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல், என்றும் பிரமாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு மாத்திரமேயன்றி, உம்மை விட்டுப் பிரிந்து போன ஊதாரிப்பிள்ளைகளுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக; இவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராக! அபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும், விரோதத்தால் விலகியிருப்பவர்களுக்கும் தேவரீர் இராஜாவாயிருப்பீராக; எங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படி, இவர்கள் எல்லாரையம் சத்தியத்தின் துறைமுகத்திற்கும், விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும். இவர்களை ஞானத்தின் பிரகாசத்திற்கும், இறைவனின் அரசிற்கும் அழைத்தருளும் சுவாமி! முற்காலத்தில் தேவரீரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாயிருந்தவர்களின் பிள்ளைகள் பேரில் உமது கருணைக்கள்களைத் திருப்பியருளும்! உமது திரு இரத்தம் அவர்களின் இரட்சணியத்தினுடையவும் சீவியத்தினுடையவும் ஸ்நானமாக அவர்களுக்கு உதவக் கடவதாக. ஆண்டவரே! உம்முடைய திருச்சபையை அபாயத்திலிருந்து பாதுகாத்து திண்ணமான சுயாதீனத்தை அதற்குக் கட்டளையிட்டருளும். சகல நாட்டு மக்களுக்கும் ஒழுங்குக் கிரமத்தையும் சமாதனத்தையும் தந்தருளும். இப் பூமியில் ஒருகோடி முனைமுதல் மறுகோடி முனை மட்டும் ஒரே குரலில் சத்தமாய், "நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக, மகிமையும் வணக்கமும் சதாகாலமும் வருவதாக" என்ற புகழ் விடாது சப்தித்து ஒலிக்கக் கடவது. - ஆமென்.

திரு இருதய மன்றாட்டுமாலை


ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்
விண்ளகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா, எங்கள்மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தூய ஆவியாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
என்றும் வாழும் பிதாவின் சுதனாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
பரிசுத்த கன்னித்தாயின் உதிரத்தில் தூய ஆவியால் உருவான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அளவற்ற மகத்துவப் பிரதாபம் நிறைந்த இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அதி உன்னத ஆண்டவரின் உறைவிடமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இறைவனின் இல்லமும் விண்ணக வாசலுமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அன்புத் தீ சுவாலித்தெரியும் சூளையான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி. நீதியும் நிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப் பெற்ற இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எல்லா ஆராதனைப் புதழ்ச்சிக்கும் முற்றும் உரிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மைய இடமுமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இறைத்தம்மை முழுமையாக தங்கி வழியும் இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் போற்றி மகிழச் செய்யும் இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
நித்திய சகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவை அளிக்கும் தாராளமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்கள் பாவச் செயல்களால் வேதனையுற்று வருந்தின இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
மரணம் வரையும் கீழ்படிந்திருந்த இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
சர்வ ஆறுதல் அனைத்தின் ஊற்றாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்கள் சமாதானமும் ஒற்றுமையின் இணைப்புமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
பாவங்களுக்குப பலியான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உம்மிடத்தில்; நம்பிக்கை வைக்கிறவர்களுடைய மீட்பரான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எல்லா புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே !
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே !
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே !
எங்களைத் தயை செய்து மீட்டருளும்.
முதல்வர் - இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே
துணைவர் - எங்கள் இருதயம் உமது இருதயத்துக்கு ஒத்திருக்கச் செய்தருளும்.

செபிப்போமாக:


என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகன் இருதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும்.
உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி, மன்னிப்பளித்தருளும்.உம்மோடு தூய ஆவியின் ஐக்கியத்தில் என்றேன்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய அதே இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.